இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, April 01, 2008

கல்லூரி கதைகள் : 2 : வட இந்திய மாணவர்கள்

கல்லூரி கதைகள் : 2 :

அடுத்து வரும் பல கல்லூரி கதைகள் எங்களுடன் படித்த வட இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்டது.

மேலும்
  • கிராமப்புற சேவை, கட்டாய சேவை, (இரண்டும் ஒன்று கிடையாது - கிராமப்புற சேவை வேறு, கட்டாய சேவை வேறு),
  • இடஒதுக்கீடு,
  • சிறப்பு மருத்துவர் பற்றாக்குறை, மருத்துவக்கல்லூரிகளில் சிறப்பு மருத்துவர் பற்றாக்குறை, அதே சமயம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள இடங்களுக்கு அதிக போட்டி

போன்ற விஷயங்களை வரும் வாரங்களில் அலச இருக்கிறோம். இவை அனைத்திலும் இந்த வட இந்திய மாணவர்கள் தமிழகத்தில் படிப்பது (மற்றும் வட மாநிலங்களில் படிக்க செல்லும் நம் மாணவர்கள் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாலேயே மிரட்டப்படுவது, படிக்க முடியாமல் திரும்புவது) முக்கிய இடம் பெறுவதால் ஒரு சிறு முன்னுரை

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் மாநில அரசால் நிரப்பப்படுவது கிடையாது. இதில் 15 % இடங்களுக்கான மாணவர்கள் மத்திய அரசு நிறுவனமான ஏ.ஐ.ஐ.எம்.எஸ் நடத்தும் நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதி 85 % இடங்கள் மட்டுமே மாநில அரசால் (சுகாதார துறையின் கீழ் இடங்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தால்) நிரப்பப்படுகிறது.

இந்த 15 சதவிகிதத்தில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வருவார்கள். தமிழ் நாட்டு மாணவர்கள் மிகவும் குறைவு தான். இதற்கு பல காரணங்கள்
1. அந்த நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.
2. இந்த தேர்வின் முடிவுகள் (நான் படித்த காலங்களில்)தமிழக அரசு முடிவுகளை விட மிகவும் பின்னர் வெளியிடப்பட்டு வந்தது (தற்பொதைய ஒழுங்கு படுத்தி உள்ளார்கள்)

நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த வருடம் மார்ச் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வும், ஏப்ரல் மாதத்தில் நுழைவு தேர்வும் நடந்தது. மே மாதம் இரு முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஜூன் இரண்டாம் வாரத்தில் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. ஜூன் கடைசியில் கட்டணம் செலுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் எங்கள் கல்லூரி பயணம் ஆரம்பித்தது

அதன் பின்னர் மெதுவாக தான் இந்த அனைத்திந்திய நுழைவுத்தேர்வு முடிவு வந்தது. அப்பொழுது நாங்கள் எல்லாம் உடற்கூறியல் (அனாடமி)பிரிவு பிளப்பாய்வு (டிஸ்ஸெக்‌ஷன்) அரங்கில் பார்மலின் வாடையுடன் இருந்ததால் அது பற்றி கவலைப்படவில்லை. எனவே என் இடம் காத்திருப்பு பட்டியலில் இருந்த ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்பட்டது.

ஏ.ஐ.ஐ.எம்.எஸ் நிறுவனம் இரண்டு தேர்வுகளை நடத்துகிறது
1. ஏ.ஐ.ஐ.எம்.எஸ் ல் உள்ள 40 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான தேர்வு
2. நான் மேலே கூறிய அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ள 15 % இடங்களுக்கான தேர்வு

இதில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் ல் உள்ள 40 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு ஒரு வாரம் / இரு வாரங்களில் முடிவு வெளியிடப்படும். அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ள 15 % இடங்களுக்கான தேர்வு மே மாததில் நடத்தப்பட்டு ஜூலையில் தான் முடிவு வெளியிடப்படும்

மொத்தமாக தமிழகத்தில் 1000 இடங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் (சும்மா ஒரு கணக்கிற்கு. இது நிஜ எண்ணிக்கை அல்ல) இதில் 850 மாநில அரசிற்கு. 150 மத்திய அரசிற்கு.

இதில் ஒரு சுட்சுமம் இருக்கிறது.
இந்த (அனைத்திந்திய) தேர்வு முடிவு மே மாதமே வந்திருந்தால் நான் அதில் சேர்ந்திருப்பேன் (நான் மட்டும் அல்ல. தமிழகத்தில் சுமார் 50 மாணவர்களாவது இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்).
எனவே மத்திய அரசு தேர்வு மூலம் சேரும் மாணவர்களில்
100 பேர் வட இந்தியர்கள்
50 பேர் தமிழர்கள்
நாங்கள் 50 பேரும் தமிழக அரசு தேர்விலும் தேர்ந்தெடுக்கபட்டிருப்பதால், இங்கு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் 50 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்
ஆக மொத்தம் 850 + 50 = 900 தமிழர்கள்

ஆனால் (அனைத்திந்திய) தேர்வு முடிவு மிக தாமதமாக வந்ததால் நாங்கள் அனைவரும் மாநில அரசின் இடங்களிலேயே சேர்ந்து விட்டோம். மத்திய அரசில் உள்ள எங்கள் இடங்கள் காலியிடங்களாக கருதப்பட்டு அனைத்திந்திய தேர்வு காத்திருப்பு பட்டியலில் உள்ள வர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது

ஆக தாமதமான முடிவு என்பது முதலில் மாநில தேர்வு பட்டியலை வெளியிடும் மாநிலங்களுக்கு பாதகமாகவே இருந்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழகம் மற்றும் மகாராஷ்டிரம். மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்திந்திய நுழைவுத்தேர்வு இடங்களில் பெரும்பாலும் வட இந்தியர்களே உள்ளனர் !!!

இப்படி தாமதமாக அனைத்திந்திய தேர்வுபட்டியல் வெளியிடப்படுவதால் நம்மாநில மருத்துவ மாணவர்கள் இடங்களை இழக்கிறார்கள் என்று கண்டுபிடித்தவுடன் நம் மக்கள் அடுத்த வருடம் ஜூலை வரை மூச்சு காட்ட வில்லை. அந்த வருடம் வட இந்திய மாணவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்ந்தனர்.

அடுத்த வருடம் அவர்களும் ஆகஸ்ட் வரை முடிவு வெளியிட வில்லை. அவர்கள் விடாக்கண்டன் என்றால் நம்ம ஆட்கள் கொடாக்கண்டனாக இருந்துவிட்டார்கள். இதை பார்த்த மகாராஷ்டிர மருத்துவ கல்வி துறையும் அலுங்காமல் காது குடைந்து கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் இதற்கு சட்டம் கொண்டு வந்ததும், இந்த விஷயங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றதும் தனிக்கதை

இப்படியாக சுமார் 300 இடங்கள் வரை நாம் அனைத்திந்திய மாணவர்களுக்கு வழங்குவதால் வருடத்திற்கு தமிழகத்திற்கு 250 மருத்துவர்கள் கிடைப்பதில்லை என்பது தெரிந்தவுடன் மெதுவாக போராட்டங்கள் ஆரம்பித்து உள்ளன. அதே போம் தமிழகத்தில் உள்ள 914 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவிகிதம் , 457 இடங்கள் அனைத்திந்திய தேர்வு மூலம் நிரப்பப்படும்.

சரி இனி கதைக்கு வருவோம்.

இப்படியாக அனைத்திந்திய தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் படித்துக்கொண்டிருந்த இரு மாணவர்களுக்கு கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் செல்ல வேண்டி வந்தது.

யாரோ ஒருவர், கிண்டி வரை மின்சார ரயிலில் செல்லுங்கள். அங்கிருந்து பல்கலைக்கழகம் அருகில்தான் என்று கூறிவிட இவர்களும் வழக்கமாக மின்சார இரயிலில் வீடு செல்லும் ஒரு சென்னை மாணவனுடன் சேர்ந்து கொண்டு இரயில் ஏறி, கின்டியில் இறங்கவும் பயணச்சீட்டு பரிசோதகர் வந்து விட்டார்.

வழக்கமாக மின்சார இரயிலில் வீடு செல்பவர் தனது சீசன் பயணச்சீட்டை காட்டி விட்டார். அடுத்தவர்களிடம் டிக்கெட் என்று கேட்கவும்,

டாக்டர் 1 : டிண்ட் டேக் (எடுக்க வில்லை)
பரிசோதகர் : வை (ஏன் )
டாக்டர் 1 : கண்டக்டர் டிண்ட் கம் (நடத்துனர் வர வில்லை )
பரிசோதகர் : :(
டாக்டர் 2 : இதர் டு கிண்டி க்யா டிக்கெட் . லாங் டிஸ்டண்ட் ஒன்லி டிக்கெட்

பரிசோதகர் கடுப்பாகி இருவரையும் நிலைய மேலாளரிடம் (அல்லது எந்த அதிகாரி என்று தெரியவில்லை) கூட்டி செல்ல, மேற்படி விசாரனையில் டாக்டர் 1 அந்தமானிலிருந்து வந்தார் என்றவுடன் அவர் மேல் பரிதாபப்பட்டு !!! (அங்கு இரயில் கிடையாது :) :) :) அவர் இது வரை இரயிலில் சென்றது கிடையாது என்று தெரிந்தவுடன்) விட்டு விட்டார்கள்.

டாக்டர் 2விடமிருந்து (பீகாரி) தண்டம் (பைன்) வாங்கியபின் தான் விட்டார்கள்

கூட சென்னை மாணவன் ஒருவன் சென்றதால் இந்த கதை வெளி வந்தது. இவர்கள் தனியாக சென்று என்னென்ன கூத்து அடித்தார்கள் என்று யாருக்கு தெரியும் ???

4 மறுமொழிகள்:

SP.VR. SUBBIAH said...

////கூட சென்னை மாணவன் ஒருவன் சென்றதால் இந்த கதை வெளி வந்தது. இவர்கள் தனியாக சென்று என்னென்ன கூத்து அடித்தார்கள் என்று யாருக்கு தெரியும் ??? ////

சுவையாக இருக்கிறது டாகடர். தொடர்ந்து எழுதுங்கள்

புருனோ said...

//சுவையாக இருக்கிறது டாகடர். தொடர்ந்து எழுதுங்கள்//

நன்றி ஆசானே.... இன்னும் கதைகள் இருக்கிறது.

ezhail said...

கடந்த சிலமாதங்களுக்கு முன்னால் வட இந்திய மாநிலங்களைச் சார்ந்த விவாசயிகள்(ஒரு பகுதியினர்) மொத்தமாக இதே கதையை மிகச்சிறப்பாக அரங்கேற்றியது இக் கதையை படித்தவுடன் நினைவுக்கு வருகிறது.

புருனோ said...

//கடந்த சிலமாதங்களுக்கு முன்னால் வட இந்திய மாநிலங்களைச் சார்ந்த விவாசயிகள்(ஒரு பகுதியினர்) மொத்தமாக இதே கதையை மிகச்சிறப்பாக அரங்கேற்றியது இக் கதையை படித்தவுடன் நினைவுக்கு வருகிறது.//

:) :) :)

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...