இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, April 07, 2008

கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
வாங்கு திறனுக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்

முக்கியமான விஷயம் வாங்குதிறன் குறைகிறது என்றால் அந்த பொருளை (அல்லது சேவையை) யாரும் வாங்குவது இல்லை என்று அர்த்தம் இல்லை.
வாங்குதிறன் குறையும் பொழுது, பனம் அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் அந்த சேவை என்று ஆகிவிடும்.

உதாரணமாக டென்னிஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுக்களை எடுத்துக்கொள்வோம். ஏன் நடுத்தட்டு அல்லது பின் தட்டு மக்களிடமிருந்து ஒரு விளையாட்டு வீரர் கூட கிடையாது. ஏனென்றால் டென்னிஸ் பயிற்சி கட்டணம், டென்னிஸ் அரங்கு கட்டணம் ஆகியவை நடுத்தட்டு மக்களின் வாங்குதிறனுக்கு அப்பாற்பட்டே உள்ளது.

பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாட தேவைப்படும் அரங்கு, மேஜை ஆகியவைகளின் விலை நடுத்தர மக்களின் சம்பளம் / வருமானம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு உள்ளதாலே நடுத்தர பின்தட்டு மக்களிடமிருந்து ஒரு பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் இல்லை.

கேரம் பலகையும், அதன் உபகரணங்களும் (போரிக் அமிலம் உட்பட) நடுத்தர வாங்குதிறனுக்கு உள்ளே இருப்பதால் தான் இளவழகியால் அந்த விளையாட்டை விளையாட முடிந்தது.

எந்த துறையிலும் பணம் இருப்பவருக்கு வாய்ப்பு அதிகமும், பணம் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு குறைவாகவும் உள்ளது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அது தனி விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் பணம் (சம்பளம் / வருமானம்) குறைவாக உள்ள குடும்பத்தில் இருக்கும் நபர் சில துறைகளுக்குள் நுழைவது குறித்து நினைத்து பார்க்க கூட முடியாத நிலைமை உள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த உதாரணம்.

இனி நம் பிரச்சனைக்கு வருவோம்.

முதலில் இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகைக்கு வந்த ஒரு கருத்து
உங்கள் கேள்வி (ஆதங்கம்)மிக நியாயமான ஒன்று.ஆனால் பொதுவாக தற்சமயம் (real estate boom) ஒரு சிலர் தாங்கள் நடத்தும் நிறுவனங்களை மூடுவதாக சில பத்திரிக்கை செய்திகளில் படித்தேன்(to sell the land ).உண்மையா?.
இது முற்றிலும் உண்மை !!!

உதாரணமாக நீங்கள் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறேன். தினகும் 50 இட்லி சுட்டு 2 ரூபாய்க்கு விற்க உங்களுக்கு ஆகும் செலவு ரூபாய் 80. உங்களுக்கு 20 ரூபாய் லாபம் கிடைக்கிறது. மாதம் 600 ரூபாய். அது போதவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள். இட்லியின் விலையை 2.5 ரூபாய் ஆக்குவீர்கள். உடன் தினமும் 50 இட்லி வியாபாரம் ஆன கடையில் இப்பொழுது 30 இட்லி தான் வியாபாரம் ஆகிறது. எனவே விலையை குறைக்கலாமா, ஏற்றலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில் நான் வந்து "கடையை என்னிடம் தாருங்கள். நான் 3 லட்சம் தருகிறேன்". இதை அஞ்சலக மாத வருமான திட்டத்தில் செலுத்தினால் மாதம் 2000 ரூபாய் கிடைக்கும், வேலை இல்லை. சொகுசாக இருக்கலாம் என்று கணக்கு பார்த்துவிட்டு கடையை விற்று விடூவீர்கள் அல்லவா.
அது தான் நடக்கிறது.

இந்த சுழலில் முதலில் மாட்டியது திரையரங்குகள். 1990களில் 10 ரூபாய் கட்டணத்தில் திரைப்படம் காண்பித்து கொண்டிருந்த திரையரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறின. 25 ரூபாய் கட்டணத்தில் திரைப்படம் காண்பித்து கொண்டிருந்த திரையரங்குகள் 120 ரூபாய் கட்டணத்திற்கு மாறின

திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை குறைந்ததோ கூடியதொ இல்லை அப்படியே இருந்ததோ, அவைகளை பகுத்து பார்த்தால், 1993ல் இருந்ததை விட, 2008ல்
  • 20 ரூபாய் கட்டணத்தில் நாம் திரைப்படம் பார்க்கக்கூடிய திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
  • 120 ரூபாய் கட்டணத்தில் நாம் திரைப்படம் பார்க்கக்கூடிய திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது (இந்த அரங்குகளின் அடிப்படை / ஆடம்பர வசதிகள் அதிகம் என்பதும் உண்மை. பிரச்சனை அடிப்படை வசதியினால் கூடும் கட்டணம் பற்றியல்ல. ஆடம்பர வசதியினால் கூடும் கட்டணம் பற்றி)
இப்பொழுது கல்வித்துறைக்கு வருவோம். கடந்த ஆண்டுகளாக கல்வி நிறுவனக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. இன்னும் வரும் ஆண்டுகளில் கூடத்தான் வாய்ப்புகள் உள்ளன

அதே போல் அடுத்த பத்தாண்டுகளில்
  • மாதம் 200 ரூபாய் (மற்றும் அதற்கு கீழும், இலவசமாகவும்) கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது அதிகரிக்குமா
  • மாதம் 200 ரூபாயக்கு மேல் கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது அதிகரிக்குமா
என்று சிந்தித்தால் எனக்கு தோன்றும் விடை பயமாக இருக்கிறது

உங்களுக்கு என்ன தோன்றுகிறது ??

--தொடரும்.

16 மறுமொழிகள்:

ரவிசங்கர் said...

புருனோ, இந்த விசயத்தில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. போதிய மாணவர்கள் இல்லை என்று அரசு பள்ளி மூடுகிறது என்கிறீர்கள். இது கிராமத்திலா? நகரத்திலா? நகரத்தில் அப்படி மாணவர் தொகை இல்லாமல் போகாது என்று நினைக்கிறேன். கிராமத்தில் மூடுகிறது என்றால், மாணவர்கள் எல்லாம் தனியார் பள்ளிக்கு போய் விட்டது தான் காரணமா? புதுக்கோட்டையில் உள்ள எங்கள் கிராமத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அரசு பள்ளிகளே மிகுந்துள்ளன. எல்லாரும் தனியார் பள்ளிக்குப் போவதால் அரசு பள்ளிகளுக்கு ஆள் சேராத நிலை இன்னும் வர வில்லை. நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதால் கிராமத்தில் ஆள் இல்லை என்றால், நகர்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தனியார் பள்ளிகளின் இருப்பு மட்டுமே எல்லாருக்கும் உரிய கல்வி தர இயலும் என்று நினைக்கிறீர்களா? போதுமான தனியார் பள்ளிகள் இல்லாவிட்டால், அரசு புதிதாக பள்ளிகள் கட்டுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லையா? 5 கி.மீ க்குள் இருக்கும் எல்லா இடைநிலைப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளாக்கப் போவதாகத் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார். புதிய அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படுவதையும் சுற்றியுள்ள கிராமங்களில் பார்க்க முடிகிறது. அந்தந்த ஊர் பொது மக்கள் ஒன்று கூடி சிறு நெருக்கடி கொடுத்தால் மாவட்ட நிர்வாகம் புதிய பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் கொடுப்பதாகவே தோன்றுகிறது.

தனியார் பள்ளிகள் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வியே இல்லை என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உங்கள் இடுகைகள் தருகின்றன. இல்லை, தனியார் பள்ளிகளால் மட்டுமே கூடுதல் தரம் மிக்க கல்வியைத் தர இயலும் என்றும் இந்த விலை உயர்வால் இத்தகைய தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்காது என்றும் சொல்கிறீர்களா?

அரசுப் பள்ளிகளில் மிகவும் அடித்தட்டு மாணவர்கள் மட்டுமே செல்வதால் தான் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கல்வியில் ஆர்வம் கொண்ட நடுத்தட்டு மக்களும் அரசுப் பள்ளிகளில் பக்கம் திரும்ப நேர்ந்தால் அவர்களது நெருக்கடியால் அரசுப் பள்ளி கல்வித் தரம் உயரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

தனியார் பள்ளிகளின் தரம் என்பதை எதை வைத்து அளக்கிறீர்கள் என்றும் புரியவில்லை. மதிப்பெண்களை நான் பெரிதாகக் கருதவில்லை. நான் பத்தாவது வரை படித்தது அரசு உதவி பெற்ற ஒரு கிராமப் பள்ளியில். எந்த ஒரு தனியார் பள்ளியையும் விட அங்கு கூடுதல் திறன்களைப் பெற்றதாகவே உணர்கிறேன். (எல்லா பள்ளிகளுக்கும் இதைப் பொதுமைப்படுத்த முடியாது என்பதை அறிவேன். மகா மட்டமாக இயங்கும் அரசு பள்ளிகளும் இருக்கின்றன). 11, 12 வகுப்புகளிலோ அரசு, தனியார் வேறுபாடின்றி எல்லா மாணவர்களும் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அலைகிறார்கள்.

இன்னொரு வலைப்பதிவில் படித்தேன்- ஆங்கில வழித் தனியார் கல்வி மாணவர்களை சமூகத்தில் ஒரு குறுகிய வட்டத்துடன் மட்டும் பழக வித்திட்டு அவர்களைப் பெரும்பான்மைச் சமூகத்திடம் இருந்து அன்னியப்படுத்துகிறது என்று. முற்றிலும் உண்மை. அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் திரும்புவது சமூகத்தின் உண்மை நிலை குறித்த மேம்பட்ட புரிதலைத் தரும். வெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அவர்கள் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகத்திற்கான நன்மையிலும் இது கூடுதலாக உதவலாம்.

**
தொடர்ந்து நல்ல தமிழில் இடுகைகளை எழுதுவோம். இது தேவையா என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களால் ஒரு போதும் தமிழ் வளராது. ஆனால், நம் செய்கையால் தமிழ் வளர்ந்தாலும் வளரலாம் :) எனவே முயற்சியைத் தொடர்வோம். வீண் விளக்கங்களில் நேரத்தை வீண்டிக்காமல் இருப்போம்.
**
முந்தைய இடுகையின் மறுமொழியில் முதல் இரு கருத்துக்கள் உங்களை நோக்கிக் கேட்கப்பட்டது அல்ல. பொதுவாக பதிவர் சமூகத்தில் "நீ ஏன் இதை எழுதவில்லை", "பதிவர்கள் என்ன செய்யலாம்" என்பது போன்று வரும் வசனங்களுக்காக அனைவரை நோக்கியும் கூறப்பட்ட கருத்துக்கள் தாம்.

புருனோ Bruno said...

//"நீ ஏன் இதை எழுதவில்லை", "பதிவர்கள் என்ன செய்யலாம்" என்பது போன்று வரும் வசனங்களுக்காக அனைவரை நோக்கியும் கூறப்பட்ட கருத்துக்கள் தாம்.//

உண்மைதான். ஆனால் அது கேள்வி அல்ல. ஆதங்கம் :) :)

புருனோ Bruno said...

//தொடர்ந்து நல்ல தமிழில் இடுகைகளை எழுதுவோம். இது தேவையா என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் இருக்கத் தான் செய்வார்கள்.//
புரிகிறது

//அவர்களால் ஒரு போதும் தமிழ் வளராது. ஆனால், நம் செய்கையால் தமிழ் வளர்ந்தாலும் வளரலாம் :) //
கண்டிப்பாக வளரும் :) :)

//எனவே முயற்சியைத் தொடர்வோம். வீண் விளக்கங்களில் நேரத்தை வீண்டிக்காமல் இருப்போம்.//

புரிகிறது :) :) :)

புருனோ Bruno said...

//போதிய மாணவர்கள் இல்லை என்று அரசு பள்ளி மூடுகிறது என்கிறீர்கள். இது கிராமத்திலா? நகரத்திலா?//
கிராமத்தில்

//கிராமத்தில் மூடுகிறது என்றால், மாணவர்கள் எல்லாம் தனியார் பள்ளிக்கு போய் விட்டது தான் காரணமா?//

இல்லை. மக்கள் தொகை குறைவதே காரணம்

//நகர்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தனியார் பள்ளிகளின் இருப்பு மட்டுமே எல்லாருக்கும் உரிய கல்வி தர இயலும் என்று நினைக்கிறீர்களா?//
இல்லை. ஆனால் கிராமத்தில் மூடப்படும் பள்ளிகளுக்கு ஏற்ப நகரத்தில் திறக்க வேண்டும். அது நடக்க வில்லை என்பது என் கருத்து.

அதே போல், "சிக்கனம்" பார்க்க வேண்டிய துறை இதுவல்ல.

புருனோ Bruno said...

//போதுமான தனியார் பள்ளிகள் இல்லாவிட்டால், அரசு புதிதாக பள்ளிகள் கட்டுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லையா?//
தனியார் பள்ளிகள் இல்லாத இடங்களில் கட்டுவதுடன், தனியார் பள்ளிகள் இருக்கும் இடங்களிலும்(நகரங்களில்) அரசு பள்ளிகள் தொடங்கப்படவேண்டும் என்பதே என் ஆசை

//5 கி.மீ க்குள் இருக்கும் எல்லா இடைநிலைப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளாக்கப் போவதாகத் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார். புதிய அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படுவதையும் சுற்றியுள்ள கிராமங்களில் பார்க்க முடிகிறது.//
உண்மைதான்

//அந்தந்த ஊர் பொது மக்கள் ஒன்று கூடி சிறு நெருக்கடி கொடுத்தால் மாவட்ட நிர்வாகம் புதிய பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் கொடுப்பதாகவே தோன்றுகிறது.//

இது தான் நான் கூறவந்தது. மக்கக் நெருக்கடி தருவதால் பள்ளி தொடங்கப்படு சரி. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னர் என்ன நடந்தது. பள்ளி தொடங்கி இல்வசமாக உணவும் தந்து மாணவனை பள்ளிக்கு வர நெருக்கடி தந்தது அரசு.

ஏன் / எப்படி/ எதனால் / என்று அந்த நெருக்கடியின் திசை மாறியது என்பது தான் இந்த இடுகைத்தொடரின் நோக்கம்.

கல்வி குறித்து அரசல்லவா நெருக்கடி தர வேண்டும். தீப்பெட்டி தொழிற்சாலை உள்ள ஊரில் அரசு நெருக்கடி தராவிட்டால் என்ன ஆகும். ???

புருனோ Bruno said...

//தனியார் பள்ளிகள் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வியே இல்லை என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உங்கள் இடுகைகள் தருகின்றன.//

கண்டிப்பாக இல்லை. அப்படி உள்ள சொற்தொடர்கள் ஏதாவது இருந்தால் நீக்கிவிடுகிறேன்.

ஆனால் இன்னும் ஒரு 15 வருடங்களில் அப்படி நிலைமை வருமோ என்று அச்சப்படுவது உண்மை.அதற்காகத்தான் இவ்வளவு இடுகைகளும்

// இல்லை, தனியார் பள்ளிகளால் மட்டுமே கூடுதல் தரம் மிக்க கல்வியைத் தர இயலும் என்றும் இந்த விலை உயர்வால் இத்தகைய தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்காது என்றும் சொல்கிறீர்களா?//

இதே நிலைமை சரி செய்யப்படவில்லை என்றால், தொலை தூர பேரூந்து துறை போல் கல்வியும் ஆகும் வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது

சென்னையில் "தரமான "குடிதண்ணீர் 30 ரூபாய் கொடுத்து தனியாரிடம் வாங்க வேண்டும் என்று 15 வருடம் முன் யாராவது கூறியிருந்தால் என்ன சொல்லியிருப்போம் ;)

//அரசுப் பள்ளிகளில் மிகவும் அடித்தட்டு மாணவர்கள் மட்டுமே செல்வதால் தான் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.//

இதே நிலைமை அரசு பேரூந்துகளுக்கும் என்று நினைக்கிறேன்

புருனோ Bruno said...

//கல்வியில் ஆர்வம் கொண்ட நடுத்தட்டு மக்களும் அரசுப் பள்ளிகளில் பக்கம் திரும்ப நேர்ந்தால் அவர்களது நெருக்கடியால் அரசுப் பள்ளி கல்வித் தரம் உயரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.//

உண்மை

//தனியார் பள்ளிகளின் தரம் என்பதை எதை வைத்து அளக்கிறீர்கள் என்றும் புரியவில்லை.//

இது குறித்து நான் தனியாக கூறவில்லை. இதிலும் அதே "திருவள்ளுவர் / கே.பி.எண்" உவமை பொருந்தும்

//மதிப்பெண்களை நான் பெரிதாகக் கருதவில்லை. நான் பத்தாவது வரை படித்தது அரசு உதவி பெற்ற ஒரு கிராமப் பள்ளியில். எந்த ஒரு தனியார் பள்ளியையும் விட அங்கு கூடுதல் திறன்களைப் பெற்றதாகவே உணர்கிறேன். (எல்லா பள்ளிகளுக்கும் இதைப் பொதுமைப்படுத்த முடியாது என்பதை அறிவேன். மகா மட்டமாக இயங்கும் அரசு பள்ளிகளும் இருக்கின்றன). 11, 12 வகுப்புகளிலோ அரசு, தனியார் வேறுபாடின்றி எல்லா மாணவர்களும் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அலைகிறார்கள்.//
உண்மைதான்

//இன்னொரு வலைப்பதிவில் படித்தேன்- ஆங்கில வழித் தனியார் கல்வி மாணவர்களை சமூகத்தில் ஒரு குறுகிய வட்டத்துடன் மட்டும் பழக வித்திட்டு அவர்களைப் பெரும்பான்மைச் சமூகத்திடம் இருந்து அன்னியப்படுத்துகிறது என்று. முற்றிலும் உண்மை.//
உண்மைதான். உலகம் தெரியாமல் வளர்கிறார்கள்

//அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் திரும்புவது சமூகத்தின் உண்மை நிலை குறித்த மேம்பட்ட புரிதலைத் தரும். வெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அவர்கள் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகத்திற்கான நன்மையிலும் இது கூடுதலாக உதவலாம்//

முதலில் புரட்சித் தமிழன் கூறையபடி
http://puratchithamizan.blogspot.com/2008/04/blog-post.html

தேர்வில் முந்தைய வருடத்திலிருந்து 40 சதவிகிதம் கேள்விகள் கேட்கப்பட்டாலே நாட்டில் கல்வித்துறையில் உள்ள பாதி பிரச்சனைகள் தீரும்

ரவிசங்கர் said...

புருனோ, விரிவான விளக்கங்களுக்கு நன்றி. இடுகையை விட "திருவள்ளுவர் / KPN, தண்ணீர் விற்பனை" உவமைகள் எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. பெரும்பான்மை மக்கள் பயணம், தண்ணீருக்கு அரச சேவைகளைப் பயன்படுத்தினாலும் அரசின் மெத்தனத்தால், அல்லது மறைமுகத் தனியார் ஆதரவுக் கொள்கைகளால், அரச சேவைகள் மேம்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. இதே நிலை கல்விக்கும் வரும் என்றால் உங்கள் அச்சம் நியாயமானது தான்.


நிலச் சந்தை (real estateக்கு இந்தச் சொல் பொருந்துமா?) காரணமாகத் தனியாரே கல்வி வணிகத்தைப் புறக்கணிப்பது ஒரு வித்தியாசமான நிலைமையைக் காட்டுகிறது. KPN நடத்துவோர், தண்ணி விற்பவர்களே அதில் இலாபம் இல்லை என்று வேறு தொழில்களுக்குப் போவது போல். இந்த நிலையில் அரசு பள்ளிகள் எண்ணிக்கை / தரம் உயராவிட்டால் பெரிய சிக்கல் தான். ஆனால், நகரத்தில் தனியாருக்கு இருக்கும் நெருக்கடி அரசுக்கும் உண்டா? நகரத்தில் பள்ளிகள் கட்டுவதற்கான பெரிய நிலங்களை அரசு மட்டும் எங்கிருந்து பெறும்? ஒரு வேளை, அரசு நினைத்தால் இயலாதது இல்லை என்கிறீர்களா? சாலைகளுக்காக நிலங்கள் கையகப்படுத்துவது போல் பள்ளிகளுக்காகக் கையகப்படுத்த வேண்டி வரும். சாலைகள் நெடு தூரத்தில் பலரிடம் இருந்து சிறிய இடங்களைப் பெற்றுச் செயற்படுகிறது. பள்ளிகளுக்கோ ஒட்டு மொத்தமாக ஏக்கர் கணக்கில் நகர் நடுவில் இடம் வேண்டுமே? விளையாட்டுத் திடல்களுக்கே இடம் இல்லாத நிலையில் பள்ளிகளுக்கு இடம் :(


நகரங்களில் பெருகி வரும் மக்கள் தொகுக்கு ஏற்ப புது அரசு பள்ளிகள் உருவாகாதது, ஏற்கனவே உள்ள பள்ளிகள் விரிவாக்கப்படாதது முக்கியமான பிரச்சினை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இது போன்ற பொருள், தர்க்கம் கூடிய பதிவுகளைக் காண மகிழ்ச்சி.

amutha krishna said...

தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிக்க மட்டும் நடத்தப் படுகின்றன. சென்னையில் export company-களில் வேலை செய்வதற்கு ஒப்பானது தனியார் பள்ளிகளில் வேலை செய்வது.சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் முன் வைத்தே கரஸ்பாண்டன்ஸ் என்பவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளணும். தரமா..மாணவர்களிடம் நன்கு பேசக் கூட தடை உள்ளது சில பள்ளிகளில்.
பாடம் நடத்துவது, exam வைப்பது, பேப்பர் தருவது, பள்ளி ஆண்டு விழா, விளையாட்டுத் தினம் இன்னும் சில கொண்டாட்டங்கள் என ஓடிக் கொண்டே இருக்கும். இதுலே எங்கே தரம் வரும். படித்த பெற்றோர் படிக்க வைத்து விடுவர். இல்லையெனில் இருக்கவே இருக்கு டூயுஷன் சென்டர்கள். பணம் அதிகம் வாங்கும் பள்ளிகள் நல்லவை என மக்கள் நினைப்பது அவர்களுக்கு லாபம்.
அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. 1980 லிருந்து B.Ed..பட்டம் பெற்றுவிட்டு காத்திருப்போர் லட்சம் பேர்.
நல்ல பல உதவும் மக்களை பயன் படுத்தி atleast 8,000 to 10,000 என சம்பளம் கொடுத்து அரசே சில பள்ளிகளை தொடங்க வேண்டும். நிச்சயம் தரமான கல்வி வழங்க முடியும். எதுவும் செய்யாமல் தனியார் பள்ளிகள் சம்பாதிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது அரசு.

புருனோ said...

//பணம் அதிகம் வாங்கும் பள்ளிகள் நல்லவை என மக்கள் நினைப்பது அவர்களுக்கு லாபம்.//

இது தான் பிரச்சனையே :) :)

ezhil said...

உங்கள் எதிர்காலம் பற்றிய பயம் மிகவும் உண்மையானது.நம் இந்திய துணைக்கண்டத்தில் கடந்த 10-15 வருடங்களாக அதி தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் "தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம்" கடைசியில் 'சுவாசிக்கும் காற்றுக்க்கே" (oxygen- for breathing) காசுகொடுக்கவேண்டிவரும் என சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.அரசின் தயவில் நடைபெறும்(நலிந்த நிலையில்) கல்வித்துறை,சுகாதாரத்துறை,குடிநீர் வழங்கல்,மின் பகிர்மானம்,தகவல் பரிமாற்றங்கள் எல்லாமே " யானை விலை குதிரை விலை ஆகப் போவதை
யார் தடுக்கப் போகிறார்கள்.

மனிதர்கள்(middle class family) மீண்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளப்படக்கூடாது எனும் உங்கள் எச்சரிக்கை உணர்வு பாராட்டுதலுக்குறியது.தொடருங்கள் உங்கள் அறப் போராட்டத்தை
அநீதி களைய,
இறுதி வெற்றி நமதே.

புருனோ said...

//கடைசியில் 'சுவாசிக்கும் காற்றுக்க்கே" (oxygen- for breathing) காசுகொடுக்கவேண்டிவரும் என சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்//

இப்பொழுதே "ஆக்ஸிஜன் பார்லர்கள்" உள்ளதே :) :) :)

//தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம்//

இதில் உலகமயம் என்பதும், தாராளமயம் என்பதும் வேறு

தனியார் மயம் என்பது வேறு என்பது என் கருத்து :) :) :)

ezhil said...

//தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம்//

இதில் உலகமயம் என்பதும், தாராளமயம் என்பதும் வேறு

தனியார் மயம் என்பது வேறு என்பது என் கருத்து :) :) :)
-----------------------------
மூன்றும் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் என்ற ஒரு கருத்து பலமாக திரும்பத் திரும்ப அரசியல் விமர்சகர்களால்,பார்வையாளார்களால்(குறிப்பாக இடது சாரிக் கட்சிகள்(அவர்களது கூற்றுப்படி))சொல்லப்படுவது தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்லது போல் உள்ளது.
இத்ற்கே தனியாக ஒரு தொடர் பதிவு
நமது பதிவுலக நண்பர்களின் கருத்து கணிப்புக்கு விடலாமே.
1.உணவுப் பொருள்களின் அதீத விலை யேற்றம்
2.காலிமனை களின் விலைகளின் எட்டா உயர விலைகள்
3.தகவல் தொழில் நுட்ப சேவைகளில்
பாதுகாப்பின்மை(use of black berry mobile set)
4.வங்கிச் சேவையில் அதிகரிக்கப்பட்டுள்ள நியாத்தை மீறிய சேவைக்கட்டணங்கள்
5.உயரும் வரிகள் ,சேவைக் கட்டணங்கள்,சாலை வரிகளின் தொடர் உயர்வு
6.disinvestment of psus

mugunthkumar said...

100% agree... IMO, Education, Healthcare, providing high quality of sanitation/water facilities belong to Govt. That's what I'm paying taxes for.
The quality of Education/Healthcare will be high, only when professors and doctors are paid much. No one will be interested in doing "social service". Govt should use the tax money to bring down the cost of these, without affecting the salary and quality.

My two cents here...
http://mugunthkumar.wordpress.com/2007/09/09/education-system-in-india/
http://mugunthkumar.wordpress.com/2007/09/09/quality-of-education-in-india/

விலைவாசி பன்மடங்கு ஏறியதற்கு மற்றுமொரு காரணம், "Currency Devaluation". http://en.wikipedia.org/wiki/History_of_the_rupee#Valuation_history

1980 7rs = 1$, 1995 32rs = 1$ இப்போ, 49rs = 1$

கடந்த 25 ஆண்டுகளில், எழு மடங்கு இந்திய ருபாய் இறங்கயுள்ளது...இது எழு மடங்கு விலைவாசி உயருவதற்கு கரணிக்கும்...

ஜாக்கி சேகர் said...

* மாதம் 200 ரூபாய் (மற்றும் அதற்கு கீழும், இலவசமாகவும்) கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது அதிகரிக்குமா
* மாதம் 200 ரூபாயக்கு மேல் கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது அதிகரிக்குமா
--

யோசித்து பார்த்தால் பயமாக இருக்கின்றது... கல்வி கட்டணம் குறைவான பள்ளி தரம் கறைவாக இருப்பதாக பொதுமக்கள் பலர் நினைக்கின்றார்கள்...


நல்ல இடுக்கை டாக்டர்...

ராஜ நடராஜன் said...

ஜாக்கி சேகர் மால் போயிட்டு நேரா இங்கே வந்து விட்டாரென நினைக்கிறேன்:)

தனியார் பள்ளிகள் நுனி நாக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தாலும் ஒட்டி வாழும் வாழ்க்கை பாடங்களை அரசு பள்ளிகளே கற்றுக்கொடுக்கின்றன.அல்லது கூட்டமாக நண்பர்களுக்குள் கலந்துரையாடல் போன்றவற்றை அரசுப்பள்ளி மாணவர்களே எளிதாக கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தில் பணத்தின் எண்ணிக்கை, பணவீக்கம் அதிகமாகவும் காணப்படுகிறது.தற்போதைய முன்னேறும் பொருளாதார நாடுகளில் பிரேசில்,சீனா,ரஷ்யா,இந்தியா போன்றவற்றில் இந்தியா சரியான பொருளாதார திட்டங்களை அமுலாக்குவதால் நிலையான பொருளாதாரத்தை இந்த நூற்றாண்டில் சாதிக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.சீனா நமக்கும் முன்னால் ஓடினாலும் 1 குழந்தை திட்டம் அவர்களை ஓட்டத்தில் பின் தங்க வைத்து விடும்.

இன்னும் 25 ஆண்டுகளில் அணு ஆயுத தடுப்பைக் கொண்டு வந்து விட வேண்டுமென்று கடந்த சில தினங்களுக்கான ஒபாமா பேச்சு வார்த்தையில் தெரிகிறது.யுக்ரைன் முழுவதுமாக அணு ஆயுதங்களை குப்பையில் போடுவதற்கு சம்மதித்துள்ளது.எனவே போட்டி மனப்பான்மையோடு இந்தியாவும்,பாகிஸ்தானும் ஆயுத மல்லுக் கட்டுவதில் இழப்பு இருவருக்குமே.நட்பான அணுகுமுறை உருவாகும் பட்சத்தில் சுகாதாரம்,கல்வி,சாலைகள்,மின்சாரம்போன்றவை நம்ம பக்கத்து ஆசியாவை மேன்மை படுத்த உதவும்.

ஆழ்ந்த அலசலான இடுகைக்கு நன்றி டாக்டர்.

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...