இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்
-oOo-
இன்று குமுதம் ரிப்போட்டரில் (10.04.2008 பக்கம் 36-37) படித்த ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது
முதலில் செய்தி என்னவென்று பார்ப்போம்
1. சிறுமுகையில் (இது மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு ஊர். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்று ஒரு தொழிற்சாலை இங்கு இருந்தது) உள்ள காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் "நிர்வாக காரணங்களுக்காக அடுத்த கல்வியாண்டில் இருந்து (2008 - 2009) ஆறாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை இயங்காது"
2. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவித்திருக்கிறார்கள்.
3. இதை எதிர்த்து மறியல் போராட்டம் (படம் வேறு போட்டிருந்தார்கள்)
4. பெற்றோர்கள் கூறும் புகார் - ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்துவதற்காக பள்ளியை மூடுகிறார்கள்
5. பள்ளி தரப்பு கூறுவது- (1) 12ஆம் வகுப்பில் பத்து மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். (2) பள்ளியில் படிக்கும் 700 மாணவர்களில் 200 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளார்கள் (3) அரசு விதிகளின் படி பள்ளி நடத்த எங்களுக்கு 1.5 கோடி தேவை (4) இதுவரை பள்ளி நடத்த 20 லட்சம் ரூபாய் வங்கி கடன் வாங்கி மாதம் 20,000 வட்டி செலுத்துகிறோம் (5) எங்கள் வீட்டு நகைகள் அடமானத்தில் இருக்கின்றன (குமுதம் ரிப்போட்டர் பக்கம் 37) (6) தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டில் மட்டும் 3000 பள்ளிகள் மூடப்படக்கூடிய நிலையில் உள்ளது.
இதில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய விஷயம் கட்டுரை எழுதப்பட்டுள்ள விதம். கட்டுரை முற்றிலும் ஒரு சார்பாக பள்ளி கூட நிர்வாகத்தை குறை கூறும் விதமாக எழுத்தப்பட்டுள்ளது
சரி, இப்பொழுது என்ன தான் பிரச்சனை / நிலவரம் என்று பார்ப்போம்
ஒரு பள்ளிக்கூடம் நடத்த வேண்டுமென்றால் அந்த நிர்வாகம் பல துறைகளிடமிருந்தும் அங்கீகாரம் அல்லது அனுமதி பெற வேண்டும்.
அதில் முக்கியமாக கல்வி துறை, தீயனைப்புத்துறை, சுகாதாரத்துறை. மேலும் கட்டிடத்தின் உறுதி குறுத்து ஒரு சான்றிதழ் (இது யார் அளிக்க வேண்டும் என்று ஞாபகம் இல்லை)
சரி,
இதில் உள்ள விதிகள் சிலவற்றை பார்ப்போமா
- ஆரம்ப பள்ளியானால் ஒரு மாணவனுக்கு (அல்லது மாணவி) வகுப்ப்றையில் 9.5 சதுர அடி இடம் வேண்டும்
- உயர் நிலை பள்ளியானால் ஒரு மாணவனுக்கு (அல்லது மாணவி) வகுப்ப்றையில் 11 சதுர அடி இடம் வேண்டும். அதாவது 40 மாணவர்கள் இருக்கும் ஒரு வகுப்பறை 440 சதுர அடி இருக்க வேண்டும் (சுமாராக 20 x 22 அடி)
- 100 சதுர அடிக்கு குறைவாக அறைகள் இருக்க கூடாது
- வகுப்பறை நீள்சதுரமாக இருக்க வேண்டும், நீளம் : அகலம் :: 3:2
- வகுப்பறையின் நீளம் 35 அடிக்கு மேல் இருக்க கூடாது
- ஒரு வகுப்பறையில் 40க்கு மேல் மாணவர்கள் இருக்க கூடாது
- வகுப்பறையின் உயரம் 10 அடி
- ஒவ்வொரு அறைக்கும் 2 வாசல்கள் இருக்க வேண்டும்
- வகுப்பறைகள் நடமாடும் பாதையாக உபயோகப்படுத்தக்கூடாது
- ஒரு வகுப்பின் ஒரு பக்கம் கண்டிப்பாக வெரண்டா (தாழ்வாரம் என்ற சொல் பொருத்தமானதா ??) இருக்க வேண்டும்
- சாளரங்கள், தரையின் பரப்பளவிற்கு 20 சதம் இருக்க வேண்டும்
- சாளரங்கள் 2.5-3 அடி தரையிலிருந்து மேல் இருக்க வேண்டும்
- காலதர் (காற்றுவாரி சன்னல், காற்றோட்டி, காற்றோட்டம்வழங்கி, வென்டிலேட்டர் மருத்துவமனையில் இன்னொரு வென்டிலேட்டர் உண்டு. அதன் செயல் வேறு) தரையின் பரப்பளவிற்கு 2 சதவிதம் இருக்க வேண்டும் அல்லது ஒரு மாணவனுக்கு 48 சதுர இன்சுகள் இருக்க வேண்டும்
- ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள்
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள்
- 100 மாணவர்களுக்கு 6 சிறுநீர்க்கழிப்பிடங்கள் (20 இன்சுகள் அகலம்)
- 50 மாணவர்களுக்கு 1 கழிப்பறை
- 25 மாணவிகளுக்கு 1 கழிப்பறை
- பாதுகாக்கப்பட்ட குடிதண்ணிர்
- முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்
நீங்கள் படித்த, நீங்கள் பார்த்த, உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் எத்தனை பள்ளிகள் மேற்குறிப்பிட்ட விதிகளின் படி அங்கீகாரம் பெற முடியும் ?? இது தவிர, எத்தனை மாடிகள் கட்டலாம், விளையாட்டுக்கூடம், சாப்பாட்டு அறை, சமையலறை குறித்தும் விதிகள் உண்டு.
இந்த விதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. எனவே மலைத்தளங்களில் உள்ள பள்ளிகள் (தற்பொழுது மாத கல்விக்கட்டணம் 5000 ரூபாய்க்கு கீழ் இருக்காது !! கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒரு பள்ளியை காட்டி விட்டு வருட கட்டணம் 1,44,000 என்று போட்டார்கள் :) ) இந்த விதிமுறைகளின் படி கட்டப்பட்டன.
அது தவிர இப்போதைய காலகட்டத்தை எடுத்தால் லாப நோக்கில்லாமல் கட்டப்பட்ட / நடத்தப்படும் பள்ளிகள், மறைமாவட்டங்களால் (டயோசீஸ்) நடத்தப்படும் பள்ளிகள், தொழிற்சாலைகளுடன் இனைந்த, அந்த தொழிற்சாலை நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், எஸ்.பி.ஓ.ஏ போன்ற சில பள்ளிகள் பெரும்பாலான (16,17,18 தவிர பிற) விதிகளை கடைபிடிக்கின்றன.
ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளில் நான் மேலே கூறியவை எத்தனை சதம் என்பதும் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான பள்ளிகளில் இந்த விதிமுறைகள் பொருந்தாது.
அப்படியென்றால் பல (60) வருடங்களாக இவர்கள் எப்படி பள்ளியை நடத்தினார்கள் ?? அரசும் எப்படி அனுமதி வழங்கியது ??
கொஞ்சம் தோண்டிப்பார்த்தால் அளிக்கப்பட்ட அனுமதி சில விதிமுறைகளுக்குட்பட்டு / அல்லது நிபந்தனைகளுக்குட்பட்டு என்று இருக்கும் (அதாவது கூட்டனி அமைக்கும் போது சொல்வார்கள் அல்லவா, நிபந்தனையற்ற ஆதரவு, நிபந்தனையுடன் ஆதரவு என்று - அது போல் !!)
இவ்வளவு நாள் கண்டுக்காமல், 2008ல் திடீரென கிடுக்கி பிடி போடுவதன் காரணம் என்ன
திடீரெனறு கூறவில்லை. கடந்த நான்கு வருடங்களாகவே கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிறுக சிறுக கூறி, இரண்டு மூன்று வாய்தா எல்லாம் அளித்து தற்பொழுது அரசு மிகவும் உறுதியாக விதிகளை கடைபிடிக்கிறது. இவ்வாறு கடுமையாக விதிகள் கடைபிடிக்கப்படுவதற்கான காரணம் கும்பகோனத்தில் 16-07-2004 நடந்த ஒரு துயர சம்பவம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். புதிதாக எந்த விதியும் உருவாக்கவில்லை. பழைய விதியைத்தான் கடைபிடிக்கிறோம். விதிகளை கடைபிடிப்பதற்கே நமக்கு மரணம் தேவைப்படுவது சோகமான, சற்று எரிச்சலான, அதே சமயம் கவலைப்படவேண்டிய, மாற்றப்படவேண்டிய விஷயம். புது மாணவர்களை பகடிவதை (ரேக்கிங்) செய்யக்கூடாது என்ற விதி பல வருடங்களாக உள்ளது 1996 (நாவரசு மரனம்) முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . பெண்களைப் பகடி/எள்ளல் செய்தல் (ஈவ் டீசிங்) தவறு என்பதை சரிகா ஷா தான் சொல்லவேண்டி இருந்தது. திரையரங்குகள் குறித்த விதிகளை கடைபிடிக்க டெல்லியில் ஒரு தீவிபத்து தேவைப்பட்டது. குறுகலான சந்தில் பல மாடி கட்டிடம் கட்டக் கூடாது என்ற விதியையும் "சூடு" பட்ட பின் தான் கடைபிடிப்போம் என்று நினைக்கிறேன்
சரி இனி சிறுமுகை பள்ளிக்கு வருவோம்
அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களை சேர்த்து பின்னர் அவர்களுக்கு தேர்வுசீட்டு (தேர்வு நுழைவுச்சீட்டு, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு; தேர்வுக்கூட நுழை ஒப்புதல் சீட்டு) பெற முடியாமல் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து அவர்களை தனிப்பயிற்சிப்பள்ளி (டூடோரியல்) மாணவர்களாக தேர்வு எழுதவைக்கும் சில பள்ளிகளை விட சிறுமுகை காந்தி பள்ளி நிர்வாகம் மிகவும் பொறுப்பாக, நேர்மையாக 2008 மார்ச் மாதமே "அடுத்த வருடம் (2009)" அங்கீகாரம் கிடையாது என்று கூறி விட்டார்கள். ஒரு "அறிவாளி" இந்த அறிவிப்பு தேர்வு நேரம் என்று கோபப்படுகிறார். ஏன் சார், 2009ல் தேர்வு எழுத முடியாது என்று 2008 மார்சிலேயே கூறி விட்டார்களை, பின் எதற்கு இப்படி கரித்து கொட்டுகிறீர்கள் . அவர்கள் இதை மறைத்து 2009 ஜனவரியில் தேர்வு சீட்டு பெறுவதில் சிக்கல் வந்தாலோ, இல்லை, மாணவர்களை வகுப்பில் சேர்த்து விட்டு 2008 ஆகஸ்டில் அங்கீகாரம் பெறமுடியாமல் வேறு பள்ளி செல்லுங்கள் என்று கூறினால் தானே தவறு ??
எனது கேள்விகள்
01. முன்னதாகவே பள்ளியை முடுகிறோம் என்று கூறுவது தவறா ? (கல்வியாண்டின் முடிவிலோ அல்லது இடையிலோ அவர்கள் கூறவில்லையே)
02. ஒரு தனி நபர் ஏன் கை காசை போட்டு பள்ளி நடத்த வேண்டும் ? அவருக்கு என்ன கட்டாயம் ?
03. கல்விப்பணி புனிதமானது தான். நான் மறுக்கவில்லை. ஆனால் தான் பட்டினி இருந்து, தனது பிள்ளைகளையும் பட்டினி போட்டாவது பள்ளி நடத்த வேண்டுமா. (பிச்சை எடுத்த கற்றல் நன்று. ... .பிச்சை எடுத்து கற்பித்தல் ???)
04. பள்ளியை மூடுவது சிறந்ததா, இல்லை கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா ?
05. பள்ளியை மூடும் நிர்வாகம், சான்றிதழ்களை தர மறுக்கிறதா (அல்லது அது போல் ஏதாவது பிரச்சனையா). நம் காசோடு மாயமாகும் நிதி நிறுவனங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்வது சரி. அடுத்த வருடம் மூடுகிறோம் என்று முன்னதாகவே (கட்டணம் வாங்கும் முன்னர், மாண்வர்களை சேர்க்கும் முன்னர்) அறிவித்த ஒரு தனியார் பள்ளியும் நிதி நிறுவனமும் ஒன்றா ??
06. மாணவர்கள் மீது அதிக கட்டண சுமையை திணிக்க விரும்பாமல் இப்பள்ளி மூடப்படுகிறது. தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றன / மெட்ரிக் பள்ளிகள் அக்கிரமம் என்றெல்லாம் அழும் / எழுதும் பத்திரிகைகளும், ஊடகங்களும், ஒரு சில பதிவர்களும், இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறக்க வில்லை ??
07. ஏற்கனவே மாணவர்கள் இல்லாமல் பல கிராமப்புற பள்ளிகள் மூடப்படுவது தினசரி நிகழ்வாகிவிட்டது. மாணவர்கள் இல்லாததற்கு காரணம் (1) நகர் புறங்களுக்கு மக்கள் செல்வது (2) தமிழகத்தில் அளவிற்கு அதிகமாக கடைபிடிக்கப்பட்ட குடும்ப கட்டுபாடு.
பள்ளி மூடப்படுவதற்கு காரணம் "50 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள்" என்று "துப்பறிந்து" எழுதும் ஊடகங்கள் (என் வரிப்பணம் வீணாகிறது என்று சில அறிவு ஜீவிகளின் புலம்பல் வேறு கட்டாயம் அந்த கட்டுரையுடன் பெட்டி செய்தி யாக இருக்கும்).... கிராமப்புற மாணவன் படிக்க கூடாது என்று உள்நோக்கமே இது "வரி வீனாகிறது" கட்டுரையாக வருகிறது என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன ?.
மாடு மேய்த்துக்கொன்டிருந்தவனை சாப்பாடு போட்டு பள்ளிக்கு அழைத்த காலம் போய், இன்று பள்ளிக்கு வருபவனை பள்ளியை மூடி விட்டு அடுத்த ஊருக்கு போ என்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் ??
08. ஒரு ஊரில் இருக்கும் 10 தனியார் பள்ளிகளில் 4 மூடப்பட்டால் பிற பள்ளிகளின் கட்டணம் உயருமா, குறையுமா ?? ஏற்கனவே "சிக்கன நடவடிக்கை" யாக அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. இப்படி தனியாரும் மூடும் இதே நிலைமை தொடர்ந்தால், (கண்டிப்பாக தொடர சாத்தியக்கூறுகள் உள்ளன), இது போல் பல தனியார் பள்ளிகளும் மூடு விழா நடத்தினால், கல்வி என்பது மேட்டுக்குடிகளுக்கு மட்டும் என்று ஆகும் நாளை (ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை) நோக்கி நாம் போகிறோமா ??
09. ஒரு தனி நபர் இந்த தொழில் செய்ய வேண்டும், அதுவும் அவர் நஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம், மறியல் செய்ய நமக்கு உரிமை உள்ளதா??
10. மெட்ரிக் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் என்றாலே வெறுப்புடன் எழுதும் ஊடகங்கள் / ஒரு சில பதிவர்கள் இனைந்து ஒரு பள்ளியாவது நடத்தி 500 மாணவர்களுக்காவது கல்வி கற்பிக்கத்தயாரா ??
11. விதிமுறைகளின் படி பள்ளி நடத்த முடியாது. விலக்கு அளிக்க வில்லை என்றால் மூடத்தான் வேண்டும் எனறு அனைத்து பள்ளிகளும் கூறினால் அரசு என்ன செய்ய வேண்டும். விதிமுறைகளை தளர்த்தலாமா, இல்லை கறாராக விதிகளை (பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருந்தாலும்) கடைபிடிக்க வேண்டுமா ??
உங்களின் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்
இந்த இடுகை தொடரின் அடுத்த பதிவுகள்
08. ஒரு ஊரில் இருக்கும் 10 தனியார் பள்ளிகளில் 4 மூடப்பட்டால் பிற பள்ளிகளின் கட்டணம் உயருமா, குறையுமா ?? ஏற்கனவே "சிக்கன நடவடிக்கை" யாக அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. இப்படி தனியாரும் மூடும் இதே நிலைமை தொடர்ந்தால், (கண்டிப்பாக தொடர சாத்தியக்கூறுகள் உள்ளன), இது போல் பல தனியார் பள்ளிகளும் மூடு விழா நடத்தினால், கல்வி என்பது மேட்டுக்குடிகளுக்கு மட்டும் என்று ஆகும் நாளை (ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை) நோக்கி நாம் போகிறோமா ??
09. ஒரு தனி நபர் இந்த தொழில் செய்ய வேண்டும், அதுவும் அவர் நஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம், மறியல் செய்ய நமக்கு உரிமை உள்ளதா??
10. மெட்ரிக் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் என்றாலே வெறுப்புடன் எழுதும் ஊடகங்கள் / ஒரு சில பதிவர்கள் இனைந்து ஒரு பள்ளியாவது நடத்தி 500 மாணவர்களுக்காவது கல்வி கற்பிக்கத்தயாரா ??
11. விதிமுறைகளின் படி பள்ளி நடத்த முடியாது. விலக்கு அளிக்க வில்லை என்றால் மூடத்தான் வேண்டும் எனறு அனைத்து பள்ளிகளும் கூறினால் அரசு என்ன செய்ய வேண்டும். விதிமுறைகளை தளர்த்தலாமா, இல்லை கறாராக விதிகளை (பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருந்தாலும்) கடைபிடிக்க வேண்டுமா ??
உங்களின் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்
இந்த இடுகை தொடரின் அடுத்த பதிவுகள்



15 மறுமொழிகள்:
(-:
முதலில் இரு விசயங்கள்:
* பல விசயங்கள் குறித்தும் சில பதிவர்கள் ஏன் எழுதவில்லை என்ற கேள்வி பல பதிவுகளில் கேட்கப்படுகிறது. ஒன்று, அவர்கள் இந்த விசயம் குறித்துப் படிக்காமல் இருந்திருக்கலாம். படித்திருந்தாலும், எல்லாரும் எல்லா விசயங்களைக் குறித்தும் கண்டிப்பாக எழுத வேண்டும் என்றில்லை. அதனால், எந்த விசயம் குறித்தும் ஏன் எழுதவில்லை என்று ஒரு பதிவரையோ பதிவர் சமூகத்தையோ கேட்பதில் பொருள் இல்லை. அவரவருக்குத் தோன்றியதை, விரும்பியதை எழுதிக் கொள்ள வேண்டியது தான்.
* பதிவர்கள் சேர்ந்து இதைச் செய்யத் தயாரா, அதைச் செய்யத் தயாரா என்ற கேள்வியும் பல பதிவுகளில் எழுப்பப்படுகிறது. எதை நிரூபிப்பதற்காகப் பதிவர்கள் இப்படி செய்து காட்ட வேண்டும் என்று புரியவில்லை. திரைப்பட விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் படம் எடுக்க முடியுமா என்ன? ஒரு வேளை, இந்தச் செய்தியைப் போட்ட காசு வைத்துள்ள குமுதத்தைப் பார்த்து பள்ளி கட்டத் தயாரா என்று கேட்டிருந்தாலும் பொருள் இருக்கும். ஆனால், அவர்களும் கட்டத் தேவை இல்லை.
* தற்போது இருக்கும் கட்டணத்தையே மக்களால் கட்ட இயலாத போது, இந்தப் பள்ளி கட்டணத்தை மேலும் உயர்த்த வாய்ப்பு இல்லை. மூடுவது சரி. மக்கள் ஆர்ப்பாட்டம் தவறு. இந்தப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பதில் தரமான அரசுப் பள்ளிக் கல்வி தரச் சொல்லி மாவட்ட கல்வித் துறை முன் ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
* இப்போதாவது அரசு இந்த விதிகளைச் செயற்படுத்துகிறதே என்று மகிழ்கிறேன். பெருமெடுப்பிலான மக்கள் அரசு பள்ளிகளை நாடவும், அதன் வழியாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, தரத்தை உயர்த்துவதற்கான மறைமுக அழுத்தமாகவும் இருக்கலாம்.
//சில பதிவர்கள் ஏன் எழுதவில்லை என்ற கேள்வி பல பதிவுகளில் கேட்கப்படுகிறது. ஒன்று, //
காரணம் ”அவர்கள்” இது குறித்து எதிர் விவாதம் எழுப்புவதால். ஒரு சில பள்ளிகளில் அநியாய கட்டணம் வாங்கியவுடன் பொங்கி எழுந்து அனைத்து ஆசிரியர்களையும் / பள்ளி தாளாளர்களையும் ஒருமையில் கீழ்த்தரமாக திட்டவும், தவறான புள்ளி விபரங்களை அளித்து அனைவரையும் குழப்பவும் தயங்காத பதிவர்கள் ”அதே” விசயத்தில் சில மாற்றுக்கருத்துக்கள் வரும் பொழுது கண்ணை முடிக்கொள்வது ஏன்.
//பதிவர்கள் சேர்ந்து இதைச் செய்யத் தயாரா, அதைச் செய்யத் தயாரா என்ற கேள்வியும் பல பதிவுகளில் எழுப்பப்படுகிறது.//
இதற்கு பதில் மேலே கூறியதுதான். ஒருவர் அநாகரிகமாக பிறரை திட்டி விட்டு ”நான் இலவசமாக சம்பளம் வாங்காமல் வேலை செய்ய தயார்” என்று வெட்டி சவால் விட்டார் . வேலை தயார் என்றவுடன் ஆளை கானோம் :) :)
அவர் சம்பளம் வாங்காமல் வேலை செய்ய யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால் அதே போல் அவரும் மற்றவர்கள் குறித்து நாகரிகமாக பேச வேண்டும் அல்லவா ??
//எல்லாரும் எல்லா விசயங்களைக் குறித்தும் கண்டிப்பாக எழுத வேண்டும் என்றில்லை.//
ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எழுதும் விஷயம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை அளித்து விட்டு, அதை சுட்டி காட்டியவுடன் தவறை திருத்தாமல் மேலும் மேலும்
தகவல்களை திரித்து பொய் சொல்லும், கற்பனையில் தோன்றியதையும், யூகத்தால் நினைத்ததையும் உண்மை என்று அடித்து பொய் கூறி மற்றவர்களை குழப்பும் வெட்கக்கேடான செயலை செய்யும் சிலரைப்பார்த்து தான் இந்த கேள்வியே தவிர துளசி கோபால் மேடமோ நீங்களோ (ரவி) இது குறித்து கண்டிப்பாக எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை :) :) :)
//பெருமெடுப்பிலான மக்கள் அரசு பள்ளிகளை நாடவும், அதன் வழியாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, தரத்தை உயர்த்துவதற்கான மறைமுக அழுத்தமாகவும் இருக்கலாம்//
நம்ம அரசு எப்போதுமே தலையைச் சுற்றிதான் மூக்கைத் தொட வேண்டுமா என்ன? அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலே போதும். அதிக கட்டணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்க யார் விரும்புவர்?
//எல்லாரும் எல்லா விசயங்களைக் குறித்தும் கண்டிப்பாக எழுத வேண்டும் என்றில்லை//
நான் எல்லாரையும் கூறவில்லையே
தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றன / மெட்ரிக் பள்ளிகள் அக்கிரமம் என்றெல்லாம் அழும் / எழுதும் பத்திரிகைகளும், ஊடகங்களும், ஒரு சில பதிவர்களும், இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறக்க வில்லை ??
//பதிவர்கள் சேர்ந்து இதைச் செய்யத் தயாரா, அதைச் செய்யத் தயாரா என்ற கேள்வியும் பல பதிவுகளில் எழுப்பப்படுகிறது.//
இதுவும் எல்லா பதிவர்களையும் அல்ல
மெட்ரிக் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் என்றாலே வெறுப்புடன் எழுதும் ஊடகங்கள் / ஒரு சில பதிவர்களை மட்டும் தான் கூறியிருந்தேன்
---
ரவி சங்கர் சார்,
ஒரு சிறு விளக்கம்
சட்டை இறுக்கமாக உள்ளது என்று கூற தையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ, குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என்று கூற சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ அவசியம் கிடையாது
-oOo-
ஆனால்,
”இன்று குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டது” என்பதற்கும்
”இவன்/இவளுக்கு சமையல் தெரியவே தெரியாது, இவன் தொழிலே உப்பை கூட போடுவது, இவன் அதிக உப்பை போட்டு நம்மை நோயாளி ஆக்க பார்க்கிறான்” என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளதே... ;) ;)
உள்ளது என்று நான் நினைக்கிறேன் 8)
//பெருமெடுப்பிலான மக்கள் அரசு பள்ளிகளை நாடவும்,//
அரசு பள்ளிகளும் பல இடங்களில் மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம் :( :( :( (கேள்வி 7)
உங்கள் கேள்வி (ஆதங்கம்)மிக நியாயமான ஒன்று.ஆனால் பொதுவாக தற்சமயம் (real estate boom) ஒரு சிலர் தாங்கள் நடத்தும் நிறுவனங்களை மூடுவதாக சில பத்திரிக்கை செய்திகளில் படித்தேன்(to sell the land ).உண்மையா?.
//ஆனால் பொதுவாக தற்சமயம் (real estate boom) ஒரு சிலர் தாங்கள் நடத்தும் நிறுவனங்களை மூடுவதாக சில பத்திரிக்கை செய்திகளில் படித்தேன்(to sell the land ).உண்மையா?.//
உண்மை. 1990களில் திரையரங்குகள். தற்சமயம் பள்ளிகள். இது தான் எனது ஆதங்கம்.
10 ரூபாய், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் இன்று 100 ரூபாய் ஆகி விட்டதே. 5 நபர்கள் கொண்ட குடுமபம் 100 ரூபாயில் சினிமா பார்த்தார்கள் என்றால், இன்று செலவு 500 ரூபாய் ஆகி விட்டது.
எப்படி திரையரங்கில் சென்று சினிமா பார்ப்பது நடுத்தர குடும்பத்தினரின் வருமானத்திற்கு அப்பால் சென்றதோ, அதே போல் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்புவதும் நடுத்தர குடும்பத்திற்கு இயலாத காரியமாக ஆகிவிடுமோ என்ற நிலைமை வெகு வேகமாக உண்டாகி வருகிறது.
வசதி அதிகம் உள்ள திரையரங்குகள் (நான் அடிப்படை பாதுகாப்பு வசதியை மட்டும் சொல்லவில்லை. ஆடம்பர வசதிகளையும் சேர்த்து தான் கூறுகிறேன்) அதிகரிக்க அதிகரிக்க, திரையரங்கில் சினிமா பார்ப்பது (வீட்டில் திருட்டு குறுந்தகடு வேறு கதை) நடுத்தர மக்களிடம் குறைந்து விட்டது.
அது போல் பள்ளிகள் மூடப்பட, மீதி பள்ளிகள் கட்டணத்தை அதிகரிக்க, அதானால் பலர் கட்டணம் செலுத்த முடியாமல் போக, அதனால் மேலும் பள்ளிகள் மூடப்பட, இது கோழி --> முட்டை --> கோழி என்று "குற்றமுள்ள சுழற்சி" (விச்சியஸ் சைகிள் : அவன் அடித்தான், நான் அடித்தேன், அவன் உதைத்தான், நான் உதைத்தேன்) யாக மாறும் அபாயம் உள்ளது :(
ரவிசங்கர் சார்,
//பல விசயங்கள் குறித்தும் சில பதிவர்கள் ஏன் எழுதவில்லை என்ற கேள்வி பல பதிவுகளில் கேட்கப்படுகிறது. ஒன்று, //
அதை கேள்வி என்பதை விட எழில் அவர்கள் கூறியபடி ஆதங்கம் என்று எடுத்துக்கொள்ளளாமே :) :) :)
ஆதங்கம் என்றே எடுத்துக் கொள்கிறேன் :)
**
சார் தேவையில்லை. தயவு செய்து ரவி என்றே என்னை அழைக்கலாம் :)
You could have written more on why Sirumugai schools are getting closed, in the angle of SIV getting closed there.
My friend was a Director there and was always fuming about govt. not taking enough steps to reduce workforce and run the Viscose Yarn factory.
Now there is loss in SIV in terms of Machinery getting lost/stolen.
//You could have written more on why Sirumugai schools are getting closed, in the angle of SIV getting closed there.//
நன்றி ரமேஷ்
விஸ்கோஸ் கம்பெனி மூடப்பட்டது --> ஊழியர்களிடம் வறுமை --> வறுமையால் நல்ல கல்வி கிடைக்கவில்லை
இது தான் பிரச்சனை
இதில் வறுமை --> வறுமை என்பதால் கல்வி கிடைப்பதில் தட்டுப்பாடு என்ற நிலை பல இடங்களுக்கும் பொருந்தும்
எனவே அதை மைய கருத்தாக வைத்து எழுதினேன்.
விஸ்கோஸ் மூடப்பட்டாதல் அந்த கல்வி கூடம் மூடப்பட்டிருக்கலாம்.
ஆனால் அந்த ஒரு பள்ளி மட்டுமே மூடப்படவில்லையே. எனவே பொது விவாதமாக எழுதியிருந்தேன்
//My friend was a Director there and was always fuming about govt. not taking enough steps to reduce workforce and run the Viscose Yarn factory.//
இது குறித்து எழுதியிருந்தால், ”கல்வி / பணம் / கல்வித்தட்டுப்பாடு” என்ற கருத்திலிருந்து “தொழிற்சங்கம், வேலை நிறுத்தம், பொதுவுடமை, முதலாளித்துவம்” என்ற திசையில் விவாதம் திரும்பியிருக்கும்
//Now there is loss in SIV in terms of Machinery getting lost/stolen.//
வருத்தப்பட வேண்டிய செய்தி.
ஒரு காலத்தில் (என்பதுகளின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும்) SIVல் வேலை என்றால் அது மிகவும் கவுரவமானதாக இருந்த நிலை எனக்கு தெரியுமென்பதால் இன்றைய விஸ்கோஸ் ஆலையின் நிலையை பார்த்து மனம் கனக்கத்தான் செய்கிறது
//You could have written more on why Sirumugai schools are getting closed, in the angle of SIV getting closed there.//
அடுத்த விஷயம். அங்கு பள்ளிக்கூடம் மூடப்பட்டு அதற்கு பதில் வேறு ஒரு (அதிகம் காசு கிடைக்கும்) கல்வி நிலையம் துவங்கப்படுவதாக செய்தியில் உள்ளது
//* தற்போது இருக்கும் கட்டணத்தையே மக்களால் கட்ட இயலாத போது, இந்தப் பள்ளி கட்டணத்தை மேலும் உயர்த்த வாய்ப்பு இல்லை. மூடுவது சரி. மக்கள் ஆர்ப்பாட்டம் தவறு. இந்தப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பதில் தரமான அரசுப் பள்ளிக் கல்வி தரச் சொல்லி மாவட்ட கல்வித் துறை முன் ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
* இப்போதாவது அரசு இந்த விதிகளைச் செயற்படுத்துகிறதே என்று மகிழ்கிறேன். பெருமெடுப்பிலான மக்கள் அரசு பள்ளிகளை நாடவும், அதன் வழியாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, தரத்தை உயர்த்துவதற்கான மறைமுக அழுத்தமாகவும் இருக்கலாம்.//
வழிமொழிகிறேன்.
சிறந்த பதிவு, சிறந்த அலசல்!
மிக்க நன்றி!
சிவாஜி சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Post a Comment