இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, May 12, 2009

தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
சில கேள்விகள் சில பதில்கள்

தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர்
சுமார் 60000

தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணியிடங்கள் உள்ளன
சுமார் 13000

தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணிபுரிகிறார்கள்
சுமார் 12000

எத்தனை நபர்களுக்கு ஒரு மருத்துவர்
1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர்

எத்தனை நபர்களுக்கு ஒரு அரசு மருத்துவர்
5000 நபர்களுக்கு ஒரு அரசு மருத்துவர்

தமிழகத்தில் அரசு பணிகளில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளதா
ஆம் !!

200 காலியிடங்களுக்கு 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதே நேரம் பற்றாக்குறை என்றும் சொல்கிறீர்கள். எது உண்மை. எது பொய்
இரண்டுமே உண்மைதான்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர் பணியிடங்களில்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு எம்.பி.பி.எஸ் மட்டும் படித்த மருத்துவர்கள் போதும். இதில் எந்த பற்றாக்குறையும் இல்லை. ஆனால் அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் தேவை. இதில் தான் பிரச்சனையே

மீண்டும் கூறுவதென்றால்
தமிழகத்தில்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை
அரசு மருத்துவமனைகளில் சில சிறப்பு பிரிவுகளில் மட்டுமே (மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மயக்க மருத்துவம்) பற்றாக்குறை உள்ளது
ஆனால் மருத்துவக்கல்லூரிகளில் தான் அதிக பற்றாக்குறை.

இதனால் தான்

எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களின் ஒரு வருட கட்டாய சேவையை விட பட்ட மேற்படிப்பு படித்த சிறப்பு மருத்துவர்களின் 2/3 வருட கட்டாய சேவை நமக்கு தேவைப்படுகிறது.

மத்திய அரசு சட்டீஸ்கரில் காலராவினால் பலர் மரணமடைவதாகவும் அதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறையே காரணம் என்று கூறியது பொய்யா
சட்டீஸ்கரில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களின் பற்றாக்குறை இல்லை. சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை தான் உள்ளது

கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள்.
போர் கமிட்டி (Bhore Committee) அறிக்கையின் படி 30,000 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அதில் ஒரு மருத்துவரும் தேவை.

தமிழகத்தின் மக்கள் தொகை 6 கோடி. இதற்கு தேவைப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6,00,00,000/30,000 = 2000
தேவைப்படும் மருத்துவர்கள் = 2000

தமிழ் நாட்டில் பொது சுகாதார துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும் 1532 (01 மே 2009 கணக்கு). அதில் மருத்துவர் பணியிடங்கள் = சுமார் 3700

இது தவிர சென்னை போன்ற நகரங்களில் நகர நல்வாழ்வு மையங்கள், “பால் ஆஸ்பத்திரி” போன்றவைகளும், அதில் மருத்துவர்கள் உள்ளனர்.

எனவே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் தமிழகம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி உள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் தமிழகம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி உள்ளது என்பதற்கு வேறு ஆதாரம் இருக்கிறதா.
2004 டிசம்பர் 26....... அன்று உலக சுகாதார நிறுவனமும் பிறரும் கூறியது “ சுனாமியால் இறந்தவர்களை விட இனி வரும் தொற்று நோய்களினால் இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்” என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்கள்.

அதன் பின், பத்தாயிரம் சடலங்கள் இருந்த போதும், ஒருவருக்கு கூட காலரா வரவில்லை. சில குழந்தைகளுக்கு சின்னம்மை (chicken Pox) பாதித்ததை தவிர. இந்த அளவிற்கு செயல் பட முடிந்ததற்கு காரணம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையும் அதில் உள்ள அனுபவம் மிக்க மருத்துவர்களும் பிற பணியாளர்களும் தான். (இப்படி பட்ட அனுபவம் மிக்க மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு 4 மாதங்களுக்கு ஒரு மருத்துவர் , அடுத்த நான்கு மாதங்களுக்கு வேறொருவர் என்றால் என்ன ஆகும், யாருமே அனுபவங்களை பெற முடியாது). பலருக்கு தெரியாத செய்தி --> அமெரிக்காவில் காத்ரீனா, ரீட்டா என்று பாதித்து அவர்கள் சீரழிந்த போது நாகப்பட்டின சுகாதார துறை அதிகாரியின் உதவி கோரப்பட்டு அவர் அமெரிக்கா சென்று அறிவுரை வழங்கி வந்தது.


தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளனவா
இல்லை

பின் எப்படி போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். 30,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்பதற்கு பதில் 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்றால் நல்லது தானே. அது என்ன போர் கமிட்டி
நல்ல கேள்வி. பதில் கீழே

எங்கள் கிராமத்திற்கு தனியாக மருத்துவமனை கட்டி அதில் ஒரு மருத்துவரை நியமித்தால் என்ன. எங்கள் கிராமத்தில் 2000 நபர்கள் உள்ளனர். என்ன அவசரம் என்றாலும் நாங்கள் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.
இப்ப நாம் சிறிது கணக்கு பார்ப்போம்
இரண்டாயிரம் நபர்கள் மட்டும் உள்ள ஒரு கிராமத்திற்கு தனியாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் அங்கு இரு மருத்துவர்கள், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவி செவிலியர், ஒரு ஆய்வக உதவியாளர் என்று நியமிக்க வேண்டி வரும்

மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர் ஆகியவர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் (டெக்னிகல் கேடர்). இவர்களுக்கு அவர்கள் திறமை மங்காமல் இருக்க தினம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச வேலை அளவு உண்டு. அதே போல் வேலையில் அசிரத்தையாக இல்லாமல் இருக்க அதிக பட்ச அளவும் உண்டு
(Minimal Work load to maintain professional competence and maximal workload to avoid fatigue - இதில் fatigue என்பது உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டையும் குறிக்கும்)

உதாரணமாக நீங்கள் கினற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஒரு விசைப்பொறி (மோட்டார்) வாங்குகிறீர்கள். அதை ஒரு நாள் 22 மணி நேரம் என்று ஒரு வாரம் ஓட்டினால் என்னவாகும் - சுருள் (காயில்) எரிந்து விடும். இது அனைவரும் அறிந்ததே. அதே போல் ஒரு வருடம் ஓட்டமல் இருந்தால் துருபிடிக்கும்.

அதே போல் தான் மருத்துவர்களும், ஆய்வக உதவியாளர்களும் .

அதாவது

தொடர்ந்து தூங்காமல் 24 மணி நேரம் பேரூந்து ஓட்டிய ஓட்டுனர் பேரூந்து ஓட்டுவது ஆபத்து. 3 வருடம் பேரூந்தே ஓட்டாமல் இருந்தவர் திடிரென மலைப்பகுதியில் ஓட்டுவதும் ஆபத்து

அதே போல் தான் ஒரு ஆய்வக உதவியாளர் ஒரு நாளைக்கு 1 இரத்த தடவல் (Blood Smear) மட்டுமே சோதிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் நோயின் அறிகுறி இல்லாத இரத்த தடவல்களை பார்ப்பவர் ஒரு நோயின் அறிகுறி உள்ள தடவலை தவற விடுவார்.

அது மாதிரி தான் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுனர், ஒரு செவிலியர், ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாததிற்கு குறைந்த பட்சம் இவ்வளவு, அதிக பட்சம் இவ்வளவு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கணக்கிட்டு போர் கமிட்டி அளவு நிர்ணயம் செய்துள்ளது.

அதன் படி தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன

ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் தேவை என்று பார்த்தோம். முதல் அடுக்கு, இரண்டாம் அடுக்கு, மூன்றால் அடுக்கு என்பவை ஒன்றோடு ஒன்று இனைந்திருக்க வேண்டும். முதல் அடுக்கு மட்டும் வளர்ந்து பிற அடுக்குகள் முன்னேறாமல் இருந்தால் அதனால் பயன் இல்லை.

உதாரணமாக முதல் அடுக்கை நகர பேரூந்து (அல்லது சிற்றுந்து, தானியங்கி மூவிருளி, உதாரணம் திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு ) என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாம் அடுக்கு அடுத்த மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்து (உதாரணம் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு - விழுப்புரம்), மூன்றாம் அடுக்கு தொலைதூர பேரூந்து.(உதாரணம் சென்னை - மதுரை)

இதில் அனைத்துமே முக்கியம்தான்.

  • நகரப்பேரூந்து பற்றாக்குறை என்றால் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் காத்திருக்கும்
  • ஆனால் நகரப்பேரூந்துகள் மட்டும் அதிகரித்து அதற்கு ஈடாக தொலைதூர பேருந்துகள் அதிகரிக்க வில்லை என்றால் அந்த காத்திருப்பு கூட்டம் கிராமத்தில் இருக்காது. அதற்கு பதில் நகரத்தில் இருக்கும்.

மூன்றும் ஒரு சீராக வளர்வது தான் நலம்.

தினமும் மண்வெட்டியால் மட்டும் தோண்டிக்கொண்டிருந்த ஒருவரை பொக்லேன் இயந்திரத்தை உபயோகிக்க சொன்னால் என்ன ஆகும்.

  • அல்லது அனைத்து வீடுகளிலும் பொக்லேன் இயந்திரம் இருப்பதால் யாருக்கு என்ன பலன்.
  • நிறைய மண்வெட்டிகள், அதற்கு குறைவாக டிராக்டர், அதற்கும் குறைவாக பொக்லேன் என்று இருந்தால் தானே நடைமுறைக்கு சிறப்பாக இருக்கும்.

மண்வெட்டிகள் மட்டுமே அதிகரிப்பது (டிராக்டரும் பொக்லேனும் எண்ணிக்கை கூடாமல் ) எப்படி ஒரு ஆரோக்கிய வளர்ச்சி இல்லையோ அதே போல் தான் தொலைதூர பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் உள்ளுர் பேரூந்துகள் எண்ணிக்கை மட்டும் அதிகரிப்பதால் முழு பலன் கிடையாது.

(உள்ளூர் பேரூந்து போதிய அளவில் இல்லாமல் தொலைதூர பேரூந்துகள் மட்டும் அதிகரிப்பது உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலின் விளைவு :) :) அது தான் சில இடங்களில், சில துறைகளில் நடந்து வருகிறது. அதுவும் மிகப்பெரிய தவறு)

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மருத்துவர் நியமிக்கப்படுவதில் பொருளாதாரத்தையும் தாண்டிய சிக்கல்கள் உள்ளது. அனைவரும் சிராய்ப்புக்கு உள்ளூரிலேயே வைத்தியம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் முதுகு தண்டுக்கு சிறப்பு வைத்தியம் பார்க்க எந்த ஊரிலும் மருத்துவர் இருக்க மாட்டார். அதே போல் 3 வருடமாக சிராய்ப்புக்கு மட்டுமே வைத்தியம் பார்க்கும் ஒருவர் திடிரென முதுகு தண்டு அறுவைச்சிகிச்சையோ அல்லது இருதய அறுவை சிகிச்சையோ செய்யதால் பலன் எப்படி இருக்கும்.... முன்று வருடம் மண்வெட்டியை மட்டுமே உபயோகித்த ஒருவர் திடிரென பொக்லேன் உபயோகிப்பது அவருக்கும் நல்லதல்ல, பொக்லேனுக்கும் நல்லதல்ல, நிலத்திற்கும் நல்லதல்ல !!!!.

அப்படி என்றால் இதற்கு என்ன தான் தீர்வு
இதனால் தான் தற்பொழுது நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பிணியாளர் ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) பேரூந்து போக்குவரத்து இல்லாத ஊர்களுக்கு மாதம் ஒரு முறை சென்று சிகிச்சை அளிப்பார்கள்

மாதம் ஒரு முறை போதுமா ?
போதாது. ஆனால் முதலில் மாதமொரு முறை ஆரம்பித்து பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற மாற்றலாம். மேலும்
  • சக்கரை நோய்
  • இரத்த கொதிப்பு
  • பேறுகாலம்
போன்ற பிணிகளுக்கு இந்த நடமாடும் மருத்துவக்குழு உதவியாக இருக்கும்

எங்கள் ஊரில் ஒருவரை பாம்பு கடித்து விட்டது / ஒரு சிறுவன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் / ஒரு தாய்க்கு பிரசவ வலி எடுக்கிறது. நாங்கள் ஒரு மாதம் பொறுத்திருக்க (நடமாடும் குழு வரும் வரை) வேண்டுமா. எங்கள் ஊரில் மருத்துவமனை இருந்தால் நல்லது தானே
ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை அமைப்பது நடமுறையில் பலன் அளிக்காத விஷ்யம் என்று தெளிவாக அறிந்து கொண்டோம். இது போன்ற அவசர காலங்களில், நீங்கள் 108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பிணியாளர் ஊர்தி அனுப்பி வைக்கப்படும்

இது (இத்திட்டம்) தமிழகம் முழுவதும் உள்ளதா
இல்லை. 15 மாவட்டங்களில் மட்டும் தற்பொழுது உள்ளது. பிற மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவு படுத்தப்படும்

பிணியாளர் ஊர்திக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா
இல்லை இது முற்றிலும் இலவசம். கட்டணம் எதுவும் கிடையாது

அப்படியென்றால் தமிழகத்தின் தேவை என்ன ??
தற்பொழுது அவசர தேவை சிறப்பு மருத்துவர்கள். DM மற்றும் MCh படித்தவர்கள்

நமக்கு தேவை சிறப்பு மருத்துவர்கள். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மட்டும் படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் சட்டீஸ்கர் சென்றால் நமக்கு என்ன நஷ்டம்.
இவர்கள் சட்டீஸ்கர் சென்றால் சிறப்பு மருத்துவர்கள் வானத்திலிருந்தா குதிப்பார்கள் :) :) :) இவர்கள் தான் பட்ட மேற்படிப்பு படித்து சிறப்பு மருத்துவர்கள் ஆக முடியும்.

புரியவில்லை ?????
நாம் முந்தைய இடுகையில் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் என்று பார்த்தோம்

தமிழகத்தை பொருத்த வரை அரசின் சுகாதார துறையிலேயே முதலாம் அடுக்கும் இரண்டாம் அடுக்கும் முழுவதும் செயல்படுகிறது. மூன்றாம் அடுக்கில் தான் (சிறப்பு மருத்துவர்கள்) பற்றாக்குறை.

உதாரணமாக மலேரியா, காச நோய் (டி.பி) போன்ற நோய்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாம்பு கடிக்கு சுமார் 50,000 ரூபாய் வரை உள்ள மருந்துக்கள் இலவசம். நாய்க்கடிக்கு தொப்புளை சுற்றி ஊசி போடுவதிலிருந்து பல மடங்கு முன்னேறி இன்று வெறும் 5 ஊசிதான். சுமார் 3000 மதிப்புள்ள மருந்துக்கள் இலவசமாகவே போடப்படுகின்றன


குடலிறக்கம் (ஹெர்னியா), விதைவீக்கம், சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை செய்வதிலும் பிரச்சனை இல்லை. போதுமான திறமை உள்ளது. திறமை சாலிகள் போதுமான எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆனால் இதயத்தில் ஓட்டை என்றாலோ, இல்லை மூளையில் அறுவை சிகிச்சை என்றாலோ, சிறுநீரகம் செயல் இழந்தால் செய்ய வேண்டிய டயாலிசஸ் போன்றவை செய்யதான் நீண்ட காத்திருப்பு வரிசை உள்ளது. இது மாற வேண்டுமென்றால் நாம் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்கு சிறப்பு வைத்தியத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்

சட்டீஸ்கர், பீகார், உத்தர பிரதேஷம் போன்ற மாநிலங்களில் முதல் அடுக்கே இன்னமும் ஒழுங்கு முறைக்கு வரவில்லை. உத்தர பிரதேஷத்தில் இன்று வரை போலியோ நோய் தாக்கி வருகிறது.

நாம் இரண்டாவது மாடியிலிருந்து மூன்றாவது மாடிக்கு செல்ல முயல்கிறோம்.
பீகார் இன்னமும் முதல் மாடிக்கு வரவில்லை.

அப்படி ஒரு வேறு பாடு இருக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி கட்டாய திட்டம் நெருடல் தான்.

அப்படி யென்றால் கட்டாய சேவை வேண்டுமா, வேண்டாமா

  • ஒருவருக்கு குடற்புண் ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதை மாத்திரையாலேயே குணப்படுத்தலாம்
  • மற்றவருக்கு குடற்புண் முற்றிய நிலையில் குடலில் ஓட்டை விழுந்து விட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இப்படி வேறு பாடன நிலையில் இருப்பவர்களுக்கு ஒரே வைத்தியம் செய்வது எப்படி ஒருவருக்கு பலன் தந்து மற்றவரை பாதிக்குமோ, அதே போல் தான் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே போல் எம்.பி.பி.எஸ் படிப்பை நீடிப்பது ஒரு மாநிலத்திற்கு பலம் தந்து மற்றொரு மாநிலத்தை பாதிக்கும்

எந்த மாநிலத்திற்கு பலன், எந்த மாநிலத்திற்கு பாதிப்பு
இதற்கான விடையை நீங்கள் கூறுங்களேன் :) :) :) :( :( :(

இந்த தொடரின் அடுத்த இடுகைகள்

45 மறுமொழிகள்:

நந்தா said...

ப்ரூனோ தொடர்ச்சியாய் இது குறித்தான உங்களது விவாதங்களையும், பதிவுகளையும் கவனித்து வருகின்றேன். பல தகவல்கள் என்னைப் போன்றோர்க்குப் புதியவையாவும்,தெளிவினை ஏற்படுத்துபவையாவும் இருக்கின்றன.

துறை சார்ந்த பதிவுகளை வெகு சிலரே தொடர்ந்து எழுதி வரும் வேளைகளில் உங்களைப் போன்றோரின் பதிவுகள் வலைப்பதிவு சமூகத்தின் தரத்தை உயர்த்த கண்டிப்பாய் பயன் படும் என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

http://blog.nandhaonline.com

ஆயில்யன். said...

தெளிவான விபரமான தகவல்கள்

//துறை சார்ந்த பதிவுகளை வெகு சிலரே தொடர்ந்து எழுதி வரும் வேளைகளில் உங்களைப் போன்றோரின் பதிவுகள் வலைப்பதிவு சமூகத்தின் தரத்தை உயர்த்த கண்டிப்பாய் பயன் படும் என்றே தோன்றுகிறது.//

மிகச்சரியான கருத்து

தொடருங்கள்!

வாழ்த்துக்களுடன்....
ஆயில்யன்

ரவிசங்கர் said...

நல்ல தமிழில், தெளிவான, விரிவான இடுகைகளைக் காண மகிழ்ச்சி. உங்களைப் போல் துறை சார்ந்தோர் பலரும் எழுதினால் பல விசயங்களில் மேம்பட்ட புரிதல் வரும். நன்றி.

ezhil arasu said...

தமிழகத்தில் கல்வி முன்னேற்றம்,சாலை மேம்பாட்டு வசதி,அடிபடை கட்டமைப்பு வசதி, வாகன வசதிகள்,குடியிருப்பு வசதிகள்,மேம்பட்ட நிலை தொடர்ந்து, மருத்துவ துறையிலும் நமது கணிசமான முன்னேற்றம் பற்றிய தங்கள் 3 பதிவுகளிலும் விரிவாக அறிய முடிகிறது.இதற்கு காரண கர்த்தாக்களுக்கு நம் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.
பாராட்டுக்கள்.

புருனோ Bruno said...

நந்தா சார், நன்றி

புருனோ Bruno said...

ஆயில்யன் சார், வாழ்த்துகளுக்கு நன்றி

புருனோ Bruno said...

ரவி, நன்றி, சந்தேகம், கேள்வி எதுவும் இல்லையா :) :)

புருனோ Bruno said...

//மருத்துவ துறையிலும் நமது கணிசமான முன்னேற்றம் //

மருத்துவத்துறையில் நாம் கணிசமாக முன்னேறியுள்ளோம். மருத்துவமனையில் உள்ள அழுக்கு சுவர்கள், தூக்குப் படுக்கை (Stretcher) தள்ள 50 ரூபாய் கேட்கும் (பிடுங்கும்) கடைநிலை ஊழியர் போன்ற சில காரணங்களினாலேயே இந்த துறையில் வளர்ச்சியும் சாதனைகளும் வெளியே தெரிவதில்லை

ரவிசங்கர் said...

புருனோ,

இது வரை கேள்வி இல்லை :) ஆனா, கீழ்க்கண்ட வரிகளைப் பார்த்த பிறகு கேட்கத் தோன்றுகிறு.

//மருத்துவமனையில் உள்ள அழுக்கு சுவர்கள், தூக்குப் படுக்கை (Stretcher) தள்ள 50 ரூபாய் கேட்கும் (பிடுங்கும்) கடைநிலை ஊழியர் போன்ற சில காரணங்களினாலேயே இந்த துறையில் வளர்ச்சியும் சாதனைகளும் வெளியே தெரிவதில்லை//

அழுக்குச் சுவர்களை விட்டுவிடுவோம், அரசு மருத்துவமனைகளின் நன்மதிப்பு கெடுவதற்கு நீங்கள் சொல்வது போல் கடைநிலை ஊழியர்கள் மட்டும் தான் காரணமா? ஒருவேளை இப்படிச் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு அரசு தரும் ஊதியம் குறைவாக இருக்கிறதா?

அரசு மருத்துவமனை ஊழியர்கள் அரசுப் பணியை ஒழுங்காகக் கவனிக்காமல் தனி மருத்துவமனை வைத்து பணம் ஈட்டுவதாக வரும் குற்றச்சாட்டு பற்றி? குறிப்பாக, கிராமப்புற மருத்துவர்கள் இப்படிச் செய்வதை நானே பார்த்திருக்கிறேன்.

இவற்றைத் தாண்டி, அரசு மருத்துவமனைகளுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு அளிக்காமல் இருப்பது கூட இவற்றின் குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கலாம் அல்லவா?

புருனோ Bruno said...

//அழுக்குச் சுவர்களை விட்டுவிடுவோம்,//

அதற்கு காரணம் பொது மக்கள் தானே


//அரசு மருத்துவமனைகளின் நன்மதிப்பு கெடுவதற்கு நீங்கள் சொல்வது போல் கடைநிலை ஊழியர்கள் மட்டும் தான் காரணமா? ஒருவேளை இப்படிச் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு அரசு தரும் ஊதியம் குறைவாக இருக்கிறதா?//

கடைநிலை ஊழியர் 6000 முதல் 7000 வரை ஊதியம் பெறுகிறார்கள். இந்த வேலைக்கு தனியாரில் 3000 தான் தருவார்கள்

//அரசு மருத்துவமனை ஊழியர்கள் அரசுப் பணியை ஒழுங்காகக் கவனிக்காமல் தனி மருத்துவமனை வைத்து பணம் ஈட்டுவதாக வரும் குற்றச்சாட்டு பற்றி?//

தமிழகத்தை பொருத்த வரை தனியாக க்ளினிக் வைப்பதற்கு சட்டப்படி எந்த தடையும் இல்லை. (ஆனால் மருத்துவமனை வைக்க முடியாது)

ஏனென்றால் தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் மிக மிக குறைவு (மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிடும் போது). மத்திய அரசிலும் சில மாநிலங்களிலும் பணியில் சேர்ந்து ஐந்து வருடம் கழித்து ஒரு மருத்துவர் பெறும் மாதச்சம்பளம் 35000 முதல் 40000 வரை. தமிழகத்திலோ அது 22000 மட்டும் தான்.

தமிழக அரசும் Non Practising Allowance + Time bound promotion அளித்து அரசு மருத்துவர்கள் தனியாக க்ளினிக் வைப்பதை தடை செய்தால் பிரச்சனை கிடையாது.

// குறிப்பாக, கிராமப்புற மருத்துவர்கள் இப்படிச் செய்வதை நானே பார்த்திருக்கிறேன்.//

மருத்துவரின் பணி நேரம் என்பது வரையறுக்கப்படாமல் இருப்பது மற்றுமொரு சிக்கல்.

//இவற்றைத் தாண்டி, அரசு மருத்துவமனைகளுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு அளிக்காமல் இருப்பது கூட இவற்றின் குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கலாம் அல்லவா?//

தமிழகத்தை பொருத்த வரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான நிதி வருகிறது. மருத்துவக்கல்லூரிகள் தான் நிதி இல்லாமல் கஷ்டப்படுகின்றன.

இது உங்களுக்கு புதிராக இருக்கும். ஏனென்றால் வரவு செலவு அறிக்கையில் மருத்துவக்கல்லூரிகளுக்கே அதிகம் நிதி ஒதுக்கப்படுவதாக இருக்கும். பின் ஏன் குறைபாடு என்று யோசித்தீர்கள் என்றால்

உங்களின் TVS 50க்கு மாதம் 15 லிட்டர் பெட்ரோலும் உங்கள் மூடுந்திற்கு (லாரிக்கு) மாதம் 50 லிட்டர் பெட்ரோலும் ஒதுக்கி விட்டு மூடுந்திற்கு அதிகம் பணம் ஒதுக்கப்படுவதாக கூற முடியாது அல்லவோ ???

இன்று யாருக்காவது போலியோ சொட்டு மருந்து அளிப்பதில் தட்டுப்பாடு உள்ளதா. (முதல் அடுக்கு)

அல்லது சிசேரியன் செய்வதற்கு மருத்துவர் இல்லாத நிலை இருக்கிறதா ?? (இரண்டாவது அடுக்கு)

இதய அறுவைச்சிகிச்சை, சிறுநீரகத்தில் கல் போன்ற சிகிச்சைக்குதானே பெரிய காத்திருப்பு பட்டியல் இருக்கிறது.

புருனோ Bruno said...

மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் 1 சதவிதம் கூட மருத்துவ மாணவர்களுக்கு செலவழிக்கப்படுவதில்லை என்பது வேறு விஷயம். இது குறித்து விளக்கமாக தனி பதிவிட வேண்டும்.

சில விஷயங்களை இதில் கூறியுள்ளேன்
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html

புருனோ Bruno said...

ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமத்தினருக்கு (கிராமங்களில் இருப்பதால்), மருத்துவக்கல்லூரி நகர வாசிகளுக்கு என்று ஒரு தவறான கண்ணோட்டம் பரப்பப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்லூரிகளும் கிராமத்தினருக்குதான்.. மதுரை அல்லது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் எதாவது ஒரு பிரிவிற்கு (வார்டு) சென்று நோயாளிகளை பார்த்து அதில் எத்தனை பேர் கிராமத்தினர், எத்தனை பேர் நகரத்தினர் என்று பார்த்தால் உண்மை தெரியும்.

ரவிசங்கர் said...

விளக்கங்களுக்கு நன்றிங்க. தனியா clinic (தமிழில் என்ன?) வைப்பது பிரச்சினை இல்லை. ஆனால், அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய நேரத்தில் அங்கு இருப்பதும், அங்கு மேம்பட்ட கவனிப்பு தருவதன் மூலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை clinicக்கு வரச் செய்ய நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டுமாறு செயல்படுவது தான் பிரச்சினை. அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துகளைக் கொண்டு வந்து clinicல் வினியோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

புருனோ Bruno said...

//தனியா clinic (தமிழில் என்ன?) வைப்பது பிரச்சினை இல்லை.//
சரி


// ஆனால், அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய நேரத்தில் அங்கு இருப்பதும், அங்கு மேம்பட்ட கவனிப்பு தருவதன் மூலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை clinicக்கு வரச் செய்ய நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டுமாறு செயல்படுவது தான் பிரச்சினை.//
இப்படி நடந்தால் அந்த குறிப்பிட்ட மருத்துவர் மேல் மட்டும் புகார் தரலாமே.

// அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துகளைக் கொண்டு வந்து clinicல் வினியோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.//
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. காலம் காலமாக கூறப்படுவது.

இதற்கு காரணம் DOTS / FTD போன்ற அரசின் திட்டங்களில் சில அரசு மருந்துக்களை வீட்டில் / தபால் அலுவலகத்தில் / அங்கன்வாடி நிலையங்களில் வைத்து சட்டப்படி விநியோகம் செய்வது தான்.

புருனோ Bruno said...

மருத்துவரின் பணி நேரம் என்பது வரையறுக்கப்படாமலேயே இருக்கிறது.

அதனால் ஒரு மருத்துவர் ஓய்வு நேரத்தில் வீட்டிலிருந்தால் கூட அது பணி நேரமாக கருதப்படுகிறது.

உதாரணமாக. ஞாயிறு காலை 7:30 மணி முதல் செவ்வாய் மதியம் 1: 30 மணி வரை 54 மணிநேரம் தொடர்ந்து பணி செய்பவர் (நீங்கள் அப்படி எத்தனை முறை இது வரை பணி செய்திருக்கிறீர்கள் :) :) )புதன் முழுவதும் ஓய்வு எடுக்கலாம். மேலும் அந்த வாரத்தில் வேறொரு நாளும் ஓய்வு எடுக்கலாம்.

புதன் காலை 11 மணிக்கு அவர் க்ளினிகில் இருப்பது உங்களுக்கு அவர் “பணி நேரத்தில்” அரசு பணி செய்யாமல் இருப்பதை போல் தான் தோன்றும் !!!

புருனோ Bruno said...

மருத்துவரின் பணி நேரம் என்பது வரையறுக்கப்படாமலேயே இருக்கிறது.

ILO, இந்திய தொழிலாளர் சட்டம் போன்ற சட்டங்களின் படி 8 மணி நேரம் தான் வேலை.

ஆனால் மருத்துவர்கள் தான் தொடர்ந்து 30 மணிநேரம் (இன்று காலை 7:30 முதல் நாளை மதியம் 1:30 வரை) செய்யபணிக்கப்படுகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு "Post Duty Off" என்று உள்ளது.

திங்கள் காலை 7:30 மணி முதல் செவ்வாய் காலை 7:30 மணி வரை பணியாற்றினால் செவ்வாய் ஓய்வு எடுக்கலாம்.

திங்கள் காலை 7:30 மணி முதல் செவ்வாய் மதியம் 1:30 மணி வரை பணியாற்றினால் புதன் ஓய்வு எடுக்கலாம்.

அன்று அவர்கள் வீட்டில் / க்ளினிகில் இருப்பது உங்கள் கண்களை உறுத்துவது தான் பிரச்சனையே.

இது மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ல பிரச்சனை. செவிலியர், ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர், கட்டு போடுபவர் அனைவரும் 3 முறை மாற்று (shift). யாருக்குமே 24 / 30 / 54 மணி நேரம் தொடர்ந்து பணி கிடையாது. மருத்துவரை தவிர.

அவர்கள் எல்லம்
7.30 - 1.30 - 6 மணிநேரம்
1.30 - 7.30 - 6 மணிநேரம்
7.30 - 7.30 - 6 மணிநேரம்
என்று முறைப்பணி செய்பவர்கள். (சில இடங்களில் இது 7-1-7 என்று இருக்கும்)

இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே (பொதுவாக சனி அல்லது ஞாயிறு) ஓய்வு.

மருத்துவர்கள் தான் இந்த வரைமுறையில் வருவது கிடையாது.

அதனால் தான் சட்டப்படியான விடுப்பிலுள்ள ஒரு மருத்துவர் பணி நேரத்தில் சொந்த க்ளினிகில் இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறது.

ரவிசங்கர் said...

விளக்கங்களுக்கு நன்றிங்க

புருனோ Bruno said...

பின்குறிப்பு : மனசாட்சி இல்லாமல் வேலைக்கே வராமல் சம்பளம் மட்டும் வாங்கும் ஒரிருவர் இருக்கலாம். அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல

ஆனால் சட்டப்படி (ஏன் சட்டத்தில் இருப்பதை விட அதிகமாகவே) பணியாற்றும் பெரும்பாலான மருத்துவர்கள் பற்றி பொதுவாக உள்ள சில தப்பான கருத்துக்களை மாற்றலாம் என்று தான் எனது விளக்கங்கள்.

ரவி, நீங்கள் கூறியபடி ஒரிருவர் இருக்கலாம். ஆனால் அது (வேலைக்கு வராதவர்கள்) பெரும்பாண்மை இல்லை.

அப்படி பெரும்பாண்மையாக இருந்தால் தமிழகத்தில் நரம்பு சிலந்தியும் போலியோவும் காணாமல் போயிருக்காது :) :)

Anonymous said...

மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக அதனால்தான் ஒப்பிடுகின்றார்கள் .
ஆனால் அரசுமருத்துவ மனை அவலங்கள் ( ஊழல்,லஞ்சம்,லாவண்யம்,பராபட்சமான கவனிப்புகள்,திருட்டுக்கள்)மாறினால் தான் நமது மருத்துவத்துறையின் பலன்கள் ஏழை எளியோருக்கு சென்றடையும்.
உங்கள் பதிவு மருத்துவர்கள் மேல் உள்ள மதிப்பை உயர்த்தும்.

புருனோ Bruno said...

//திருட்டுக்கள்)//

கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் உங்கள் சிறுநீரகம் திருடு போகாது :) :)

ரவிசங்கர் said...

நீங்க உடனடி பதில்கள் தருவதால் இன்னும் இன்னும் கேட்கத் தோணுது :)

1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படி என்றால் இன்னும் புதிது புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதிப்பு உண்டா?

2. மேற்கண்ட காரணத்தால் புதிய கல்லூரிகள் திறப்பைத் தாமதப்படுத்தினால், அது ஓரிரு மதிப்பெண் குறைவினால் மருத்துவப் படிப்பைப் படிக்க இயலாமல் போகும் மாணவர்களுக்கு இழப்பு தானே? ஆர்வமும் நியாயமான தகுதியும் உள்ளவர்கள் படிக்கச் செய்ய வேண்டும் தானே? இல்லை, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துவது தவறா? வேலை கிடைக்குமா என்ற கண்ணோட்டத்தை அரசு வேலை, தமிழ்நாட்டுக்குள் வேலை என்பதற்குள் தான் அடக்க வேண்டுமா? பிற மாநில, நாட்டு வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?

3. மென்பொருள் துறை வளர்ச்சி, பொறியியில் கல்வி நாட்டம் காரணமாக, ஆகச் சிறந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் நாட்டம் குறைந்து வருவதாகச் சொல்லப் படும் போக்கு பற்றி? இப்படி ஆகச் சிறந்த மாணவர்கள் விடுத்துச் செல்வதால் பெரிய இழப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா? மருத்துவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள், வசதிகள் வரா நிலையில் வருங்காலத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேரா நிலை வரக்கூடுமா? இல்லை, தமிழ்நாட்டு மாணவர்கள் சேரா நிலையிலும் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இடங்களை ஒதுக்க இயலுமா? பிற மாநிலங்களில் இன்னும் மருத்துவப் படிப்பு மோகம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..இல்லை, இந்தியா எங்கும் மோகம் குறைந்து வருகிறதா?

4. இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் எப்படி இருக்கிறது? இந்தியாவில் மருத்துவப் படிப்புக்குச் சிறந்த இடங்கள் எவை?

5. மேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் பற்றாக்குறை என்றால், ஏன் அந்த படிப்புக்கான இடங்களைக் கூட்டக் கூடாது? திரும்பவும் ஆசிரியர், வளங்கள் போதாமை தான் காரணமா?

6. MBBS, மேற்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் இடையே ஊதிய விகிதங்கள் எவ்வாறு வேறுபடுகிறது? மிகச் சிறந்த நிபுணருக்கு தனியாரில் கூடுதல் ஊதியம் கிடைக்கலாமாக இருக்கும். ஆனால், இன்று மேற்படிப்பு முடித்து வரும் ஒருவருக்குத் தனியார், அரசு இடையே வேலைவாய்ப்பு, ஊதிய விகித வேறுபாடு என்ன? அரசை விடுத்து தனியாரை நாடுவதற்கு ஊதியம் தவிர்த்த பிற காரணங்கள் உளவா?

7. BDS பல் மருத்துவம் முடித்த தோழிகள் சிலர் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு எல்லாம் வேலை பார்த்தார்கள் !! (பொறியியல் மாணவர்கள் சிலரும் இந்தச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதுண்டு) MBBS மாணவர்களை விட இவர்களின் நிலை கவலைக்கிடமோ என்று தோன்றியது. MBBS அல்லா, BDS, physiotherapy படிப்புகள், இவற்றில் தனியார் கல்லூரிகளின் பெருக்கம், அவற்றின் தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து உங்கள் பார்வை என்ன?

8. தமிழ் வழியத்தில் படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் தடுமாறுகிறார்களா? மருத்துவப் படிப்பையும் முழுக்கத் தமிழ் வழியத்தில் கொண்டு வருவதை ஆதரிப்பீர்களா? அதன் பயன், பாதகம் என்னவாக இருக்கும்? அப்படி கொண்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டிய புறச் சூழ்நிலைகள் என்ன? (எடுத்துக்காட்டுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை, பிற மாநிலங்களில் ஏற்பு..)
இப்படி கொண்டு வருவதற்கான தேவை இருக்கிறதா? கொண்டு வருவதற்கான தடைகள் யாவை? இந்திய மருத்துவக் கழகத்தின் ஆதரவு இல்லாமலை, தமிழில் பயிற்சி உடைய ஆசிரியர்கள் இல்லாமை, பாடநூல்கள் இல்லாமை..பிற?

மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வைத் தமிழில் தான் எழுதுவேன் என்று ஒருவர் தொடர்ந்து போராடி வருவதாகக் கண்டேன்..

நோய் குறித்த விரிவான விவரங்களைத் தமிழில் சொன்னாலும் ஆங்கிலத்தில் சொன்னாலும் நோயாளிகளுக்குப் புரியாமல் இருக்காலம். ஏனென்றால் கலைச்சொற்கள் பொது மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதனால், எந்த மொழியில் படிக்கிறோம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்று கருதுகிறீர்களா?

9. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமல் மருத்துவம் பார்ப்பது சாத்தியமா?
ஆங்கில அறிவுடைய நோயாளிகளுக்கும் மட்டும் மருத்துவம் பார்க்க வேண்டும். அல்லது, மருத்துவரின் சேவையைப் புறக்கணிக்க இயலாத அளவுக்கு ஏதோ ஒரு துறையில் நிபுணராக இருக்க வேண்டும். வேறு சாத்தியங்கள் ஏதும் தோன்றவில்லை.



ஏகப்பட்ட கேள்விகள் !! ஒவ்வொன்றாக பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக எப்போதாவது பதில் அளித்தாலும் மகிழ்வேன். நன்றி

நெல்லைத்தமிழ் said...

தமிழகம் முழுவதும் உள்ளதா
இல்லை. 15 மாவட்டங்களில் மட்டும் தற்பொழுது உள்ளது. பிற மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவு படுத்தப்படும்////
நெல்லைமாவட்டத்தில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கா சார்

ராஜ நடராஜன் said...

ஆழ்ந்த பதிவுக்கு நன்றி.

(தேர்தல் நேர பின்னூட்டம் பாருங்க,அதனால் பாராளுமன்றம் போற மாதிரி ஐடியா இருந்தா சொல்லுங்க.நான் ஒட்டகத்தப் புடிச்சாவது வந்து உங்களுக்கு ஒரு ஓட்டுப் போட்டு விடுகிறேன்)

புருனோ Bruno said...

//நெல்லைமாவட்டத்தில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கா சார்//

தற்பொழுது முன்னோட்டம் நடந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இன்னமும் சில மாதங்களில் நடைமுறைக்கு வந்து விடும்.

புருனோ Bruno said...

//ஆழ்ந்த பதிவுக்கு நன்றி.

(தேர்தல் நேர பின்னூட்டம் பாருங்க,அதனால் பாராளுமன்றம் போற மாதிரி ஐடியா இருந்தா சொல்லுங்க.நான் ஒட்டகத்தப் புடிச்சாவது வந்து உங்களுக்கு ஒரு ஓட்டுப் போட்டு விடுகிறேன்)//

:) :) :)

நன்றி தல

மணிகண்டன் said...

இது போன்ற மீள் பதிவுகள் உங்களின் டெண்டுல்கர் !! பதிவுகளை (பின்னூட்டங்களை) விட மிகவும் சுவாரசியமாக இருக்கிறது ! உங்களால் மட்டுமே தர முடிந்த சில தகவல்களும் இருக்கிறது.

ஒரு கேள்வி :- ஆரம்ப சுகாதார நிலையம் நல்ல நிலையில் இருக்கும் தமிழகத்தில் TB குறித்து போதிய தகவல்கள் மக்களிடம் போகிறதா ? இன்றைய நிலையிலும் கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கான காரணம் என்ன ?

அட பேரா முக்கியம்? said...

ஐயா, ஒரு சின்ன (இல்ல இல்ல பெரிய) சந்தேகம்.

ஏன் மருத்துவ மேற்ப்படிப்புக்கு தமிழ்நாட்டுல குறைந்த இடங்கள்? ஏன் அதை அதிகப்படுத்த முடியலை?

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு. கேக்க சரியான ஆள் இதுவரை மாட்டலை :-).

MBBS Vs PG விகிதம் ரொம்ம்ப கடுமையா இருக்கே, யார் கண்ணுலையும் படமாட்டேன்குதா?
இல்லை கண்டுக்கமாடேங்கராங்களா?

அட பேரா முக்கியம்? said...

ரவிசங்கர்,
வாரத்துக்கு எந்தனை keyboard வாங்குவீங்க? :-)
இல்லை, கம்ப்யூட்டர்-ஏ வாராவாரம் புதுசா தேவைபடுதா?

Ramesh said...

தமிழ்நாடு கவர்மென்ட் ஏன் சில ( பிற்படுத்தப்பட்ட) எம்.பி.பி.எஸ் ஆசிரியர்களை முதுகலை படிப்புக்கு (காசில்லாமல்) சீட்டு கொடுத்து உதவுவதில்லை? (sponsor)

ஐந்து வருட சேவை காண்ட்ரேக்ட் போட்டுவிடலாம்...

சிங்கை கண்ணன். said...

உங்கள் துறை சார்ந்த நல்ல பதிவு. இது போல நிறைய பதிவு உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன். மிகவும் பயனுள்ளமையாக இருக்கும்.
முதல் கட்ட, இரண்டாம் கட்ட மருத்துவ வசதிகள் இலவசமாக நமது அரசு மருத்துவ மனைகளில் கிடைத்தாலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வோ, மருத்துவமனைகளின் மேல் நம்பிக்கை இன்மையும் தான், அவர்களை தனியார் மருத்துவமனைகளை அல்லது கிளினிக்களை நோக்கி ஓட செய்கிறதா?. அழுக்கு சுவர் ,சத்தமான மின் விசிறி, கரை படிந்த படுக்கை.இது போன்றவை மாறினால், நிறைய பேர் அரசு மருத்துவ மனைகளில் பயன் பெறலாம்.இதற்காக அரசு என்ன ஆவன செய்கிறது.

புருனோ Bruno said...

//தமிழ்நாடு கவர்மென்ட் ஏன் சில ( பிற்படுத்தப்பட்ட) எம்.பி.பி.எஸ் ஆசிரியர்களை முதுகலை படிப்புக்கு (காசில்லாமல்) சீட்டு கொடுத்து உதவுவதில்லை? (sponsor)//

தமிழகத்தில் 69 சத இடப்பங்கீடு அமலில் உள்ளது.

மேலும் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 50 சதம் இடப்பங்கீடும் உள்ளது

இதில் அட்டவனை பிரிவினர் (எஸ்.சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி) ஆகியோருக்கு எம்.பி.பி.எஸ் முதல் டி.எம் வரை அனைத்து படிப்பும் இலவசம் (இது மட்டுமல்ல. விண்ணப்ப படிவம், தேர்வு கட்டணம் உட்பட அனைத்து தமிழகத்தில் தான் இலவசமாக வழங்கப்படுகிறது)

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி கட்டணம் தேர்வு கட்டணம் ஆகியவை கல்லூரி அளவில் இலவசம் கிடையாது


பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அட்டவனை வகுப்பினர் பொது பிரிவினருடன் போட்டி போடும் அளவு கடந்த சில வருடங்களின் முன்னேறி இருப்பதற்கு இடப்பங்கீட்டை தவிர மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகளும் காரணம்உதாரணமாக

2008 ஆண்டு மருத்துவ படிப்பிற்கான குறைந்த பட்ச மதிபெண் தேவை

முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 197.25 / 200 = 98.625 %
பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 195.25 /200 = 97.625 %
கிருத்தவர்கள் - பி.சி.சி - 194.50 /200 = 97.250 % (இந்த பங்கீடு பலன் அளிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம்
முஸ்லிம்கள் - பி.சி.எம் - 193.25 / 200 = 96.625 %
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 192.50 /200 = 96.250 %
அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 187.50 /200 = 93.750 %
பழங்குடியினர் - எஸ்.டி - 176.25 / 200 = 88.125 %

புருனோ Bruno said...

Difference between FC Cut Off and BC Cut Off is 1 %

Difference between FC Cut Off and SC Cut Off is less than 5 % (4.875)

Difference between BC Cut Off and SC Cut Off is less than 4 % (3.875)

புருனோ Bruno said...

//ஐந்து வருட சேவை காண்ட்ரேக்ட் போட்டுவிடலாம்...//

தற்சமயம் அரசு பணியில் இருந்து முதுநிலை படிப்பு படிப்பவர்கள் 58 வயது வரை கட்டாயம் அரசு பணியில் தொடரவேண்டும் என்றுள்ளது

மேலும் அரசு பணியில் இல்லாமல் படிப்பவர்களில் பெரும்பாண்மையானவர்கள் (நான் கட்டாய சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்
பதிவில்
சொன்ன முதல் இரண்டு பிரிவினரையும் தவிர) அரசு பணியில் தொடர்கிறார்கள்

புருனோ Bruno said...

//இது போன்ற மீள் பதிவுகள் உங்களின் டெண்டுல்கர் !! பதிவுகளை (பின்னூட்டங்களை) விட மிகவும் சுவாரசியமாக இருக்கிறது ! உங்களால் மட்டுமே தர முடிந்த சில தகவல்களும் இருக்கிறது.//

ஹி ஹி ஹி

சில மருந்துகள் கசப்பாகத்தான் இருக்கும். truth is bitter. சச்சின் தொடர்பான உண்மைகள் அவரை பிடிக்காதவர்களுக்கு கசப்பாக இருப்பது வியப்பில்லையே

புருனோ Bruno said...

//ஒரு கேள்வி :- ஆரம்ப சுகாதார நிலையம் நல்ல நிலையில் இருக்கும் தமிழகத்தில் TB குறித்து போதிய தகவல்கள் மக்களிடம் போகிறதா ?//

கிராமப்புறங்களில் 60 முதல் 70 சத மக்களிடம் போகிறது.
நகர்புறங்களில் (கிராமங்களை விட) விழிப்புணர்வு குறைவு என்பது ஆச்சரியம் ஆனால் உண்மை

//இன்றைய நிலையிலும் கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கான காரணம் என்ன ?//

தமிழகத்தின் தற்சமயம் இந்த நோய் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது.
கடந்த 20 வருடங்களை ஒப்பிட்டு பார்த்தால் நோய் தாக்கம் மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது. கட்டுப்பாட்டை தாண்டி செல்லவில்லை

ஆனால் மேலும் குறைய வேண்டும் என்பது உண்மை

தமிழகத்தில் கட்டுப்பாட்டை தாண்டி சென்று கொண்டிருக்கும் நோய்கள்

1. நீரிழிவு நோய்
2. உயர் இரத்த அழுத்தம்
3. அதிக உடல் பருமன்
4. இதய நோய்கள்
5. மனநல பிணிகள்
6. வாய் புற்று நோய்

என்று ஏராளம் இருக்கிறது

புருனோ Bruno said...

//இன்றைய நிலையிலும் கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கான காரணம் என்ன ?//

எந்த நோய் என்றாலும் ஒரு 15 சதம் பேர் மருத்துவர் கூறுவதை கண்டு கொள்வதில்லையே !!

புருனோ Bruno said...

//ஏன் மருத்துவ மேற்ப்படிப்புக்கு தமிழ்நாட்டுல குறைந்த இடங்கள்? ஏன் அதை அதிகப்படுத்த முடியலை?//

தற்சமயம் அதிகப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்

கடந்த 13 வருடங்களில் தமிழகத்தில்
திருச்சி
தூத்துக்குடி
தேனி
கன்னியாகுமரி
வேலூர்
தர்மபுரி
திருவாரூர்
சிவகங்கை
விழுப்புரம்

என்று பல கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன

புருனோ Bruno said...

//எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு. கேக்க சரியான ஆள் இதுவரை மாட்டலை :-).

MBBS Vs PG விகிதம் ரொம்ம்ப கடுமையா இருக்கே, யார் கண்ணுலையும் படமாட்டேன்குதா?
இல்லை கண்டுக்கமாடேங்கராங்களா?//

கண்டுக்கொள்ளவில்லை

MBBS : PG நிலை 1:1 என்று இருக்கும் வரை பிரச்சனைதான்

MBBS இடங்களை அதிகரிப்பது என்பது வாக்காளர்களை கவரும் அளவிற்கு pG இடங்களை அதிகரிப்பது கவர்வதில்லை எனபதும் ஒரு காரணம்

பட்ட மேற்படிப்பில் 5 இடங்கள் கூடியிருக்கிறது என்பது (புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பது போல்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இல்லாமல் இருப்பதுதான்

புருனோ Bruno said...

//முதல் கட்ட, இரண்டாம் கட்ட மருத்துவ வசதிகள் இலவசமாக நமது அரசு மருத்துவ மனைகளில் கிடைத்தாலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வோ, மருத்துவமனைகளின் மேல் நம்பிக்கை இன்மையும் தான், அவர்களை தனியார் மருத்துவமனைகளை அல்லது கிளினிக்களை நோக்கி ஓட செய்கிறதா?//

ஒரு பத்து வருடம் முன்னர் நீங்கள் கூறியவாறு தான் இருந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களும் அரசு மருத்துவமனைகளும் பல மடங்கு முன்னேறி உள்ளன

எனவே தற்சமயம் அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் 2007 முதல் டிசம்பர் 2007 வரை பிரசவங்கள் 77.2 சதவிதம் அதிகரித்து உள்ளன.

டிசம்பர் 2006 - 7858 பிரசவங்கள்
டிசம்பர் 2007 - 17266 பிரசவங்கள்

இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன வென்றால்
கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களின் 40 சதவிதம் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்றது
தற்பொழுது அது 34.64 விழுக்காடாகியுள்ளது

எனவே தற்சமயம் தனியாரை விட அரசை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதே செய்தி :)

சென்ற வருடம் மற்றும் இந்த வருடம் நாளிதழ் செய்திகளை நீங்கள் பார்த்து நான் சொல்வதை உறுதி செய்யலாம்

புருனோ Bruno said...

/அழுக்கு சுவர் ,சத்தமான மின் விசிறி, கரை படிந்த படுக்கை.இது போன்றவை மாறினால், நிறைய பேர் அரசு மருத்துவ மனைகளில் பயன் பெறலாம்.இதற்காக அரசு என்ன ஆவன செய்கிறது.//

அழுக்கு சுவரை மாற்ற அரசு ஒன்றும் செய்ய முடியாது. அது மக்கள் பொறுப்பு

சத்தமான மின்விசிறிகள் படிப்படியாக மாற்றப்பட்டுதான் வருகின்றன

இரத்தகறை படிந்த படுக்கை விரிப்பை மாற்றுவது அரசு பொறுப்பு

வெற்றிலை கறை படிந்த படுக்கை விரிப்பு யார் தவறு

மின்னுது மின்னல் said...

ஆனால் கடந்த சில வருடங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களும் அரசு மருத்துவமனைகளும் பல மடங்கு முன்னேறி உள்ளன
//


உண்மை !!!

எங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தனியாரை விட மேன்பட்டு இருக்கிறது !!

சுமார் சுகபிரசவம் 95%

ஒரு முறை தரமான சேவை மற்றும் அதிக பிரசவம் பார்த்ததற்காகக கலக்டர் அவர்கள் விருது கொடுக்கும் போது கூறியது :

அதிகமான சுகபிரசவம் பார்த்ததற்காக இந்த விருதை வழங்கும் சமயத்தில் டாக்டர் அவர்கள் குடும்ப கட்டுபாடு திட்டத்தை மக்களிடம் சேர்க்கவிலையோ என நகைச்சுவையாக கூறியது :)

புருனோ Bruno said...

//எங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தனியாரை விட மேன்பட்டு இருக்கிறது !!

சுமார் சுகபிரசவம் 95%//

தகவலுக்கு நன்றி பதிவரே

கலையரசன் said...

பதிவை பதிந்து தகவல் பகிர்ந்ததற்க்கு புருனோவுக்கு நன்றிகள்!!

மணிகண்டன் said...

***
வெற்றிலை கறை படிந்த படுக்கை விரிப்பு யார் தவறு
***

இவ்வாறான கண்ணோட்டம் அரசு மருத்துவமனை Management க்கு இருந்தால் தவறு. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் அதே சமயம் அவர்களின் மேல் பழியை போட்டுவிட்டு சும்மா விடுவது தவறு.


***
1. நீரிழிவு நோய்
2. உயர் இரத்த அழுத்தம்
3. அதிக உடல் பருமன்
4. இதய நோய்கள்
5. மனநல பிணிகள்
6. வாய் புற்று நோய்
***

இந்த நோய் பரவுவதற்கும் TB பரவுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா ? ஒரு தனிமனிதனின் கவனகுறைவால் வரும் ஒரு நோயிற்கு ஒருவகையில் அவன் காரணம் ஆகிறான் இல்லையா ?

ஊர்சுற்றி said...

அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து வைத்துவிட்டீர்கள். தெளிவினை ஏற்படுத்திய மற்றொரு சிறப்பான இடுகை உங்களிடமிருந்து. நன்றி மருத்துவரே.

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...