இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, July 23, 2008

அரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை! - என் கருத்துக்கள்

தமிழக அரசின் அவசரச்சட்டம் குறித்த என் கருத்துக்கள்

முதலில் பத்திரிகைகளில் வந்த விபரங்கள்
டாக்டர்கள் அல்லது மருத்துவமனைகளைத் தாக்குவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும், ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீட்டை வசூலிக்கவும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. டாக்டர்கள் மட்டுமன்றி, நர்ஸ்கள், மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவர்கள், துணை மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் கையெழுத்திட்டுள்ள, "தமிழ்நாடு மருத்துவச் சேவை புரிவோர் மீதான வன்முறை மற்றும் மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம், 2008' என்றழைக்கப்படும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருப்போர் மீது வன்முறையை ஏவிவிட்டு அவர்களைக் காயப்படுத்துவதும், மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் தமிழகத்தில் அதிகரித்து வருவதால், மருத்துவர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவச் சேவைக்கே தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, வன்முறையில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும், அதை ஜாமீனில் வர முடியாத குற்றமாகக் கொண்டு வரவும், சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வசூலித்து தருவதும் அவசியமாகிறது. சட்டசபைக் கூட்டத் தொடர் தற்போது நடக்காததால் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட மருத்துவச் சேவை புரிவோருக்கு எதிரான வன்முறைகளுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவ மையங்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, வன்முறையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். இதன்மூலம், மருத்துவச் சமூகத்தினர் எவ்வித அச்சமும் இன்றி தங்களது பணியை மேற்கொள்ளலாம்.எந்த ஒரு நபரும் தனியாகவோ, கூட்டாகவோ அல்லது அமைப்பு மூலமோ மருத்துவச் சேவை புரிவேர் மீது வன்முறையில் ஈடுபட்டால், அவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், அதிகபட்சம் 10 ஆண்டுகளும் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் காணப்படும் குற்றச் செயல் எதுவும் ஜாமீனில் வெளிவர முடியாதவை. சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான இழப்பீட்டை கோர்ட் நிர்ணயிக்கும்.

அவ்வாறு இழப்பீட்டைத் தராத நபர்களிடம், தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும்.

மாநில, மத்திய அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் மருத்துவ மையங்கள், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் எந்தவொரு தனியார் மருத்துவமனைகள், பிரசவத்துக்கு முன்பும், பின்பும் சிகிச்சையளிக்கும் தனியார் மகப்பேறு மருத்துவமனைகள், எந்தவொரு நோய், உடல் காயம், மனநிலை சிகிச்சை போன்றவற்றை அளிக்கும் மையங்கள், இல்லங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

சொத்து என்பது, மருத்துவர்கள் அல்லது மருத்துவ மையங்கள் சொந்தமாகவோ, பாதுகாப்பிலோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டிலோ வைத்திருக்கும் அசையும் அல்லது அசையா சொத்துக்கள், மருத்துவச் சாதனங்கள், மருத்துவ இயந்திரங்கள் ஆகியவையாகும். இவற்றுக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம். இதேபோல, வன்முறை சம்பவங்கள் என்பது, மருத்துவச் சேவை புரிவோரை பணி செய்யவிடாது தடுத்தல், இடையூறு செய்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் காயப்படுத்துதல் ஆகியவை ஆகும்.

இவ்வாறு அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி இது குறித்த விளக்கங்கள்

ஒரு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தவறு என்றால் அது குறித்து முறையாக புகார் செய்து இழப்பீட்டை பெறுவது குறித்து எந்த தடையும் இல்லை

ஆனால் பிணியாளர் இறந்தவுடன், மருத்துவமனை செலவழித்துள்ள மருந்து மற்ற இதர பொருட்களின் பணத்தை அளிக்காமல் கண்ணாடியை உடைத்து கலவரம் செய்து பணம் பறிக்கும் போக்கே இதன்மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

சரி என் கருத்துக்கள்

ஒரு மருத்துவமனை தாக்கப்படுவதற்கு இரு கூறுகள்

1. மருத்துவமனை மேலான எரிச்சல்

2. கோபப்படுவது போல் நடித்து கூப்பாடு போட்டு எதையாவது உடைத்தால் / யாரையாவது அடித்தால், ஏற்கனவே செய்து கொண்ட சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டாம், முடிந்தால் மேலும் மிரட்டி பணம் வாங்கலாம் என்ற எண்ணம் (அப்படி நடப்பதில்லை என்று கூற தயாராகுபவர்கள் கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்)

இதில் இந்த சட்டம் செய்யக்கூடியது என்ன - இரண்டாவது கூற்றத்தான் தடுக்கிறது. கட்டப்பஞ்சாயத்து செய்து மருத்துவமனை / மருத்துவரிடமிருந்து பணம் பறிக்கும் போக்கை இந்த சட்டம் தடுக்கும்.

மருத்துவமனை மேலான எரிச்சலை ஒன்றும் செய்ய முடியாது. (அது அதிகரிக்கத்தான் செய்யும் என்பது தான் என் கருத்து).


சரி முதலாவது கூற்றை பார்ப்போம் - எரிச்சல் வரும் காரணங்கள் என்ன

1. நோய் பற்றிய சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாமை. மெத்த படித்த வலைபதிவர்கள் பலர் எழுதும் சில கருத்துக்களை பார்தாலே மருத்துவத்துறை பற்றிய புரிந்து கொள்ளுதல் எந்த அளவில் உள்ளது என்று தெரியும். இதில் படிக்காதவர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.

2. மனித உடலை ஒரு கருவியாக நினைத்து அனைவரும் ஒன்று என்று நினைப்பது

3. மருத்துவமனை செலவு குறித்த அறியாமை. ஒரு வீடு கட்ட ஆகும் 5 லட்ச ரூபாயில் கொத்தனார், மேஸ்திரி, சித்தாள் கூலி 1 லட்சம். பொருட்கள் 4 லட்சம் என்று தெளிவாக தெரிந்து கொள்ளும் மக்கள், ஒரு அறுவை சிகிச்சைக்காகும் 10,000 ரூபாய் முழுவதும் மருத்துவரின் கட்டணம் என்று நினைப்பது. அதனால் மருத்துவர்கள் அதிகம் சம்பாதிப்பதாக நினைப்பது

4. பிணியாளர் இறப்பது மருத்துவமனையின் தப்பு மட்டும் என்றும், மருத்துவர்கள், மருத்துவமனைகள் அனைவரையும் உயிர் பிழைக்க வைக்க வேண்டியவர்கள் என்றும் ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது அறுவை சிகிச்சை வெற்றி பெற முடியவில்லை என்றாலோ அது மருத்துவரின் தவறு மட்டுமே என்று நினைப்பது

வேறு எந்த காரணங்களுக்காக உங்களுக்கு எரிச்சல் வருகிறது என்று மறுமொழியில் கூறுங்கள்.

இந்த எரிச்சலை குறைப்பது போதிய விழிப்புணர்வு மூலம் மட்டுமே முடியும். சட்டத்தால் அல்ல என்பது என்கருத்து.

அடுத்த இடுகைகள்

22 மறுமொழிகள்:

கூடுதுறை said...

தங்களின் கருத்து மிகச் சரியானது...

Anonymous said...

அப்புறம் இன்சியர்கள்,ஆசிரியர்கள்,
வக்கீல்கள் என்று வரிசையாக ஒவ்வொரு தொழிலுக்குமாக நூறு சட்டம் கொண்டு வர வேண்டியதுதான்.
மருத்துவமனைகள் மிரட்ட, போலிஸ்
பொய் கேஸ் போட, பெரிய மருத்துவமனைகள் போலிஸுடன்
சேர்ந்து பணம் பிடுங்க இது உதவும்.
இது தேவையற்ற சட்டம். இருக்கிற
குற்றவியல் சட்டமே இதன் கீழ்
வருகின்ற குற்றங்களை பதிவு செய்ய,
தண்டிக்கப் போதும்.
மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த,
நியாயமான கட்டணம் நிர்ணயிக்க,
மருத்துவ வசதியை செய்து தர
வக்கிலாத அரசு இப்படி ஒரு சட்டம்
கொண்டு வருகிறது. வெட்கக்கேடு.

புருனோ Bruno said...

//அப்புறம் இன்சியர்கள்,ஆசிரியர்கள்,
வக்கீல்கள் என்று வரிசையாக ஒவ்வொரு தொழிலுக்குமாக நூறு சட்டம் கொண்டு வர வேண்டியதுதான்.//

நிரலில் தவறு இருந்ததற்காக எந்த பொறியாளரும் தாக்கப்பட்டதாக தெரியவில்லை. மாணவன் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக எந்த ஆசிரியரும் எந்த பள்ளியும் தாக்கப்படவில்லை

ஆனால் மருத்துவமனை தாக்குதல் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதை தடுக்கத்தான் சட்டம்

//மருத்துவமனைகள் மிரட்ட, போலிஸ்
பொய் கேஸ் போட, பெரிய மருத்துவமனைகள் போலிஸுடன்
சேர்ந்து பணம் பிடுங்க இது உதவும்.//

அப்படி இருந்தால் இது நாள் வரை எந்த தைரியத்தில் அடித்தார்கள்.

//இது தேவையற்ற சட்டம். இருக்கிற
குற்றவியல் சட்டமே இதன் கீழ்
வருகின்ற குற்றங்களை பதிவு செய்ய, தண்டிக்கப் போதும்.//
அப்படி இருந்தால் இது நாள் வரை எந்த தைரியத்தில் அடித்தார்கள்.

//மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த,
நியாயமான கட்டணம் நிர்ணயிக்க,
மருத்துவ வசதியை செய்து தர
வக்கிலாத அரசு இப்படி ஒரு சட்டம்
கொண்டு வருகிறது. வெட்கக்கேடு.//

மருத்துவமனைகள் ஒழுங்குடன் தன் நடந்து கொண்டிருக்கின்றன.

நியாயமான கட்டணம் என்றால் என்ன

ஆசிரியர், வக்கீல், பொறியாளர், எழுத்தாளர் இப்படி யாருக்குமே கட்டண ஒழுங்கு இல்லையே. இதை ஏன் மருத்துவத்துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்கிறீர்கள்

அரசு போதிய மருத்துவ வசதி செய்து தந்தாலும் அதை ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் என்ன செய்வது

புருனோ Bruno said...

//நியாயமான கட்டணம் நிர்ணயிக்க,//

1. சென்னை பொது மருத்துவமனையிலிருந்து டி.எம்.எஸ் நிறுத்ததிற்கு அரசு பேரூந்தில் கட்டணம் எவ்வளவ. எனக்கு தெரிந்து 3, 4, 4.5, 7 ரூபாய் (குளிர்சாதன பேரூந்தில் 18 ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று இருக்கிறதே எப்படி ?? நான் கடந்த ஒரு மாதமாக பேரூந்தில் தான் சென்று வருகிறேன். சரியான சில்லரை என்று நினைத்து தயாராக (போன முறை சீட்டு வாங்கிய காசை) எடுத்து வைத்து அச்டு வழிந்த அனுபவத்தால் கேட்கிறேன் :) :) :)

2. 4 ஜி.பி (GB) பெண்டிரைவ் (தமிழ் சொல் உதவி தேவை) விலை (Transcend Jetflash V 30 என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்) சென்னை முழுவதும் ஒரே விலை தானா. (ரிச்சி தெருவில் 780, உயர்நீதிமன்றம் எதிரில் 1000)

3. ஏர்டெல், ஏர்செல், பி.எஸ்.என்.எல் எல்லாம் ஒரே கட்டணம் தானா (உங்களுக்கே தெரியும்)

4. சென்னையில் 2 இட்லி 1 வடை என்ன விலை !!!!! (உங்களுக்கே தெரியும்)

ஒரே விலை தானா

இப்படி சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இயல்பான ஒரு விஷயத்தை வைத்து மருத்துவத்துறையை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன். உண்மை குற்றச்சாட்டுகள் அதிகம் இல்லாததும், உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் தானே

--
கட்டணங்கள் ஒழுங்குப்படுத்த கூடாது என்று கூறவில்லை. ஓரளவு ஒழுங்கு படுத்தலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே கட்டணம் கொண்டு வர முடியாது.

ஆனால் நீங்கள் கூறிய குற்றச்சாட்டு எவ்வளவு “வலுவானது” என்று உங்களுக்கு காட்டவே இந்த உதாரணங்கள்

--
எப்படி ஏர்டெல், பி.எஸ்.என்.எல் கட்டணங்கள் (ஒவ்வொன்றிலும் பல திட்டங்கள்) உள்ளனவோ அதே போல் ஒவ்வொரு மருத்துவமனையின் கட்டணமும் மாறுபடும்.

இதை விட முக்கிய காரணம்

மனித உடல் என்பது இயந்திரங்களால் செய்யப்பட்டது அல்ல

அறுவை சிகிச்சையின் போது சிலருக்கு இன்சுலின் ஊசி தேவையில்லை
அறுவை சிகிச்சையின் போது சிலருக்கு இன்சுலின் ஊசி 4 யூனிட் தேவை
அறுவை சிகிச்சையின் போது சிலருக்கு இன்சுலின் ஊசி 8 யூனிட் தேவை

ஒரே அறுவைசிகிச்சை என்றாலும் தேவைப்படும் மருந்துகள் வேறல்லவா. ஒரே கட்டணம் எப்படி வாங்க முடியும்.

என்ன கொடுமை சார் இது.

Anonymous said...

'மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த,
நியாயமான கட்டணம் நிர்ணயிக்க'

இதை ஒரே கட்டணம் என்பதாக
திரித்து விளக்கம் சொல்பவரிடம்
என்ன விவாதிக்க முடியும்.

இன்றைக்கு செய்யப்படும் சிசேரியன்
ஆபரேஷன்கள் பல தேவையில்லாமல்
செய்யப்படுகின்றன, காசு பிடுங்க
என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.

அவ்வாறே மருத்துவர்கள்-மருந்து
கடைக்காரர்கள்- டையாக்னாஸ்டிக்
செண்டர்கள் ‘கூட்டுறவு' எப்படி
என்று எல்லோருக்கும் தெரியும்.

புருனோ Bruno said...

//இதை ஒரே கட்டணம் என்பதாக
திரித்து விளக்கம் சொல்பவரிடம்
என்ன விவாதிக்க முடியும்.//

நீங்கள் சொன்ன நியாயமான கட்டணத்திற்கு விளக்கம் அளியுங்கள். விவாதிக்க நான் தயார்.

புருனோ Bruno said...

//இன்றைக்கு செய்யப்படும் சிசேரியன்
ஆபரேஷன்கள் பல தேவையில்லாமல்
செய்யப்படுகின்றன, காசு பிடுங்க
என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.//


தேவைப்படிதான் செய்யப்படுகின்றன. மக்களிடம் இருக்கும் எண்ணம் தவறானது என்பதை ஏற்கனவே தக்க ஆதாரங்கள் மற்றும் சில புள்ளி விபரங்களுடன் விளக்கியுள்ளேன். ஏதாவது சந்தேகம் இருந்தால் அந்த இடுகையில் கேட்கலாம். பதிலளிக்க தயார்

புருனோ Bruno said...

//அவ்வாறே மருத்துவர்கள்-மருந்து
கடைக்காரர்கள்- டையாக்னாஸ்டிக்
செண்டர்கள் ‘கூட்டுறவு' எப்படி
என்று எல்லோருக்கும் தெரியும்.//

நீங்கள் ஏன் அரசு மருத்துவமனை வருவதில்லை.

இப்படி புகார் கூறும் நீங்கள் ஏன் அதே கடையில் வாங்குகிறீர்கள். வேறு மருந்து கடையில் வாங்க வேண்டியது தானே.

அல்லது வேறு மருத்துவமனை செல்ல வேண்டியது தானே

அவனும் அவளும் said...

மருத்துவமனை மேலான எரிச்சலை ஒன்றும் செய்ய முடியாது. (அது அதிகரிக்கத்தான் செய்யும் என்பது தான் என் கருத்து).

ஏன் அப்படி சொல்றீங்க ?

அவனும் அவளும் said...

Transcend Jetflash V 30 - 4 GB pendrive - இது பொருள். Rate fluctuation ரொம்ப கம்மி.

டாக்டர் செய்வது சர்வீஸ். அதுனால comparison வந்து ஒரு லாயர் மற்றும் டாக்டருக்கு பண்ணுங்க. நியாயமா இருக்கும். சரியாவும் இருக்கும்.

என்ன வாழ்க்கை முழுக்க நான் லாயர் கிட்ட போகாமயே இருக்க முடியும்......ஆனா டாக்டர் தேவைபடறார் எப்போதும்.

ஏகப்பட்ட நல்ல டாக்டர் கம்மியான பணத்துக்கு வைத்தியம் பாக்கறாங்க. ஏன் இவ்வளவு கடுப்புன்னு தான் புரியல. ஆனா பிரைவேட் ஆஸ்பத்திரி எல்லாம் monopolize ஆகிகிட்டு இருக்கு. இத இப்போ தடுக்கலனா பின்னாடி தொல்லை. திருச்சிய எடுத்துகிட்டீங்கனா வாசன் குரூப் எல்லாத்தையும் வாங்கி தள்றாங்க. அப்புறம் அவங்க விலைய ஏத்தினா ஒண்ணும் பண்ண முடியாது.

டாக்டர் அப்படிங்கரவர மக்கள் ரொம்ப high esteemed postionla பாக்கறோம். அதுனால emotional ஆவது இயல்பே. அத புரிஞ்சிகோங்க.

புருனோ Bruno said...

//ஏகப்பட்ட நல்ல டாக்டர் கம்மியான பணத்துக்கு வைத்தியம் பாக்கறாங்க.//

இது தான் உண்மை.

யாரோ ஒரு சிலர் மேல் உள்ள எரிச்சலை அடுத்தவரிடம் காட்டுவது தவறுதானே

//ஏன் இவ்வளவு கடுப்புன்னு தான் புரியல. ஆனா பிரைவேட் ஆஸ்பத்திரி எல்லாம் monopolize ஆகிகிட்டு இருக்கு. இத இப்போ தடுக்கலனா பின்னாடி தொல்லை. திருச்சிய எடுத்துகிட்டீங்கனா வாசன் குரூப் எல்லாத்தையும் வாங்கி தள்றாங்க. அப்புறம் அவங்க விலைய ஏத்தினா ஒண்ணும் பண்ண முடியாது.//

அரசு மருத்துவமனையை நடுத்த்ர மக்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நாளாவட்டத்தில் மாற்றம் வரும்

///டாக்டர் அப்படிங்கரவர மக்கள் ரொம்ப high esteemed postionla பாக்கறோம். அதுனால emotional ஆவது இயல்பே. அத புரிஞ்சிகோங்க.//

high esteemed postion என்கிறீர்கள். மருத்துவமனைகளை அடித்து நொறுக்கலாமா

புருனோ Bruno said...

//மருத்துவமனை மேலான எரிச்சலை ஒன்றும் செய்ய முடியாது. (அது அதிகரிக்கத்தான் செய்யும் என்பது தான் என் கருத்து).

ஏன் அப்படி சொல்றீங்க ?//

சட்டத்தால் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. உதாரணம் திருட்டு குறுந்தட்டு (விசிடி) விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

சட்டம் போடுவது மட்டும் முழு தீர்வு கிடையாது .. சட்டம் என்பது குறுகியகால தீர்வு தான். திரையில் காணத்தூண்டும் படங்கள் எடுப்பதும், திரையரங்குகளின் விலை குறைப்புமே நீண்ட கால தீர்வு. ஆனால் சட்டமும் தேவை

DHANS said...

ப்ருனோ நீங்க கரடியா கத்தினாலும் கண்டிப்பா இவர்கள் மனதில் பதிய வைக்க ரொம்ப கஷ்டப்படனும்.

மருத்துவர்கள் சேவை மட்டும் செய்ய வந்தவர்கள் என்பது இவர்கள் விவாதம் அதாவது அவர்களுக்கு உள்ள குடும்பம் குழந்தை எல்லாம் முக்கியம் இல்லை.

நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரத்துவங்கினாலே போதும். சரியான கூற்று

புருனோ Bruno said...

//மருத்துவர்கள் சேவை மட்டும் செய்ய வந்தவர்கள் என்பது இவர்கள் விவாதம் அதாவது அவர்களுக்கு உள்ள குடும்பம் குழந்தை எல்லாம் முக்கியம் இல்லை.//

இதைத்தான் நான் அதீத எதிர்பார்ப்பு என்றேன்.

பல அரசு மருத்துவமனைகளில் 1 அல்லது 2 மருத்துவர் பணியிடங்கள் தான் உள்ளன.

அப்படி பட்ட மருத்துவமனைகளுக்கும் இரவு 8 மணிக்கு வந்து ”மருத்துவர் இல்லை, அவர் வேலைக்கு வராமல் வீட்டில் உள்ளார் என்று ”புகார்” / ”குறை” கூறி விட்டு, அங்கேயே வெற்றிலை துப்பிவிட்டு போவர்களை என்ன சொல்வது !!

இரு மருத்துவர் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மதியம் வரை மட்டும் தானே இருக்க முடியும். ஒரு மருத்துவர் 24 மணி நேரமும் இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மருத்துவரும் வாரத்திற்கு 110 முதல் 120 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும். வேறு எந்த துறையில் முதுநிலை படித்தவர்கள் வாரம் 120 மணிநேரம் பணி செய்கிறார்கள்.

மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமே 24 மணி நேரமும் செயல்பட முடியும். பிற மருத்துவமனைகள் காலை நேரம் மட்டுமே செயல்பட முடியும்.

அல்லது ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் குறைந்த பட்சம் 5 மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒரு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர் இருக்க முடியாது.

இதை கூட புரிந்து கொள்ளாமல் ஒரு மருத்துவமனையில் இரவு மருத்துவர் இல்லையென்றாலே அவர் பணிநேரத்தில் வேலைக்கு வரவில்லை என்று முடிவுக்கு வரும் “மெத்த படித்த” ”அறிவாளி”கள் பலர் இருக்கிறார்கள் :) :) :) :)

--

சில நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் ”படித்தவர்” ஒருவர் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் திறந்திருக்க வேண்டும் என்றார். கேட்க நியாயமான கோரிக்கை போலிருக்கிறது.... ஆனால்

அங்கு பணிபுரிபவர்கள்

மருத்துவர் - 1
மருந்தாளுனர் - 1
துனை செவிலியர் - 1
ஆய்வக நுட்பனர் - 1
மருத்துவமனை பணியாளர் - 1
துப்புறவு பணியாளர் - 1

அந்த நிலையம் 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டுமென்றால் இவர்களில் யார் காலை பணி செய்ய வேண்டும், யார் மாலை பணி செய்ய வேண்டும், யார் இரவு பணி செய்ய வேண்டும்.

ஒருவரே 24 மணிநேரமும் பணி செய்ய வேண்டுமென்றால் !!! அவர்களின் உடல்நிலை என்னாகும். அவர்களுக்கு குடும்பம் உண்டா இல்லையா ???

என்ன கொடுமை சரவணன் இது !!!

புருனோ Bruno said...

கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமைதானே என்று கூறுபவர்களுக்காக

கூடுதல் நிலையங்கள் தேவை. கூடுதல் பணியிடங்கள் தேவை என்பது குறை அல்ல.

கூடுதல் வசதிகளு(Additional Features / Enhancements)க்கும் குறைகளு(Bug)க்கும் வித்தியாசம் உண்டா இல்லையா ??

உங்கள் சீருந்தின் விளக்கு எரியவில்லை என்பது குறை

உங்கள் சீருந்திற்கு குளிர்சாதனம் தேவை என்பது “கூடுதல் வசதி”

அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் கூடுதல் வசதிகளைக்கூட குறைகளைப்போல் சொல்வது ஏன் என்று புரியவில்லை.

புருனோ Bruno said...

சீருந்தில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை (குறை) என்பதற்கும்

சீருந்தில் குளிர்சாதனம் பொறுத்தப்படவில்லை (கூடுதல் வசதி தேவை) என்பதற்கும்

கூட விபரம் தெரியாத “பொதுஜனம்”

சீருந்து குளிர வில்லை என்றால் குளிர்சாதனம் வேலைசெய்யாதது தான் காரணம் என்று முடிவெடுத்து அதற்கு அவர்களே அரசு மருத்துவமனைகளை தாக்கி பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கத்தான் இந்த அவசர சட்டம்
-

புருனோ Bruno said...

அடுத்த இடுகைகள்


மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டது

வன்முறை தடுப்பு சட்டம் குறித்த திணமனியின் தவறான தலையங்கத்திற்கு வரிக்கு வரி பதில்

புருனோ Bruno said...

//அப்புறம் இன்சியர்கள்,ஆசிரியர்கள், வக்கீல்கள் என்று வரிசையாக ஒவ்வொரு தொழிலுக்குமாக நூறு சட்டம் கொண்டு வர வேண்டியதுதான்.//

அங்கெல்லாம் இந்தளவு பிரச்சனை நடப்பதில்லையே

//மருத்துவமனைகள் மிரட்ட, போலிஸ் பொய் கேஸ் போட, பெரிய மருத்துவமனைகள் போலிஸுடன் சேர்ந்து பணம் பிடுங்க இது உதவும். //
நமது நாட்டில் (அனைத்து நாடுகளிலும்) அனைத்து சட்டங்களுமே தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே ஒரு சட்டத்தை தேவையில்லை என்று கூறினால் நாட்டின் எந்த சட்டமுமே இருக்க முடியாது

புருனோ Bruno said...

//இது தேவையற்ற சட்டம்.//

அப்படியென்றால் இது வரை மருத்துவமனைகள் தாக்கப்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்தென்ன

சட்டம் தேவையில்லை என்றால் வேறு என்ன செய்ய வேண்டும்

//இருக்கிற குற்றவியல் சட்டமே இதன் கீழ் வருகின்ற குற்றங்களை பதிவு செய்ய, தண்டிக்கப் போதும்.//
போதவில்லை என்பதால் தான் மருத்துவமனைகள் தாக்கப்பட்டன

புருனோ Bruno said...

http://www.hindu.com/2008/07/21/stories/2008072160390600.htm

புருனோ Bruno said...

http://www.hindu.com/2008/07/21/stories/2008072160390600.htm
http://timesofindia.indiatimes.com/Chennai/Health_dept_to_issue_ordinance_to_protect_doctors/articleshow/3174197.cms

புருனோ Bruno said...

http://www.hindu.com/2008/12/29/stories/2008122950350100.htm

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...