இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Friday, July 25, 2008

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்றால் கீழ்க்கண்டவற்றை கூறலாம்,

1. மரபணுச் சரம் (நிறமி) : ஆணின் உயிரணுக்களில் (Cell) இருப்பது ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம். பெண்ணின் உயிரணுக்களில் இருப்பது இரண்டு X மரபணுச்சரம். இது தவிர இருவருக்குமே மேலும் 44 (22 ஜோடி) மரபணுச்சரங்கள் உண்டு [ஜோடி - தமிழ் சொல் என்ன]

2. இனஉறுப்புகள் - ஆணுக்கு விரைகள். பெண்ணுக்கு சினைப்பைகள். அதே போல் பிற உறுப்புகளும் மாறுபடும். ஆணுக்கு விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய் போன்றவைகளும் பெண்ணுக்கு முட்டைப் பைக்குழாய், கர்ப்பப்பை, பெண் இனச்சேர்க்கை உறுப்பு போன்றவைகளும் இருக்கும்.

3. இனச்சேர்க்கை உறுப்புகள் - ஆணுக்கு ஆண் இனச்சேர்க்கை உறுப்பு, பெண்ணுக்கு பெண் இனச்சேர்க்கை உறுப்பு. [இதற்கு இணையாக உள்ள பல அறிய தமிழ்சொற்களை இந்த வருட துவக்கம் முதல் தமிழ் வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள்]

4. நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்: ஆண் என்றால் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன். பெண் என்றால் அதிக அளவில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜஸ்ட்ரன் போன்றவை மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்

5. உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள் : ஆண் என்றால் மீசை, தாடி. பெண் என்றால் நீண்ட தலைமுடி. அது போல் குரலில் வேறுபாடு . இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் ஆண் என்றால் பெண்களை விட அதிக (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். பெண் என்றால் ஆணை விட பெரிய இடுப்பெலும்பு. (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. இது தவிர பெண்ணிற்கு மார்பகங்கள், தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு, அதனால் வளைவுகள் என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.

6. உளவியல்: மனதளவில் ஆணிற்கும் பெண்ணிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இது குறித்து அனைவரும் பரவலாக அறிந்திருப்பீர்கள். (பல நகைச்சுவை படங்கள், சம்பவங்கள் தொடர் மின்மடல்களில் வந்தன, வருகின்றன, வரும்). இருந்தாலும் சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன்.

ஒரு வருகைப்பதிவேடு அளவு 200 பக்க புத்தகத்தை ஒரு ஆண் எப்படி கொண்டுசெல்வான் - கையில் வைத்துக்கொண்டு
ஒரு நக்கீரன் அளவு 200 பக்க புத்தகத்தை ஒரு பெண் எப்படி கொண்டுசெல்வாள்- மார்பில் அனைத்துக்கொண்டு

இது போல் நடை, பேச்சு என்று வித்தியாசங்களை கூறிக்கொண்டே போகலாம்

இது வரை பார்த்ததை மீண்டும் ஒரு முறை மீள் பார்வை பார்க்கலாம்

ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பால் வேறுபாடு என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்

1. மரபணு பால் (Genetic Sex) - இதில் மரபணுச்சர பால் (Chromosomal Sex) அடங்கும்
2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex)
3. புறத்தோற்ற பால் Phenotype - இதில் இனச்சேர்க்கை உறுப்புகள் பால் (external Genitalia) நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் பால் (Hormonal Sex) உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இனச்சேர்க்கை உறுப்புகளை நான் இங்கு பகுத்திருக்கிறேன்
4. உளவியல் பால் (Psychological Sex)

அவ்வளவு தானா. இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று கொட்டாவி விட துவங்கியிருப்பீர்கள்.

இப்படி உள்ள நான்கு கூறுகளுமே, அதாவது (1. மரபணு பால், 2. இன உறுப்புகள் பால், 3. புறத்தோற்ற பால் , 4. உளவியல் பால்)

1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - ஆண்
என்று இருந்தாலும் பிரச்சனை இல்லை

அல்லது

1. மரபணு பால் - பெண்
2. இன உறுப்புகள் பால் - பெண்
3. புறத்தோற்ற பால் - பெண்
4. உளவியல் பால் - பெண்
என்று இருந்தாலும் பிரச்சனை அல்ல

ஆனால்,

சிலருக்கு
1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - பெண்
என்பதும்

சிலருக்கு
1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - பெண், ஆனால் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் ஆண்களை போலிருக்கும்
4. உளவியல் பால் - பெண்
என்பதும்

வேறு சிலருக்கு (உதாரணம் Hypospadiasis)
1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - பெண்
4. உளவியல் பால் - பெண்
என்பதும்

வேறு சிலருக்கு (உதாரணம் CAH)
1. மரபணு பால் - பெண்
2. இன உறுப்புகள் பால் - பெண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - ஆண்
என்பதும் தான் பிரச்சனையே.

வாசிப்பவர்களின் ஆதரவை பொறுத்து .... தொடரும்

பின்குறிப்பு : ஆபாசமாக இருக்கும் வரிகளை / சொற்களை கூறுவும்
இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகைகள்

39 மறுமொழிகள்:

அதிஷா said...

\\
பின்குறிப்பு : ஆபாசமாக இருக்கும் வரிகளை / சொற்களை கூறுவும்
\\

சார் தப்பா நினைக்காதீங்க இது போன்ற ஒரு அருமையான பதிவில் இந்த பி.கு தான் ஆபாசமா இருக்கு.

பதிவு அருமையா இருக்கு சார் , விபரங்களும் எளிமையா இருக்கு

இன்றைய சூழலில் மிக தேவையான பதிவு
தயவு செய்து தொடரவும்...

;-)

ஜெகதீசன் said...

//
இன்றைய சூழலில் மிக தேவையான பதிவு
தயவு செய்து தொடரவும்...

;-)
//
வழிமொழிகிறேன்ன்ன்!!!
தொடடுங்கள்....
:)

ஜெகதீசன் said...

//
தொடடுங்கள்....
//
தொடருங்கள்....

புருனோ Bruno said...

அதிஷா சார்,

ஆபாசம் என்பது எப்பொழுதுமே எழுதுபவருக்கு / பேசுபவருக்கு தெரியாது (வேண்டுமென்றே ஆபாசமாக எழுதுபவர்களை விட்டு விடுவோம்)

நாம் எழுத்துவேகத்தில் எழுதும் (அல்லது பேச்சு சுவாரஸ்யத்தில் பேசும்) சில வார்த்தைகள் அல்லது சொற்தொடர்கள் கேட்பவர்களின் இடம் / காலத்தை பொருத்து தான் ஆபாசமாக மாறுவதும், அல்லது ஆபாசமில்லாது இருப்பதும்.

அதனால் தான் அந்த பின் குறிப்பு

--

மருததுவ மாணவர்களிடம் பேசும் பொழுது / வகுப்பெடுக்கும் பொழுது உபயோகிக்கும் சொற்களை நான் எழுதியிருந்தேன் என்றால் உங்களை பொருத்த வரை அது ஆபாசமாகத்தான் இருக்கும்

அதனால் பல சொற்களை மாற்றி யிருக்கிறேன். கவனத்தில் தப்பியவை இருக்கலாம் என்பதால் தான் ஒரு பொறுப்பு துறப்பு

புருனோ Bruno said...

இந்த தொடரின் முக்கிய நோக்கம் ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் பல நிலைகள் இருக்கின்றன.

அதில் திருநங்கை என்பது ஒன்று தான்

திருநங்கை அல்லாத Transgender பலர் இருக்கிறார்கள் என்பது பலருக்கு (சில மருத்துவர்கள் உட்பட) தெரியாமல் இருக்கிறது.

அன்மையில் மருத்துவமனைக்கு வைத்தியம் பார்க்க வந்த திருநங்கை ஒருவரை குறித்து பதிவேடுகளில் மருத்துவ மாணவர் ஒருவர் hermaphrodite என்று எழுதியதை பார்த்து அதிர்ந்து விட்டேன்.

Hermaphrodite என்பது Transgenderலில் ஒரு வகை. திருநங்கை என்பது Transgenderல் மற்றொரு வகை -

சீருந்து என்பது நாற்சக்கர வாகனத்தில் ஒரு வகை
பேரூந்து என்பது நாற்சக்கர வாகனத்தில் மற்றொரு வகை

மருத்துவ மாணவர்களுக்கே இது குறித்து குழப்பம் இருக்கிறதென்றால் யாரை நொந்து கொள்வது !!!

முரளிகண்ணன் said...

அருமையான அவசியமான பதிவு

கையேடு said...

சோடி என்பதை "இணை" என்று வழங்கலாமா, அதுவும் குறிப்பாக இவ்விடத்தில், பொருள் சிதையாது என்று கருதுகிறேன்.

பதிவு மிகவும் அருமை, உரையாடலுக்கான சாத்தியங்கள் பல இருந்தாலும், மீண்டும் பொறுமையாக வருகிறேன் ஐயங்களுடன்.. :)



//ஒரு வருகைப்பதிவேடு அளவு 200 பக்க புத்தகத்தை ஒரு ஆண் எப்படி கொண்டுசெல்வான் - கையில் வைத்துக்கொண்டு
ஒரு நக்கீரன் அளவு 200 பக்க புத்தகத்தை ஒரு ஆண் எப்படி கொண்டுசெல்வாள்- மார்பில் அனைத்துக்கொண்டு//

தட்டச்சுப் பிழையாக இரண்டிலுமே ஆண் என்று வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

Anonymous said...

What will be tge chromosome count of a Transgender. that will Xyy or what.pls explain??

புருனோ Bruno said...

//பதிவு மிகவும் அருமை, உரையாடலுக்கான சாத்தியங்கள் பல இருந்தாலும், மீண்டும் பொறுமையாக வருகிறேன் ஐயங்களுடன்.. :)//

கேளுங்கள். விளக்குகிறேன்

புருனோ Bruno said...

//தட்டச்சுப் பிழையாக இரண்டிலுமே ஆண் என்று வந்துவிட்டது என்று நினைக்கிறேன். //

திருத்தி விட்டேன். நன்றி.

புருனோ Bruno said...

//சோடி என்பதை "இணை" என்று வழங்கலாமா, அதுவும் குறிப்பாக இவ்விடத்தில், பொருள் சிதையாது என்று கருதுகிறேன்//

நல்ல பதம். வேறு பதங்களும் சிந்திப்போமே.:)

புருனோ Bruno said...

//What will be tge chromosome count of a Transgender. that will Xyy or what.pls explain?? //

விடிய விடிய சிலப்பதிகாரம் கேட்டுவிட்டு கண்ணகிக்கு கோவலன் சித்தப்பான்னு சொன்ன மாதிரி இருக்கு.

7/25/2008 3:47 PM எழுதப்பட்ட மறுமொழியை படித்துவிட்டு கேளுங்கள் ஐயா / அம்மா

ரவிசங்கர் said...

நல்ல தொடர். பாராட்டுகள்.

**

pair = இணை

என்பது தான் பொருத்தமான சொல்

புருனோ Bruno said...

// pair = இணை //

ரவி,
pair என்றால் இணை தான்
ஆனால் இணை என்றால் pair ஞாபகம் முதலில் வரவில்லையே

இணை மரபணுச் சரங்கள் என்று நான் எழுதினால் நீங்கள் அதை

ஒரு சோடி மரபணுச்சரங்கள் என்று நினைப்பீர்களா

அல்லது

ஒட்டிக்கொண்டிருக்கும் மரபணுச்சரங்கள் என்று நினைப்பீர்களா (Joint)

இணை இயக்குனர் - Joint Director
இணை ஆணையர் - Joint Commissioner போன்ற பதங்கள் மிக பிரபலம் என்பதால் தான் நான் இணை என்ற பதத்தை பயன்படுத்த வில்ல

ரவிசங்கர் said...

நீங்க சொல்வது போல் குழப்பம் வர வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், இதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால், ஒரே சொல் வெவ்வேறு பொருளில் வருவது வழமை தானே? வெறுமே இணை என்று எழுதாமல் ஒரு இணை, ஓர் இணை, நான்கு இணைச் சரங்கள் என்று எழுதலாம்.

ரவிசங்கர் said...

மிகவும் அடிப்படையான பரவலாக உள்ள சொல்லுக்கு மாற்றுச் சொல் கண்டுபிடிப்பது ஏற்கனவே உள்ளதை விட பெரிய குழப்பத்தைத் தரும்..

மங்களூர் சிவா said...

மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் & நன்றி.

கயல்விழி said...

//பெண் என்றால் நீண்ட தலைமுடி//

நீண்ட தலைமுடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது இல்லையா? ஆண்கள் தலை முடியை சிறியதாக வெட்டிக்கொள்வதால் சிறிதாகிறதே தவிர இயற்கையாக அப்படி இல்லை என்று நினைக்கிறேன்(தவறாகவும் இருக்கலாம்).

ஏன் சொல்லுகிறேன் என்றால், உடன் பணி புரியும் ஒரு அமரிக்க ஆண் கோவொர்கருக்கு தலைமுடி என்னை விடவும் நீளம் அதிகம்.

கயல்விழி said...

ரொம்ப பயனுள்ள தொடர், நன்றி :)

புருனோ Bruno said...

//ஆண்கள் தலை முடியை சிறியதாக வெட்டிக்கொள்வதால் சிறிதாகிறதே தவிர இயற்கையாக அப்படி இல்லை என்று நினைக்கிறேன்//

பொதுவாக ஆண்களின் தலைமுடி பெண்களின் தலைமுடியை விட நீளம் குறைவுதான்

ஸ்ரீதர் நாராயணன் said...

//இந்த தொடரின் முக்கிய நோக்கம் ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் பல நிலைகள் இருக்கின்றன. //

ஒரு மருத்துவர் இதைப் பற்றி விளக்கமாக எழுதுவது சாலப் பொருத்தம்.

நான் யூகித்த ஒரு விஷயம்... பொதுவாக ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்கள் transgender-ஆக மாறுகிறார்களோ என்று. அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கவர ஆண்தன்மையை (macho look / choclate boy look) அதிகபடுத்துவது போல, ஒரு ஆண் இன்னொரு ஆணைக் கவர தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறானோ?

இது ஒரு உளவியல் சிக்கலாகத்தான் பெரும்பாலும் தெரிகிறது.

உடல் அளவில் சிலருக்கு பால்தன்மைகள் மாறி வெளிப்படலாம் (தடகள வீராங்கனை சாந்தி போல). ஆனால் அதையும் இந்த உளவியல் சிக்கலையும் ஒரே மாதிரியாக கொள்ள வேண்டுமா?

புருனோ Bruno said...

//நான் யூகித்த ஒரு விஷயம்... பொதுவாக ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்கள் transgender-ஆக மாறுகிறார்களோ என்று. //

ஸ்ரீதர் சார்,

TG என்பது அனைத்தையும் உள்ளடக்கிய சொல். நீங்கள் இங்கு திருநங்கை என்ற சொல்லுக்கு பதில் அதை பயன் படுத்தியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

//இது ஒரு உளவியல் சிக்கலாகத்தான் பெரும்பாலும் தெரிகிறது.

உடல் அளவில் சிலருக்கு பால்தன்மைகள் மாறி வெளிப்படலாம் (தடகள வீராங்கனை சாந்தி போல).//

திருநங்கைகளில் பெரும்பாலனவர்களுக்கு உளவியல் பாதிப்பு தான். சிலருக்கு உடல் ரீதியாகவும் வேறுபாடு உள்ளது.

//ஆனால் அதையும் இந்த உளவியல் சிக்கலையும் ஒரே மாதிரியாக கொள்ள வேண்டுமா?//

பார்க்க வேண்டாம். பார்க்க தேவையில்லை. கலந்தாய்வு (counselling) மூலம் சரிசெய்யப்படக்கூடிய பிரச்சனைகள் கூட தற்சமயம் சரி செய்யப்படாமல் இருக்கின்றன என்பது தான் வேதனை

உடல் ரீதியாக குறை உள்ளவர்களும், மனநிலையில் மாற்றம் உள்ளவர்களும் ஒரே போல் பார்க்கப்படுவது தான் வேதனை

--

நான் எழுத ஆரம்பித்த நோக்கத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது :)

கோவி.கண்ணன் said...

//பின்குறிப்பு : ஆபாசமாக இருக்கும் வரிகளை / சொற்களை கூறுவும்//

பின்குறிப்பில் 'ஆபாசமாக' என்னும் ஆபாச சொல் வருகிறது !
:)))))))))

ஸ்ரீதர் நாராயணன் said...

//உடல் ரீதியாக குறை உள்ளவர்களும், மனநிலையில் மாற்றம் உள்ளவர்களும் ஒரே போல் பார்க்கப்படுவது தான் வேதனை//

அதிலும் வேதனை அவர்கள் தங்களைத் தானே வருத்திக் கொண்டு செய்து கொள்ளும் உடல்மாற்ற சிகிச்சைகள். சு. சமுத்திரம் விளக்கமாக எழுதியிருப்பார் அவருடைய 'வாடாமல்லி' கதையில்.

ஓரினச் சேர்க்கையாளர்களை சட்டப்படி அங்கீகரிப்பதும், அவர்கள் திருமணம் போன்ற பந்தகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதும் இம்மாதிரியான கொடுமைகளை குறைக்கும் என்று நினைக்கிறீகளா?

துளசி கோபால் said...

//TG என்பது அனைத்தையும் உள்ளடக்கிய சொல்//

ஆமாங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன்.
TG= Tulsi Gopal
:-))))))

சரிங்க. ஜோக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும்.

பதிவு?

அருமை.

தொடருங்கள்.

வாழ்த்து(க்)கள்.

புருனோ Bruno said...

கோவி.கண்ணன் சார்

:) :)

புருனோ Bruno said...

//அதிலும் வேதனை அவர்கள் தங்களைத் தானே வருத்திக் கொண்டு செய்து கொள்ளும் உடல்மாற்ற சிகிச்சைகள். சு. சமுத்திரம் விளக்கமாக எழுதியிருப்பார் அவருடைய 'வாடாமல்லி' கதையில்.//

வாடாமல்லி படித்ததில்லை. பலருக்கு உடல் மாற்ற அறுவை சிகிச்சை தேவையில்லை. நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் சிகிச்சை மற்றும் கலந்தாய்வே போதும்.

புருனோ Bruno said...

//ஓரினச் சேர்க்கையாளர்களை சட்டப்படி அங்கீகரிப்பதும், அவர்கள் திருமணம் போன்ற பந்தகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதும் இம்மாதிரியான கொடுமைகளை குறைக்கும் என்று நினைக்கிறீகளா?//

சுய பால் விழைவு (ஒரின சேர்க்கை) ஆண்கள் மட்டுமே திருநங்கை ஆவது இல்லை.

பல சுய பால் விழைவு ஆண்கள் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.

அதே நேரம் எனது முக்கிய நோக்கம் TGயின் ஒரே ஒரு வகையினரான திருநங்களைகளை தவிர இதர பிரச்சனைகள் உள்ளவர்கள் பற்றிய விபரங்களும் பரவலாக மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான்.

மிகவும் பாதிப்புக்கள் உள்ள True Hermophrodite நபர்களை தவிர மற்றவர்களில் பெறும்பாண்மையோர் சராசரி வாழ்க்கை வாழலாம் என்பது தான் உண்மை.

முறையான மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு உள்ள சமுகத்தில் திருநங்கை என்று ஒரு பிரிவில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் ஆண்களாகவோ பெண்களாகவோ இருக்க வேண்டும்

புருனோ Bruno said...

//பதிவு?

அருமை.

தொடருங்கள்.

வாழ்த்து(க்)கள்.//

நன்றி :) மேடம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டாக்டர் ஸார்..

பாடத்தை அருமையாகத் துவக்கியிருக்கிறீர்கள். தொடருங்கள்..

படிக்கக் காத்திருக்கிறோம்..

உங்களைப் போன்ற படித்த பண்பாளர்கள் நிறைய உண்மையான விஷயத்தோடு எழுதுவது தமிழ் உலகத்துக்கு சிறப்பு சேர்க்கிறது..

இதுவும் ஒரு பொது அறிவைப் பகிர்ந்து கொள்வது போலத்தான்..

வாழ்க வளமுடன்

புருனோ Bruno said...

//வாழ்க வளமுடன்//

நன்றி சார்

லக்ஷ்மி said...

தெளிவா புரியுதுங்க. நிஜம்மாவே முழுக்கப் படிச்சுட்டுதான் சொல்றேன். :) தொடருங்கள்.

புருனோ Bruno said...

பாட புத்தகத்தில் வருவது போல் வரிசையாக கூறாமல் அங்கொன்று இங்கொன்றாய் உள்ள தலைப்புகளை எழுதலாம் என்று நினைக்கிறேன்

தருமி said...

ஓரிடத்தில் இது தொடர்பான நூலைப் பற்றி சில நிமிடங்கள் பேச வேண்டியதுள்ளது. உங்கள் பதிவுகள் ஒரு நல்ல source material. நன்றிகளும் வாழ்த்துக்களும்

புருனோ Bruno said...

//உங்கள் பதிவுகள் ஒரு நல்ல source material. நன்றிகளும் வாழ்த்துக்களும்//

நன்றி சார்

Anonymous said...

A)
//வேறு சிலருக்கு (உதாரணம் CAH)
1. மரபணு பால் - பெண்
2. இன உறுப்புகள் பால் - பெண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - ஆண்
என்பதும் தான் பிரச்சனையே.//

இதற்கு சரியான விளக்கம் உதாரணத்துடன் தர இயலுமா.

B)
ஒருவன் திருமணம் ஆகும் முன்பு பெண்ணின் பால் அதிக ஆசையினால், தன்னைத்தானே பெண்ணாக பாவித்தால் அவன் எந்நிலை அடைவான்? தயவு செய்து பதில் அளிக்கவும்.
-IS

புருனோ Bruno said...

//இதற்கு சரியான விளக்கம் உதாரணத்துடன் தர இயலுமா.//

நேரம் கிடைக்கும் போது தனி இடுகை எழுதுகிறேன்

புருனோ Bruno said...

//B)
ஒருவன் திருமணம் ஆகும் முன்பு பெண்ணின் பால் அதிக ஆசையினால், தன்னைத்தானே பெண்ணாக பாவித்தால் அவன் எந்நிலை அடைவான்? தயவு செய்து பதில் அளிக்கவும்.
-IS//

இது குறித்தும் விளக்குகிறேன்.

இது பெரிய இடுகைத்தொடர். 5 பகுதிகள் தான் எழுதியிருக்கிறேன்.

நீங்கள் கேட்ட விபரங்கள் குறித்து எழுத இருக்கிறேன்

Anonymous said...

நிச்சயம் காத்திருப்போம். நன்றிகள் பல.

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...