இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, July 23, 2008

மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டது

"தமிழ்நாடு மருத்துவச் சேவை புரிவோர் மீதான வன்முறை மற்றும் மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம், 2008' என்ற சட்டத்தை நமது வசதிக்காக மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் என்று அழைப்போம்.

சென்ற இடுகையில் இந்த சட்டத்தினால் பாதி பிரச்சனைகள் தான் தீரும் என்றேன். ஆனாலும் இந்த சட்டம் ஏன் தேவை. சட்டசபையில் சட்டமாக இயற்றமல் அவசரகாலச்சட்டமாக இயற்றவேண்டிய அவசியம் என்ன போன்ற விஷயங்களை இந்த இடுகையில் பார்க்கலாம்.

மருத்துவமனைகளின் மீது உள்ள மக்களின் அதீத எதிர்பார்ப்பு மற்றும் தொடர்ந்து ஊடகங்களில் வரும் ”பாதி உண்மைகள்” போன்றவற்றால் ஒரு மருத்துவமனையில் நியாயமான சேவை வழங்கப்பட்டாலே அதை குறையாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது

உதாரணமாக, வலைப்பதிவர் ஒருவர் கூறிய “குறை”
கருவிகள் வைத்திருந்தும் மற்ற மருத்துவ மனைகளுக்கு மக்கள் செல்வதற்கு காரணம், அரசு அதிகாரிகளைப் போல அரசு மருத்துவர்கள் 'சைடில்' வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான். உதாரணத்திற்கு சொல்வதென்றால், தலைநகரத்தில் உள்ள மிகப் பெரிய அரசு தலைமை மருத்துவமனையில் (ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்று வேறு மறு பெயர் - மூதறிஞர இராஜாஜி கூட இங்கு தான் மருத்துவம் பார்த்துக் கொண்டார்), இதய அறுவைச்சிகிச்சைப் பிரிவில், ஜெனரேட்டரே இல்லாமல் அறுவைச் சிகிச்சை நடந்த்து வருகிறது தெரியுமா ?. என் தந்தையை சில வருடங்களுக்கு முன் இந்த மருத்துவமனையில் தான் சேர்த்தேன். நாங்கள் செய்த புண்ணியம், எங்களுக்கு தெரிந்த ஒருவர் அந்த மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்தார்.அவர் சொல்லிய பிற்பாடு நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனியார் மருத்துவ மனைகளுக்கு ஓடினோம்.
இது போன்ற “குறை தேடும் காமாலை கண்களை” வைத்து பார்த்தால் எதை பார்த்தாலும் எரிச்சல் வரும்.
//, ஜெனரேட்டரே இல்லாமல் அறுவைச் சிகிச்சை நடந்த்து வருகிறது தெரியுமா ?//
அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்று நீங்களே கூறுகிறீர்கள்.

ஐயா அறிவுடைநம்பி.

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்

மின் ஆக்கி இல்லையென்றால் வைத்தியம் செய்ய கூடாதா. இது போல் காரணங்களை காட்டி அறுவை சிகிச்சையை ரத்து செய்ய வேண்டுமா.

//அரசு மருத்துவர்கள் 'சைடில்' வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான். //

இது பொய் குற்றச்சாட்டு. அப்படி வருமானம் பார்க்க வேண்டுமென்றால் மின் ஆக்கி இல்லாத காரணத்து காட்டி அறுவை சிகிச்சையை ரத்து செய்யலாமே.

தயவு செய்து இப்படி பொய் குற்றச்சாட்டுகளை அளிப்பதை தவிர்க்கவும்.

பார்த்தீர்களா, இவ்வளவு கஷ்டப்பட்டு, போதிய வசதிகள் இல்லாவிட்டால் கூட வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவருக்கு எவ்வளவு கெட்ட பெயர் என்று.

ஒரு பிணியாளர் இறந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை வெற்றிபெற வில்லை என்றாலோ அதற்கு காரணம் மருத்துவமனையின் தவறு மட்டும் தான் என்ற சிந்தனை அதிகரித்து உள்ளது. அவருக்கு நோய் இருந்ததால் தான் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என்பதை கூட மறந்து விடுகிறார்கள். (அப்படியில்லாமல் நோய் எதுவும் இல்லாத ஒருவர் செய்து கொள்ளும் சிகிச்சை குடும்பக்கட்டுபாடு என்பதால் தான் அதற்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் தான் என்ன பிரச்சனை என்றாலும் குடும்பக்கட்டுபாடு சிகிச்சையில் தவறு என்று பொய் புகார் அளிக்கும் போக்கு இருப்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்)

இது தவிர வன்முறையில் இறங்கி பின்னர் ”உணர்ச்சி வசப்பட்டு அடித்து விட்டோம்” என்று சப்பைக்கட்டு கட்டலாம் என்ற வசதி இருப்பதால் மருத்துவமனைகளின் மேல் வன்முறைகள் அதிகரித்தவாறு இருந்தன. (இதில் ஒரு சோகம் / சிந்திக்க வேண்டிய விஷயம் - லட்சக்கணக்கில் பணம் வாங்கும் எந்த மருத்துவமனையும் அடிவாங்க வில்லை !!!! - அடி வாங்கியவர்களெல்லாம் சிறு மருத்துவமனைகள் / அரசு மருத்துவமனைகள் தான் :) :) :) )

இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்த அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு காரணமாக இருந்தது பொன்னேரியில் சென்ற மாதம் நடந்த சம்பவம்.

பொன்னேரியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரது உறவினர்கள் இருவர் அங்குள்ள அரசு மருத்துவமனை வந்து பிணியாளர் ஊர்தியை கேட்டிருக்கிறார்கள். மருத்துவ அலுவலர் தர மறுத்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு தான் பிணியாளர் ஊர்தி அளிக்கப்படவேண்டும் என்பதால் தர முடியாது என்று கூறிய அவரை அடித்து விட்டார்கள்.

இதே நிலைமை தொடர்வது நல்லதல்ல என்பதால் தான் இந்த அவசரச்சட்டம்

இப்பொழுது எழும் கேள்வி : விழிப்புணர்வு தான் நிரந்தர தீர்வு என்ற நிலையில் இந்த சட்டம் (தற்காலிக தீர்வு) தேவையா
பதில் : தேவைதான்

ஒருவனுக்கு மீனை அளிக்காதே, மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பது சரிதான். ஆனால் ஒரு வாரம் சாப்பிடாமல் பசியோடு அரை மயக்கத்தில் இருப்பவனுக்கு. மீன் கற்று கொள்ளுங்கள்... பாடம் 1, பாடம் 2 என்றா சொல்வோம். ஒருவன் பசியோடிருக்கையில் அவனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. முதலில் அவன் பசியை போக்க வேண்டும். அதன் பின்னர் தான் கற்றுக்கொடுக்க முடியும். எனவே முதலில் மீனை (தற்காலிக தீர்வு) அளித்து அதன் பின்னர் மீன் பிடிக்க கற்று கொடுப்பதே (நிரந்தர தீர்வு) சிறந்தது. பசியோடு, அதுவும் பசியால் அரைமயக்கத்தில் இருப்பவனிடம் முதலில் மீனைக்கொடுங்கள். அதன் பின் பசி தீர்ந்த பின் மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கலாம்

தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருப்பவனை பார்த்து, நீச்சல் கற்றுக்கொள். முதலில் வலது கை, பின் கால், என்று யாரவது பாடம் நடத்த முடியுமா நீச்சல் சொல்லிக்கொடுப்பது தான் சிறந்த வழி, ஆனால் ஒருவன் முழ்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வோம். தண்ணீரில் மூழ்கும் ஒருவனுக்கு தேவை ஒரு கயிறு. நீச்சல் பாட புத்தகம் அல்ல

எப்படி விவசாயிகளின் தற்கொலையை தடுக்க கடன் தள்ளுபடி சிறந்த வழிமுறை / நீண்ட கால தீர்வு இல்லையென்றாலும் அந்த தருணத்தில் தேவைப்பட்டதோ அதே போல், இந்த சட்டம் தற்பொழுது தேவை.

பின் குறிப்பு : நமது நாட்டில் (அனைத்து நாடுகளிலும்) அனைத்து சட்டங்களுமே தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே ஒரு சட்டத்தை தேவையில்லை என்று கூறினால் நாட்டின் எந்த சட்டமுமே இருக்க முடியாது

அடுத்த இடுகை

10 மறுமொழிகள்:

Anonymous said...

//, ஜெனரேட்டரே இல்லாமல் அறுவைச் சிகிச்சை நடந்த்து வருகிறது தெரியுமா ?//
அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்று நீங்களே கூறுகிறீர்கள்.

ஐயா அறிவுடைநம்பி.

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்

மின் ஆக்கி இல்லையென்றால் வைத்தியம் செய்ய கூடாதா. இது போல் காரணங்களை காட்டி அறுவை சிகிச்சையை ரத்து செய்ய வேண்டுமா.//

அறிவுடைநம்பி கூறவருவது இதுதான். மின் ஆக்கியின்றி செய்யும் முக்கியமான அறுவைசிகிச்சைகளின்போது மின்சாரம் தடைபட்டால் நோயாளியின் கதி என்ன?
இந்நிலையில்தான் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன.

இதற்கு, பார்த்தீர்களா மின்ஆக்கியே இல்லாமல் அரசு மருத்துவர்கள் இதய அறுவைசிகிச்சை செய்துவருகிறார்கள் என நீங்கள் வியப்பதுதான் வியப்பாயிருக்கிறது.

புருனோ Bruno said...

//அறிவுடைநம்பி கூறவருவது இதுதான். மின் ஆக்கியின்றி செய்யும் முக்கியமான அறுவைசிகிச்சைகளின்போது மின்சாரம் தடைபட்டால் நோயாளியின் கதி என்ன?
இந்நிலையில்தான் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன.//

ஐயாஅனானி,

இதய அறுவை சிகிச்சை என்பதை எல்லா இடங்களிலும் செய்ய முடியாது என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன்.

அதற்கு சில கருவிகள் அவசியம். அவை (கணினி போல்) தடங்கலில்லா மின்வழங்கியுடன் தான் பொருத்தப்பட்டிருக்கும். அறுவை அரங்கில் மின்சாரத்துடன், மின்னாக்கியும், தடங்கலில்லா மின்வழங்கியும் (இதற்கு அர்த்தம் புரியாவிட்டால் இங்கு பார்க்கவும்) இருக்கும்.

//இதற்கு, பார்த்தீர்களா மின்ஆக்கியே இல்லாமல் அரசு மருத்துவர்கள் இதய அறுவைசிகிச்சை செய்துவருகிறார்கள் என நீங்கள் வியப்பதுதான் வியப்பாயிருக்கிறது.//

இதய அறுவைசிகிச்சைக்கான வெண்டிலேட்டர், பெர்ப்யூசன் கருவி, மயக்க மருந்துகள், 10-0 நூல்கள் ஆகியவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது தான் வியப்பை தவிர தடங்கலில்லா மின் வழங்கி இருக்கையில் மின்னாக்கி என்பது குளிர்சாதன கருவி, சில விளக்குகள் (அறுவை மேசையின் மேலுள்ள “நிழலற்ற விளக்கு” த.மி.வவுடன் இனைக்கப்பட்டிருக்கும்) போன்றவற்றுக்குத்தான் மின்னாக்கி தேவை.

மின்னாக்கி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

கடந்த காலங்களில் எல்லாம் மின்னாக்கி வரும் முன் (ஏன் மின்சாரம் வரும் முன்) அறுவை சிகிச்சை நடக்கவில்லையா.

--
எனவே மின்னாக்கி இல்லை என்று அறிவுடைநம்பியிடம் கூறிய அவரது “நண்பர்” மின்னாக்கியின் பயன் என்ன என்று விளக்கியிருக்கலாம்.
--
அல்லது அறிவுடைநம்பி மருத்துவர் யாரிடமாவது இது குறித்து கேட்டறிந்திருக்கலாம்
--
அப்படி கேட்காமல் நம்பியது தான் வியப்பு
--
புரிகிறதா !!!

புருனோ Bruno said...

மின்னாக்கி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை..... எனென்றால் த.மி.வ இருப்பதால்.

த.மி.வ இல்லையென்றால் மின்னாக்கி இருந்தாலும் ஆபத்துதான்.

Anonymous said...

புரிகிறதய்யா புரிகிறது !

//, ஜெனரேட்டரே இல்லாமல் அறுவைச் சிகிச்சை நடந்த்து வருகிறது தெரியுமா ?//
என்ற கேள்விக்கு
'அறுவைசிகிச்சைக்கு மின்னாக்கி அவசியமில்லை த.மி.வ. போதுமானது'
என்றிருந்தால் எளிதில் புரிந்திருக்குமே!

//அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்று நீங்களே கூறுகிறீர்கள்.மின் ஆக்கி இல்லையென்றால் வைத்தியம் செய்ய கூடாதா. இது போல் காரணங்களை காட்டி அறுவை சிகிச்சையை ரத்து செய்ய வேண்டுமா.//

என சொல்லி குழப்பிட்டீங்க ஆமா!

கயல்விழி said...

மருத்துவமனை பாதுகாப்பு சட்டம்? அவசியமே. ஒரு வேளை அரசு மருத்துவர்களூம், ஊழியர்களும் தவறே செய்திருந்தாலும் அவர்களை தாக்குவது ரொம்ப தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே சரி(இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது என்பது தனிப்பிரச்சினை). எதுவாக இருந்தாலும் போதிய விசாரணை இல்லாமல் ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. மேலும் பொது மருத்துவமணையை சேதப்படுத்துவதால் மக்களுடைய பணம் தான் வீணாகிறது.

புருனோ Bruno said...

//மேலும் பொது மருத்துவமணையை சேதப்படுத்துவதால் மக்களுடைய பணம் தான் வீணாகிறது.//

இது தான் மைய கருத்து

ராஜ நடராஜன் said...

இந்த மாதிரி சட்டங்கள் ஏன் நமது நாட்டுக்கு மட்டும் தேவைப்படுகிறது?இங்கே மத்திய கிழக்கு நாடுகளைப் பாருங்கள் அதற்கெல்லாம் தேவையே இல்லாமல்.நமது நாட்டு மருத்துவர்களின் திறமையும் அறிவையும் இங்கே வந்து பார்த்தால்தான் தெரியும்.அங்கே திறமை + சட்டம். இங்கே - திறமை - சட்டம். எதனைச் சிறப்பாக கருதுகிறீர்கள்?

புருனோ Bruno said...

//இந்த மாதிரி சட்டங்கள் ஏன் நமது நாட்டுக்கு மட்டும் தேவைப்படுகிறது?//

கல்லூரிகளில் பகடிவதையை (ragging) தடுப்பதற்கு தனி சட்டமும் சாலைகளில், பேரூந்துகளில் பெண்களை கேலி செய்வதை (eve teasing) தடுப்பதற்கு தனி சட்டமும் கொண்ட நாடல்லவா நம் நாடு

நீங்கள் கூறியது முற்றிலும் சரி !!

Anonymous said...

29 ஜூலை தினமணி தலையங்கம்

சட்டத்திற்கு என்ன அவசரம்?

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080728120739&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=7/29/2008&dName=No+Title&Dist=

இது சரியா?

பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க.

புருனோ Bruno said...

அடுத்த இடுகை
வன்முறை தடுப்பு சட்டம் குறித்த திணமனியின் தவறான தலையங்கத்திற்கு வரிக்கு வரி பதில்

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...