இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்
-oOo-
கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது.
காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு “அவருக்கு ஊசி போடுங்கள்”, “நம்ம அண்ணனுக்கு க்ளுகோஸ் ஏற்றுங்கள்” என்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் செட்டிலாகி விடுவது. மதியம் அங்குள்ள பணியாளர் விடுதியில் ஆடுபுலிஆட்டம் ஆடுவது (ஏனோ சீட்டு, ரம்மி அந்த குழுவில் அவ்வளவு பிரபலம் இல்லை) என்று கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள்
அதன் பின் அடுத்த கோஷ்டி ஆரம்ப சுகாதார நிலையம் பற்றியும் மருத்துவ அலுவலர் பற்றியும் புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். சுகாதார பணிகள் துனை இயக்குனரில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வரை அனுப்பபடும் புகார்களின் நகல்கள், சுகாதார செயலர், சுகாதார அமைச்சர், தலைமைச்செயலர், முதலமைச்சர், குடியரசுத்தலைவர் வரை செல்லும். (அவருக்கு தமிழ் புரியும். அனுப்புடா !!) அப்பொது அப்துல் கலாம் குடியரசுத்தலைவர்.. ஒரு தமிழர் குடியரசுத்தலைவரானால் என்னென்ன புகார் மனு எல்லாம் பெற வேண்டியுள்ளது பாருங்கள்.
உடன் அந்த மருத்துவர் மீது விசாரணை வைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பெறும்பாலும் மருத்துவ இளங்கலை (MBBS) படித்து முடித்த உடன் பணியில் சேர்ந்திருப்பவர்கள். புகாரை பார்த்தவுடன் வீட்டில் புலம்பி அடுத்த நிலையத்திற்கு மாற்றலாகி சென்று விடுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1500 இடங்கள் காலியாக இருந்தன. (இன்று 100 இடங்கள் கூட காலியில்லை) மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யாமல் அங்கிருந்து ஓடுவதற்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாக பணி, கடைநிலைய ஊழியர்களின் பிரச்சனை, மற்றும் இது போல் சில இடங்களில் ஊரில் உள்ள வெட்டிபயல்கள் கிளப்பும் பிரச்சனைதான்.
அந்த மருத்துவர் மாற்றலாகி சென்ற உடன் அடுத்த மருத்துவர் வருவார். அவர் முதல் குழு மேல் எச்சரிக்கையுடன் வருவதால் அந்த குழுவை தள்ளி வைப்பார். இது தான் நேரம் என்று அடுத்த குழு உள்ளே புகுந்து விடும். பிறகென்ன, ”பழைய குருடி கதவை திறடி” கதைதான். இந்த குழு அதே போல் இம்சை அளிக்கும். இந்த முறை முதல் குழு புகார் அளிக்கும். (இந்த புகாரும் குடியரசு தலைவர் மாளிகை வரை செல்லும்) அந்த மருத்துவரும் ஓடி விடுவார்.
அது சரி, மருத்துவர் ஏன் இப்படி வெட்டி பயல்களுடன் பேச வேண்டும். மருத்துவமனையில் அமர்ந்து வருபவர்களை சோதித்து ஊசி, மாத்திரை எழுதினால் போதாதா என்ற கேள்வி உங்களுக்கு வருவது நியாயம் தான்.
அரசு மருத்துவமனைகள் (மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை), போன்ற மருத்துவமனைகளுக்கு இரு பணிகள் தான் – புறநோயாளி சிகிச்சை, உள்நோயாளி சிகிச்சை (இதில் அறுவை சிகிச்சை அடக்கம்). மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் கூடுதல் பணியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். மற்றும் நீதிமன்றப்பணி, முகாம்கள், சிறப்பு பணிகள் என்று இருந்தாலும் அவை எல்லாம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் பணிகள் தான்
ஆனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள் பல. அதில் உள்ள பிற பணிகளுடன் ஒப்பிடுகையில் புறநோயாளி சிகிச்சை என்பது முக்கியத்துவம் குறைந்த பணிதான். (அதாவது பிற பணிகள் மிக மிக முக்கியம் என்ற அர்த்தத்தில்) குடும்ப நலம், தடுப்பூசி, சுகாதாரம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு, ஏய்ட்ஸ் தடுப்பு, பல்ஸ் போலியோ, பள்ளி சிறார் நலம், ஆய்வுப்பணி, திருவிழா நேரங்களில் தொற்று நோய் பரவாமல் தடுப்பது என்று பல பணிகள் உண்டு – இதை செய்வதற்கு பல பயிற்சிகள் தேவை. இதனால் தான், எந்த பயிற்சியும் பெறாத மருத்துவர்களை வெறும் நான்கு மாதம் வரை 8000 ஊதியத்தில் நியமிக்கும் திட்டத்தை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் கடுமையாக எதிர்த்தார்கள்.
எனவே இப்படி பலதரப்பட்ட பணிகளுக்காக ஊர் மக்களுடன் நெருங்கி பணிபுரிய வேண்டும். களத்தில் மருத்துவர் இல்லையென்றால் (புறநோயாளிகளுக்கு ஊசி போடுவதை தவிர) ஒரு வேலையும் நடக்காது. ஆனால் அப்படி மருத்துவர் ஊர் மக்களுடன் பழகுவது கவனமாக செய்ய வேண்டும். அவர் ஒரு சாரார் உடன் பழகுகிறார் என்று அடுத்த சாரார் நினைத்தால் பிரச்சனை தான்.
அதுவும் ஏற்கனவே குழுமனப்பாண்மையால் இரண்டு பட்டிருக்கும் ஊரில் இது போல் பிரச்சனை எளிதில் பெரிதாகி விடும். உதாரணமாக காச நோய்க்கு மருந்து சாப்பிடும் நோயாளி மருந்து ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று சோதிக்க மருத்துவர் கள ஆய்வு சென்றால் அங்குள்ள ஏதேனும் இரண்டு நோயாளிகளை பார்த்தால் போதும் என்று காச நோய்திட்ட குறிப்புகள்/ வழிமுறைகள் சொன்னாலும், ஒரே குழுவை சேர்ந்த இரு நோயாளிகளை பார்த்து விட்டு அடுத்த குழுவை சேர்ந்தவர்களை பார்க்காவிட்டால் பிரச்சனைதான். மருத்துவரை ஒரு குழுவிற்கு ஆதரவளிப்பவராக கருதி அடுத்த குழு அவரை தொந்தரவு படுத்த ஆரம்பிக்கும்.
சரி ஒவ்வொரு குழுவில் ஒருவரை பார்த்து விட்டு வரலாம் என்றால், முதல் வீட்டின் ‘கலர்’ குடித்திருந்தால், அடுத்த வீட்டிலும் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று நாகரிகமாக மறுத்தால் பிரச்சனை :) :)
இப்படியாக எப்படியோ ஒரு மருத்துவர் ஒரு குழுவிற்கு நெருக்கமானவர் என்று பெயர் வந்து விட்டால் (இப்படி பெயர் வருவது என்பது அவர்களின் திட்டமிட்ட செயலாக இருக்காது - இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பல இடங்களில் இரண்டு குழுவுமே ஒரே ஜாதியாகத்தான் இருக்கும் - பல மருத்துவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது) அதன் பிறகு தலைவலி தான்.
சில இடங்களில் இந்த பிரச்சனை குறைவு. நான் சொன்ன ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த பிரச்சனை அதிகம்.இப்படி தொடர்ந்து மருத்துவர்கள் தொல்லைக்கு உள்ளாவதால், அங்கு யாரும் பணி புரிவதில்லை. தமிழகத்தில் கடந்த வருடங்களில் சுமார் 4000 மருத்துவர் பணியிடங்கள் வரை காலியாக இருந்ததால், (ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே 1500 காலியிடங்கள் இருந்தன) மாற்றல் பெறுவது சிரமமே இல்லை. (இன்று - 18/10/2008 நிலவரப்படி - ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 100 காலியிடங்களும், அரசு மருத்துவமனைகளில் சுமார் 30 காலியிடங்களும், மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 2000 காலியிடங்களும் உள்ளன. அதில் அடுத்த மாதம் 200 + 100 காலியிடங்கள் அரசு தேர்வாணைய காத்திருப்பு பட்டியலிலிருந்து நிரப்பப்பட உள்ளன.)
எனவே 3 மருத்துவர் பணி புரிய வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவருமே கிடையாது. அந்த மாவட்டத்தின் பிற சுகாதார நிலையங்களிலிருந்து மாற்றுப்பணி மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு் பணி நடந்து கொண்டிருந்தது.மாற்றுப்பணி மருத்துவர்களும் இப்படி இரண்டு குழுவில் ஏதோ ஒரு குழுவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைய விட்டு விட்டால் (அடுத்த குழுவால்) தலைவலி ஆரம்பித்து விடும்.
இப்படி யான ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது
தொடர்ந்து வாசிக்க...


16 மறுமொழிகள்:
உண்மையில் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இதையெல்லாம் மருத்துவர்கள் சங்கத்தின் (Indian Medical Association) மூலம் ஆட்சியாளர்களின் தீவிர நடவடிக்கைக்குக் கொண்டு செல்லலாமே!
// உண்மையில் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதையெல்லாம் மருத்துவர்கள் சங்கத்தின் (Indian Medical Association) மூலம் ஆட்சியாளர்களின் தீவிர நடவடிக்கைக்குக் கொண்டு செல்லலாமே! //
வருக வாத்தியார் சார்.
பணியில் சேரும் மருத்துவர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் இது போன்ற குளறுபடிகள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கும்.
இங்கு குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு ப்ளாக்கரும் இகலப்பையும் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதும் சிலர் நினைப்பது போல் ஆரம்ப சுகாதார மருத்துவர் பணி அவ்வளவு சுலபமானது கிடையாது.
அரசு மருத்துவர் பணி என்பது பல சிக்கல்களையும் குறைந்த ஊதியகும் கொண்டது
நட்சத்திர வாழ்த்துக்கள் டாக்டர்.
சிவா சார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி
அடுச்சு ஆடுங்க டாக்டர். சினிமா தொடர் பதிவு என்னாச்சு?
//அடுச்சு ஆடுங்க டாக்டர். சினிமா தொடர் பதிவு என்னாச்சு?//
இந்த வாரம் ரிலீஸ் :) :)
அன்புள்ள டாக்டர் ப்ருனோ ,
உங்கள் பதிவுகளை விரும்பிப் படிக்கிறேன் .நானும் டாக்டர் என்ற முறையில்
அனுபவிக்கிறேன் .அறுபதுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில்
பணி புரிந்துள்ளேன் .நிலைமை மாறவில்லை என்று தெரிகிறது .இரண்டாண்டு பணி..மக்களை திருப்திபடுத்துவது சிரமம் .மருத்துவம் தெரிந்தால் மட்டும் போதாது .மக்களுடன் .பழகவும் தெரியவேண்டும் .நல்ல பெயருடன் வெளிவந்தேன் என்று நினைக்கும்போது மகிழ்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள்
கோபாலன்
.
நன்றி சார்,
நீங்கள் கூறியவை எல்லாம் சரியே
//மக்களை திருப்திபடுத்துவது சிரமம் .மருத்துவம் தெரிந்தால் மட்டும் போதாது .மக்களுடன் .பழகவும் தெரியவேண்டும் .//
உண்மைதான்.
//அறுபதுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில்
பணி புரிந்துள்ளேன் .நிலைமை மாறவில்லை என்று தெரிகிறது //
தற்பொழுது மருந்துக்களின் தரம், கருவிகள், வாகனங்கள், நாய்க்கடிக்கு ஊசி, 24 மணிநேரமும் பிரசவம் என்று பல மாற்றங்கள் இருந்தாலும், நீங்கள் கூறியபடி “நிலைமை மாறவில்லை”
தங்களைப்போன்றவர்களின் ஆசியும் அறிவுரையும் எங்களுக்கு தேவை
சூடும் சுவையும் சிறப்பும் நிறைந்த தொடராக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறும் முதல் பகுதி. என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஒரு மருத்துவர் என்பதால்; அவர், ஒலக்கூர் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட பழைய நாட்களும் கிளர்ந்து எழுவதால் என்னால் கூடுதலாக ரசிக்க முடியும்.
ஊர் ரெண்டு பட்டா மருத்துவருக்குத் திண்டாட்டம்(-:
இதெல்லாம் 50 வருசங்களுக்கு முன்னே இருந்ததாக நினைவு இல்லை எனக்கு.
அப்படியாயின் பெண் மருத்துவர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உருவாகும்?யோசிக்க வேண்டிய விடயம் தான்.
//சூடும் சுவையும் சிறப்பும் நிறைந்த தொடராக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறும் முதல் பகுதி. //
நன்றி சார்
//ஊர் ரெண்டு பட்டா மருத்துவருக்குத் திண்டாட்டம்(-://
உண்மைதான் மேடம்
//இதெல்லாம் 50 வருசங்களுக்கு முன்னே இருந்ததாக நினைவு இல்லை எனக்கு.
//
உண்மைதான்
அப்பொழுது வெறும் மருத்துவப்பணிகள் தான். குடும்பக்கட்டுபாடு பணிகள் 1970களில் தான் வந்தது. அதன் பிறகு தான் தடுப்பூசி.
மலெரியா மற்றும் தொழுநோய் எல்லாம் தனித்தனி vertical programmeகளாக இயங்கி வந்தது.
ஆனால் இன்று அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் கீழ் வருகிறது.
அதனால் தான் வேலைப்பளு மிகவும் அதிகம் [ஊதியம் அதே தான் :( ]
//அப்படியாயின் பெண் மருத்துவர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உருவாகும்?யோசிக்க வேண்டிய விடயம் தான். //
வைத்தியம் பார்ப்பது, பிரசவம் பார்ப்பது, அறுவை சிசிக்சை அளிப்பது போன்றவை எளிய விஷயங்கள். ஆனால் அவை முக்கிய தலைவலிகள் அல்ல
சரியான் வழிகாட்டி இல்லையென்றால் பெண்களால் பொது சுகாதார பணிகளை செய்வது மிக மிக கடினம்
நிறைய பிரச்சனைகள். அதனால் தான் பெண்கள் முடிந்த வரையில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து மாற்றல் ஆகி சென்று விடுகிறார்கள்
உங்க வேலையிலும் இப்படிப்பட்ட பிரச்சனையா? கொடுமை தான். :-(
//உங்க வேலையிலும் இப்படிப்பட்ட பிரச்சனையா? கொடுமை தான். :-(//
தனியாரை விட அரசில் அதிகம் வேலை பார்க்கும் ஒரே ஊழியர்கள் மருத்துவர்கள் தான்
அதே போல் தனியாரை விட குறைவாக ஊதியம் பெறுபவர்களும் மருத்துவர்கள் தான்
Post a Comment