இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ???

ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??

போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்

ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்

எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து

அவர்
ஆண்மை உள்ளவரா - பொட்டண்ட் Potent
ஆண்மையற்றவரா - இம்பொட்டண்ட் Impotent
என்று கூறலாம்

அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து
பெர்டிலிட்டி - Fertilily
மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி - Sterilily
என்று பிரிக்கலாம்

இது இரண்டும் தனி தனி அம்சங்கள்

உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்
  1. கருப்பு பேனா
  2. வெள்ளை பேனா
  3. கருப்பு பென்சில்
  4. வெள்ளை பென்சில்
என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்

ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்
  1. ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
  2. ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
  3. ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
  4. ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile
என்று நான்கு பிரிவுகள் வரும்


ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்
இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்

ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடமும், 12ஆம் இடமும் பாதிப்பில்லாமல் இருந்தால் இவ்வாறு இருக்கும்

ஆண்மை குறைவு, தந்தையாகலாம்

இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்

இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்

வயகரா, சிட்டு குருவி லேகியம், அல்வா !!! ஆகியவை இங்கு உதவும்

நண்பர்கள் விருப்பப்ட்டால் (ஆபாச எழுத்தாளர் என்ற பெயர் வருமோ என்று பயம் தான் :) :) ) விரிவாக எழுதலாம்

ஒருவருக்கு ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக் இருந்து 12ஆம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி நடக்கலாம்

இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.


ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது
இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.

இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்

இந்த நிலைக்கு பல காரணங்கள்

இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது

ஒருவருக்கு ஜாதகத்தில் 12ஆம் இடம் நன்றாக இருந்து 5ஆம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி நடக்கலாம்.

முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது

ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது

இது பல காரணங்களினால் வரும் .

அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை

ஒருவருக்கு ஜாதகத்தில் 12ஆம் இடமும் பாதிக்கப்படு 5ஆம் இடமும் பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி நடக்கலாம்.

தவறிருந்தால் வாத்தியார் மன்னிக்கவும் :) :)

பின்குறிப்பு : இடுகை ஆபாசமாக இருப்பதாக கருதினால் கூறுங்கள். உடனே நீக்கி விடுகிறேன்

இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகைகள்

தமிழகத்தில் மேலும் 565 மருத்துவர்கள் நியமணம்

பத்திரிகை செய்திகளின் படி

  • அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் எம்.ஆர்.ஐ கருவி
  • மருத்துவர்களுக்கு மேலாண்மை பயிற்சி
  • அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணிநேரமாக்கப்படும்
  • 565 மருத்துவர்களும், 2000 பிற பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள்
முழு விபரங்களுக்கு
(http://www.hindu.com/2008/05/25/stories/2008052553820400.htm செல்லவும்

கற்றது தமிழும் சிலந்தியும் மண்குடம், ரமணா மட்டும் பொற்குடமா

வட்டாட்சியர் லஞ்சம் வாங்குவதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,
மருத்துவர் தவறு செய்வதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,
அரசியல்வாதி தவறு செய்தால் நீதிமன்றத்தை ஒதுக்கிவிட்டு நேரடியாக அவரை கொல்வதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,

இயக்குனர் சமுதாய அவலங்களை தோலுரிக்கிறார்

ஆனால்

மென்பொருள் ஊழியர்களை பற்றி மட்டும் திரைப்படம் எடுத்தால் இயக்குனருக்கு மண்டகப்படி :) :) :)

எனென்றால் பென்பொருள் ஊழியர்கள் சம்பாதிக்கும் பணம் கண்களை உறுத்துகிறது

சரி,

மற்ற அனைத்து துறையில் உள்ள அனைவரையும் விமர்சிப்பவர்கள் தங்கள் துறை பற்றி படம் எடுத்தால் மட்டும் பொங்கி எழுவது ஏன்....

-0-

நான் அந்த படத்தில் நடப்பது தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று கூறவில்லை.

என் கேள்வி “ விமர்சனத்தை தாங்கும் சக்தி இல்லையே” ஏன்

தமிழகத்தில் இது வரை 1500 படங்களிலாவது காவல்துறையை கொச்சை படுத்தி இருப்பார்கள்

மருத்துவர் செவிலியர் நகைச்சுவை இல்லாத வார பத்திரிகைகளே இல்லை எனலாம்

நடிகையின் வயதை வைத்து நகைச்சுவை செய்தால் ரசிக்கிறீர்கள்

பகடிவதை வைத்து படம் எடுத்தால் “எல்லா கல்லூரியிலும் இப்படியா என்று யாரும் கேட்பதில்லை”

-0-

என் கேள்வி “மற்றவர்களை விமர்சிக்கும் மென்பொருள் துறையினரால் சிறு விமர்சனத்தை கூட தாங்கும் சக்தி இல்லையே” ஏன்

பள்ளிக்கூட ஆசிரியைகளை வைத்து எவ்வளவு மட்ட ரக கற்பனை படங்கள் வந்திருக்கிறது.

அதை யாராவது ஆசிரியர்கள் எதிர்த்தார்களா.

ஏன் தமிழ் சினிமாவின் நிரந்திர கோமாளி தமிழாசிரியர் தான்.

அதை யாரும் எதிர்த்தார்களா.

எனக்கு தெரிந்து ஆசிரியர் துறையில் 99.99 சதவிதம் நேர்மையாகவும், பிறரை ஏமாற்றாமலும், ஆடம்பர வசதி இல்லாமலும் தான் இருக்கிறார்கள். :( :(

அப்படி பட்ட படங்கள் குறித்து வராத வேகம் இப்ப மட்டும் ஏன். :)

இன்றைய மென்பொருள் வல்லுனர்கள் பலரின் பெற்றோர் ஆசிரியராக இருக்க வாய்ப்புள்ளது.

தங்களின் பெற்றோரை, அவர்களின் தொழிலை கேவலப்படுத்திய திரைப்படங்க்ள் குறித்து மென்பொருள் வல்லுனர்கள் என்றாவது கோபப்பட்டதுண்டா ???
-0-
விமர்சணம் சரியென்றோ தவறென்றோ நான் கூறவில்லை. எனது கேள்வி தாங்கும் சக்தி பற்றி மட்டும் தான் :) :) :)

கல்லீரலை பாதுகாக்க சில நடைமுறைகள்

மே 19 உலக கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day) எனவே அதை முன்னிட்டு

கல்லீரலை பாதுகாக்க சில நடைமுறைகள்
  1. சாப்பிடும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுதல்
  2. மலம் கழித்த பின் சோப்பு போட்டு கை கழுவுதல்
  3. மது அருந்துவதை தவிர்த்தல்
  4. மருந்து சீட்டின் பேரில் வாங்குபவை, மருந்து சீட்டின்றி வாங்குபவை அல்லது மூலிகை மருந்துகள் சாப்பிடும் முன் மருத்து ஆலோசனை பெறுதல்
  5. தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்
  6. புகைப்பிடிப்பதை தவிர்த்தல்
  7. உடலின் எடையை பொதுவான வரம்புக்குள் வைத்தல்
  8. பாதுகாப்பான மற்றும் முறையான் உடலுறவு கொள்ளுதல்
  9. கொதிக்க வைத்த சுத்தமான் குடிநீர் பருகுதல்
  10. இரத்தம் தேவைப்படும் போது, நன்றாக சோதிக்கப்பட்ட இரத்தத்தை உட்செலுத்திக் கொள்ளவேண்டும்
கல்லீரல் மருத்துவத்துறை
அரசு மருத்துவமனை
சென்னை

தட்டச்சு செய்த மணி அவர்களுக்கு நன்றி

சென்னை பதிவர் சந்திப்பு : 18.05.2008

நேற்று மாலை மெரீனா கடற்கரை, காந்திசிலை பின்புறம் நடந்த சென்னை பதிவர் சந்திப்பு குறித்து சிறப்பு விருந்தினர் கோவி.கண்ணன் இது குறித்து புகைப்படங்களுடன் ஒரு இடுகையும் டோண்டு சார் ஒரு இடுகையும் அதிஷாஒரு இடுகையும் எழுதியுள்ளனர்.

சில துளிகள்

டோண்டு சாராவது என் பெயர் புருனோ என்று கூறியவுடன் மேற்கொண்டு சரித்திர விஷயங்கள் பேசினார். மற்றுமொரு பதிவரிடம் இருந்த வந்த மறுவினை மறக்க முடியாதது

“உங்க பெயர் நிஜமாலுமே புருனோ தானா”
ஆமாம்
“நீங்க டாக்டரா”
ஆமாம்
“டாக்டர்னா “டி”.“ஆர்” டாக்டரா”
ஆமாம்
“நான் நீங்க புனைப்பெயரில் எழுதுறதா நினைச்சேன்”

-oOo-

இன்னொருவர் நான் அமேரிக்காவில் இருப்பதாக நினைத்ததாக கூறினார். என்னிடம் கடவுச்சீட்டு கூட கிடையாது :) :) :)

எதோ நம்மால போக கூடிய இடம்னா அது பாரீஸ் (கார்னர்) தான்

-oOo-

முரளி கண்ணன சகஜமாக பேசினார். வலையுலகின் வீச்சு நாம் நினைப்பதையும் விட பரவலாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் அவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு.

அவர் என்ன பதிவில் எழுதுகிறார் என்று அவருக்கு தெரிந்தவர் ஒருவர் அவர் வீட்டிற்கு கூறியுள்ளார் :) :) :)

-oOo-

பாலபாரதி - “கலக்கல்” - அவருடன் பேசினால் ஏன் அவரருகில் இருந்தாலே போதும். அந்த உற்சாகம் நம்மிடம் தொற்றிக்கொள்ளும்,

-oOo-
சந்திப்பில் குறிக்கோள் எதுவும் இல்லாவிட்டாலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது

-oOo-

”டி.பி.ஆர் ரேட்டிங்”என்றால் என்ன
தொலைகாட்சி ஒலிபரப்பாகாமலே ”டி.பி.ஆர் ரேட்டிங்” எப்படி வரும் ????

போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களும் அலசப்பட்டன

-oOo-

சந்திப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும், (காந்தி சிலை) அங்கு நாங்கள் உட்கார்ந்திருந்த இடமும் மிகவும் நல்ல தேர்வு. சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்
-oOo-

மருத்துவம் குறித்து சில கேள்விகள், சில பதில்கள்

கேள்விகள் கேட்டது : நையாண்டி நைனா (முந்தைய இடுகையின் பின்னூட்டத்தில்)

கேள்வி 1: நான் ஒரு நாள் ஒரு மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதிக்கிறேன், அவர் கூறியுள்ள படியும் பரிசோதனைகளை செய்கிறேன். இரண்டு நாள் கழித்து வேறு ஒரு மருத்துவரை நாடினால் அவரும் அதே சோதனைகளையோ, மேலும் சில சோதனைகளையோ செய்ய சொல்கிறாரே ஏன்? முந்தைய ரிசல்டை ஒப்பு கொள்வதில்லையே ஏன்? (இரண்டு நாளுக்குள்ளாகாவா ரிசல்டு மாறி விடும்?)


நோய் இருந்தால் இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு மணிநேரங்களுக்குள் கூட மாறும்

அதில் சந்தேகமே கிடையாது

அப்படி என்றால் ஒருமுறை மட்டும் இரத்தில் சர்க்கரை அளவை பார்த்து விட்டு (மறுபடி பார்க்காமல்) வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்க வேண்டும் என்கிறீர்களா ??

அல்லது இரத்த கொதிப்பு உள்ள நோயாளிகளிடம் ஒவ்வொரு முறையும் இரத்த அழுத்தம் எடுக்கும் மருத்துவர்கள் அனைவரும் முட்டாள்களா ??

அப்படி யென்றால் இதையத்துடிப்பு மானி (Stethoscope) வைத்து ஒரு நோயாளியை வாழ்நாளிலேயே ஒரு முறை தான் சோதிக்க வேண்டுமா ??

ஒரு நோயாளி மறுமுறை வந்தால் குறைந்த பட்சம் நாக்கை நீட்டச்சொல்லி பார்ப்பது கூட தவறா ??

என்ன கொடுமை சார் இது :) :) :) :) (சந்திரமுகி பிரபு மாதிரி வாசிக்கவும்)

உங்களுக்கு தெரியுமா : அரசு மருத்துவமனையில் கூட வெளியில் எடுத்த நுண்ணொளி மற்றும் திசு சோதனையை வைத்து அறுவை சிகிச்சை செய்வதில்லை.

அரசு மருத்துவமனையில் மீண்டும் இலவசமாகவே

இரத்த பரிசோதனை
நுண்ணொளி (Ultrasonogram)
திசு பரிசோதனை (Biopsy) செய்வார்கள் என்று தெரியுமா

ஒரு நோயாளி வெளியில் நுண்ணொளி பரிசோதனை செய்திருந்தாலும்
கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் மறுமுறை நுண்ணொளி சோதனை செய்யப்படும். அது போல் வெளியிடங்களில் செய்த திசு சோதனையில் புற்று நோய் என்று இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய மாட்டர்கள். மறுபடியும் சோதனை செய்து அரசு நோய் குறியியல் மருத்துவ பேராசிரியர் (Professor of Pathology) அதை புற்று நோய் என்று உறுதி படுத்தினால் தான் அறுவை சிகிச்சை

ஏன்.

அப்படி (அரசு மருத்துவமனையிலேயே மீண்டும் இலவசமாக) செய்வதால் அரசு மருத்துவருக்கு என்ன லாபம்....

வேலை பளு அதிகரித்தாலும் கூட செய்வதற்கு காரணம் நீதிமன்றங்கள் தான்


எப்பொழுது மருத்துவம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு உட்பட்டதோ அப்பொழுதே இதெல்லாம் ஆரம்பித்து விட்டது

பல நேரங்களில் நுண்கதிர் (X Ray), மற்றும் சிடி ஸ்கேன் போன்ற சோதனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

அதிலும் சில நேரங்களில் திரும்ப எடுக்க வேண்டி வரும். உதாரணமாக ஒருவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இரத்தம் கட்டி (கபாலத்திற்கும் / மூளைக்குள்) அது செங்கல் பட்டில் எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனில் தெரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கு அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்ந்தால் அறுவை சிகிச்சை செய்யும் முன்னர் மறுமுறை சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டிவரும். அப்பொழுது தான் தலையில் உள்ள இரத்தக்கட்டு அப்படியே உள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்று தெரியும்

அதே போல் ஒருவர் 8 மணி நேரமாக வயிற்று வலியால் அவதிப்படுகிறார் என்றால் ஆறு மணிநேரம் முன் (வலி ஆரம்பித்து 2 மணி நேரம் கழித்து) எடுக்கப்பட்ட நுண்கதிர் படத்தில் ஒன்றும் இருக்காது. ஆனால் தற்பொழுது (வலி ஆரம்பித்து 8 மணிநேரம் கழித்து) எடுத்தால் மார்புவயிற்றிடைமென்றகடின் (டையாபிரம்) கீழ் காற்று இருக்கலாம்.

அப்படி என்றால் அவரது வயிற்று வலிக்கு காரணம் வயிற்றில் அல்லது குடலில் துளை விழுந்திருப்பது என்று தெளிவாகும்

அதே போல் உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் அது சிறுநீரகத்தில் இருக்கும். கல் சிறிது என்றால் அது மெதுவாக நகர்ந்து சிறுநீர்க் குழாய் (யுரிடர்), சிறுநீர்பை, சிறுநீர்க் குழாய் (யுரித்ரா) எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்

எனவே அறுவை சிகிச்சை செய்யும் முன் கல் எங்கு உள்ளதோ அங்கு தான் செய்ய வேண்டும். இன்று கல் சிறுநீர்ப்பையில் இருக்க இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த படத்தை வைத்து சிறுநீரகத்தை கீற சம்மதமா ???

இன்னமும் கூட புரியவில்லை என்றால் ஒன்னும் ஒரு உதாரணம்

அரசு மருத்துவமனையில் பிணியாளரிடம் பணம் வாங்குவது இல்லை. பின் ஏன் நெஞ்சு வலி யுடன் வருபவரை படுக்க வைத்து தொடர்ந்து ஈ.சி.ஜி எடுக்கப்படுகிறது. ஒரு முறை எடுத்த பின் அந்த உபகரணத்தை அனைத்து விடலாமா. அது ஏன் தொடர்ந்து ஓட வேண்டும்.

-oOo-

கேள்வி 2 : ட்ரிப்ஸ், ஸிரிந்ஜு, எழுதி கொடுப்பது ஏன்?

வயிற்றுப்போக்கு , மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு தேவைப்படுவதால். வேறு சிகிச்சை முறைகள் இருந்தால் கூறவும்

-oOo-

கேள்வி 3: மருத்துவருக்கு, மருத்துவர் கட்டணங்களில் வேறுபாடு உண்டு.

அதாவது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்றால் நேற்று படித்த வழக்கறிஞர் முதல் நளினி சிதம்பரம், விஜயன், கபில்சிபல், அருண் ஜெட்லி, ராம் ஜெத்மலானி எல்லாரும் வழக்கிற்கு ஒரே கட்டணம் தான் வாங்குகிறார்கள்

அதே போல் ஒரு கல்லூரியில் பி.டெக் படித்த அனைவரும் ஒரே அளவு ஊதியத்தில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்

அப்படியா

மருத்துவம் என்பது ஒரு தொழில் (புரொபச்சன்)

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கட்டணம் வாங்குவார்கள்

இதில் என்ன தவறு

வக்கீல்கள்
டியூசன் வாத்தியார்கள்
ஆர்க்கிடெக்டுகள்
எழுத்தாளர்கள்
ஜோதிடர்கள்

என்று எந்த துறையினரை எடுத்துக்கொண்டாலும் நபருக்கு நபர் கட்டணம் வேறு படுவது இயற்கையே

மேலும்

ஆனால் இளங்கலை படித்த மருத்துவரும், முதுகலை படித்த மருத்துவரும், சிறப்பு மருத்துவரும் ஒரே கட்டணம் தான் வாங்க வேண்டுமா

-oOo-

கேள்வி 4 : இப்படி கடைக்கு கடை நீங்கள் சொல்லும் பொருள்களின் விலையும் மாறுமோ????

1. சென்னை பொது மருத்துவமனையிலிருந்து டி.எம்.எஸ் நிறுத்ததிற்கு அரசு பேரூந்தில் கட்டணம் எவ்வளவ. எனக்கு தெரிந்து 3, 4, 4.5, 7 ரூபாய் (குளிர்சாதன பேரூந்தில் 18 ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று இருக்கிறதே எப்படி. நான் கடந்த ஒரு மாதமாக பேரூந்தில் தான் சென்று வருகிறேன். சரியான சில்லரை என்று நினைத்து தயாராக (போன முறை சீட்டு வாங்கிய காசை) எடுத்து வைத்து அச்டு வழிந்த அனுபவம் :) :) :)

2. 4 ஜி.பி (GB) பெண்டிரைவ் (தமிழ் சொல் உதவி தேவை) விலை (Transcend Jetflash V 30 என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்) சென்னை முழுவதும் ஒரே விலை தானா. (ரிச்சி தெருவில் 780, உயர்நீதிமன்றம் எதிரில் 1000)

3. ஏர்டெல், ஏர்செல், பி.எஸ்.என்.எல் எல்லாம் ஒரே கட்டணம் தானா (உங்களுக்கே தெரியும்)

4. சென்னையில் 2 இட்லி 1 வடை என்ன விலை !!!!! (உங்களுக்கே தெரியும்)

ஒரே விலை தானா

இப்படி இயல்பான ஒரு விஷயத்தை வைத்து குற்றம் சாட்டுவது ஏன் என்று தெரியவில்லை

-oOo-

கேள்வி 5 : அதாவது அவனை நிறுத்த சொல் நான் நிறுத்தரேன்.. என்று சொல்ல கூடா

”அதாவது அவனை நிறுத்த சொல் நான் நிறுத்தரேன்” என்று நான் சொல்லவில்லை. ஆனால் இயல்பாக அனைத்து துறைகளிலும் நடக்கும் ஒரு (சரியான) விஷயம் கூட மருத்துவத்துறையில் மட்டுமே நடப்பது போல் (அதுவும் மிகப்பெரிய குற்றம் போல்) நீங்கள் கூறுவது ஏன் என்று தெரியவில்லை

//But I am talking about doctor's those who are doing this kind of things purposefully to fill their purse //

அந்த சிகிச்சை தேவையில்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை

முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம்

12ஆவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பேட்டி பல நாளிதழ்களில் வெளிவந்துள்ளது

இது குறித்து கடந்த ஞாயிறு சில மருத்துவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்

அதில் சிலர் தற்பொழுது MCh இறுதி ஆண்டு (2008 ஆகஸ்ட்) தேர்வு எழுதுகிறார்கள். வேறு சிலர் இவ்வருடம் (2008 ஆகஸ்ட்) DM இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள். இனி தான் அவர்கள் தங்கள் தொழிலில் இறங்க வேண்டும்

சரி இதிலென்ன செய்தி என்கிறீர்களா.

அவர்கள் 1990 மற்றும் 1991ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் (எம்.பி.பி.எஸ் படிக்க) சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் பொழுது, இன்று (2008ஆம் வருடம்) முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள் !!!!

அதே போல் இன்று முதல் மதிப்பெண் எடுத்து “மருத்துவராவது என் லட்சியம்” என்று கூறும் மாணவன்/மாணவி தங்களின் படிப்பை முடித்து தனியாக தொழில் துவங்கும் பொழுது இவ்வருடம் பிறக்கும் குழந்தைகளில் சிலர் தினத்தந்தியிலோ, தினகரனிலோ “எங்கள் லட்சியம்...... “ என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.


2008 பிப்ரவரி – 12ஆம் வகுப்பு தேர்வு
2008 ஜூலை - மருத்துவக்கல்லுரியில் சேர்வது
2009 ஜூலை – முதல் வருட தேர்வு
2011 பிப்ரவரி – இரண்டாவது கட்ட தேர்வு
2013 பிப்ரவரி – மூன்றாவது கட்ட தேர்வு
2013 மார்ச் – உள்ளிருப்பு மருத்துவ பயிற்சி ஆரம்பம்
2014 மார்ச் – எம்.பி.பி.எஸ் படிப்பு முடிவு (தற்பொழுது எம்.பி.பி.எஸ் படிப்பின் கால அளவு 5 ½ வருடங்கள் அல்ல. முன்னர் அது 5 ½ வருடங்களாக இருந்தது. – 1997ல் இருந்தே ஆறு வருடம் ஆகி விட்டது. 2002 பிப்ரவரியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இப்பொழுதுதான் 2008 மார்ச்சில் தங்களின் படிப்பை முடித்து இருக்கிறார்கள்)

2014 அல்லது 2015 – தமிழக தேர்வாணையம்
2016 பிப்ரவரி அல்லது மார்ச் – ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமனம்
2016 முதல் 2019 வரை – மூன்று வருட கிராமப்புற சேவை
2019 ஜனவரி / பிப்ரவரி - பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வு
2019 முதல் 2022 வரை – பட்ட மேற்படிப்பு (எம்.டி அல்லது எம்.எஸ்)
2023 ஆகஸ்ட் – சிறப்பு படிப்பு நுழைவு தேர்வு
2023 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரை - சிறப்பு படிப்பு (டி.எம் அல்லது எம்.சி.எச்)

2026 மே மாதத்தில் (2008 / 2009ல் பிறந்தவர்கள் எழுதிய) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு !!!!

மேலே கூறியுள்ளது மத்திய தர குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்கும் ஒருவரின் கால விபரம். அரசு பணியில் சேராமல் மேற்படிப்பு உடன் படித்தால் இதில் 3 முதல் 4 வருடங்கள் வரை குறையலாம். அவ்வளவு தான்

மருத்துவப்படிப்பு மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டால் இவர்கள் படித்து முடிக்கும்முன்னே இவ்வருடம் பிறந்த குழந்தைகள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

--
அன்று நடந்த விவாதத்தில் பேசப்பட்ட சில கருத்துக்கள்
  • 1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார்
  • 1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எவ்வளவு ஊதியம் பெறுவார்???

இப்படியா மொழிபெயர்ப்பது . . . .

எனது கற்றது தமிழ் : 2: ஏப்ரல் 2008 இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டம்

சில நாட்களுக்கு முன் ,சென்னை அசோக் நகர் பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு ஒரு நூலக ஊர்தி நின்றுக்கொண்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தமிழ் வாசகம் என் கண்களை உறுத்தியது. "இயங்கும் நூலகம்" என்பதே அது. அப்படியென்றால் அந்த கட்டிடத்தில் இருக்கும் நூலகம் இயங்கா நூலகமா?


இது போல் பல நகைச்சுவைகள் மொழிபெயர்ப்பில் நடந்திருக்கின்றன

மாதிரிக்கு சில

ஆங்கிலம் - Department of Public Health and Preventive Medicine
அர்த்தம் - பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை அல்லது பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை
மொழிபெயர்க்கப்பட்டது - பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை (இது பரவாயில்லை)

ஆங்கிலம் - WHO Theme of 2005 - "Make every mother and child count"
அர்த்தம் - உலக சுகாதார நிறுவனத்தில் 2005 வருட வாசகம் - “ஒவ்வொரு தாயும் சேயும் நமக்கு முக்கியம்”
மொழிபெயர்க்கப்பட்டது - தாய் மற்றும் சேய்களை கணக்கெடுத்து அனுப்பவும்

ஆங்கிலம் - All health and non-health workers .........
அர்த்தம் - சுகாதார துறை மற்றும் சுகாதார துறையல்லாத பணியாளர்கள்
மொழிபெயர்க்கப்பட்டது - சுகாதாரம் மற்றும் சுகாதாரமற்ற பணியாளர்கள்

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிப்பு

கடந்த சில பதிவுகளாக தமிழக அரசின் மருத்துவத்துறையின் செயல்பாடுகளை பார்த்துவந்தோம்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று நான் கூறியிருந்தேன். மேலும் சில தகவல்கள்


ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் 2007 முதல் டிசம்பர் 2007 வரை பிரசவங்கள் 77.2 சதவிதம் அதிகரித்து உள்ளன.

டிசம்பர் 2006 - 7858 பிரசவங்கள்
டிசம்பர் 2007 - 17266 பிரசவங்கள்

இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன வென்றால்
கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களின் 40 சதவிதம் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்றது
தற்பொழுது அது 34.64 விழுக்காடாகியுள்ளது


இதற்கான காரணங்கள்

1. 1000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன

2. கர்ப்பிணிகளுக்கு 6000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது

3. கடந்த இரு வருடங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 3967 மருத்துவர் மற்றும் 12087 மருத்துவம்சார்ந்த பணியாளர்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 668 மருத்துவர் மற்றும் 1160 செவிலியர் பணியிடங்கள்.

4. இந்தியாவிலேயே முதன்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு,லாலாப்பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 410 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கற்றது தமிழ் : 2: ஏப்ரல் 2008

சென்ற மாதம் நான் தமிழில் புதிதாத கற்ற / உபயோகித்த சொற்களை வரிசைபடுத்த இந்த பதிவு. நான் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் பெரும்பாலும் tamilvu.org தளத்தில் உள்ளவையே. அப்படி இல்லாமல் நானாக புதிதாக உருவாக்கிய பதங்கள் நீல நிறத்தில் உள்ளன. சில சொற்கள் உபயம் இராம.கி ஐயா (http://valavu.blogspot.com/2008/04/tyre-brake-and-acceleration.html)

சொற்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதை விட சிறந்த தமிழ் சொல் வழக்கத்தில் / புழக்கத்தில் / நிகண்டில் இருந்தால் கூறவும்

உண்மையான வாங்கு திறன் Real purchasing power
வாங்கும் திறன் சமநிலை Purchasing power parity
பணத்தின் வாங்கும் திறன் Purchasing power of money

மென் திறன் Soft Skill

துணி துவைக்கும் பொறி Washing Machine
உத்தரவாதகாலம் Warranty Period
பழுது நீக்கும் பொறியாளர் Service Engineer
வடிகட்டி Filter
விசைப்பொறி Motor
சுருள் Coil

நிறுத்துக் கருவியை Brake
புரிகை Brake
வேகம் அதிகரிக்கும் சாதனம் Accelerator
முடுக்கி Accelerator
கதி Velocity
விரைவு, வேகம் Speed
திருக்கம் Torque
திசை மாற்றி Steering
சுக்கான் Steering
சக்கரப் பட்டை இழுவை உருளி Tyre
உள்ளே இழுவைத் தூம்பு Tube
ஆரங்கள் Spokes

சாளரங்கள் Wndows
காலதர், காற்றுவாரி சன்னல், காற்றோட்டி, காற்றோட்டம்வழங்கி, Ventilator
தூம்பு விளக்கு Tube light
குழல் விளக்கு Tube light

தேர்வுசீட்டு (தேர்வு நுழைவுச்சீட்டு, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு; தேர்வுக்கூட நுழை ஒப்புதல் சீட்டு) Hall Ticket

உடலியக்க மருத்துவர் Physiotherapist
பேச்சு பிறழ்வு சிகிச்சை நிபுனர் Speech Therapist

மின்னாக்கி Generator
மின் தூக்கி Lift

தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்

அவசர பிணியாளர் ஊர்தி சேவை - சில கருத்துக்கள் மற்றும் விபரங்கள்






இந்த படங்களில் உள்ளவர்களை நீங்கள் அறிந்திருக்கலாம்.

முதலில் ஒரு அரசியல்வாதி, அடுத்து ஒரு பாடகர், அடுத்து ஒரு எழுத்தாளர், கடைசியாக ஒரு தொழிலதிபர்......

ஏன் சம்பந்தம் இல்லாமல் நான்கு படங்கள் ??
என்ன தொடர்பு என்கிறீர்களா ???

-oOo-

இதில் முதல் மூன்று நபர்களுடன் எனக்கு பழக்கம் கிடையாது. ஆனால் (ஆரெம்கேவி) திரு விஸ்வநாதனுடன் பழக்கம் உண்டு . ரொட்டரி குழுமம் நடத்தும் வினாடி வினா போட்டிகளுக்கு அவர் தவறாமல் வருவார். பல போட்டிகளை அவர் நடத்தியுள்ளார். (அவர் ஐ.ஐ.டியில் பயின்றவர்.) பள்ளி பருவத்திலும் பின்னர் கல்லூரியில் படிக்கும் பொழுதும் அதில் கலந்து கொண்டு நான் பரிசு வாங்கியுள்ளேன். பின் கல்லூரிகளுக்கு இடையிலான க்லைநிகழ்ச்சிகளில் நானும் வினாடி வினா நடத்த ஆரம்பித்த பொழுது பழக்கம் அதிகரித்தது

2000 ஆம் ஆண்டு நெல்லை சாரா டக்கர் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்பொழுது ஆரெம்கேவி என்ற எழுத்துகளில் ஆர் என்ற எழுததுக்கு சரியான விளக்கம் அளித்தால் ஒரு பட்டு புடவை என்று அறிவித்தார்.

பலரும் ராமனிலிருந்து ரகீம் முதல் ராபர்ட் வரை அனைத்து பெயர்களையும் கூறினார்கள்.

எதுவுமே சரியில்லை என்று கூறியபின் அந்த எழுத்து எப்படி வந்தது என்று குறிப்பிட்ட காரணம் கிடையாது என்றும் அவர் கேட்டது ”ஒரு விடையில்லா கேள்வி” என்றும் வினாடி வினாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை உண்டு, கல்லூரி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விடை உண்டு, ஆனால் வாழ்க்கையில் எழும் இது போல் பல கேள்விகளுக்கு விடை கிடையாது என்றும், எனவே மாணவர் பருவம் முடிந்து கல்லூரியை விட்டு வெளியேரியபின் விடையில்லா கேள்விகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியது மறக்க முடியாதது

பல வருடங்கள் கழித்து 2005 கடைசியில் (அல்லது 2006 ஆரம்ப மாதங்களில் - சரியாக ஞாபகம் இல்லை) அவர் நெல்லை அருகில் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டவுடன் எனக்கு தோன்றிய கேள்வி “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் நாம் இது போல் சாலை விபத்தில் நண்பர்களை, உறவினர்களை பலி கொடுக்க போகிறோம்”.......

அன்று அது ஒரு விடை யில்லா கேள்வியாகத்தான் இருந்தது.... ஆனால் இன்று விடை கிடைத்துள்ளது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முன்னிலையில் இன்று (6.5.2008) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாடிநவுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர், திரு. பி.டபிள்யூ.சி. டேவிதார், இ.ஆ.ப., மற்றும் எம்ரி சார்பாக திரு. வெங்கட், முதன்மை நிர்வாக அலுவலர் எம்ரி ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இதற்காக, பிணியாளர் ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதில் நிறைந்த அனுபவம் பெற்றுள்ள எம்ரி (EMRI) நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்திடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எம்ரி நிறுவனம் சென்னையில் ஒரு மத்திய அவசர கால செயல்பாட்டு நிலையம் (Emergency Response Center) ஒன்றை அமைத்து அதன் வாயிலாக இந்த அவசரகால சேவையில் ஈடுபடும். மருத்துவம், தீ விபத்து மற்றும் காவல்துறை சம்பந்தமான அனைத்து அவசர தேவைகளுக்கும் கட்டணம் இல்லா தொலைபேசி தொடர்பு எண் 108 மூலம் இந்த மையத்தை மக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும். எம்ரி (EMRI) நிறுவனம் எந்தவிதமான லாபமும் இல்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும். சேவை மனப்பான்மையுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதுடன், தொடரும் செலவினத்தில் ஐந்து சதவிகிதத்தை தங்களுடைய பங்களிப்பாகவும் ஏற்றுக்கொண்டு எம்ரி (EMRI) நிறுவனம் அவசரகால ஊர்தி சேவையைச் செயல்படுத்தும்.

இத் திட்டத்தில் மத்திய அவசரகால செயல்பாட்டு நிலையத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றும் மருத்துவர், காவல்துறை அலுவலர், தீ அணைப்பு அலுவலர் ஆகியோர் தங்கள் துறை சார்ந்த அவசரகால அழைப்புகள் வருகின்றபொழுது, அவற்றின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு உதவிகள் உடனுக்குடன் சென்றடைய ஆவன செய்வர். இந்த நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் (எம்ரி) "இ.எம்.ஆர்.ஐ." (EMRI) நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் முதலியோரைத் தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, பணியமர்த்தும் பொறுப்பு எம்ரி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் வாயிலாக 198 அவசரகால ஊர்திகளை வாங்கி, குளிர்சாதன வசதியுடன் அவசரகாலப் பராமரிப்பிற்குத் தேவையான உபகரணங்களை பொருத்தி "இ.எம்.ஆர்.ஐ." (EMRI) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனம் அவசரகால ஊர்திகளை முதல் கட்டத்தில் 14 மாவட்டங்களில் தொடங்கி, பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும். ஒவ்வொரு ஊர்தியிலும் அவசரகாலத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பணியாளரும், ஒரு ஓட்டுநரும் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அவசரகாலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்கின்ற நேரத்தில் தேவையான அறிவுரைகளை மத்திய செயல்பாட்டு நிலையத்திலுள்ள (Emergency Response Center) அவசரகாலச்சிறப்பு மருத்துவரின் அறிவுரையைப் பெறுவர். இந்த ஊர்தியை எந்த ஒரு மருத்துவம் சார்ந்த அவசரகாலத் தேவைக்கும் மக்கள் பயன்படுத்துவதற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

இந்த அவசரகால ஊர்தியில், அந்த வண்டியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களுடன் "புவிநிலை கண்டறியும் கருவி" (GPS) யும் பொருத்தப்படும். மாவட்ட அளவில் இயங்கும் அவசர கால ஊர்திகளைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார். அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களும் மாநில அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளரால் கண்காணிக்கப்படுவார்கள். மேலும் இவர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள மருத்துவமனைகளைப் பார்வையிட்டு அந்த மருத்துவமனைகளை இத்திட்டத்தில் இணைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வார்கள்.

இத்திட்டத்திற்காக ஆலோசனை வழங்க, மாநில அளவில் தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மாவட்ட அளவில் இத்திட்டத்தின் நடைமுறையை நிர்வகிக்கத்தேவையான ஆலோசனைகளை வழங்கும்.

இத்திட்டத்திற்காகத் தேவைப்படும் கட்டடம், தொழில்நுட்பக் கருவிகள், தளவாடச் சாமன்கள் முதலியவற்றிற்காக முதல் ஆண்டில் 22 கோடியே 89 இலட்ச ரூபாயையும், நிர்வாகச் செலவினம், ஊதியம், எரிபொருள் செலவு, மருத்துவச்செலவு, பராமரிப்புச் செலவு, காப்பீட்டு செலவு, பயிற்சி, விளம்பரம் முதலிய செலவினங்களுக்காக 13 கோடியே 13 இலட்சம் ரூபாயையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

-oOo-

மருத்துவத்துறையில் நாம் வெகுவாக முன்னேறியுள்ளோம்

அமெரிக்க அதிபருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை சென்னையில் (காசு கொடுத்தால்) கிடைக்கிறது !!

காத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காத பொது சுகாதார மேலாண்மை கூட நாகை மக்களுக்கு சுனாமிக்கு பின் (காசு கொடுக்காமலே) கிடைத்தது.

ஆனால்

அமெரிக்காவில் ஒரு சாதாரண மரம் வெட்டும் தொழிலாளி மரம் வெட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது மரம் விழுந்து விட்டது என்றால் அவருக்கு கிடைக்கும் அவசர சிகிச்சை - உடனடியாக ஒரு பிணியாளர் ஊர்தி (சீருந்து அல்லது உலங்கு வானூர்தி - ஹெலிகாப்டர்), பிணியாளர் ஊர்தியிலேயே சுவாச சிகிச்சை, இரத்தம் அல்லது பிற திரவங்கள் ஏற்றுதல் போன்றவை இங்கு (பாரதத்தில்) ஒரு சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால் அம்பானிக்கு கூட கிடைத்ததில்லை :( :( :(

முதல்வரோ, பிரதமரோ வந்தால் அங்கு பிணியாளர் ஊர்தி (என்ற பெயருடன் வாகனம்) ஒன்று இருக்கும். ஆனால் அந்த வாகனத்திற்கும் பிற வாகனகங்ளுக்கும் வெளியில் எழுதியிருக்கும் பெயரை தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

இது நாள் வரை நாம் பிணியாளர் ஊர்திகளை ஒரு “வாகனமாகத்தான்” (நோயாளியை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற) பயன்படுத்தினோமே தவிர பிணியாளர் ஊர்தியில் சிகிச்சை என்பது கிடையாது

மிக சமீபகாலங்களில் தான் சில தனியார் மருத்துவமனைகளில் முழு வசதிகளுடன் பிணியாளர் ஊர்திகள் வாங்கப்பட்டன.

-oOo-

பிணியாளர் ஊர்தியில் அவசர சிகிச்சைக்கு தேவை யான கருவிகள் இருந்தால் போதுமா, அதை யார் உபயோகிப்பார் ? ஓட்டுனரா....

துரதிருஷ்டவசமாக இது நாள் வரை பிணியாளர் ஊர்தியில் பயிற்சி பெற்றவர் கிடையாது.

மேலே நாடுகளில் ஈ.எம்.டி - எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னிசியன் - அவசர கால மருத்துவ நுட்பனர் என்று தனியாக நபர்கள் உண்டு,.

அவர்கள் முதலுதவியில் மட்டுமே பயிற்சி பெற்றிருப்பார்கள். நமது நாட்டில் இது நாள் வரை அப்படி கிடையாது.

ஒன்று ஒட்டுனர் மட்டுமே இருப்பார். அல்லது அவசர சிகிச்சை அளிக்க போதிய பயிற்சி இல்லாத எப்.என்.ஏ அல்லது எம்.என்.ஏ போன்றவர்கள் இருப்பார்கள். சில இடங்களில் செவிலியர் இருப்பார்கள் (செவிலியரின் பணி மருத்துவமனையிலும் தேவைப்பட்டால் அன்று அவரி பிணியாளர் ஊர்தியில் இருக்க மாட்டார்). அன்று விபத்தில் சிக்குபவர் பாடு திண்டாட்டம் தான்.

-oOo-

தமிழகத்தில் எம்ரி நிறுவனத்தால் நடத்தப்பட இருக்கும் அவசர கால பிணியாளர் ஊர்தி திட்டத்தின் சிறப்புகள்

1. முற்றிலும் இலவசம்
2. ஒரே எண் 108 - எந்த தொலைபேசியிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம் (நடைமுறைபடுத்தப்பட்ட பின்)
3. பிணியாளர் ஊர்தியிலேயே வைத்தியம் ஆரம்பம்
4. கட்டுப்பாட்டு அறையில் உள்ள மருத்துவரிடம் (ஊர்தி பணியாளர்) சந்தேகம் கேட்கலாம்.
5. தமிழகம் முழுவதும் ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்
6. ஒட்டுனர் மற்றும் மருத்துவ நுட்பனருக்கு பணியில் சேரும் பொழுது பயிற்சி மட்டும் அதன் பின்னும் தொடர்ந்து பயிற்சி (6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை)
7. ஒரு ஓட்டுனரோ அல்லது மருத்துவ நுட்பனரோ விடுப்பு அல்லது வார ஓய்வு அல்லது பயிற்சியில் இருந்தாலும் ஊர்தி சேவை பிற பணியாளர்களை வைத்து தொடர்ந்து நடக்கும்

பிற தகவல்களை பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.

சந்தேகங்களை கேட்கலாம் :) :) :)

அவசர உதவிக்கு 108 !!!


விபத்து, மற்றும் பிற மருத்துவ அவசரங்களுக்கு 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டிற்கு அல்லது விபத்து இடங்களுக்கோ ஒரு பிணியாளர் ஊர்தி (அம்புலன்ஸ்) வரும்.

மேலும் காவல்துறை (போலீஸ்), மற்றும் தீயனைப்பு துறையினரையும் (பயர் சர்வீஸ்) இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த சேவை முற்றிலும் இலவசம்

மேலும் விபரங்களுக்கு http://www.hindu.com/2008/05/07/stories/2008050760361200.htm

With the help of 198 ambulances, operations to commence by July-end
— Photo: S.R. Raghunathan

hi-tech: Venkat Changavalli, CEO, EMRI (right), explains the salient features of the ambulance to P.W.C. Davidar, Special Secretary, Health and Family Welfare, in Chennai on Tuesday.


இது குறித்த மேலதிக விபரங்களையும், ஏன் நேற்று கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மைல் கல் என்பதையும் வரும் நாட்களில் விரிவாக எழுதுகிறேன்.

தமிழக மருத்துவத்துறை - சில அதிகார பூர்வ தகவல்கள்

சில வாரங்களுக்கு முன் நான் கட்டாய கிராமப்புற சேவை குறித்து சில தொடர் இடுகைகள் எழுதிய போது பல புள்ளி விபரங்களை தந்திருந்தேன்.

அதில் நான் கூறிய விபரங்கள் குறித்த அதிகார பூர்வ தகவல்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மானியக்கோரிக்கை (எண்.19) சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது
செய்யப்பட்ட அறிவிப்புகளில் உள்ளது.(http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_FW_t.pdf)

இதோ சில புள்ளி விபரங்கள் மற்றும் சுகாதாரதுறையின் அடுத்த திட்டங்கள்

  • கடந்த 2 ஆண்டுகளில் 3967 மருத்துவர் மற்றும் 12087 மருத்துவம்சார்ந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 668 மருத்துவர் மற்றும் 1160 செவிலியர் பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. (இந்த கூடுதல்க 668 பணியிடங்கள் தான் 2 வருட கட்டாய கிராமப்புற திட்டத்தில் நிரப்பப்படுவது.)
  • 2006-2007 ஆம் ஆண்டில் 82,532 பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் நடைபெற்றன. ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ சேவை வசதிகளை மேம்படுத்தியதன் விளைவாக 2007-08 ஆம் ஆண்டில் 1,53,922 பிரசவங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டை விட 71,390 பிரசவங்கள் கூடுதலாக நடைபெற்றுள்ளன. மத்திய சுகாதாரத்துறையே பாராட்டும் அளவிற்கு 86.5 விழுக்காடு பிரசவங்கள் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு,லாலாப்பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 410 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்த சேமிப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு, இதுவரை124 கர்ப்பிணிப்பெண்களுக்கு இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரசவகாலங்களில் இரத்தப்போக்கினால் தாய் இறப்பது தடுக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில் மருத்துவமனை குறை தீர்க்கும் அமைப்பு ஒன்று அனைத்து மருத்துவமனைகளிலும்
    ஏற்படுத்தப்படும். பொது மக்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்.1056 க்கு தொடர்பு கொண்டு தங்கள் குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். (வருங்கால திட்டம்)
  • மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள அதி நவீன 64 கூறுகள் சி.டி.ஸ்கேன், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.5.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 1500 முதல் 2000 வரையிலான நோயாளிகள் பயன் பெற முடியும். இந்த கருவி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையிலும் விரைவில் நிறுவப்பட உள்ளது.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை நீக்கும் லித்தோடிரிப்சி என்ற நவீன கருவி ரூ.3 கோடி செலவில் சென்னை மற்றும் மதுரையில் நிறுவ அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இக்கருவி நிறுவப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1200 நோயாளிகள் பயனடைவார்கள் , மதுரை இராஜாஜி மருத்துவமனையிலும் இக்கருவி விரைவில் செயல்பட உள்ளது.
  • ரூ.8 கோடி செலவில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மண்டல புற்று நோய் மையமாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் இம்மையம் புற்று நோய்களுக்கான நவீன சிகிச்சை வசதிகளை ஏழை எளியோருக்கு வழங்கும்.
  • சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுhரியில் உள்ள கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் மேன்மைமிகு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழகம் நோய்த்தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க விருதுநகர், விழுப்புரம், கடலுhர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் செவ்வனே நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • யானைக்கால் நோய் பரவாமல் தடுத்திட 13 மாவட்டங்களில் டி.இ.சி மற்றும் அல்பன்டோசோல் மாத்திரைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • 98 அரசு மருத்துவமனைகள் 24 மணிநேர ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் சிசுகவனிப்பு அவசர சிகிச்சை மருத்துவமனைகளாக இதுவரை தரம் உயர்த்தப்பட்டு குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நவீன கருவிகள் மற்றும் தளவாடங்கள் ரூ.17.5 கோடி செலவில் இந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் இருப்பிடத்திலேயே
    தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 146 நடமாடும் மருத்துவக்குழு ஆரம்பித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் 239 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மற்றும் ஓட்டுநருடன் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு சீரிய முறையில் தாய்சேய் நலப்பணிகளைசெவ்வனே செய்து வருகின்றனர். (இது குறித்து நான் ஏற்கனவே கூறியிருந்தேன்)
  • 2001 ஆம் ஆண்டில் தமிழகம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலமாக வகைப்படுத்தப்பட்டிருந்தது . கருவுற்ற தாய்மார்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் தாக்கம் 1.13 சதவீதமாக காணப்பட்டது. தற்போது அரசு எடுத்த விழிப்புணர்வு மற்றும் தடுப்புப்பணிகளால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தாக்கம் 0.38 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டிலேயே எச்ஐவி பாதித்தோரின் எண்ணிக்கை ஒரே சீராக வீழ்ச்சி அடைந்திருப்பதுடன், நிலைநிறுத்தப் பட்டிருப்பதும் தமிழ்நாட்டில் மட்டும்தான்.
  • தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் 116 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 42 கோடியே 59 இலட்சம் செலவில் நடப்பாண்டிலேயே தொடங்கப்படும்.
  • அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தருணங்களில், பொது மக்கள் உடனடியாக செல்லும் வகையில் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ளோரும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ ஊர்தி சேவையை இலவசமாக பெறுவதற்கு ஒரு புதிய திட்டம் நடப்பாண்டில் தொடங்கப்படும். கணிணி மயமாக்கப்பட்ட மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் இடம் அறியும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட மருத்துவ ஊர்திகளோடு அவசர கால முதலுதவி பயிற்சி பெற்ற தொழில்நுட்புனர்களுடன் இச்சேவை முதற்கட்டமாக தொடங்கப்படும். இதனோடு காவல் துறை மற்றும்
    தீயணைப்புத்துறைச் சேவையும் ஒருங்கிணைக்கப்படும்.
  • தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம்மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படும். துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்லது அவர்களது வீடு தேடிச் சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் பிறப்பு சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

பி.கு :
  1. முழு தகவலும் http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_FW_t.pdf என்ற கோப்பில் உள்ளது.
  2. நீங்கள் (5 வருடங்களுக்கு முன்னர்) பார்த்திருந்த அரசு மருத்துவமனைகளுக்கும் தற்பொழுதுள்ள மருத்துவமனைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது
  3. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரியும் :) :) :)

தடுப்பூசி தகவல்கள் : மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!

மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!

அப்படி யென்றால் அந்த ஊசி பலன் இல்லாததா
--
முதலில் மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்வோம்

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்.

அதாவது உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)
இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.
1. திரையில் தவறு
2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு
3. கணினியில் தவறு.

இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.

-oOo-
இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்

அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.

இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells - RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.
சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை அன்கான்ஜுகேடட் பிலிரூபின் (Unconjugated Bilirubin) (எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின்) என்று அழைக்கிறார்கள்

இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (வாட்டர் இன்சால்யுபிள்) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. (கொஞ்சம் வெளியேரும்) இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது (கான்ஜுகேடட் பிலிரூபின்) (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.

ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.

இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்

-oOo-
இப்பொழுது ஒரு அச்சு அலுவலகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் ஒரு பிரிவில் சில தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள்

ஒரு தொழிலாளிக்கு (தொழிலாளி ம என்று வைத்துக்கொள்வோம்) என்ன வேலையென்றால் வெளியிலிருந்து வரும் A2 அளவு காகிதத்தை A3 அளவிற்கு வெட்ட வேண்டும். அதை அறை 1ல் போட வேண்டும்

அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி ஈ என்று வைத்துக்கொள்வோம்) அறை 1ல் உள்ள A3 அளவிற்கு வெட்டப்பட்ட காகிதத்தை A4 அளவிற்கு வெட்ட வேண்டும். அதை அறை 2ல் போட வேண்டும்

அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி பி என்று வைத்துக்கொள்வோம்) இந்த A4 காகிதத்தை அறை 2லிருந்து எடுத்து ஒரு பகுதியை அறை 3லிளும் ஒரு பகுதியை அறை 1றிலும் போட வேண்டும்

அடுத்த தொழிலாளிக்கு (தொழிலாளி சி என்று வைத்துக்கொள்வோம்) இந்த A4 காகிதத்தை அறை 1றிலிருந்து எடுத்து முழுவதும் அறை 4கிளும் அதை போல் A3 காகிதத்தை அறை 1றிலிருந்து எடுத்து சிறு பகுதியை அறை 4கிளும் போட வேண்டும்
-oOo-
இப்பொழுது தொழிலாளி ம அதிகம் வேலை பார்க்கிறார் என்றால் என்ன நடக்கும்
1. அறை 1ல் A3 காகிதம் அதிகமாகும்
2. இதில் ஒரு பகுதியை தொழிலாளி ஈ A4 ஆக வெட்டி விடுவார்.
3. ஒரு பகுதி A3 காகிதத்தை சி அறை 4கிற்கு அனுப்பி விடுவார்.
4. மீதி A3 காகிதங்கள் அறை 1ல் இருக்கும்
5. அறை 2ல் உள்ள A4 காகிதங்கள் ஒரு பகுதி அறை 1க்கும் ஒரு பகுதி அறை 3க்கும் செல்லும்

மொத்தமாக அறை 1ல் அதிக அளவு A3 காகிதம் இருக்கும்
-oOo-
தொழிலாளி ஈ வேலை செய்யாவிட்டாலோ, அல்லது வழக்கமாக செய்யும் வேலையை விட குறைவாக செய்தாலோ என்ன நடக்கும்

1. அறை எண் 1ல் அதிக அளவு A3 காகிதம் இருக்கும்
2. அறை 2லிலும் அறை 3லிலும், அறை 4லிலும் கம்மியான அளவு A4 காகிதம் இருக்கும்
-oOo-
தொழிலாளி பி வேலை செய்யாவிட்டாலோ, அல்லது வழக்கமாக செய்யும் வேலையை விட குறைவாக செய்தாலோ என்ன நடக்கும்

1. அறை எண் 2லில் அதிக அளவு A4 காகிதம் தேங்கிவிடும்
2. அறை எண் 3லில் A4 காகிதமே இருக்காது.
3. அவ்வாறு தேங்கும் A4 காகிதங்கள் அறை எண் 1க்கு மீண்டும் தொழிலாளி ஈ மூலமாகவே வரும்.
4. அறை 1ல் அளவிற்கு அதிகமாக A4 காகிதங்கள் இருக்கும்
5. அதில் ஒரு பகுதி தொழிலாளி சி மூலமாக அறை 4 செல்லும்
-oOo-
இப்பொழுது நமது உடலிற்கு வருவோம்

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்
1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.
2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது
3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.
4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)

இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் - hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது .
-oOo-
ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழகத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ
1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது
2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.

இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.

ஈரலில் என்ன பிரச்சனை என்றால்

1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.
2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது (இது குறித்து விளக்கமாக வேறு இடுகையில் பின்னர் பார்க்கலாம்)
3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம். 23-04-2008 அன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 10,000 குழந்தைகளில் சுமார் 10 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு அதில் 4 குழந்தைகள் மரணமடைய காரணமும் அந்த 4 குழந்தைகளின் உடலில் இருந்த அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்திதான். இது குறித்து வேறு இடுகையில் தனியாக பார்ப்போம். ஒவ்வொரு புதன் கிழமையும் தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் 10000 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுகிறார்கள். மொத்தமாக ஒரு வருடம் தமிழகத்தில் சுமார் 50,00,000 (50 லட்சம்) தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் 50,00,000 மருந்துகள் வாய் வழியாக தரப்படுகிறது.
4. கிருமிகளினால் இருக்கலாம்

கிருமிகள் என்றால்
1. பேக்டிரியா
2. வைரஸ்
3. பங்கஸ்
4. பூச்சிகள், புழுக்கள்

இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்
1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்
2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்

இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன
1. ஹெபடைட்டிஸ் A
2. ஹெபடைட்டிஸ் B
3. ஹெபடைட்டிஸ் C
4. ஹெபடைட்டிஸ் D
5. ஹெபடைட்டிஸ் E
6. ஹெபடைட்டிஸ் F
7. ஹெபடைட்டிஸ் G
இது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.

அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை

கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரல் விரைவில் குணமடைய வைப்பதாக நம்பம்படுகிறது

கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)

-oOo-
ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்

1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது
2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது
3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது
4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.
6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது
7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.

இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.
இந்த அடைப்பு
ஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepatic
ஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepatic
அதே போல் இது (இந்த அடைப்பு )
பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenital
பிறகு வந்திருக்கலாம் - அக்கொயர்ட் Acquired

இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.

அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்
அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்

முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்

அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.
-oOo-
சரி இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டிய விஷயம்
1. மஞ்சள் காமாலை பல காரணங்களினால் வரும்
2. இந்த காரணங்கள் குறித்து (ஹீமோலைடிக் டிஸாடர், டுபின் ஜான்ஸன் சிண்ட்ர்ரோம், பித்த நீர் பாதை அடைப்பு) அறியாத (அதாவது படிக்காத) ஒருவரிடம் சென்று மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிடுவது என்பது எமனுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைப்பது போலாகும்
3. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் / நண்பர்கள் யாருக்காவது மஞ்சள் காமாலை என்றால் முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, இரத்த பரிசோதனை செய்து அது ஹெபாடிக் ஜாண்டிஸ் தான் என்று உறுதி படுத்தி கொள்ள வேண்டும். வெறும் கீழா நெல்லி மற்றும் பத்தியம் இருந்தால் உயிருக்கு ஆபத்து
-oOo-
சரி இப்பொழுது முதலில் நாம் பார்த்த கேள்விக்கு வருவோம்.

மஞ்சள் காமாலை தடுப்பூசி என்று அனைவரும் போடுகிறார்களே. அது என்ன

இங்கு (முக்கியமாக முகாம் அமைத்து தனியாரால்) போடப்படும் மஞ்சள் காமாலை தடுப்பூசி என்பது ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமிக்கு மட்டும் எதிரானது தான்

இந்த தடுப்பூசி போட்டால் மஞ்சள் காமாலை வராதா
இந்த தடுப்பூசி போட்டால் ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி மற்றும் ஹெபடைடிஸ் D வைரஸ் கிருமியினால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்கள் மட்டுமே வராது.

பிற வைரஸ் கிருமிகள்
அனைத்து பேக்டிரியா கிருமிகள்
அனைத்து பங்கஸ் கிருமிகள்
அனைத்து பூச்சிவகைகள்
அனைத்து புழுக்கள்
அனைத்து ப்ரீ ஹெபாடிக் வகைகள்
அனைத்து போஸ்ட் ஹெபாடிக் வகைகள்

மூலம் வரும் அனைத்து மஞ்சள் காமாலைகளும் வரும்

பொதுவாக வரும் மஞ்சள் காமாலை என்ன வகை
ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வருவது. நீங்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் இந்த வகை மஞ்சள் காமாலை தொடர்ந்து வரும்

அப்படி யென்றால் இந்த தடுப்பூசியினால் என்ன பலன்
ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகிவிடும். இதனால் உயிருக்கு ஆபத்து கிடையாது. வைத்தியம் தேவையில்லை

ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகாது. இதனால் உயிருக்கு ஆபத்து உண்டு. கண்டிப்பாக வைத்தியம் தேவை

வேறு ஏதாவது வித்தியாசம் உள்ளதா
ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமி நீர் மூலம் பரவும் (அதாவது குடிநீர் மூலம்). சுருங்கச்சொன்னால் காலரா எப்படியெல்லாம் பரவுமோ, அப்படியெல்லாம்
ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி இரத்தம் மூலம் பரவும் (அதாவது இரத்தம் ஏற்றுவது, ஒருவருக்கு போட்ட ஊசியை அடுத்தவருக்கு போடுவது, ஒருவரின் இரத்தம் நமது உடலில் படுவது, பாதுகாப்பற்ற உடலுறவு மூலம்) – சுருங்கச் சொன்னால் எய்ட்ஸ் எப்படி யெல்லாம் பரவுமோ அப்படியெல்லாம்

ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பாதிப்பு உண்டா

மிகவும் குறைவு. அனைத்து தடுப்பூசிகளிலும் இது பாதுகாப்பானது என்று கூறலாம். இந்த மருந்து பெரும்பாண்மையான தடுப்பூசிகளை போல் கிருமிகளிலிருந்து செய்யப்படுவது அல்ல. அதற்கு பதில் நவீன முறைகளினால் வேதியல் பொருட்களிலிருந்து செய்யப்படுவது.

ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பலன் உண்டா

   

நீங்கள் இரத்தம் தொடர்பான தொழில் செய்பவராக இருந்தால் (உதாரணம் மருத்துவத்துறை, ஆய்வக உதவியாளர் போன்ற பணிகள்) இதனால் உங்களுக்கு பலன் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு உயிர் கொல்லி நோய் வராது.

மற்றவர்களுக்கு (பொது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு) பலன் குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஆனால் இதில் மிக மிக குறைவான பக்க விளைவுகளே உள்ளது. சத்து ஊசி (பி காம்ளஸ்) ஊசி போடுவதில் உள்ள பக்க விளைவுகள் தவிர வேறு எதுவும் கிடையாது

மற்றப்டி ஊசி போடுபவர்களுக்கு நிறைய பலன் உண்டு   
-oOo-
நானும் என் மனைவியும் (மருத்துவர்கள்) இந்த தடுப்பூசி போட்டுள்ளோம். (இந்த ஊசி போட்டால் தான் மருத்துவக்கல்லூரியில் மாணவராக சேர அனுமதிப்பார்கள்.) எங்கள் குடும்பத்தில் வேறு யாரும் (பிற தடுப்பூசி போட்டிருப்பவர்கள்) மஞ்சள் காமாலை தடுப்பூசி போடவில்லை    
-oOo-
இந்த தகவல்களை தெரிந்து கொண்டு ஊசி போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...