நேற்று இரவு ஒரு திரையரங்கில் தசாவதாரம் பார்க்கலாம் என்று தானியங்கி மூவுருளியில் கிளம்பி திரையரங்கின் பெயரை கூறியதிலிருந்து நான் இறங்கும் வரை மூவுருளி ஓட்டுனர் படத்தை சிலாகித்துக்கொண்டே வந்தார். தான் கமல் ரசிகன் அல்ல என்று வேறு கூறினார். அவர் மூவுருளியில் ஒட்டியிருந்தது வேறு ஒரு நடிகரின் படம். (ஏற்கனவே குறுஞ்செய்திகளில் துவைக்கப்படும் அவர் பெயர் வேண்டாமே)
அதே போல் படம் முடிந்து பகிர்வு மூவுருளியில் திரும்பும் பொழுது உடன் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து படம் பார்த்து அவர்கள் மிரண்டு போயிருந்தது தெரிந்தது. அந்த அளவு பொதுமக்களிடம் படம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது குறித்து இறுதியில் விளக்கியிருக்கிறேன்
படத்தின் கதை மற்றும் பிற விஷயங்கள் பற்றி ஏற்கனவே பலரும் எழுதிவிட்டதால் நான் மறுபடியும் எழுத விரும்பவில்லை.
தசாவதாரம் படத்தில் வரும்
பத்து கதாபாத்திரங்களுக்கும் மகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று சிந்தித்தால் தொடர்பு இருப்பது போல் தான் தெரிகிறது
| மச்ச அவதாரம் | ? புஷ் | ??? |
| கூர்ம அவதாரம் | ? நம்பி | பட்டாம்பூச்சியின் விளைவுபடி கடலை கடைந்து சிலையுடன் வெளியே வருவதால் |
| வராக அவதாரம் | பூவராகன் | பெயரிலேயே வராகம் இருக்கிறது. மேலும் இவர் பூமி பற்றித்தால் அதிகம் பேசுகிறார் |
| வாமன அவதாரம் | கலிப்புல்லா | வாமணன் குள்ளம். கமல் மட்டும் அபூர்வ சகோதரர்கள் எடுக்க வில்லை என்றால் இந்த கதாபாத்திரம் குள்ளமாகத்தான் இருந்திருக்கும் |
| நரசிம்ம அவதாரம் | அவதார் சிங் | சிங் – சிங்கம் |
| பரசுராம அவதாரம் | ஜப்பானியர் | தற்காப்பு கலைகளில் ஒன்றான களரிக்கு பரசுராமர். கராத்தேக்கு ஜப்பானிய கமல் |
| ராம அவதாரம் | கோவிந்த ராமசாமி | பெயர் மற்றும் ஹனு என்னும் குரங்கு |
| பலராம அவதாரம் | பலராம நாயுடு | பெயர் |
| கிருஷ்ன அவதாரம் | கிருஷ்னவேணி பாட்டி | பெயர் |
| கல்கி அவதாரம் | ? ப்ளெட்சர் | அழிவு. அனைத்தையும் அனைவரையும் அழிக்கிறார். இறுதியில் தன்னைத்தானே |
படத்தில் கதாநாயகன்(கள்), வில்லன், குணசித்திர நடிகர், குணசித்திர நடிகை, நகைச்சுவை நடிகர் என்று கமல் எல்லா வேடங்களிலும் நடித்துவிட்டார்.
பார்ப்பதற்கு எளிது போல் தோன்றினாலும் பல இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட கமல் ஒரே காட்சியில் வருகிறார்கள். இதை படம்பிடிப்பதற்குள் முதுகு உடைந்திருக்கும்.
கதாநாயகன் 1 : ரங்கராஜன் நம்பி : அனைவரையும் இக்கதாபாத்திரம் கவர்ந்திருக்கும். ஆனால் இவருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம என்பது எத்தனை பேருக்கு புரியும் என்பது சந்தேகமே . இவரின் மனைவியும், ஆண்டாளும் ஏன் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதும் கேள்விதான்:) (இந்திரா சௌந்திரராஜன் கதையில் கடைசில் எது நிஜம் என்று முடியுமே. அது போல் தான் :) :) ) இவர் எந்த அவதாரத்துடன் ஒத்து போகிறார் என்று உறுதியாக கூற முடியவில்லை. என்றாலும் கடலை புரட்டும் சுனாமிக்கு “பட்டாம் பூச்சி விளைவின்படி” இவர் காரண கார்த்தா ஆவதால் இவரை கூர்ம அவதாரத்துடன் ஒப்பிடலாம்.
கதாநாயகன் 2 : கோவிந்து ராமசாமி : ஓடுகிறார். ஓடுகிறார், மேலிருந்து கீழே விழுகிறார், மீண்டும் ஓடுகிறார். தொடர்வண்டியில் ஏறுகிறார். மீண்டும் ஒடுகிறார். ஓடுகிறார். கதாநாயகன் ஓடினால் தான் படம் ஓடும் என்பது கில்லியிலிருந்து ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கு. முகத்தில் அதிகம் ஒப்பனை யில்லாததால் (அல்லது ஒப்பனை தெரியாததால்) இவரை பார்க்க முடிகிறது. கமல் தனது பல சொந்த கருத்துக்களை வெளிபடுத்த இக்கதாபாத்திரத்தை உபயோகப்படுத்தி விட்டார். உதாரணம் . ”அப்பா ராமசாமி”, ”கலைஞர்” ”பணத்தின் மொழி - Language of Money" போன்ற அன்பே சிவத்தில் ஆரம்பித்த பொதுவுடமை பிரச்சாரம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உறுத்தாமல் இக்கதாபாத்திரத்தின் மூலம் தொடர்கிறது.
தப்பித்து போன் குரங்கு மூலம் எய்ட்ஸ் நோய் பரவியிருக்கலாம் என்ற பொருள்பட வரும் வசனத்தை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
கோவிந்து என்பதால் இவரை கிருஷ்ணருடம் ஒப்பிடலாம் என்று தோன்றினாலும், இவரின் முழுப்பெயர் கோவிந்து ராமசாமி என்பதாலும், இவருடன்
அனு (அல்லது ஹனுவா ??) என்ற ஒரு குரங்கு (வானரம்) இருப்பதால் இவரை ராமர் எனலாம்வில்லன் : ப்ளெட்சர் : படம் பார்ப்பதற்கு முன் விமர்சணம் அல்லது பிற தகவல்களை படிக்காவிட்டால் இது கமல் என்று பல காட்சிகள் கடந்த பின் தான் கண்டுபிடித்திருக்க முடியும். விக்ரம், சூரசம்ஹாரம், காக்கி சட்டை ஆகிய படங்களில் கமலிடம் இருந்த அதே சுறுசுறுப்பை, உடல் மொழியை பார்க்க முடிந்தது. ஆனாலும் ஒப்பனை என்று இல்லாமல் ஒரு முகமுடி அணிந்தது போல் தோன்றுவது தான் மகா எரிச்சல். (2 முதல் 3 செமி அளவு ஒப்பனை செய்தால் என்னவாகும்). படத்தை பற்றி பலரும் எதிர்மறையாக விமர்சித்ததற்கு கண்டிப்பாக இந்த ஒப்ப்னை ஒரு காரணம் என்று நினைக்கிறேன். கமலே நடித்ததற்கு பதில் ரஜினி (அல்லது அஜித்) நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கூறுங்களேன். இவரை கல்கி அவதாரத்துடன் ஒப்பிடலாம்
குணசித்திர நடிகர் 1 : பலராம நாயுடு : இந்திய உளவுத்துறை அதிகாரி : பலரையும் கவர்ந்த கதாபாத்திரம். வசனங்கள் அனைத்தும் கூர்மை
தெலுங்கு காரன் நான் தமிழ் பேசுறேன். தஞ்சாவூர்காரன் நீ ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறாய்
மடம் னா - தப்பு நடக்காதா
நகைச்சுவை வசனங்களும் உண்டு
அழகிய சிங்கர் - மடோனாவா
ராவும் ராவும் ராவோட -
பெயரில் பல்ராம் இருப்பதால் ஒப்பீடு சிரமமில்லை. பல விதங்களில் இக்கதாபாத்திரம் திருடா திருடாவில் எஸ்.பி.பி நடித்த கதாபாத்திரத்துடன் ஒத்து போவதாக எனக்கு தோன்றியது
குணசித்திர நடிகர் 2 : வின்செண்ட் பூவராகன் : சமுக போராளி : இவர் பேசுவது நெல்லை / குமரி மாவட்ட தமிழ். ஆனால் கதை நடப்பதோ சிதம்பரம் முதல் சென்னை வரை உள்ள இடங்களில் தான். ஏன் இதை கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை குமரி மாவட்ட போராளி செங்கல்பட்டில் மண் அள்ளுவதை தடுக்க போராடியிருக்கலாமோ ?? அதை போல் அந்த உச்சரிப்பு வேறொரு சமுகத்தின் உச்சரிப்பு (சாமி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா)
உலக நாயகன் வசனத்தை கமல் தவிர்த்திருக்கலாம்.
அதை தவிர மீதி அனைத்து வசனங்களும் சாட்டையடி. இதுவும் அன்பே சிவத்தின் தொடர்ச்சி போல் தான் தெரிந்தது.
வசனம் தவிர கண்களாலேயே பேசுவதற்கு கமலுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
பெயரில் வராகம் இருப்பதாலும், மண் சம்மந்தப்பட்டிருப்பதாலும் இவரை வராக அவதாரத்துடன் ஒப்பிடலாம்.
குணசித்திர நடிகர் 3 : அவதார் சிங் : பாடகர் : பெயரில் சிங் வருவதால் இவ்ரை நரசிம்ம அவதாரம் எனலாம். மற்றபடி இக்கதாபாத்திரத்தை கமல் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், கமல் சிறப்பாக செய்திருந்தார். ஒப்பனை உறுத்தவில்லை.
தொழிலை விட குடும்பம் பெரிது என்று செய்தி சொல்ல கமல் இத்தருணத்தை பயன் படுத்திக்கொண்டார் என்று நினைக்கிறேன்.குணசித்திர நடிகர் 4 : கலிபுல்லா : உயர மனிதர். கமல் தவிர்த்திருக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம். முகத்தில் ஒப்பனையில்லாமல் வெறும் உயரத்துடன், (மீசையில்லாமல்) தாடி , குல்லாவுடன் வந்திருந்தால் கூட பார்த்திருக்க முடியும். சுமார் 1 இன்சு அளவு ஒப்பனையுடன், பார்க்க “சகிக்கவில்லை” என்பதே உண்மை. கமல் அவர்களே.... இந்த கதாபாத்திரத்தை பொருத்த வரை நீங்கள் ஒப்பனையிடவில்லை, ஒரு முகமூடி அணிந்திருந்தீர்கள். தயவு செய்து இது போன்ற முகமூடி முயற்சிகளை விட்டு விடுங்கள்.
நீங்கள் அணிந்த முகமுடியினால் நீங்கள் கஷ்டப்பட்டு பேசியது கவனிக்கப்பட்டிருக்காது.இவரை வாமண அவதாரத்துடன் தொடர்பு படுத்தலாம்.
நான் தற்பொழுது குடியிருந்து வரும் விடுதியின் நிர்வாகி ஒரு பட்டானி முஸ்லிம். அவருடன் பேசும் பொழுது அந்த வித்தியாசமான் சொற்களையும், ஒலியமைப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். ஏன் இதை (இந்த வகை தமிழை) யாரும் மிமிக்ரியில் முயற்சிக்கவில்லை என்று பல நேரம் யோசித்திருக்கிறேன்.
படத்தில் கமல் அந்த சொற்களையும், மாடுலேஷன்களையும் அருமையாக செய்திருப்பார். ஆனால் அந்த முகமூடி அனைத்தையும் மறைத்து விட்டது.
குணசித்திர நடிகை : கிருஷ்ணவேனி பாட்டி: ப்ளெட்சர், உயர மனிதன், புஷ் போன்ற அளவு மோசமான ஒப்பனை இல்லை யென்றாலும்அவ்வை சண்முகி பார்த்தவர்கள் இந்த பாட்டிக்கு 40 மதிப்பெண்கள் தான் தருவார்கள். இதை விட ஹே ராமில் வரும் தாத்தா நன்றாக இருந்ததாக ஞாபகம். இந்தியனுக்கு ஒப்பனை செய்தவர் என்னவானார் ?? இவருக்கும் ஜப்பானிய கமலுக்கும் ஒப்பனை ஒருவர் என்றால் நம்புவது சிரமம் தான். இவர் கிருஷ்ண அவதாரம் தான் என்று நினைக்கிறேன்.
சண்டை நடிகர் : ஷின்கன் நரஹசி,ஜப்பானியர் : இவரின் ஒப்பனை உறுத்தாது ஒரு ஆச்சரியமே. இவர் ஜப்பானியர் அல்ல என்று நம்புவதே சிரமம் தான். ரஜினியை தொடர்ந்து கமலும் ஜப்பனிய சந்தையை குறிவைக்கிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஜப்பானியர்கள் எப்படி பேசுவார்கள் என்று தெரியவில்லை. அதனால் என்னால் ஒப்பீடு செய்ய முடியவில்லை. ஆனால் அவர்களின் நடையை பல முறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். அது ஒரு விதமான shuffling gait (இது போல் goorkha gait, sailor gait எல்லாம் கூட உண்டு) என்பார்கள். இவர் வந்த பெரும்பாலான காட்சிகளில் கராத்தே தான் என்றாலும் ஒரு காட்சியில் (காவல் நிலையம் என்று நினைக்கிறேன்) ஒரு ஜப்பானியரை போல் கமல் நடந்தது அவர் இந்த படத்திற்கு எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. (இந்தியன் தாத்தாவும் இது போல் தான் நடப்பார்.)
இறுதியில் வரும் ப்ளெட்சர் - ஜப்பானியர் சண்டை அற்புதம். ஒரே நடிகர் மூன்று வேடங்களில் நடித்து , அந்த மூவரும் சண்டையிடுவது, அதுவும் மூவரும் மூன்று முறைகளில் (ஜப்பானியர் -கராத்தே, ப்ளெட்சர் - தொழில் முறையில், கோவிந்து - சண்டை பற்றி எதுவும் தெரியாமல் சும்மா முரட்டுதனமாக) என்பது எளிதான விஷயம் அல்ல.
கமல் இக்கதாபாத்திரத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.இவரை (தற்காப்பு கலையான கராத்தே நிபுனரை) பரசுராமருடன் (தற்காப்பு கலையான களரி) ஒப்பிடலாம். ( இவர் பெயரில் நர என்று வருவதால் நரசிம்மர் என்று சிறு குழப்பம் வரலாம்)
நகைச்சுவை : ஜார்ஜ் புஷ் : இதை விட ஜனாதிபதி புஷ்ஷை கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் எடுத்து விட்டு அதை புஷ்ஷிடம் போட்டு காட்டுவதாவது. எனக்கென்னவோ புஷ் படம் பார்க்கிறார் என்ற செய்தியும் சந்தைப்படுத்துதலின் ஒரு அங்கம் என்றே நினைக்கிறேன். மற்றபடி, இங்கும் (உயர மனிதர், ப்ளெட்சரை போல்) ஒப்பனை கைவிட்டுவிட்டது. புஷ்ஷின் வசங்களில் உள்ள “உள்குத்து” புரியாதவர்களுக்கு வெறுப்பு வந்திருக்கும்
அனுஆயுதத்தை உபயோகிக்கலாமா என்று புஷ் கேட்பதும், Na Cl என்றால் என்னவென்று கேட்பதும், ”சிக்கலானது (காம்ளிகேட்டட்) என்றால் விட்டு விடுங்கள்” என்று சொல்வதும் கடைசியில் மேடையில் ஆடுவதும்..... இதை விட புஷ் எதிர்ப்பாளர்களுக்கு வேறு சிறந்த தமிழ் படம் கிடையாது என்பது உறுதி :) :) :)
உங்களுக்கு எப்படியோ தெரியாது. புஷ் பேசும் ஒவ்வொரு வசனமும் எனக்கு செந்தில் கவுண்டமனியிடம் பேசிய வசனங்களை ஞாபகப்படுத்தியது
Na Cl என்றால் என்ன - அண்ணே, மேண்டில்னா என்னன்ணே :) :)
அனுஆயுதத்தை உபயோகிக்கலாமா - பூச்சி மருந்து அடித்தால் மிட்டாயில் உள்ள பூச்சிலாம் செத்துரும்ல
வேறு எதிலும் பொருந்தாததால் இவரை மச்ச அவதாரத்துடன் ஒப்பிட வேண்டியது தான்
ஒரறிவு, ஈரறிவு, மூன்றறிவு... ஆறறிவு என்று வருவதில், மீன், ஆமை, வராகம், சிங்கம், மனிதன், என்று பார்த்தால் மச்சத்திற்கு தான் அறிவு கம்மி என்று நினைக்கிறேன் :) :) :)
மேலே கூறியதற்கு தவிர என்னை கவர்ந்த சில காட்சிகள் (வரிசைப்படுத்த வில்லை) இவை என்னை கவர்ந்ததற்கு எனது தனிப்பட்ட சில பல அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். எனவே இக்காட்சிகள் அனைவருக்கும் புரிந்திருக்கும் / பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல
- வெளிநாட்டினரை வரவேற்கிறேன் என்று மாலை போட்டு கையில் இளநீரை கொடுக்கும் கொடுமை இன்று வரை இங்கு தமிழ்நாட்டில் (முக்கியமாக அரசு அலுவலகங்களில்) நடந்து கொண்டிருக்கிறது) படத்தில் பல்ராம் அமெரிக்க அதிகாரிகளை விமான நிலையத்தில் மாலை போட்டு வரவேற்று இளநீர் தருவது போல் ஒரு முறை ஒரு அரசு மருத்துவமனைக்கு வந்த வெளிநாட்டு நிபுணர்களுக்கு நம் ஆட்கள் மாலை போட்டு இளநீரை வெட்டி தந்ததும் அதன் பின் நடந்த கூத்துக்களும், அந்த அதிகாரிகளுடன் (அலுவல் ரீதியாக) சென்ற நான் (என்ன செய்வது / எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்) முழித்த முழியும் எளிதில் மறக்க கூடியதில்லை
- சுனாமியை பார்த்து பலராம், ஆண்டாள், கோவிந்து எல்லாரும் சும்மா ஓடும் பொழுது, ஜப்பானியர் மட்டும் “சுனாமி” என்று கத்தியபடி ஒடுவார். 2004ம் வருடம் தமிழகத்தில் கமலையும் மேலும் ஒரு ஆயிரம் நபர்களை தவிர வேறு யாருக்கும் சுனாமி என்றால் என்னவென்று தெரிந்திருக்காது. அந்த ஆயிரத்தில் கூட பலர் (என்னைப்போல்) 2003ல் அன்பே சிவம் பார்த்து விட்டு “என்னடா இவர் தனுஷ்கோடி பத்தி புதுசா சொல்லாரே” என்று தேடி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்
- சிலையை பெயர்த்து எடுத்து அதை வண்டியில் ஏற்றுவதும், பின்னர் படகில் ஏற்றுவதும் நெம்பு கோல் தத்துவத்தின் படி செய்யப்பட்டது. இப்படி தான் பிரமிடுகளையும், நம் ஆலயங்களையும் கட்டி யிருப்பார்கள்
- அமெரிக்க அதிபரின் ஓவல் அறையின் தரைவிரிப்பில் அமெரிக்க சின்னம் இருக்கும். இது குறித்து ஒரு ஆங்கில புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டிருக்கும். அந்த கருடனுக்கும், படத்தின் முதல் பத்து நிமிடங்கள் வரும் கருடனுக்கும் சொல்லாமல் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது.
- முதலில் அசின் தற்கொலை செய்யும் கல், பின் அசின் ஓடும் பொழுது அவர் காலை தடுக்குவது.
படம் குறித்த என் மதிப்பீடு
+
கதை
நடிப்பு (முகம் காட்டும் / முகமூடி அணியாத பாத்திரங்கள் மட்டும்)
ஒளிப்பதிவு
படத்தொகுப்பு
கணினி தொழிற்நுட்பம்
+/-
இசை
திரைக்கதை
-
ஒப்பனை
ஆண்டாள் கதாபாத்திரம்
தசாவதாரம் சமீபங்களில் வந்த கமல் படங்களை விட (மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு) “நன்றாக” இருக்கிறதோ இல்லையோ (அது அவரவர் பார்வையை பொருத்தது), ஆனால் பொது மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்றிருப்பது (பொதுமக்கள் திரைப்படம் பார்த்த பின் சொல்லும் கருத்து – ஊடக எதிர்பார்ப்பு அல்ல) கண்கூடாக தெரிகிறது.
இறுதி கருத்து
பல வருடங்களாகவே கமல் தனக்காக சில படங்களை (குணா, ஹே ராம், ஆளவந்தான், அன்பே சிவம்) எடுப்பார். அந்த படங்கள் அவருக்கு மட்டுமே 100 சதம் புரியும். இந்த படங்கள் ஏ செண்டரில் கூட ஒழுங்காக ஒடாது. படத்தின் 80 % புரிவது தமிழ் நாட்டில் ஒரு 10,000 பேர் தாண்டாது. அந்த 10,000 பேருக்கும் ஒருவருக்கு புரிவது மற்றவருக்கு புரியாது. உதாரணமாக எனக்கு அன்பே சிவம் புரிந்தது (பொருளாதாரம் பற்றி சில நூல்கள் படித்திருந்ததால்), ஹேராம் புரிந்தது (வரலாற்றில் இருக்கும் தனிப்பட்ட ஆர்வத்தால் பல நூல்கள் படித்திருந்ததால்), ஆளவந்தான் புரிந்த்து (Agent Host Environment என்ற Epidemiological Triad தெரியும் என்பதால்), பள்ளிப்பருவத்தில் பார்த்த குணா புரியவில்லை , விருமாண்டி புரியவில்லை.
பிறகு ஜனரஞ்சகமான சில படங்களை (அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன்) எடுப்பார். இது பி மற்றும் சி செண்டர்களுக்காக மற்றும் ஏ செண்டரில் உள்ள அந்த 10,000 தவிர்த்த பிறர்க்காக :)
தசாவதாரத்தில் கமல் சாதித்திருப்பது என்னவென்றால்
- அவருக்கே உரித்தான பட்டாம் பூச்சி விளைவு, தப்பித்து போன குரங்கிலிருந்து ஏய்ட்ஸ் பரவியதா என்ற விவாதம், பணத்தின் மொழி, புஷ் நக்கல், சைவ - வைணவ சண்டை என்று ஒரு பக்கம் இருக்க
- மணல் கொள்ளை, சுனாமி, பாடல், துரத்தல், மடம், ஹெலிகாப்டர், ஜப்பானியர் - ப்ளெட்சர் சண்டை, கத்தியை வைத்து கொல்வது, என்று பி மற்றும் சி பிரிவுகளுக்கு வேண்டிய அனைத்து மசாலா சமாசாரங்களையும் இணைத்து விட்டார்.
தமிழ் நாட்டில் திரைப்படம் பார்ப்பவர்களில் 80 சதவிதத்தினருக்கு என்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் பட்டாம்பூச்சி விளைவு குறித்து பேசும் அதே படத்தில் இருக்கிறது - பட்டாம் பூச்சி விளைவு என்னவென்று புரியாவிட்டாலும் கூட (அது போல் காட்சிகள் வரும் 15 நிமிடங்களை தவிர்த்து விட்டு) அவர்கள் பலராம் நாயுடுவை ரசிக்கிறார்கள். அதனால் தான் திரைப்படம் முடித்து வரும் பி மற்றும் சி செண்டர் ரசிகர்கள் யாரும் “படம் புரியவில்லை” என்று கூற வில்லை.
ஆனால் கமல் சிரீயஸ் படம் எடுத்தால் சிரீயஸ் படம் மட்டும் தான் எடுப்பார் என்ற (தவறான) எண்ணத்தில் சென்றவர்கள் மட்டுமே முதல் 10 நிமிடங்களில் வந்த காட்சிகளை பார்த்து விட்டு மன நிலையை அதற்கேற்றாப்போல் மாற்றிவிட்டதால் ஒரு படா சீரியஸ் படத்தை (ஹேராம், விருமாண்டி போல்) எதிர்பார்த்து அதன் பின் 3 மணி நேரம் ஓடிய பக்கா மசாலா படத்தை தவற விட்டு விட்டார்கள் என்பது என் கருத்து.
---
தசாவதாரம் : மறு முறை பார்க்க வேண்டிய படம் :)
மேல் உள்ள படத்திற்கும், தசாவதாரம் திரைப்படத்திற்கும் சம்மந்தம் கிடையாது.
--
பிற்சேர்கை 1 : அவதாரங்கள் குறித்த பிற பதிவர்களின் கருத்துக்கள்
http://ottraiandril.comhttp://idlyvadai.blogspot.com