இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, September 30, 2008

1993 ஆம் ஆண்டின் தமிழ் திரைப்படங்கள்

2008 செப்டம்பர் 30ஆம் தேதி எழுதப்பட்ட பதிவில், புதிய தகவல்கள் சேர்த்து மீள்பதிவு

பதிவர் முரளிகண்ணனின் கூறியபடி 1992 ஆம் ஆண்டின் படங்கள், தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரின் அந்தஸ்தை உயர்த்தியவையாகும் . அப்படி உயர்த்தப்பட்ட அந்தஸ்தை தக்க வைத்தவை 1993ல் வெளிவந்த படங்கள்

அமராவதி
பிரம்ம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் 1992ல் அறிமுகமான அஜித்தின் முதல் தமிழ் படம். கதாநாயகி சங்கவி. இயக்கம் செல்வா. இசை பாலபாரதி அதிகம் ஒப்பனையுடன் வரும் இளவட்டங்களை ”அமராவதி அஜித் போல இருக்கே” என்ற பகடி செய்யும் அளவு தமிழர்களுக்கு பரிச்சயமான படம். (அதற்கு முன்னர் தளபதி அரவிந்தசாமி என்று சொன்னார்கள்)

புதியமுகம்
சுரேஷ் மேனன் இயக்கத்தில், சுரேஷ் மேனன் கதாநாயகனாகவும், ரேவதி கதாநாயகியாகவும் நடித்த படம். முகமாற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் மகன் அவரின் பழைய முகத்துடன் பிறந்து அதனால் உண்மை வெளிப்படும் கதை. திரைக்கதை கமல் பாணியில் இருந்ததால் பலருக்கும் புரிந்திருக்காது.

இன்று வரை மனதில் நிற்கும் ஏ.ஆர்.ஆரின் பாடல்கள் படத்திற்கு பலம் என்றாலும் அந்த வருடம் வெளிவந்த பிற சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களுடன் போட்டி போட முடியவில்லை என்பதால் படம் வணிக ரீதியாக தோல்விதான்.

இயக்குனரான ஒளிப்பதிவாளர் வரிசையிலும் கதாநாயகனான இயக்குனர்கள் வரிசையிலும் சுரேஷ் மேனனுக்கு இடம் பெற்றுத்தந்தது இந்த படத்தின் மற்றொரு சாதனை. சுரேஷ் மேனன் – ரேவதி விவாகரத்தை இந்த படம் 10 வருடம் தள்ளிப்போட்டது என்று கூட சொல்வார்கள்.

நேற்று இல்லாத மாற்றம், நேற்று இல்லாத மாற்றம் (சோகம்), கண்ணுக்கு மையழகு, ஜூலை மாதம் வந்தால், என்று இசையும் வரிகளும் பல வருடங்களுக்கு பிறகு (எம்.எஸ்.வி-கண்ணதாசன், இளையராஜா-வைரமுத்து) பின்னி பினைந்து வெளிவந்து ஒலிப்பேழை விற்பனை அமோகமாக நடந்த நேரம் அது. 1992ல் அறிமுகமான சிடிக்களை பரவலாக்கி (சிடில கேட்டா இரண்டு கிடாரும் புல்லாங்குழல் சத்தமும் கூட கேட்குதுடா !! அதான் சிடி வாங்கிட்டேன்) சிடி விற்பனையை அதிகரித்தற்கு காரணம் புதிய முகம், ஜெண்டில்மேன், திருடா திருடா, படங்கள் தான்

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை, கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை, காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக்கானும் வரை என்று பின்னி எடுத்த வைர முத்து “விடியும் வரை பெண்ணழகு” என்று எழுதி வாங்கி கட்டிக்கொண்டதும் இந்த படத்தில் தான்

ஜெண்டில்மேன்
இயக்குனர் ஷங்கரின் முதல் படம். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சில ஆண்டுகள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் இருந்ததற்கு முக்கிய காரணம் இந்த படம் என்று கூறலாம். ஒரு பாட்டிற்கு கவர்ச்சி நடிகைகள் ஆட்டம் என்ற நிலையை மாற்றி ஒரு பாட்டிற்கு ஆட கதாநாயகி என்ற வழக்கத்தை ஏற்படுத்திய படம். அதன் பிறகு 10 வருடங்களாக (பிதாமகனில் சிம்ரன் ஒரு பாட்டிற்கு ஆடும் வரை) இந்த பழக்கம் தொடர்ந்தது

ரோஜா என்பது விபத்தல்ல என்று ஏ.ஆர்.ரஹ்மான் அழுத்தம் திருத்தமாக நிருபித்தார். ரோஜா, புதியமுகம், ஜெண்டில்மேன் என்று ஏ.ஆர்.ஆர் ஹாட்ரிக் அடித்த சமயம் அது. எந்த டீக்கடை, எந்த கல்யாண வீடு என்றாலும் நேற்று இல்லாத மாற்றமும், சிக்கு புக்கு ரயிலேயும் தான் கேட்டது

தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்கள் என்ற நிலை மாறி “ஒரே அர்த்த வசனங்கள்” என்ற வழக்கம் ஆரம்பித்ததும் இந்த படத்தில் தான். !!!

ஸ்பூனிங், கப்லிங், டிக்கிலோனா என்ற விளையாட்டுகளை தமிழகத்திற்கு ஷங்கர் அறிமுகம் செய்தார். நல்ல வேளை அவை பிரபலம் ஆக வில்லை. (குஷ்பு இட்லி பிரபலமானது போல் அந்த படத்தில் காட்டப்படும் குஷ்பு அப்பளமும் வரவில்லை !!)

வசனம் பாலகுமாரன். “செண்ட்ரல் நினைச்சா தூக்குவோம், செண்ட்ரல் நினைச்சா இறக்குவோம்” என்ற அரசியல் வசனங்களும் “போகிற வ்ழி எப்படி யிருந்தாலும் சேரும் இடம் கோவிலாக இருக்க வேண்டும்” என்ற சமூக வசனங்களும் இணைந்தே இருந்தது.

எனக்கு பிடித்த் வசனம் “அன்னைக்கே சொல்லியிருப்பேன். ஆனால் சொல்லல, ஏன்னா உங்க வயசில இருக்கிறவங்களுக்கு அட்வைசும் பிடிக்காது, அட்வைஸ் சொல்லவங்களையும் பிடிக்காது. இது அட்வைஸ் இல்லை, அக்கறை”

மே 1993ல் நடந்த ஒரு அரசியல் கொலை நடந்த வழிமுறையை ஆகஸ்ட் 15ல் வெளியாகும் படத்தில் புகுத்தியது யாரும் எதிர்பார்க்காதது.

ராஜா சின்ன ரோஜா, அஞ்சலி ஆகிய படங்களில் கிராப்பிக்ஸ் மூலம் பாடல் காட்சிகள் வெளிவந்திருந்தாலும் படங்களில் கிராப்பிக்ஸ் பரவலாக பயன்படுத்தப்பட்டது இந்த படத்திலிருந்து தான். சிக்கு புக்கு ரயிலே, ஒட்டகத்தை கட்டிக்கோ, என் வீட்டு தோட்டத்தில், உசிலம்பட்டி பெண்குட்டி, பார்க்காதே பார்க்காதே போன்ற அனைத்து பாடல்களும் ஹிட்

சில / பல லாஜிக் மீறல்களும் இருந்தன
  • 1980களிலேயே மருத்துவக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு என்று வந்து விட்டது. ஆனால் நேர்காணல் என்று படத்தில் இருக்கும்
  • மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த உடன் ”ஒப்பன் ஹார்ட் சர்ஜரி” பற்றியெல்லாம் வகுப்பு எடுக்க மாட்டார்கள்

திருடா திருடா
அஞ்சலி, தளபதி, ரோஜா என்று தொடர்ந்து மூன்று படங்களின் வெற்றியை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் வந்த படம்.

பாடல்கள் அனைத்தும் முதலிலேயே வெளிவந்து சிக்கு புக்கு ரயிலுக்கு பதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலும், ராசாத்தியும் டீக்கடைகளிலும், கார் ஸ்டிரியோக்களிலும் ஒலித்து கொண்டிருந்தன.

மணிரத்னம் படங்கள் திரையிடப்படும் அரங்குகளில் இரண்டாவது வாரத்திலேயே 50 சதம் இடங்கள் காலியாக இருந்து, அனைத்து பாடல்களும் முடிந்தவுடன் 50 சதம் நிரம்பியிருக்கும் அரங்கிலிருக்கும் 80 சதவித பார்வையாளர்கள் வெளிவரும் போக்கு இந்த படத்தில் ஆரம்பித்து அதன் பிறகு பம்பாய், இருவர், உயிரே வரை தொடர்ந்தது. (அதன் பிறகு இரண்டாம் முறை படம் பார்ப்பவர்களால் மணிரத்னம் படங்கள் முழுவதும் பார்க்கப்பட்டது அலைபாயுதே தான்) திரையரங்கில் மீதியிருப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஒன்று காதலர்களாக இருப்பார்கள். அல்லது வெளியூர் செல்ல முன்பதிவு செய்து விட்டு சில மணிநேரத்தை செலவழிக்க வந்தவர்களாக இருப்பார்கள்

கதை : வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் மற்றும் அவர்களை துரத்தும் சி.பி.ஐ அதிகாரி. (தசாவதாரம் பார்க்கும் போது பல்ராம் நாயுடு திரையில் வரும் போது இந்த ப்டத்தில் நடித்த எஸ்.பி.பி ஞாபகம் வந்தது எஸ்.பி.பியின் வெற்றியா, மணிரத்னத்தின் வெற்றியா)

படத்தில் வரும் புத்தம் புது பூமி வேண்டும் என்ற பாடல் வரிகள் மிகவும் அருமையாக ஒரு utopian நிலையை வேண்டும் படி இருக்கும். இரு ஸ்பீக்கர்களை 10 அடி இடைவெளியில் எதிரெதிராக வைத்து நாம் நடுவில் நின்றால் இந்த பாடலில் வரும் பியானோ ஓசை ஒரு காது வழியாக புகுந்து செல்வது போல் தோன்றும். (அந்த விளைவை பெற இயர் போன் வைத்து கேட்டால் போது, இது போல் ஸ்பீக்கரை அடுக்க வேண்டாம் என்ற விஞ்ஞான உண்மை பிறகு தான் தெரிந்தது)

ராசாத்தி என்ற பாடலில் ஒரு இசை கருவி கூட பயன் படுத்தப்பட்டிருக்காது எனபது அதன் சிறப்பு. ஏ.ஆர்.ஆர் கணினியின் மூலம் தான் அசத்துகிறார், அவருக்கு சொந்த சரக்கு கிடையாது, இசையறிவு குறைவு என்ற சில ”வயிற்றெரிச்சல்” ஆட்களின் குற்றச்சாட்டை ஒரு இசைகருவி கூட பயன்படுத்தாமல் ஒரு பாட்டை வழங்கியது மூலம் ஏ.ஆர்.ஆர் சுக்கலாக உடைத்தார்.

இது தவிர சந்திரலேகா, தீ தீ, வீரபாண்டி கோட்டையிலே, கண்ணும் கண்ணும் ஆகிய அனைத்து பாடல்களும் ஹிட்

படத்தின் கதை : ராம் கோபால் வர்மா
படத்தின் வசனம் : சுகாசினி

இந்திய படங்களில் அலேக்கா கிரேன் உபயோகிக்கப்பட்ட முதல் படம் இது (ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்)

மகாநதி

கமல், சுகன்யா, நடித்து வெளிவந்த ப்டம். நகைச்சுவை படம் அல்லத கமல் படம் கூட வெற்றி பெரும் என்று கமலுக்கே நம்பிக்கை அளித்த படம்

நிதி நிறுவனங்களை பற்றி கமல் 1993லேயே இவ்வளவு தெளிவாக கூறியபின்னரும் 1996-1998களில் நிதிநிறுவனங்களை நம்பி திவாலானவர்களை பார்க்கும் போது பரிதாபம் தான் வருகிறது. நிதி நிறுவனங்கள் மற்றூம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக கமலை பாராட்ட வேண்டும். சோனார்கஞ்ச் என்ற இடத்தின் பெயர் தமிழுக்கு அறிமுகமானதும் இந்தப்படத்தில் தான். சோனார்கஞ்ச், சுனாமி என்று கமல் அறிமுகப்படுத்திய வார்த்தைகள் பல இருக்கிறது (முரளிகண்ணன் சார் - உங்களுக்கு ஒரு பதிவிற்கு கரு தயார்)

இளையராஜாவின் இசையில் ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் என்ற பாடல் இன்று வரை பசுமையாக நினைவிலிருக்கிறது

உழைப்பாளி
வழக்கமான ரஜினி படம். (அம்மா செண்டிமெண்ட், ப்ளாஷ்பேக் உட்பட) செம்பருத்தியில் அறிமுகமாகி, சூரியன் மூலம் முதலிடம் பிடித்த நடிகை ரோஜா கதாநாயகி. ரஜினியின் பஞ்ச் வசனங்களும் உண்டு

  • நேத்து நான் கூலி, இன்னைக்கு நடிகன்,நாளைக்கு.....
  • சில பேர் சொல்றாங்க நான் இப்படி வருவேன், அப்படி வருவேன்னு. நான் எப்படி வருவேன்னு அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும்

இளையராஜாவின் இசையில் ஒரு சோளக்குயில், மைனா மைனா, உழைப்பாளி இல்லாத நாடுதான் போன்ற பாடல்களும் உண்டு. பாண்டியனில் ஒரு பாடலுக்கு (பாண்டியனின் ராஜ்ஜியத்தில்) இசையமைத்த கார்த்திக் ராஜா துனை இசையமைப்பாளராக மாறிய படம். ரஜினி சிவன் வேஷத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் நகைச்சுவை காட்சி தொலைக்காட்சிகளின் தினமும் ஒளிபரப்பப்படுகிறது

எஜமான்
தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுடன் ரஜினி டூயட் பாடிய படம். ஆர்.வி.உதயகுமாரின் மார்க்கெட்டும், நெப்போலியனின் மார்க்கெட்டும், ஐஸ்வர்யாவின் மார்க்கெட்டும் உயர பறந்தது இதில் தான்

இளையராஜாவின் இசையில் ஆலைப்போல் வேலைப்போல், அடி ராக்கு முத்து, நிலவே முகம் காட்டு, ஒரு நாளும் உனை மறவாத போன்ற பாடல்களும், நல்ல திரைக்கதையும் படத்தை வெற்றி பெற வைத்தன. இன்று வரை குழந்தை பிறந்ததை “வானவராயனுக்கும் ரானிக்கும் வாரிசு வந்தாச்சு:” என்ற பாடல் மூலம் குறிப்பது வழக்கமாக இருக்கிறது

ரஜினியை அடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாவிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் மூலம் தமிழக ரசிகனின் மனப்பக்குவம் அனைவருக்கும் சந்தேகமற தெரிந்தது இந்த படத்தின் மற்றொரு சாதனை

உழவன்
கதிரும் ரஹ்மானும் இணைந்த முதல் படம். நடிகை ரம்பாவின் (அதாவது டூப்பாக நடிக்காமல் ரம்பாவாக நடித்த) முதல் ப்டம் என்று நினைக்கிறேன். பெண்ணல்ல பெண்ணல்ல என்ற பாடல் பாடல் போட்டிகளில் பாடுபவர்களின் விருப்ப பாடலாக மாறியது. கண்களில் என்ன ஈரமோ பாடல் பல இடங்களில் கோயில் திருவிழாக்களில் ஆன்மிக பாடலாக மாறியது (அதற்கு முன்னர் அம்மா என்றழைக்காத பாடல் கோயில் கொடைகளில் கட்டாயம்). காதல் தேசம், காதலர் தினம் என்ற அபார கூட்டனியின் முதல் படம்

பொன்னுமனி
ஆர்.வி.உதயக்குமார் இயக்கத்தில் கார்த்திக், சௌந்தர்யா நடித்தது. இளையராஜாவின் இசையில் ”நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா” என்ற பாடல் அனைவருக்கும் தெரிந்தது தான்.

வள்ளி
ரஜினியின் கதை. இயக்கம் கே.நடராஜ். குசேலனை விட ந்ல்ல படம். இளையராஜாவின் இசையில் வள்ளி வரப்போறா, என்னுள்ளே கனவுகள் வரும் நேரம் ஆகிய பாடல்கள் பிரபலம்

மறுபடியும்
“இதே மாதிரி நான் பண்ணியிருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க” என்று பெண்ணியம் பேசிய படம், ஒரு தீக்குச்சியில் ஒளியில் கதாநாயகியின் அறிமுகம் அபார கற்பனை மற்றும் ஒலிப்பதிவு. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் என்ற் பாடல் வரிகள் அபாரம். ரகுவரனின் நிழல்கள் ரவியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் இந்த படத்தை தவிர்க்க முடியாது

இப்பொழுது நினைத்து பார்த்தால் வள்ளி, மறுபடியும் இரு படங்களுமே ஒரே செய்தியைத்தான் தருகின்றனவோ ??

கிழக்கு சீமையிலே
அண்ணன் தங்கை பாசம் குறித்து பாசமலருக்கு அடுத்த படம். பாரதிராஜாவும் ஏ.ஆர்.ஆரும் இணைந்த முதல் படம். ரஹ்மானால கிராமப்புற கதைகளுக்கு இசையமைக்க முடியாது என்ற குற்றச்சாட்டு காணமல் போன ப்டம்.

இது தவிர பிரபு, சுகன்யா, சிவரஞ்சினி நடித்த சின்ன மாப்பிள்ளை, மற்றும் ராஜ்கிரனின் அரண்மனைக்கிளி ஆகியவை கூட இந்த வருடம் தான் வெளிவந்தது,

கேள்வி :
இந்த வருடம் வெளிவந்த மற்றொரு சூப்பர் ஹிட் படம் குறித்து நான் எதுவுமே கூறவில்லை. அது என்ன படம்

(க்ளு : அது நக்மா நடித்த சூப்பர் போலிஸ் அல்ல)

அது குறித்து தனி இடுகை எழுதலாம் என்று நினைக்கிறேன்:)

Sunday, September 28, 2008

இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் - நாம் எதையும் கண்டுபிடிக்க வில்லை என்று யார் கூறியது

ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பதிவில், அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை? அறிவியலில் நாம் வளராததற்கு காரணம் என்ன? என்ற இடுகையில் பல காரணங்கள் அலசப்படுகின்றன

என் கருத்து.

கடந்த நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்த கருவிகளின் (New Instruments) எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.

ஆனால் Invention / Fabrication / Modification of Process என்று புதிய நடைமுறைகளை கண்டுபிடித்ததில் நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைவில்லை என்று உறுதியாக கூறலாம்

நம் ஆட்கள் கண்டுபிடித்த சில விஞ்ஞான நடைமுறைகள்
  1. முவுருளி கணக்குகருவியில் (ஆட்டோ மீட்டர்) சூடு வைப்பது. சூடு வைப்பது என்றால் என்னவென்று தெரியாதவர்கள் சென்னையில் மூவுருளியில் பயணம் செய்து பாருங்கள்
  2. தேர்வு எழுத புத்தகத்தை ”மைக்ரோ செராக்ஸ்” செய்வது 
  3. செய்து அதை வைத்து தேர்வில் பார்த்து எழுதுவது :)
  4. திரையரங்கில் ஒளிப்படக் கருவியில் (வீடியோ கேமராவில்) திரைப்படத்தை படம் பிடித்து அதை குறுந்தகட்டில் விநியோகிப்பது (ஒரு 15 வருடம் முன் கேமரா பிரிண்ட் என்று ஒரு பதம் கேள்விப்பட்டீருக்கிறீர்களா)
  5. மூன்று அல்லது நான்கு நபர்களுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்வது
  6. HP நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கண்டுபிடிக்கும் அச்சு மையுறைகளை (cartridge) மறுநிரப்பு (மீள்நிரப்பு) செய்வது
  7. அலைபேசியில் ”மிஸ்டு கால்” அளிப்பது
  8. சிங்கிள் டீ

இது போன்ற நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து உங்கள் கருத்தென்ன. மேலும் இது போன்றவற்றில் விடுபட்டவைகளையும் சொல்லுங்கள்

பிற்சேர்க்கை : விடுபட்டவை
1 : வாஷிங் மெஷினை லஸ்ஸி தயாரிக்க உபயோகப்படுத்துவது (நன்றி பதிவர் முரளி கண்ணன்)

எனவே

நம் மக்களின் விஞ்ஞான அறிவு எந்த விதத்திலும் குறைவு அல்ல என்று தெரிந்து கொள்ளலாம்

இவ்வளவு இருந்தும் நம்மை தடுப்பது. (அல்ல முன்னேற விடாமல் தடுப்பது) என்ன / எவை என்று அடுத்த இடுகையில் பார்க்கலாம்

அதற்கு முன் ஒரு கேள்வி :

மின்னனு வாக்கு பதிவு இயந்திரம், கோகோ கோலாவின் சுருக்க விதிமுறையை விட அதிகம் ரகசியமாக பாதுகாக்கப்படும் தேர்தல் மை போன்றவைகள் இந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை தானே

இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும்

மூளை சாவு ஏற்பட்ட ஒரு மாணவனின் இதயம், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதர உறுப்புகளை அவனது பெற்றோர் தானம் அளித்தது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். இல்லை என்றால் கீழ்க்கண்ட வலைப்பதிவை பாருங்கள்
இது குறித்த ஊடக செய்தி
இது குறித்த பிற பதிவுகள் / தளங்கள்

இது குறித்த பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன

அதில் சில (பதிலளிக்க கூடிய) கேள்விகள், சில (பதிலளிக்க தேவையில்லாத) குதர்க்க (விதண்டா) வாதங்கள்

முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்விகளையும் அவற்றிற்கான விடைகளையும் பார்ப்போம்

1. இந்த இதயத்தை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடியாதா
ஹெலிகாப்டர் இறங்க , ஏற ஹெலிபேட் அவசியம் தேவை இல்லை என்றாலும் குறைந்த பட்சம் ஒரு திறந்த வெளி வேண்டும். அப்பலோ அருகில் அப்படி இடம் எதாவது இருந்தால் கூறவும். அடுத்த முறை பரிந்துரைப்போம்

2. இது குறித்த சட்டங்கள், அரசு உத்தரவுகள் இருக்கின்றனவா ?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த சட்டம் 1994ல் நடுவண் அரசால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது ஆனால் மூளை மரணம் குறித்த தெளிவான அரசாணைகள் இல்லை என்பதால் இது போன்ற அறுவை சிகிச்சைகள் குறித்து சில சந்தேகங்கள் / குழப்பங்கள் இருந்தன.

தமிழகத்தில் இது குறித்த அரசு ஆணைகள் தற்பொழுது வெளி வந்துள்ளது.இது போன்ற சேவைகள் குறித்து அவசர காலங்களில் முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் ஒரு அதிகாரிகள் குழு அமைக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இது குறித்த விபரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட திட்டம் உள்ளது. இத்திட்டம் முழுமை பெற்ற பின் சிறுநீரகங்கள் பணத்திற்காக விற்கப்படுவது குறையும் என்று நம்புகிறோம். கடந்த சில ஆண்டுகளாக தமிழக மருத்துவத்துறையில் நடந்து வரும் பல சாதனைகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல் இந்த விஷயத்திலும் நாம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கிறோம். இத்திட்டம் குறித்த தமிழக அரசின் ஆணைகளுக்கான சுட்டிகளை கீழே காணலாம்
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_296_2008.pdf
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_289_2008.pdf
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_288_2008.pdf
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_287_2008.pdf
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_175_2008.pdf
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_75_2008.pdf
  • http://www.tn.gov.in/gorders/hfw/hfw_e_6_2008.pdf
இந்த ஆணைகளை பார்த்தால் இது குறித்த வேலைகள் கடந்த ஒரு வருடமாகவே நடந்து வருவதை அறிந்து கொள்ளலாம். இதில் 16.09.2008 வெளியிடப்பட்ட அரசாணையில் (எண் 296) இது குறித்து அரசு தரப்பில் ஒருங்கினைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. இது சட்டப்பூர்வமானது தானா. ? இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடப்பது அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனவா ?
இது முற்றிலும் சட்டத்திற்குட்பட்டு நடத்தப்படுகிறது. இது போன்ற அறுவை சிகிச்சை அரசின் முழுக்கட்டுப்பாட்டில் நடப்பதால் தான் காவல் துறையின் உதவி கோரப்படுகிறது என்று புரிந்து கொள்வது எளிது தானே.

4. ஒருவரிடம் இருந்து பெறப்படும் உறுப்பு யாருக்கு பொருத்தப்படும். அது ஒருவருக்கு அளிக்கப்படுகிறது என்றால் அது (தானம் பெறுபவர்) யார் என்று எதை வைத்து முடிவு செய்யப்படும்
இது குறித்த விரிவான வழிமுறைகள் அரசு ஆணைகளில் உள்ளது. அந்த விதிமுறைகளின் படி ஒரு காத்திருப்பு பட்டியல் கடைபிடிக்கப்படும். அந்த காத்திருப்பு பட்டியலில் உள்ளபடி உறுப்பு வழங்கப்படும். இது குறித்த பணிகள் தற்சமயம் நடந்து வருகின்றன. விரைவில் இது குறித்த அனைத்து விதிகள் / நடைமுறைகள் / மருத்துவமனைகளில் நிரப்பப்படவேண்டிய பாரங்கள் ஆகியவை அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்

4. இந்த சட்டங்கள் / ஆணைகள் வருவதற்கு முன்னர் இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடந்தனவா ?
நடந்தன. பெரும்பாலும் மருத்துவர்களின் உறவினர்கள் / மருத்துவத்துறையில் பணிபுரிபவரின் உறவினர் ஆகியோரின் உறுப்புகள் மட்டுமே தானமாக பெறப்பட்டன

5. ஏன்
மருத்துவர்களை / மருத்துவமனைகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல்கள் பெருகி வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி பட்ட காலசுழலில் முதலில் தானம் அளிக்க சம்மதித்து விட்டு, பிறகு சமுக விரோதிகளின் தூண்டுதலினால், “அவருக்கு சிறுநீரகத்தை பொருத்த வேண்டும் என்பதற்காக உயிரோடு இருந்த என் மகனை சரியாக சிகிச்சை பார்க்காமல் கொன்றுவிட்டார்கள் - எனக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று பொய் குற்றச்சாட்டுடன் கூப்பாடு போடும் ஆட்களும், அவர்களுக்கு துனை போகும் சமூக விரோதிகளும், இது குறித்து ஊடகங்களில் தவறாக திரித்து எழுதி காசு பார்க்கும் வியாபாரிகளும், எழுதுவதற்கு சொந்த சரக்கு இல்லையென்றால் தவறான கற்பனை குற்றச்சாட்டுகளுடன் மருத்துவத்துறையை / மருத்துவர்களை திட்டும் சில அயோக்கியர்களும் நிறைந்த உலகில் பிரச்சனை வேண்டாம் என்பதற்காக மாதந்தோறும் பலர் மூளைச்சாவால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவர்களும், மருத்துவமனைகளும்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து போதிய அக்கரை காட்டாமல் இருந்தனர்.

6. விதிமுறைகள் வருவதற்கு முன் இருந்த நிலை என்ன
முன்பு தானம் அளிப்பவர் - மருத்துவமனை - தானம் பெறுபவர் என்று இருந்தது

7. தற்பொழுது என்ன வித்தியாசம்
முன்பு ஒரு மருத்துவமனையில் தானமாக பெறப்படும் உறுப்பு அதே மருத்துவமனையில் தான் பொருத்தப்பட்டது. எனவே மூளைசாவு ஏற்பட்டால் யாருக்கு உறுப்பு கிடைக்கும் என்பது தெரியும்

ஆனால் தற்போது, பொது காத்திருப்பு பட்டியல் என்பதால், மூளை சாவு ஏற்பட்டால் பெறப்படும் உறுப்பு யாருக்கு தரப்பட வேண்டும் என்பது காத்திருப்பு பட்டியலை பார்த்தால் தான் தெரியும். அப்பலோவில் தானமாக பெறப்படும் உறுப்பு அரசு மருத்துவமனையில் பொருத்தப்படலாம். சென்னை பொது மருத்துவமனையில் தானமாக பெறப்படும் உறுப்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொருத்தப்படலாம்.

தற்சமயம் தானம் அளிப்பவர் -- தானம் அளிப்பவர் இருக்கும் மருத்துவமனை -- காத்திருப்பு பட்டியல் -- தானம் பெறுபவர் இருக்கும் மருத்துவமனை -- தானம் பெறுபவர் என்ற மாறியுள்ளது

திட்டங்களை அரசு கட்டுப்படுத்த கூடாது. அவை அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நான் நேற்று எழுதிய இடுகையில்  உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

-oOo-

கேள்விகளை பார்த்தாகிவிட்டது. மேலும் சந்தேகங்கள் இருந்தால் நான் அளித்துள்ள அரசாணைகளை பார்க்கவும். அதன் பின்னரும் சந்தேகங்கள் இருந்தால் மறுமொழியில் கேட்கலாம்

-oOo-

இச்சம்பவம் குறித்த விதண்டாவாதங்கள்
  • It was great the ACP and Commissioner stopped vehicles to let the heart pass but how many more died waiting for this convoy pass???
  • Do we need ACPs for a medical emergency?
விதண்டாவாதங்கள் குறித்த கருத்து - இவங்களாம் திருந்தவே மாட்டாங்களா.....

Saturday, September 27, 2008

இடப்பங்கீடு குறித்த எனது இடுகைகள்

என் பழைய இடுகை ஒன்றில் நான் கூறியது
இடப்பங்கீட்டில் மூன்று அம்சங்கள் உள்ளன
1. ஒரு பிரிவினருக்கு இடபங்கீடு உண்டா இல்லையா
2. உண்டு என்றால் எத்தனை சதவிகிதம்
3. அந்த சதவிகிதம் எந்த விதமாக அளிக்கப்படுகிறது

இதில் முதல் இரண்டும் அரசால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இதை தீர்மானிக்கிறார்கள். எத்தனை சதவிகிதம் இடப்பங்கீடு என்பது சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ சட்டமாக இயற்றப்படுகிறது. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, வலைப்பதிவு உட்பட அனைத்து ஊடகங்களும் இந்த சதவிகிதத்தை பகுத்து ஆராய்கிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்

ஆனால் இதில் மிகவும் முக்கியமான விஷயமான ”இடப்பங்கீடு எந்த விதத்தில் வழங்கப்படுகிறது” என்பது அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. ஊடகங்கலும் கண்டு கொள்வது இல்லை.... இதனால் தான் இந்த மூன்றாவது அம்சத்தில் பல குழப்பங்கள் உள்ளன

இதற்கு (நிர்வாக குழப்பம்) மேலும் ஒரு உதாரணம் பற்றி தெரிந்து கொள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 68.50 சதவிகித இடப்பங்கீடு வழங்கும் தேர்வு எது தெரியுமா என்ற எனது இன்றைய இடுகையை பாருங்கள்
இடப்பங்கீடு குறித்த எனது பழைய இடுகைகள்

அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது சரியான செயல்தானா

என் பொருளாதார அறிவு கிட்டத்தட்ட சுழியம் என்பதால் அன்மையில் ஒரு பதிவில் படித்தது (ஞாநி குமுதம், 01.10.08 இதழில் எழுதியது) குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. முதலில் அதில் இருந்து சில பகுதிகளை பார்க்கலாம்.
இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டால், விலைவாசி உயர்ந்தால், உடனே மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வழக்கமாக சொல்லும் சாக்கு _ இது உலகளாவிய பிரச்சினை. அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். உலகப் பொருளாதாரத்துடன் இந்தியப் பொருளாதாரம் இணைக்கப்பட்டுவிட்டதால் நாம் படுவேகமாக வளர்ந்து வருகிறோம். அதே போல பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவை என்பார்கள்.
ஆனால், இப்போது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை என்றும் இதே பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். ஏன் பாதிக்கவில்லை? நம்முடைய ரிசர்வ் வங்கியின் மூலம் நாம் பின்பற்றி வரும் கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பதால், நமது வங்கிகளுக்கு, கம்பெனிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லையாம். அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது நேரு காலத்துக் கோட்பாடுதான் !
இதற்கு முன்பு இங்கேயும் நிதி நிறுவனங்களும் சீட்டு கம்பெனிகளும் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாமல் இயங்கியபோது எப்படி திவாலாகி பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனவோ, அதே போல மிகப்பெரிய அளவில் இப்போது அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
உலகமயம், தாராளமயம் ஆகியவை தான் சிறந்தது என்று அடிக்கடி கூறும் பதிவர்கள், மேலே உள்ள செய்தி சரிதானா, அல்லது அதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று கூற வேண்டுகிறேன்

மேலும் சில கேள்விகளும் இருக்கின்றன

  1. ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகள் இல்லை என்றால் இந்தியாவிலும் இது போல் நடந்திருக்குமா.
  2. அரசு தொழில் நடத்துவது தவறு என்றும் நமது அரசின் துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். இன்று அமெரிக்க அரசு பல்லாயிரம் கோடி டாலர்களை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. அப்படி செய்தால் தான் அவர்களின் பொருளாதாரத்தையே காக்க முடியும் என்ற நிலை. அப்படியென்றால் நாம் ஆரம்பித்திருக்கும் disinvestment drive தவறான முடிவா
  3. இந்தியாவிலும் அரசு மட்டுமே வங்கி தொழிலை செய்ய வேண்டும் என்ற மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் முடிவு தொலைநோக்கு பார்வையில் எடுக்கப்பட்டதால் தான் நமக்கு இன்று பாதிப்பு குறைவா
தெரிந்தவர்க்ள் விளக்கி கூறினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

2009 செப், 2010 செப், 2011 செப் மாதங்களில் இதே கேள்விகள் கேட்கப்பட்டால் என்ன விடை வரும் என்று யோசிப்பது மூளைக்கு நல்ல வேலை

Monday, September 22, 2008

வக்கீல் - அரசியல்வாதி - கடத்தல்காரன் கதை தெரியுமா உங்களுக்கு

ஒரு பெண் வக்கீல் காதலிக்கிறாள். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகிறாள். காதலனோ அவளை கைவிட்டு விட்டு அரசியலில் இறங்குகிறான்

அந்த பெண் தனது மகனுடன் தனியாக வாழ்கிறாள்

அந்த ஊரில் ஒரு கடத்தல்காரன். ஒரு வழக்கில் அவன் வசமாக மாட்டிக்கொள்கிறான். வழக்கு விசாரணைக்கு வரும் போது நம்ம கடத்தல்காரனின் எடுபுடி ஒருவன் கதாநாயகியை ஏமாற்றி கடத்தல்காரனை அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுகிறான்

அதன் பிறகு கடத்தல் காரனுக்கு நம்ம கதாநாயகி மேல் ஒரு “இது”.

ஆனால் நாயகியோ பிடிதரவில்லை. இந்நிலையில் நாயகியின் மகன் கடத்தப்படுகிறான். அந்த சிறுவனை கடத்தல்காரன் மீட்கிறான்.

அதன் பின்னர் கடத்தல் கூட்டத்திற்கு நம்ம கதாநாயகிதான் வக்கீல். இது அந்த கடத்தல் கூட்டத்தின் பழம்பெரும் வக்கீலுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது

கதை தெரிகிறதா

சிட்னி செல்டனின் ”ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ்” புதினத்தின் கதை தான் இது. சிட்னி செல்டன் படிக்காதவர்கள் கூட மக்கள் என் பக்கம் படத்தை பார்த்திருந்தால் இந்த கதை தெரிந்திருக்கும்


கதாபாத்திரங்கள்ஆங்கில கதைதமிழ் படம்
அரசியல்வாதிஆடம் வார்னர்ராஜேஷ்
கதாநாயகி வக்கீல்ஜெனிப்பர் பார்க்கர்அம்பிகா
கடத்தல் காரன்மைக்கேல் மொரெட்டிசத்தியராஜ்
பழம்பெரும் வக்கீல்நாகேஷ்
கடத்தல் காரர்கள்??? நிழல்கள் ரவி, ரகுவரன் (சரியாக ஞாபகம் இல்லை)
ஆனால் படம் அப்பட்ட பிரதி கிடையாது. “தமிழ் கலாச்சாரத்திற்கு” ஏற்ப சில / பல மாறுதல்களை உடையது. முக்கியமாக ஆங்கில கதையில் வக்கீலுக்கும் கடத்தல்காரனுக்கும் உடலுறவு உண்டு. தமிழில் கிடையாது

அதே போல் ஜெனிப்பர் ஆடம் வார்னரை காப்பாற்றுகிறாள் என்று தெரிந்தவுடன் மைக்கேல் ஆடமுடன் அவளையும் கொல்ல முயற்சிப்பார். தமிழ் கதையிலோ நாயகி விதவையாகிவிடுவாள் என்று எண்ணி கடத்தல் காரன் அரசியல்வாதியை கொல்ல மாட்டார் . (ஆகா 1980களில் என்னமா செண்டிமெண்டா கலக்கியிருக்கிறார்கள்)

மக்கம் என் பக்கம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் கதையை இங்கு காணலாம். அந்த சுட்டியில் உள்ள மறுமொழிகளை படித்தால் இந்த கதையை சுட்டு மலையாளத்தில் ஒரு படம் எடுத்த கதை வேறு தெரிகிறது. என்னத்த சொல்ல. பி.எ.பெ.பொ.தி.அ தான்

இதே போல் சுட்ட கதை பற்றிய எனது இடுகை

Sunday, September 21, 2008

பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் பற்றி ஒரே போலிருக்கும் இரு கதைகள்

இந்த கதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்
  • ஒரு சின்ன பையன் இருக்கிறான்.
  • சின்ன வயசிலேயே அவனுக்கு தப்பு செய்கிறவர்களை பார்த்தால் பிடிப்பதில்லை
  • அதனால் அவன் பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயால் பாதிக்கப்படுகிறான்
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரம் ஒரு நபரைப்போலவும், மற்ற நேரங்களில் வேறு நபரைப்போலவும் நடந்து கொள்வார்கள்
    • அவர்கள் தாமாகவே நடந்து கொள்வது முதன்மை தன்முனைப்பு என்று அழைக்கப்படும்.
    • வேறு நபரைப்போல் நடந்து கொள்வது மாற்று தன்முனைப்பு என்று அழைக்கப்படும்.
    • அப்படி தாம் இரு வேறு நபர்களாக நடந்து கொள்வதே அவர்களுக்கு தெரியாது
    • சிலர் ஒரு முதன்மை தன்முனைப்பும், ஒரு மாற்று தன்முனைப்பும் உடையவர்களாக இருப்பார்கள்
    • வேறு சிலரோ ஒரு முதன்மை தன்முனைப்பும் பல மாற்று தன்முனைப்புகளும் உடையவர்களாக இருப்பார்கள்
  • நம் கதையின் நாயகன் இயல்பில் பயந்த சுபாவம் உள்ளவன். 
  • ஆனால் அவனது அடுத்த மனோபாவமோ (மாற்று தன்முனைப்போ) எந்த பயமும் இல்லாமல் தவறு செய்பவர்களை (அல்லது அவர்கள் தவறு செய்வதாக நாயகன் நினைப்பவர்களை) கொல்கிறது
  • ஆனால் இந்த கொலைகளை தான் தான் செய்கிறோம் என்று கதாநாயகனுக்கு தெரியவில்லை.
  • ஆனால் கதாநாயகனுக்கு தெரிந்த குற்றவாளிகள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள்
  • இந்த நேரத்தில் வாலிப வயதில் நம்ம கதாநாயகன் ஒரு பெண்ணைக்காதலிக்கிறான். ஆனால் இதில் கூட பயம் தான்
  • இங்கு கூட மாற்று தன்முனைப்பு தான் வேலை செய்கிறது 
  • நம் கதாநாயகன் மாற்று தன் முனைப்பு பாத்திரமாக ஒரு பிராணியின் மேல் வருகிறான்.
இந்த கதை என்ன வென்று தெரிகிறதா.

இந்திரா சௌந்திரராஜன் எழுதி, பின்னர் நாகா அவர்களின் இயக்கத்தில் மின்பிம்பங்களின் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் 1998-1999 சக்கைபோடு போட்ட “மர்ம தேசம் - விடாது கருப்பு” என்ற தொலைக்காட்சி தொடரின் கதை தான் இது. அதற்கு முன்னர் வந்த விட்டு விடு கருப்பா தொடர்கதையின் கதை யோட்டம் சிறிது மாறுபட்டது

இந்த தொடரின் கதாசரியரின் பெயரையும், அல்லது அதை மேலும் மெருகேற்றிய இயக்குனர் நாகாவின் பெயரையும்  “பெயருக்கு கூட குறிப்பிடாமல்” அதே போல் “சுயமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட” மற்றொரு கதை 2005 திரைப்படமாக எடுக்கப்பட்டது கூட உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

களம்முதலில் (1997) வந்த கதைஅடுத்து (2004) வந்த கதை
கதாநாயகனின் மாற்று தன்முனைப்பு பாத்திரத்தின் வாகனம்மிருகம் (குதிரை)மிருகம் (எருது)
பாத்திரத்தின் பெயர்கருப்புStranger in Black
தப்பு செய்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுகிறார்களாஇல்லைஇல்லை
யார் தண்டிக்கப்படுகிறார்கள்கதாநாயகனுக்கு தெரிந்தவர்கள் மட்டும்கதாநாயகனுக்கு தெரிந்தவர்கள் மட்டும்
தண்டனைஅனைவருக்கும் ஒன்று தான். நபரை பொருத்து மாறுகிறது.

இன்றைய கேள்வி 1:
சும்மா தூங்குபவர்களை கூட கொல்லும் அந்நியன் திறமையை பின் தள்ளி சிபாரிசுக்கு முன்னுரிமை அளிக்கும் சபா அலுவலரை கொல்லாதது போல் சுஜாதாவும் சங்கரும் கதை அமைத்தது ஏன்.

இன்றைய கேள்வி 2:
தேவாவை ஜெராக்ஸ் கடை என்று கேலிச்ய்பவர்களில் / எழுதுபவர்களில் “சிலர்” இதுபோன்ற ”சில” அப்பட்டமான அறிவு திருட்டுக்களை கண்டு கொள்ளாதது ஏன்.

இன்றைய ஆதங்கம் 1:
தண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம்  செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று மாறும்

Monday, September 15, 2008

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியின் சின்னமும் குறிக்கோளுரையும் என்னவென்று தெரியுமா

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியின் சின்னம் (Official Emblem) இது தான்:



இந்த சின்னத்தில் நெல், அஸ்லெப்பியசின் தடி,  கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனபதை குறிக்கும் ஆங்கில வார்த்தைகள் ஆகியவை உள்ளன

  • அஸ்லெப்பியசின் தடி பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு செல்லவும்
  • நெல் என்பது திரு“நெல்”வேலியை குறிப்பதற்கு. இது போல் மதுரை மருத்துவகல்லூரியின் சின்னத்தில் மேலே மீனும், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியின் சின்னத்தில் முத்தும் உள்ளன. காரணம் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்  
  • ஆங்கில வார்த்தைகள் குறிக்கோளுரையை வெளிப்படுத்துகின்றன. வேறு சில மருத்துவக்கல்லூரிகளின் குறிக்கோளுரைகள் பின் குறிப்பு மூன்றில் உள்ளன

குறிக்கோளுரை : கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

இந்த விபரங்களை இன்று பதிய வேண்டிய காரணம் புரியாதவர்களுக்காக பின் குறிப்பு 1 தரப்பட்டுள்ளது

பின் குறிப்பு 1 : இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்

பின் குறிப்பு 2 : Motto என்ற ஆங்கில சொல்லுக்கு ஈடான தமிழ்சொற்கள்
  • குறிக்கோளுரை 
  • இலக்குவாசகம்
  • வழிகாட்டிக் கொள்கை
பின் குறிப்பு 3 : சில மருத்துவக்கல்லூரிகளின் குறிக்கோளுரைகள்
  • சென்னை மருத்த்வக்கல்லூரி - குணப்படுத்த பயில் - Learn to Heal
  • கிருத்தவ மருத்துவ கல்லூரி, வேலூர் - வேலை வாங்க அல்ல, வேலை செய்ய - Not to minister, but to be ministered - இந்த குறிக்கோளுரை புரியாதவர்களுக்கு மட்டும் அடுத்த பின் குறிப்பு வழங்கப்படுகிறது
பின் குறிப்பு 4 : Minister என்ற ஆங்கில சொல்லின் அர்த்தங்கள்
  • அடுத்தவருக்கு வேலை செய்பவர் Someone who serves others.
  • பொது சேவைக்காக அரசால் பணியமர்த்தப்படுபவர் A person who is commissioned by the government for public service.
  • கோவில் பணிகளை செய்ய பயிற்சிப்பெற்றவர் A person who is trained to perform religious ceremonies at a Protestant church.

Saturday, September 13, 2008

அவசர உதவிக்கு 108 !!! - அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் இலவசஅவசர மருத்துவ ஊர்தி சேவை ஆரம்பம் - விபரங்கள் மற்றும் சில கருத்துக்கள்

இது என்ன சேவை



விபத்து, மற்றும் பிற மருத்துவ அவசரங்களுக்கு தொலைபேசியிலிருந்தோ அல்லது கைபேசியிலிருந்தோ 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டிற்கு அல்லது விபத்து நடந்த இடங்களுக்கு ஒரு பிணியாளர் ஊர்தி (Ambulance) வரும். அவர்களே காவல்துறை (Police), மற்றும் (தேவைப்பட்டால்) தீயனைப்பு துறையினருக்கும் தெரிவித்து விடுவார்கள்.



இந்த சேவை முற்றிலும் இலவசம்



அவசர பிணியாளர் ஊர்தி சேவை துவக்க விழா அழைப்பிதழை கீழே காணலாம்





இந்த திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டவுடன் இந்த சேவை குறித்து நான் சில இடுகைகளை எழுதியிருந்தேன். உயிர்காக்கும் விஷயமான இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ள் வேண்டும் என்பதால் ஏற்கனவே கூறியிருந்த கருத்துகள் சிலவற்றையும் மேலும்  சில புதிய கருத்துக்களையும் இந்த இடுகையில் தருகிறேன்.



இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பதிவர்கள் அனைவரும் உதவ வேண்டுகிறேன். இது குறித்து நீங்களும் ஒரு இடுகை எழுதலாம். அல்லது இந்த விபரத்தை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். குருவி, குசேலன் குறித்த குறுஞ்செய்திகளுக்கு நடுவில் “அவசர உதவிக்கு 108” என்பதையும் அனுப்பலாம். அதனால் இந்த சற்றே நீளமான பதிவை சிறிது நேரம் செலழித்தாவது வாசியுங்களேன்



இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முன்னிலையில் 6.5.2008 அன்று தலைமைச் செயலகத்தில் கையொப்பமிடப்பட்டது.



இந்த ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர், திரு. பி.டபிள்யூ.சி. டேவிதார், இ.ஆ.ப., மற்றும் எம்ரி சார்பாக திரு. வெங்கட், முதன்மை நிர்வாக அலுவலர் எம்ரி ஆகியோர் கையொப்பமிட்டனர். மேலும் விபரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கலாம்



இத்திட்டத்தில் செயல்படுத்தப்படும் பிணியாளர் ஊர்திகள் இது போல் தான் இருக்கும்







-oOo-
கீழே உள்ள படங்களில் உள்ளவர்களை நீங்கள் அறிந்திருக்கலாம்.













முதலில் ஒரு அரசியல்வாதி, அடுத்து ஒரு பாடகர், அடுத்து ஒரு எழுத்தாளர், கடைசியாக ஒரு தொழிலதிபர்......



ஏன் சம்பந்தம் இல்லாமல் நான்கு படங்கள் ??

என்ன தொடர்பு என்கிறீர்களா ???



-oOo-


இதில் முதல் மூன்று நபர்களுடன் எனக்கு பழக்கம் கிடையாது. ஆனால் (ஆரெம்கேவி) திரு விஸ்வநாதனுடன் பழக்கம் உண்டு . ரொட்டரி குழுமம் நடத்தும் வினாடி வினா போட்டிகளுக்கு அவர் தவறாமல் வருவார். பல போட்டிகளை அவர் நடத்தியுள்ளார். (அவர் ஐ.ஐ.டியில் பயின்றவர்.) பள்ளி பருவத்திலும் பின்னர் கல்லூரியில் படிக்கும் பொழுதும் அதில் கலந்து கொண்டு நான் பரிசு வாங்கியுள்ளேன். பின் கல்லூரிகளுக்கு இடையிலான க்லைநிகழ்ச்சிகளில் நானும் வினாடி வினா நடத்த ஆரம்பித்த பொழுது பழக்கம் அதிகரித்தது



2000 ஆம் ஆண்டு நெல்லை சாரா டக்கர் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்பொழுது ஆரெம்கேவி என்ற எழுத்துகளில் ஆர் என்ற எழுததுக்கு சரியான விளக்கம் அளித்தால் ஒரு பட்டு புடவை பரிசு என்று அறிவித்தார்.



பலரும் ராமனிலிருந்து ரகீம் முதல் ராபர்ட் வரை அனைத்து பெயர்களையும் கூறினார்கள்.



எதுவுமே சரியில்லை என்று கூறியபின் அந்த எழுத்து எப்படி வந்தது என்று குறிப்பிட்ட காரணம் கிடையாது என்றும் அவர் கேட்டது ”ஒரு விடையில்லா கேள்வி” என்றும் வினாடி வினாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை உண்டு, கல்லூரி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விடை உண்டு, ஆனால் வாழ்க்கையில் எழும் இது போல் பல கேள்விகளுக்கு விடை கிடையாது என்றும், எனவே மாணவர் பருவம் முடிந்து கல்லூரியை விட்டு வெளியேறியபின் விடையில்லா கேள்விகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியது மறக்க முடியாதது



பல வருடங்கள் கழித்து 2005 கடைசியில் (அல்லது 2006 ஆரம்ப மாதங்களில் - சரியாக ஞாபகம் இல்லை) அவர் நெல்லை அருகில் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டவுடன் எனக்கு தோன்றிய கேள்வி “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் நாம் இது போல் சாலை விபத்தில் நண்பர்களை, உறவினர்களை பலி கொடுக்க போகிறோம்”.......



அன்று அது ஒரு விடை யில்லா கேள்வியாகத்தான் இருந்தது.... ஆனால் இப்பொழுது விடை கிடைத்துள்ளது.



பிணியாளர் ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதில் நிறைந்த அனுபவம் பெற்றுள்ள எம்ரி (EMRI) நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்திடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



எம்ரி நிறுவனம் சென்னையில் ஒரு மத்திய அவசர கால செயல்பாட்டு நிலையம் (Emergency Response Center) ஒன்றை அமைத்து அதன் வாயிலாக இந்த அவசரகால சேவையில் ஈடுபடும். மருத்துவம், தீ விபத்து மற்றும் காவல்துறை சம்பந்தமான அனைத்து அவசர தேவைகளுக்கும் கட்டணம் இல்லா தொலைபேசி தொடர்பு எண் 108 மூலம் இந்த மையத்தை மக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும். எம்ரி (EMRI) நிறுவனம் எந்தவிதமான லாபமும் இல்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும். சேவை மனப்பான்மையுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதுடன், தொடரும் செலவினத்தில் ஐந்து சதவிகிதத்தை தங்களுடைய பங்களிப்பாகவும் ஏற்றுக்கொண்டு எம்ரி (EMRI) நிறுவனம் அவசரகால ஊர்தி சேவையைச் செயல்படுத்தும்.



இத் திட்டத்தில் மத்திய அவசரகால செயல்பாட்டு நிலையத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றும் மருத்துவர், காவல்துறை அலுவலர், தீ அணைப்பு அலுவலர் ஆகியோர் தங்கள் துறை சார்ந்த அவசரகால அழைப்புகள் வருகின்றபொழுது, அவற்றின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு உதவிகள் உடனுக்குடன் சென்றடைய ஆவன செய்வர். இந்த நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் (எம்ரி) "இ.எம்.ஆர்.ஐ." (EMRI) நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும்.



இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் முதலியோரைத் தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, பணியமர்த்தும் பொறுப்பு எம்ரி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



முதல்கட்டமாக, தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் வாயிலாக 198 அவசரகால ஊர்திகளை வாங்கி, குளிர்சாதன வசதியுடன் அவசரகாலப் பராமரிப்பிற்குத் தேவையான உபகரணங்களை பொருத்தி "இ.எம்.ஆர்.ஐ." (EMRI) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனம் அவசரகால ஊர்திகளை முதல் கட்டத்தில் 14 மாவட்டங்களில் தொடங்கி, பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும். ஒவ்வொரு ஊர்தியிலும் அவசரகாலத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பணியாளரும், ஒரு ஓட்டுநரும் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அவசரகாலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்கின்ற நேரத்தில் தேவையான அறிவுரைகளை மத்திய செயல்பாட்டு நிலையத்திலுள்ள (Emergency Response Center) அவசரகாலச்சிறப்பு மருத்துவரின் அறிவுரையைப் பெறுவர். இந்த ஊர்தியை எந்த ஒரு மருத்துவம் சார்ந்த அவசரகாலத் தேவைக்கும் மக்கள் பயன்படுத்துவதற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.



இந்த அவசரகால ஊர்தியில், அந்த வண்டியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களுடன் "புவிநிலை கண்டறியும் கருவி" (GPS) யும் பொருத்தப்படும். மாவட்ட அளவில் இயங்கும் அவசர கால ஊர்திகளைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார். அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களும் மாநில அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளரால் கண்காணிக்கப்படுவார்கள். மேலும் இவர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள மருத்துவமனைகளைப் பார்வையிட்டு அந்த மருத்துவமனைகளை இத்திட்டத்தில் இணைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வார்கள்.



இத்திட்டத்திற்காக ஆலோசனை வழங்க, மாநில அளவில் தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மாவட்ட அளவில் இத்திட்டத்தின் நடைமுறையை நிர்வகிக்கத்தேவையான ஆலோசனைகளை வழங்கும்.



இத்திட்டத்திற்காகத் தேவைப்படும் கட்டடம், தொழில்நுட்பக் கருவிகள், தளவாடச் சாமன்கள் முதலியவற்றிற்காக முதல் ஆண்டில் 22 கோடியே 89 இலட்ச ரூபாயையும், நிர்வாகச் செலவினம், ஊதியம், எரிபொருள் செலவு, மருத்துவச்செலவு, பராமரிப்புச் செலவு, காப்பீட்டு செலவு, பயிற்சி, விளம்பரம் முதலிய செலவினங்களுக்காக 13 கோடியே 13 இலட்சம் ரூபாயையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.



-oOo-


மருத்துவத்துறையில் நாம் வெகுவாக முன்னேறியுள்ளோம்





  • அமெரிக்க அதிபருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை சென்னையில் (காசு கொடுத்தால்) கிடைக்கிறது !!






  • காத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (அமெரிக்காவில்) கிடைக்காத பொது சுகாதார மேலாண்மை கூட நாகை மக்களுக்கு சுனாமிக்கு பின் (காசு கொடுக்காமலே) கிடைத்தது. (ஒரு சொசுறு செய்தி : புயல் பாதித்த பின் அங்குள்ள மீட்பு பணிகளுக்கு ஆலோசனை வழங்க நாகப்பட்டினம் சுகாதார அலுவலர் அமெரிக்கா சென்றது பலருக்கு தெரிந்திருக்காது. ஒரு மாநில முதல்வரின் சிறுநீரக கோளாறுக்காக அமெரிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்ட இருபது ஆண்டுகளுக்கு உள்ளாகவே, இங்குள்ள நிபுணர் அமெரிக்க சென்று ஆலோசனை வழங்கும் அளவு நமது (தமிழக) பொது சுகாதார துறையின் பணி சிறப்பாக இருக்கிறது என்பது என் போன்ற பொது சுகாதார துறையில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர்கள் “பீட்டர் விடும்” விஷயம்)




ஆனால்



  • அமெரிக்காவில் ஒரு சாதாரண மரம் வெட்டும் தொழிலாளி மரம் வெட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது மரம் விழுந்து விட்டது என்றால் அவருக்கு கிடைக்கும் அவசர சிகிச்சை - உடனடியாக ஒரு பிணியாளர் ஊர்தி (சீருந்து அல்லது உலங்கு வானூர்தி - ஹெலிகாப்டர்), பிணியாளர் ஊர்தியிலேயே சுவாச சிகிச்சை, இரத்தம் அல்லது பிற திரவங்கள் ஏற்றுதல் போன்றவை இங்கு (பாரதத்தில்) ஒரு சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால் அம்பானிக்கு கூட கிடைத்ததில்லை :( :( :(


  • முதல்வரோ, பிரதமரோ வந்தால் அங்கு பிணியாளர் ஊர்தி (என்ற பெயருடன் வாகனம்) ஒன்று இருக்கும். ஆனால் அந்த வாகனத்திற்கும் பிற வாகனகங்ளுக்கும் வெளியில் எழுதியிருக்கும் பெயரை தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது


  • இது நாள் வரை நாம் பிணியாளர் ஊர்திகளை ஒரு “வாகனமாகத்தான்” (நோயாளியை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற) பயன்படுத்தினோமே தவிர பிணியாளர் ஊர்தியில் சிகிச்சை என்பது கிடையாது




மிக சமீபகாலங்களில் தான் சில தனியார் மருத்துவமனைகளில் முழு வசதிகளுடன் பிணியாளர் ஊர்திகள் வாங்கப்பட்டன.



-oOo-


பிணியாளர் ஊர்தியில் அவசர சிகிச்சைக்கு தேவை யான கருவிகள் இருந்தால் போதுமா, அதை யார் உபயோகிப்பார் ? ஓட்டுனரா....



துரதிருஷ்டவசமாக இது நாள் வரை பிணியாளர் ஊர்தியில் பயிற்சி பெற்றவர் கிடையாது.



மேலே நாடுகளில் ஈ.எம்.டி - எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னிசியன் - அவசர கால மருத்துவ நுட்பனர் என்று தனியாக நபர்கள் உண்டு,.



அவர்கள் முதலுதவியில் மட்டுமே பயிற்சி பெற்றிருப்பார்கள். நமது நாட்டில் இது நாள் வரை அப்படி கிடையாது.



ஒன்று ஒட்டுனர் மட்டுமே இருப்பார். அல்லது அவசர சிகிச்சை அளிக்க போதிய பயிற்சி இல்லாத எப்.என்.ஏ அல்லது எம்.என்.ஏ போன்றவர்கள் இருப்பார்கள். சில இடங்களில் செவிலியர் இருப்பார்கள் (செவிலியரின் பணி மருத்துவமனையிலும் தேவைப்பட்டால் அன்று அவரி பிணியாளர் ஊர்தியில் இருக்க மாட்டார்). அன்று விபத்தில் சிக்குபவர் பாடு திண்டாட்டம் தான்.



-oOo-


தமிழகத்தில் எம்ரி நிறுவனத்தால் நடத்தப்பட இருக்கும் அவசர கால பிணியாளர் ஊர்தி திட்டத்தின் சிறப்புகள்





  1. முற்றிலும் இலவசம்


  2. ஒரே எண் 108 - எந்த தொலைபேசியிலிருந்தும், செல்லிடப்பேசியிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம் (நடைமுறைபடுத்தப்பட்ட பின்)


  3. பிணியாளர் ஊர்தியிலேயே வைத்தியம் ஆரம்பம்


  4. கட்டுப்பாட்டு அறையில் உள்ள மருத்துவரிடம் (ஊர்தி பணியாளர்) சந்தேகம் கேட்கலாம். அவரது ஆலோசனை படி சிகிச்சை நடக்கும்


  5. தமிழகம் முழுவதும் ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்


  6. ஒட்டுனர் மற்றும் மருத்துவ நுட்பனருக்கு பணியில் சேரும் பொழுது பயிற்சி மட்டும் அதன் பின்னும் தொடர்ந்து பயிற்சி (6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை)


  7. ஒரு ஓட்டுனரோ அல்லது மருத்துவ நுட்பனரோ விடுப்பு அல்லது வார ஓய்வு அல்லது பயிற்சியில் இருந்தாலும் ஊர்தி சேவை பிற ஓட்டுனர்களை அல்லது நுட்பனர்களை வைத்து தொடர்ந்து நடக்கும்




மேலதிக தகவல்களை வரும் நாட்களில் விளக்கமாக எழுதுகிறேன்.



சந்தேகங்களை கேட்கலாம் :) :) :)

Monday, September 08, 2008

வயலினை பேச வைத்த இசை மேதைக்கு மௌன அஞ்சலி

பலரும் வயலினை இசைப்பார்கள். ஆனால் வயலினை பேச வைத்த வெகு சிலரில் ஒருவரான குன்னக்குடி வைத்தியநாதன். தனது 73ஆம் வயதில் இயற்கை எய்தியுள்ள அவருக்கு ஒரு மௌன அஞ்சலி
படம் http://www.sooryafest.org/images/nov2006/kunnakudi_gif.gif என்ற தளத்தில் உள்ளது
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...