இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
Showing newest 15 of 23 posts from October 2008. Show older posts
Showing newest 15 of 23 posts from October 2008. Show older posts

Sunday, October 26, 2008

* 20 - சமூக மருத்துவம் - நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் Water Washed Diseases or Water Scarce Diseases

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க
நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) என்பவை தண்ணீர் பற்றாக்குறையால் தனிமனித சுகாதாரம் பேண முடியாததால் ஏற்படும் நோய்கள் .

குளிப்பதற்கு அல்லது முகம் கழுவதற்கு போதிய நீர் இல்லாத இடங்களில் இந்த பிணிகள் ஏற்படுகிறது

கருவிழித் தொற்று / விழிவெண்படலத் தொற்றுநோய் / திராக்கோமா / கண்ணிமை நோய் / இமைப்புண் / Trachoma :
  • கிளைமிடியா டிராக்கொமாட்டிஸ் (Chlamydia. trachomatis) என்ற நுண்ணுயிரினால் வருவது இது
  • கண்பார்வை பறிபோக காரணமாக இருக்கும் ஒரு நோய்.
  • உங்கள் / குழந்தைகளின் கண்ணின் மேல் இமையில் இது போலிருந்தால் நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகவேண்டும் (இந்த ப்டம் கண் இமையை திருப்பி எடுக்கப்பட்டது

  • தமிழகத்தில் இந்த நோயின் பாதிப்பு குறைவு.
  • அடிக்கடி குளிக்காத வட இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் இது
சார்காப்டிஸ் வகைச் சொறிப் பாதிப்பு /வங்குநோய் / அளவன் / சொறிசிரங்கு / ஸ்கேபிஸ் :
  • இது தோல் நோய்.
  • தினமும் குளிக்காததால் வரக்கூடியது.
  • தோல், விரலிடுக்குகள், அரைகள் ஆகிய இடங்களில் அறிப்பும், தடிப்பும் ஏற்படலாம்

  • குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அனைவருக்கும் பரவக்கூடியது
  • மாணவர் விடுதிகள், பள்ளிகள், காவல்துறை பயிற்சி பள்ளி போன்ற இடங்களில் அனைவரையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடியது
  • குடும்பத்தில் / விடுதியில் அனைவரும் ஒரே நேரத்தில் வைத்தியம் பார்க்க வேண்டும்
  • மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது சிறந்தது.
  • சிகிச்சைக்கு முன்னர் அணிந்த ஆடைகளை சிகிச்சை பெற்ற பின் ”இஸ்திரி போட்டு” தான் அணிய வேண்டும் 
படர்தாமரை / வளையப்புழு / Ringworm :
  • இதுவும் தோல் நோய்தான்.



  • படர்தாமரையால் பாதிக்கப்பட்டு பல ஆயிண்ட்மெண்டகள், க்ரீம்கள் வாங்கி போட்டும் பலன் இல்லாமல் அவதிப்படவேண்டியவர்கள் செய்ய வேண்டியது
  1. உள்ளாடைகளை வெயிலில் காய வைக்க வேண்டும்
  2. தினமும் குளிக்க வேண்டும்
  3. மெடிமிக்ஸ் சோப்பு உபயோகிக்கவும்
  • இதன் பின்னரும் பலனில்லை என்றால் மருத்துவரை அனுகவும்
தொடர் நிறைவு பெற்றது :)

* 19 - சமூக மருத்துவம் - நீருடன் தொடர்புடைய பிணிகள் Water related Diseases

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க
நீருடன் தொடர்புடைய பிணிகளை (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) - இந்த நோயை பரப்பும் கிருமிகள் நீரில் இருக்கும் அல்லது நீரில் வளரும். (Insect Vector Breeds in Water) உதாரணம் மலேரியா, சிக்குன்குனியா

என்னது, மலேரியா நீரினால் பரவும் நோயா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம்
  • மலேரியா பரவ வேண்டுமென்றால் கொசு வேண்டும்
  • கொசு வேண்டுமென்றால் கொசு முட்டை வேண்டும்,
  • கொசு முட்டை எங்கு இடப்படும் தெரியுமா, நீரில் தான்.
அதனால் தான் இதை நீரினால் பரவும் நோய் என்று கூறாமல் நீருடன் தொடர்புடைய நோய் என்று கூறுகிறோம்

கொசுவினால் பரப்பப்படும் நோய்கள் பல இருக்கின்றன. அதேப்போல் கொசுக்களும் பல இருக்கின்றன. இப்பொழுது ஒரு சிறிய அட்டவனையை பார்ப்போமா

கொசு வகை
பரப்பும் நோய்
முட்டையிடும் இடங்கள்
அனாபிலஸ்
மலேரியா
சுத்தமான நீர் (வயல்வெளிகள்)
கியூலக்ஸ்
யானைக்கால் நோய்
அழுக்கு நீர் (சாக்கடை)
ஏடிஸ்
சிக்குன்குனியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல்
செயற்கையாக தேங்கும் நீர் (டின்கள், தேங்காய் சிரட்டை, குளிர்சாதன கருவியிலிருந்து ஒழுகும் நீர்கள், மொட்டைமாடியின் ஓரத்தில் தேங்கும் நீர், டயர்களுக்குள் தேங்கும் நீர்

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்

சிக்குன் குனியாவை பரப்பும் கொசுவானது சாக்கடை நீரில் வளர்வதில்லை. சாக்கடையே இல்லையென்றால் கூட உங்கள் வீட்டு மொட்டை மாடியில் டயரோ, தேங்காய் சிரட்டையோ, குளிர்சாதன பொறியில் இருந்து விழும் நீரோ, ஆட்டு உரலோ இருந்தால் போதும். ஏடிஸ் வகை கொசுக்கள் பல்கி பெருகிவிடும்

அதேப்போல் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு விஷயம், சாக்கடை அடைப்பில்லாமல் இருப்பதோ அல்லது கழிவு நீர் தேங்காமல் பார்க்க வேண்டியது அரசின் பணி. ஆனால் ஏடிஸ் வகை கொசுக்களின் பரவலைத்தடுப்பது அரசால் மட்டுமே இயலக்கூடிய காரியம் அல்ல
இதில் பொது மக்களின் பங்கு தான் முக்கியம்

சரி

மலேரியாவிலிருந்து உங்களை எப்படி பாதுகாப்பது.

இரண்டு வழிகள் இருக்கின்றன

1. பிளாஸ்மோடியத்திலிருந்து உங்களை பாதுகாக்க
2. கொசுவிலிருந்து உங்களை பாதுகாக்க

பிளாஸ்மோடியத்திலிருந்து பாதுகாக்க : இது மிகவும் பலனுள்ள முறை என்றாலும், மிக குறுகிய காலங்களில், கொசுவிலிருந்து பாதுகாக்க முடியாத சூழலில் மட்டுமே பயன் படுத்த வேண்டும். முக்கியமாக மருத்துவர்கள் / மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் மலேரியா பாதிப்புள்ள இடங்களுக்கு செல்லும் போது இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். இயற்கை சீற்றங்களின் போதும் இது பலனளிக்கக்கூடியது. இது நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற முறை அல்ல

கொசுவிலிருந்து பாதுகாப்பது : இது தான் நடைமுறைக்கு ஏற்றது. மேலும் இது மலேரியா மட்டுமல்லாது கொசுவினால் பரவும் பிற நோய்களின் ப்ரவலையும் தடுக்கிறது
  • இதில் சிறந்த முறை : கொசு வலை தான் !!! அதிலும் உங்கள் படுக்கை அறையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தூங்குகின்றன என்றால் (ஆகா 90 சதவித பதிவர்கள் இதற்குள் வருவார்கள். பலருக்கு மகன்/ மகள். சிலருக்கு பேரன் பேத்தி ) இந்த வழிமுறைதான் சிறந்தது
  • க்ரீம்கள் பலருக்கும் பிடிப்பதில்லை.
  • கொசுவர்த்தி சுருள் / பட்டைகள் / திரவங்கள் - இவை குழந்தைகளுக்கு ஏற்றவை அல்ல :(

இதை எல்லாவற்றையும் விட சிறந்த முறை எது தெரியுமா : கொசு வளர ஏற்ற சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது தான்

சந்தேகங்களை கேட்கலாம்

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகையை வாசிக்க

* 18 - சமூக மருத்துவம் - நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி - How Guinea worm was eradicated in Tamil Nadu

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க
1981 முதல் 1990 பத்தாண்டுகளை ஐ.நா சபை சர்வதேச குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார பத்தாண்டு (International Drinking Water Supply and Sanitation Decade ) என்று வரையறுத்தவுடன் ஏற்கனவே பெரியம்மையை “ஒழித்தி”ருந்த அனுபவமும் உற்சாகமும் கை கொடுக்க நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்த கிளம்பிவிட்டனர்

அப்பொழுது இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த நோய் அதிக அளவில் இருந்தது
  1. ராஜஸ்தான்
  2. குஜராத்
  3. ஆந்திர பிரதேசம்
  4. மத்திய பிரதேசம்
  5. மகாராஷ்ட்ரா
  6. கர்நாடகா
  7. தமிழ்நாடு
இந்தியாவிலும் இந்த திட்டம் 1980 முதல் செயல்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள். 
இந்தியாவில் 1983ஆம் ஆண்டு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44819
1984ல் ஒரு மாநிலத்திலிருந்து இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது
  • 1984ல் 89 மாவட்டங்களில் 12840 கிராமங்களில் 39,792 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்
  • 1986ல் உலக சுகாதார சபை நரம்பு சிலந்தியை ஒழிப்பது என்று தீர்மானம் இயற்றிய போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22610வாக குறைந்திருந்த்து.
  • 1987ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17031.
  • 1988ல் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணமடைந்திருந்தனர். அப்பொழுது கூட ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது
பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திலிருந்து நாலே வருடங்களில் நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்தது

  • 1996ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து 3 கிராமங்களில் 9 பேர்களிட தான் நரம்பு சிலந்தி கடைசியாக காணப்பட்டது
  • 1999 வரை ஏழு முறை இந்த திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 1999ல் கடைசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
  • உலக சுகாதார நிறுவனத்தில் நிபுணர் குழு 1999 நவம்பர் 9 முதல் 25 வரை ஆய்வு செய்தனர்
  • அதன் பின்னர் 2000 இந்தியாவில் இந்த நோய் இல்லை (eliminated) என்ற சான்று வழங்கப்பட்டது
  • 2001 பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய நரம்பு சிலந்தியற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது (free of guinea worm)
  • முதன் முதலாக இந்த சான்றை பெற்ற ஆசிய நாடு நாம் தான்


இதை எப்படி சாதித்தார்கள்
நரம்பு சிலந்தியின் வாழ்க்கை சுழற்சியை பார்த்தோம்.இப்பொழுது மீண்டும் அதில் முக்கியமான பகுதிகளை பார்ப்போம்
  1. குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல்
  2. காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல்
ஆக இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழுவால பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுவதை தடுத்தல்
  1. ஆழ்துளை கிணறுகளை அமைத்தல்
  2. கைபம்புகளை அமைத்தல்
  3. தண்ணீரை காய்ச்சுதல்
  4. வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடித்தல்
காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுவதை தடுத்தல்
  1. படி கிணறுகளை மூடி ஆழ்துளை கிணறுகள் அமைத்தல்

அவ்வளவு தான் :) :) மருந்தில்லை, மாத்திரையில்லை, கத்தியில்லை, ரத்தமில்லை :)

ஏற்க்னவே பார்த்தப்படி ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்.
அதன் பிறகு தான் வாழ்க்கை முறை மாற்றம் (life style modification) என்பது பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டது. நீரிழிவு நோய் என்றால் மாத்திரை / இன்சுலின் என்பதற்கு பதில் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்றும் இரத்த அழுத்தம் என்றால் உப்பு கட்டுப்பாடு , தியானம் என்றும் மாற தூண்டுகோலாக இருந்தது இந்த நிகழ்வு தான்
நுரையீரல் புற்றுநோயை தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததும், எய்ட்ஸை தடுக்க ஆணுறை, புள்ளி ராஜா விளம்பரங்கள் கூட வாழ்க்கை முறை மாற்றம் சார்ந்த நுட்பங்களே

தொடர்புடைய சுட்டிகள் (மருத்துவர்கள் / பொது சுகாதார துறையினருக்கு மட்டும் தான். மற்றவர்கள் பயப்பட வேண்டாம்)

  1. Watts SJ. Dracunculiasis in Africa: its geographic extent, incidence, and at-risk population. Am J Trop Med Hyg 1987;37:119-25.
  2. http://www.ajtmh.org/cgi/content/abstract/37/1/115
  3. http://www.dailyexcelsior.com/99nov17/edit.htm
  4. Hoeppli R. Parasitic diseases in Africa and the western hemisphere: early documentation and transmission by the slave trade. Acta Tropica 1969;(suppl 10):124-32.
  5. Litvinov SK, Lysenko A. Dracunculiasis: its history and eradication in the USSR. In: National Science Foundation. Workshop on Opportunities for Control of Dracunculiasis. Washington, DC: National Science Foundation, 1982.
  6. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00001528.htm
  7. Kapali V, Sadanand AV, Prakasam J. Eradication of dracontiasis in Tamil Nadu state. J Commun Dis 1984;16:244-6. *Use of trade names is for identification only and does not imply endorsement by the Public Health Service or the U.S. Department of Health and Human Services. **In 1980, several agencies, including the United Nations Development Programme, the World Health Organization, and the World Bank, declared 1981-1990 the "International Drinking Water Supply and Sanitation Decade." A major goal is the provision of safe drinking water to all countries.
  8. http://mohfw.nic.in/kk/95/i9/95i90h01.htm
  9. http://pib.nic.in/archieve/lreleng/lyr2000/rjan2000/r08012000.html
  10. http://www.searo.who.int/EN/Section316/Section503/Section2373_12998.htm
  11. http://www.nihfw.org/ndc-nihfw/html/Programmes/GuineaWormEradicationProgramme.htm

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளை வாசிக்க

* 17 - சமூக மருத்துவம் - நரம்பு சிலந்தி நீரை அடிப்படையாக கொண்ட பிணி் Guinea Worm Water Based Disease

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க
நீரை அடிப்படையாக கொண்ட நோய்கள் பல இருப்பதும் அதில் சிஷ்டோசோமியாசிஸ் என்ற ஒரு வகை நோய் இருப்பதையும் அது எப்படி தாக்குகிறது என்பதையும் பார்த்தோம். அதே போல் அந்த நோய் தமிழகத்தில் பரவலாக கிடையாது என்பதையும், அதற்கு பதில் நரம்பு சிலந்தி என்ற ஒரு நோய் இங்கு இருந்ததையும், தற்போது நரம்பு சிலந்தி தமிழகத்தில் கிடையாது என்றும் பார்த்தோம்

நரம்பு சிலந்தி என்ற நோய் பற்றி இந்த இடுகை. ஏன் இந்த நோய் குறித்து ஒரு தனி இடுகை என்பதை இறுதியில் புரிந்து கொள்வீர்கள் முதலில் இந்த நோய் என்னவென்றே தெரியாதவர்களுக்கு சில படங்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் ஒரு புழு இருக்கும்.

சரி, அப்ப இந்த புழுவை எப்படி வெளியில் எடுப்பது. அதை ஒரு தீக்குச்சியில் (அல்லது ஏதாவது குச்சியில்) சுற்றிக்கொண்டு தினமும் சிறிது சிறிதாக எடுக்க வேண்டும்



சரி, இனி இந்த புழுவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ”படி கிணறுகள்” (step wells) அதிகம் உண்டு. நம் ஊர் போல் கயிறு வாளி எல்லாம் தேவையில்லாமல் கிணற்றில் நேரடியாக இறங்கி நீரை எடுக்க வேண்டியது தான்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் !!

இந்த புழுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிணற்றினுள் இறங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அவரது காலில் இருக்கும் அந்த புழு சிறிது எட்டிப்பார்த்து நீரினுள் லார்வாக்களை விட்டு விடுகிறது. (மற்ற நேரங்களில் லார்வாக்களை வெளியிடாது. மற்ற நேரங்களில் வெளியிட்டால் லார்வாக்களால் பிழைக்க முடியாது என்பதால் அதனால் பலனில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலி புழு அது !!)

அந்த லார்வாக்கள் (இவைகளை L1 லார்வாக்கள் என்று அழைக்கிறார்கள்) சைக்லாப்ஸ் (cyclops) என்னும் சிறிய உயிரினங்களுக்குள் புகுந்து ஒரு 15 நாட்கள் உள்ளே இருந்து வளர்ச்சி பெறுகின்றன. (வளர்ச்சி பெற்ற பின் அவை L3 லார்வாக்கள் ஆகிவிடுகின்றன)

இப்படி இருக்கையில் அதே நீர்நிலைக்கு ஒருவர் வருகிறார். அங்கிருந்து நீரை எடுத்து செல்கிறார். அதை காய்ச்சாமல், வடிகட்டாமல் அப்படியே குடிக்கிறார். சைக்ளாப்ஸும் (அதனுள் இருக்கும் லார்வாவும்) அவரின் வயிற்றிற்கும் செல்கின்றன. சைக்லாப்ஸ் ஜீரணமாகி விடுகிறது. அதனுள் இருக்கும் L3 லார்வா வெளிவருகிறது இரைப்பையின் சுவற்றை துளைத்து சென்று உடலினுள் புகுந்து தோலுக்கு அடியில் வந்து விடுகிறது


9 முதல் 12 மாதங்களில் அவை புழுக்களாகிவிடுகின்றன. அதன் பிறகு இந்த நபர் நீரில் காலை வைத்தால் உடன் L1 லார்வாக்களை வெளியிட்டு, அவை L3
லார்வாக்கள் ஆகி, அந்த நீரை ஒருவர் வடிகட்டாமல் குடித்து அவருடம்பில் மீண்டும் புழுவாக வேண்டியது தான்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்த இந்த நோய் இன்று கிடையவே கிடையாது. இதிலென்ன, ஒரு காலத்தில் பரவலாக இருந்த பெரியம்மையும், போலியோவும் கூடத்தான் இன்று கிடையாது. டெட்டெனஸ், கக்குவான் இருமல் டிப்தீரியா போன்றவையும் வெகுவாக குறைந்து விட்டன என்று நீங்கள் கூறலாம்.

அந்த நோய்களை எல்லாம் நாம் தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்தி பின்னர் காணாமல் ஆக்கியது தடுப்பூசி மூலம் அல்ல. பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே

நோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ ஊசியோ, மாத்திரையோ இல்லாமல் மக்களின் நடத்தை மாற்றம் மூலம் மட்டுமே ”அழிக்க”ப்பட்ட ஒரு நோய் நரம்பு சிலந்திதான்..

ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்.

சரி என்ன செய்து தமிழக்த்தில் இருந்து இந்த நோயை விரட்டினார்கள் என்று பார்ப்போமா
இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளையும் வாசிக்க

* 16 - சமூக மருத்துவம் - நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் Water Based Diseases

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க
நீரை அடிப்படையாக கொண்ட பிணிகளில் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். (A part of the life cycle of the organism causing this disease is in water) உதாரணம்: நரம்புச்சிலந்தி, சிஷ்டோசோமியாசிஸ்

இவ்வகை நோய்களை பற்றி புரிதல் ஏற்பட முதலில் சிஷ்டோசோமியாசிஸின் வாழ்க்கை சுழற்சியை பார்ப்போம். கீழுள்ள படத்தை பாருங்கள். 

மனிதனிடமிருந்து சிஷ். முட்டை வெளிவருகிறது. அது பின்னர் நீரில் மிராசிடியமாக மாறுகிறது. அது ஒரு (நீரில் வாழும்) நத்தையின் உள் சென்று பன்மடங்கு பெருகி செர்காரியாவாக மாறுகிறது.

இந்த செர்காரியாக்கள் நீரில் நீந்திக்கொண்டிருக்கின்றன. மனிதன் அங்கு காலை வைத்தாலோ அல்லது குளித்தாலோ அவை தோலை துளைத்து உடலுக்கு உள்ளே சென்று விடுகின்றன. கீழுள்ள படம் CDCயால் வெளியிடப்படுவது


அப்படி தோலை துளைத்து செல்லும் செர்காரியாக்கள் உடலினுள் சென்ற வுடன் சிஷ்டோசோமாக மாறி, அதன் பிறகு ஆன் புழுவாகவும், பெண் புழுவாகவும் மாறி (சில வகை புழுக்கள்) சிறுநீர்ப்பையிலும், (சில வகைப்புழுக்கள்) உணவுபாதையின் சிரைகளிலும் இருந்து கொண்டு முட்டையிடுகின்றன. இந்த முட்டையானது மலத்திலும், சிறுநீரிலும் வெளிவருகிறது.

இந்த புழுவை உடலில் கொண்ட ஒருவர் ஆற்றில் நின்று கொண்டே மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர்கழித்தாலோ அந்த நீரில் அந்த முட்டைகள் வந்து விடும். பின் அவை மிராசிடியமாக மாறி நத்தைக்குள் சென்று செர்காரியாவாக மாறி அடுத்து வருபவரின் தோலை துளைத்து மீண்டும் மீண்டும் இதே தான் நடக்கும்

இப்பொழுது காலராவிற்கும் இந்த நோயிற்கும் வேறு பாடு தெரிகிறதா

ஒரு நீரில் காலரா கிருமி இருந்தால் உங்களுக்கு காலரா வர நீங்கள் அந்த நீரைப்பருக வேண்டும். இங்கோ அந்த தண்ணீரில் நின்றால் கூடப்போதும் [ஆத்தாடி :( ]

ஆனால் அந்த நீரில் அந்த வகை நத்தை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நத்தை இல்லையென்றால் இந்த நோய் பரவாது

இப்படி ஒரு நோய் நல்ல வேளை தமிழகத்தில் இல்லை. ஆனால் இதைப்போன்ற ஒரு நோயை பாடுபட்டு வெற்றிகரமாக நம் ஊரிலிருந்து “விரட்டி” விட்டோம். அது தான் நரம்பு சிலந்தி

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளையும் வாசிக்க

* 15 - சமூக மருத்துவம் - நீரினால் பரவும் பிணிகள் Water Dispersed Diseases

முன்னுரை வாசிக்க * 14. சமூக மருத்துவம் - நீரும் நோய்களும் - நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை

நீரினால் பரவும் பிணிகள். (Water Dispersed Diseases)

இவ்வகை பிணிகளை பரப்பும் கிருகிகள் நீர் மூலம் பரவுகின்றன. இவ்வகை பிணிகள் பரவுவதற்கு முக்கிய காரணம், மனித மலம் குடிநீரில் கலந்து விடுவது தான்

உதாரணமாக ஒருவரின் வயிற்றில் (உணவுப்பாதையில்) காலரா நுண்ணுயிரி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அங்கு பல்கி பெருகுகிறது. அவர் காலராவால் பாதிக்கப்படுகிறார்.

அதே நுண்ணுயிரி அவரது மலத்தில் வெளியேறுகிறது. அந்த நுண்ணுயிரி எதாவது ஒரு வகையில் அடுத்த நபரின் உணவு பாதைக்குள் சென்றால் தான் அடுத்த நபர் பாதிப்படைவார்

அடுத்தவரின் உணவு பாதைக்குள் காலரா நுண்ணுயிரி எப்படி செல்ல முடியும். அவர் அருந்தும் உணவிலோ அல்லது பருகும் நீரிலோ கலந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

ஆக ஒருவரின் மலம் ஏதோ ஒரு வகையில் அடுத்தவர் உண்ணும் உணவில் / பருகும் நீரில் கலந்தால் பிரச்சனை.

இது எப்படி நடக்கலாம்
  1. சமையல்காரருக்கு / உணவு பரிமாறுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்து அவர் ஒழுங்காக கை கழுவாவிட்டால்
  2. குடிநீர் விநியோக குழாய்களில் சாக்கடை நீர் கலந்தால். (மழைக்காலங்களில் நடப்பது இது தான்)
  3. செப்டிக் டேங்கை சுத்தப்படுத்திய பின் அந்த கழிவுகளை உரமாக பயண்படுத்தி (இது பல இடங்களில் நடப்பது தான்) அதில் விளையும் தானியங்களை அல்லது காய்கறிகளை ஒழுங்காக கழுவாவிட்டால்
காலரா மட்டுமல்ல, டைபாய்டு, போலியோ, கல்லீரல் அழற்சி வகை A (Hepatitis Virus Type A) போன்ற பல நோய்கள் இப்படி தான் பரவுகின்றன

இதைத்தான் ஆங்கிலத்தில் feco oral transmission என்று கூறுகிறார்கள்

இதில் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பிணிகள் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை
  1. வருடத்திற்கு 16 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கிறார்கள்
  2. காலராவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களின் விபரம்

வருடம்
பாதிக்கப்பட்டவர்கள்
மரணமடைந்தவர்கள்
சதவிதம்
1961
62000
30560
49.3
1971
176000
26048
14.8
1981
51000
2448
4.8
1991
595000
19040
3.2
2000
137000
4908
3.6
2003
112000
1894
1.69
2005
131000
2272
1.72


50 வருடங்களுக்கு முன்னால் காலராவால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இறந்து விடும் அளவு நம் நிலைமை இருந்தது. ஆனால் இன்று மருத்துவம் முன்னேறியபின் அது நூறில் இருவர் என்று வந்திருக்கிறதை பாருங்கள். இது நவீன மருத்துவத்தின் சாதனை.

சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். 1961ல் 62000 பேர் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் 2005ல் 131000. இது முன்னேற்றமா அல்லது பின்னடைவா என்ற சந்தேகம் எழுவது இயற்கைதான்
  • 1960ல் மக்கள் தொகை எவ்வளவு. இன்று எவ்வளவு
  • அதில் எத்தனை சதவித மக்கள் நகரங்களில் வசித்தார்கள்
  • அதில் எத்தனை பிணிகள் பதியப்பட்டன 
  • அதில் எத்தனை மரணங்கள் பதியப்பட்டன
என்று சிந்தித்தால் உங்களுக்கே விடை தெரியும்

இது போன்ற நீரினால் பரவும் நோய்களை தடுக்கும் வழிகள்
  1. மலம் குடிநீரில் கலக்காமல் தடுப்பது - திறந்த வெளிகளில் மலம் கழிக்காமல் இருப்பது. அனைவரும் நவீன கழிவறைகளை உபயோகிப்பது. இதனால் தான் அரசு கழிவறை கட்ட நிதியுதவி அளிக்கும் திட்டமெல்லாம் வைத்திருக்கிறது - வருவாய் துறை அல்லது ஊரக வளர்ச்சி துறையின் பணி இது
  2. கழிவு நீரும் குடிநீரும் கலக்காமல் தடுப்பது - குடிநீர் வடிகால் வாரியத்தின் பணி
  3. நீரில் குளோரின் கலப்பது - மாநகராட்சி / குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி. உங்கள் பகுதியில் இருக்கும் மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் தினமும் குளோரின் கலக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ?? அந்த குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை 
  4. நீரை காய்ச்சி, வடிகட்டி பருகுவது - நீங்கள் செய்யவேண்டியது
  5. கைகளை நன்றாக கழுவ வேண்டியது – இதுவும் நீங்கள் செய்ய வேண்டியதுதான் 
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் – இந்த வகை நோய்களை முழுவதும் தடுக்க அரசால் மட்டுமே முடியாது. உங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளை வாசிக்க

* 14. சமூக மருத்துவம் - நீரும் நோய்களும் - நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை

நீரினால் ஏற்படும் நோய்கள் இவைதான் என்று நீங்கள் நினைப்பதை விடஇந்த பட்டியல் பெரிது !!

நீரினால் ஏற்படும் நோய்களை (Water borne diseases) நான்கு வகையாக பிரிக்கலாம்
  • Water Dispersed Diseases Borne - நீரினால் பரவும் பிணிகள். (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) உதாரனம் காலரா
  • Water Based Diseases - நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் : (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது)  இந்த நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். A part of the life cycle of the organism causing this disease is in water - உதாரணம்: நரம்புச்சிலந்தி
  • Water related Diseases  - நீருடன் தொடர்புடைய பிணிகள் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) -  இந்த நோயை பரப்பும் கிருமி இருக்கும் / வளரும் பூச்சிகள் நீரில் இருப்பதால் (Insect Vector Breeds in Water) உதாரணம் மலேரியா, சிக்குன்குனியா
  • Water Washed Diseases- நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) -தண்ணீர் பற்றாக்குறையால் தனிமனித சுகாதாரம் பேண முடியாததால் ஏற்படும் நோய்கள் . உதாரணங்கள் - Trachoma, Scabies, Typhus, Ring worm (படர்தாமரை)
இதில் முக்கியமான விஷயம், பல (பழைய) புத்தகங்களில் water borne diseases மற்றும் water dispersed diseases இரண்டு பதங்களும் ஒரே அர்த்ததில் கூறப்பட்டிருக்கும். சில (புதிய) புத்தகங்கள் தான் water dispersed diseases என்ற தனிப்பதத்தை பயன்படுத்து கின்றன. அதாவது இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர், உலாவி போல். இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு உலாவி என்றாலும் உலாவி என்றால் அது இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமல்லவே. அது போல் நீரினால் பரவும் நோய்கள் எல்லாம் நீரினால் ஏற்படும் நோய்கள் என்றாலும், நீரினால் ஏற்படும் நோய்கள் என்றால் அது நீரினால் பரவும் நோய்கள் மட்டுமல்ல. (All water dispersed diseases are water borne diseases but not all water borne diseases are water dispersed diseased)

இதில் முக்கிய விஷயம், பொது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கும், ஏன் சில அதிகாரிகளுக்கும் கூட நீரினால் ஏற்படும் நோய்கள் என்றால் அதில் நீரினால் பரவும் நோய்களை தவிர மேலும் மூன்று வகைகள் இருக்கின்றன என்று தெரியாது

அதனால் தான் முதல்வகை நோய்களுக்கு (காலரா பரவாமல் தடுக்க) அளிக்கப்படும் முக்கியத்துவம் பிற நோய்களுக்கு அளிக்கப்படுவதில்லை

தண்ணீரில் குளோரின் கலந்தால் அல்லது தண்ணீரை காய்ச்சி குடித்தாலே அதன் மூலம் நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என்ற மாயையில் தான் இங்கு பலரும் இயங்குகிறார்கள்.

இதில் ஒவ்வொரு வகை நோய்களை குறித்தும் அதிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாக்க செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தொடர்ந்து என்ன எழுத வேண்டும் என்று கூறினால் அது குறித்து விபரமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளை வாசிக்க

Friday, October 24, 2008

* 13. சினிமா - கேள்வி பதில் தொடர்விளையாட்டு

என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த தமிழ் பதிவுலக சினிமா ஆவணக்காப்பகம் / நூலகம் பதிவர் முரளிக்கண்ணனுக்கும் பதிவர் அக்னி சிறகும், பதிவர் இளையபல்லவனுக்கும் பதிவர் டோண்டு ராகவன் அவர்களுக்கும் நன்றிகள். போன் வாரமே எழுத ஆரம்பித்தது நட்சத்திர வாரம் வெளியிடலாம் என்பதால் ஒரு தாமத வெளியிடு

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சரியாக ஞாபகம் இல்லை. கொஞ்சம் யோசித்து பார்த்தால் சிறு வயதில் பார்த்த படங்கள் சில ஞாபகத்தில் இருக்கின்றன
  • ஆத்தூரில் பட்டணத்தில் பூதம். மண் தரையில் அமர்ந்து பார்த்த ஞாபகம்
  • தூத்துக்குடியில் விக்ரம் (கூடவே பிரதமர் இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படமும் பார்த்ததாக ஞாபகம்)
  • காரனேஷன் திரையரங்கில் “எங்களையும் வாழ விடுங்கள்” (என்று நினைக்கிறேன். குரங்குகளை வைத்து எடுத்த படம்)
எது முதலில் பார்த்தது என்று ஞாபகம் இல்லை. முரளி கண்ணன் சார் முதலில் வெளிவந்த படம் என்னவென்று சொல்வார் என்று நினைக்கிறேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ச-ரோ-ஜா
ஆங்கிலம் - இண்டியானா ஜோன்ஸ் (Indiana Jones and the Kingdom of the Crystal Skull )

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,
சில நாட்களுக்கு முன்னர் டிவிடியில் 
  • ஊரைத்தெரிஞ்சிக்கிட்டேன்
  • காசேதான் கடவுளடா
எங்கே, 
அறையில் தான்

என்ன உணர்ந்தீர்கள்?
திரைக்கதைக்கு அந்தக்காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இக்கால இயக்குனர்கள் ஆங்கில படங்களை மட்டும் பார்க்காமல் பழைய தமிழ் படங்களையும் பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதும் தெரிந்தது

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
  • 2002 பிப்ரவரியில் பார்த்த - கண்ணத்தில் முத்தமிட்டால்
  • 2003 மே மாதத்தில் பார்த்த - அன்பே சிவம்
  • 2003 டிசம்பரில் பார்த்த - இயற்கை
கண்ணத்தில் முத்தமிட்டால்
2002 பிப்ரவரி 14ஆம் தேதி அந்த ப்டம் வெளியிடப்பட்டது என்று நினைக்கிறேன். அப்பொழுது எங்கள் வகுப்பு மருத்துவக்கல்லூரி இளங்கலை (MBBS) படிப்பை முடித்து பதிவு செய்து விட்டு வந்திருந்தோம். எங்களுக்கு அடுத்த வகுப்பு மாண்வர்களுக்கு தேர்வு முடிவு வந்த நேரம் என்று ஒரு பெரிய கும்பலே பயங்கர உற்சாக திருநெல்வேலி பாம்பே திரையரங்கிற்கு சென்றது.அதற்கு முன் 2000ல் வந்த மணிரத்னம் படம் அலைபாயுதே காதல் கதை என்பதும், அப்பொழுது உச்சத்தில் இருந்த சிம்ரனும் மாதவனும் நடித்த படம் என்பதும் பிப்ரவரி 14 ரீலிஸ் என்பதால் கல்லூரி கூட்டத்தின் உற்சாகத்திற்கு குறைவில்லை

படம் ஆரம்பித்த போது இருந்த ஊ ஊ, ஏ, ஓ கூப்பாடுகள் சில நிமிடங்களிலேயே அடங்கி “அடப்பாவி உயிரே போலிருக்கு” என்ற சில கருத்து பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது.(உயிரே அலையாயுதேவிற்கு முன்னர் 1998ல் வந்த மணிரத்னம் படம்)

மேலும் சில நேரம் கழித்து அரங்கம் முழுவது நிசப்தம்

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகூடங்களில் இலங்கை தமிழர்கள் படிப்பது வழக்கம். அவர்கள் உபயோகிக்கும் பேனா மற்றும் பிற பொருட்களையும், விடுமுறைக்கும் இலங்கைக்கு விமானத்தில் சென்று வருவதையும் பார்த்த எங்களுக்கு அங்கு இருக்கும் அனைவரும் வசதியானவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது. (உயிரை பணயம் வைத்து தோனியில் வருபவர்களையும், இங்குள்ள முகாம்களின் நிலையும் எனக்கு மாணவ நாட்களின் தெரிந்திருக்க வில்லை)

என்னுடம் படம் பார்த்த பலரும் அதே நினைப்புடன் தான் படத்திற்கு வந்திருக்க வேண்டும். அவர்களும் யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் அறைசாத்தியது நிஜம்

வழக்கமாக இடைவேளை வந்த உடன் அவசரமாக வெளியில் ஓடி முதலில் பாப்கார்ன் வாங்கும் அவசரத்தில் ஓடுபவர்கள் கூட அரண்டு போய் அமர்ந்திருந்தார்கள்

அந்த ப்டம் குறித்து பல விமர்சணங்கள் இருக்கலாம். உதாரணமாக சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தும் சுஜாதாவின் வசனங்கள்

ஆனால் தமிழகத்தில் ஈழ்ப்பிரச்சனை குறித்த புரிதல் / ஆர்வம் இல்லாதவர்களை கூட அந்த பக்கம் திருப்பிய படம் அது.

பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா என்ற வரிகளின் பின்னிருக்கும் வலி நீண்ட நாட்களுக்கு மனதை விட்டு அகல் வில்லை

இந்த படத்தின் மற்றொரு பாடலான வெள்ளைப்பூக்கள் மிகச்சிறந்த பாடல். தேசிய விருது பெற்ற பாடல் என்று நினைக்கிறேன். நேர்மறை எண்ணங்களையும் சுபிட்சத்தையும் வேண்டும் வரிகள்
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும் - மழை பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

எங்கு சிறு குழந்தை - தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே.

பாடல் வரிகள் ஆயில்யன் அவர்களின் பதிவில் இருந்து (அவரது அனுமதியின்றி !!) எடுக்கப்பட்டது. அவருக்கு நன்றி :) :)

மாதவன் சிம்ரன் காதல் காட்சிகள் மிக எதார்த்தமாக இருக்கும். அதிலும் அந்த குழந்தையை தத்து எடுக்கும் காட்சி “டாப் க்ளாஸ்” குழந்தையின் வளர்ப்பு தாத்தா தான் அந்த குழந்தை பிறந்த போது அந்த முகாமில் இருந்த அதிகாரி என்பதை எத்தனை கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

சமாதானத்தின் விலை அல்லது மதிப்பு என்னவென்று தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

அன்பே சிவம் : இது குறித்து தனி இடுகை எழுதியிருக்கிறேன் * 12.சினிமா - அன்பே சிவம், அன்பு, கடவுள், பொதுவுடமை, தொழிற்சங்கம் - இங்கு சுட்டினால் அங்கு செல்லலாம்

இயற்கை குறித்து பின்னர் எழுதுகிறேன்

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தங்கர்பச்சன் மன்னிப்பு கேட்டது. நடிகையின் கதை எழுதியவரை கூட விட்டு விட்டு தங்கர்பச்சனை பிடித்துகொண்டது ஏன் ?? பதில் (ஞாநி பாணியில்) உங்களுக்கே உங்களுக்கு)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
பல
  • தசாவதாரத்தில் இறுதியில் ப்ளெட்சர், நரஹசி, கோவிந்த சண்டையிடும் காட்சிகள். இது குறித்து நான் ஏற்கனவே எழுதியது ்இறுதியில் வரும் ப்ளெட்சர் - ஜப்பானியர் சண்டை அற்புதம். ஒரே நடிகர் மூன்று வேடங்களில் நடித்து , அந்த மூவரும் சண்டையிடுவது, அதுவும் மூவரும் மூன்று முறைகளில் (ஜப்பானியர் -கராத்தே, ப்ளெட்சர் - தொழில் முறையில், கோவிந்து - சண்டை பற்றி எதுவும் தெரியாமல் சும்மா முரட்டுதனமாக) என்பது எளிதான விஷயம் அல்ல. கமல் இக்கதாபாத்திரத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
  • நியூ - படத்தின் ஒளியமைப்பு
  • பாய்ஸ் படத்தில் “எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேண்டும் பாடலில்” கடற்கரை காலை முதல் மாலை வரை எப்படி இருக்கிறது என்று காட்டும் ஒரு காட்சி. மற்றும் அலை அலை பாடல்
  • பாரதி - கிராபிக்ஸ் என்று தெரியாமல் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம்
  • அலைபாயுதே பாடல்கள் - முக்கியமாக எவனோ ஒருவன் வாசிக்கிறான் மற்றும் பச்சை நிறமே, காதல் சடுகுடு
  • முதல்வன் பட பாடல்கள்
  • ஜீன்ஸ் - அதில் இரண்டு நாசர் வரும் காட்சிகளில் பயன் படுத்தப்பட்டிருக்கும்  தொழிற்நுட்பம் இரண்டு பிரசாந்த் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருகும் தொழிற்நுட்பத்தை விட நுட்பமானது என்று பலருக்கு தெரியாது.
  • சிறைச்சாலை - ஒலி, ஒளி, கலை, இசை என்று அனைத்துமே
  • ஆளவந்தான் - வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இரு “துரத்தும்” காட்சிகள் கூட sync ஆவது
என்று பல இருக்கிறது

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு. குமுதம், விகடன், நக்கீரன், தினத்தந்தியில் வரும் சுவடுகள் மற்றும் வாழு வாழ விடு

7.தமிழ்ச்சினிமா இசை?
என்னைக்கவர்ந்த இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், மரகதமணி, என்று பெரிய பட்டியலே உள்ளது.

  • இந்தி இசையை கேட்ட தமிழர்களை தமிழ் இசை கேட்க வைத்தவர் இளையராஜா
  • ஆனால் இந்தி இசை கேட்ட இந்தியர்களை கூட தமிழ் இசை கேட்க வைத்தது ஏ.ஆர்.ரஹ்மான்
  • அழகன், வானமே எல்லை போன்ற படங்களில் கலக்கியவர் மரகதமணி
  • அன்பேசிவம், இயற்கை என்று கலக்கியவர் வித்யாசாகர்
  • லேசா லேசா, காக்க காக்க, சாமி என்று ஹாரிஸ் ஜெயராஜ் படங்கள் என்று பெரிய பட்டியலே இருக்கிறது




8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இல்லை. இந்த வருடம் பார்த்த ஆங்கில படங்கள் என்று பார்த்தால் இண்டியானா ஜோன்ஸ், 10000 BC. அதற்கு முன்னர்  பார்த்த படங்கள் காட்சில்லா, இண்டிபெண்டென்ஸ் டே, டைடானிக், ஜூராசிக் பார்க, டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர், என்று இது வரை பார்த்த ஆங்கில படங்கள் 20 கூட தாண்டாது

பிற இந்திய மொழிகளில் (சப் டைடல்களுடன்) பார்த்த கடைசி படம் - சிபிஐ டைரி குறிப்பு. ஏனோ ஆங்கில புதினங்களை வாசிக்கும் ஆர்வம் படங்களை பார்ப்ப்தில் இல்லை

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சப் டைடில்களுடன் இணையத்தில் பரவும் படங்களில் தரமான படங்களும் இருந்தால் உலகம் முழுவதும் தமிழ் திரைத்துறை பெயர் பெற வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு அவ்வளவு வித்தியாசம் கிடையாது.
தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகாது. பழைய படங்களை பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

அப்பவும் ரஜின் கட்சி ஆரம்பிப்பாரா என்று ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்துவார்கள்

கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  • டாக்டர் ரூத்ரன்
  • sureஷ்
  • சே.வேங்கடசுப்ரமணியன்.
  • ரத்னேஷ்
  • பத்ரி
  • பிரகாஷ்
  • ரவிசங்கர்
  • நர்சிம்,
  • உண்மைத்தமிழன்,
  • சுரேகா,
  • புதுகை அப்துல்லா,

* 12.சினிமா - அன்பே சிவம், அன்பு, கடவுள், பொதுவுடமை, தொழிற்சங்கம்

தோழர்கள் (”கம்யூனிஸ்ட்கள்” ) பற்றி பொதுவில் இருக்கும் எண்ணம் என்ன
  • வேலை நிறுத்தம் செய்பவர்கள், 
  • தேவையில்லாத பிரச்சனை செய்பவர்கள்
  • பிணியாளர் ஊர்தியில் நோயாளியை ஏற்ற 1000 ரூபாய் கேட்கும் ஓட்டுனர் அல்லது அறுவை சிகிச்சை முடிந்த பின் மருத்துவரின் பெயரை சொல்லி 500 ரூபாய் வாங்கும் (இந்த சமூக விரோதிகளினால் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் கெட்ட பெயர்) அறுவை அரங்க ஊழியர் ஆகியோரின் மேல் நடவடிக்கை எடுத்தால் அங்கு வந்து வேலைநிறுத்தம் செய்வோம் என்று மிரட்டுபவர்கள்
  • தொழிற்சங்க பிரதிநிதி என்ற போர்வையில் ஒரு நாள் கூட வேலைக்கு வராமல் 30ஆம் தேதி சரியாக வந்து மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் (தானியங்கி பணம் வழங்கியில் (ATM) ஊதியம் வழங்கப்படும் நடைமுறை வந்த பின் இவர்கள் அந்த ஒரு நாள் கூட அலுவலகம் வருவதில்லை) 
  • அரசு ஊதியம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வராமல் சங்க பணிக்கு செல்கிறேன் என்று சொந்த பணி (வாடகை வாகனம்,  பிரதியகம் (xerox shop), பொது தொலைபேசி நிலையம், நிலத்தரகு) பார்ப்பவர்கள்
  • கடவுள் எதிர்ப்பாளர்கள். 
எனக்கு கூட அப்படித்தான் எண்ணம் இருந்தது. இப்படி எண்ணத்துடன் அன்பே சிவம் பார்த்த எனக்கும் இதே போன்ற எண்ணத்துடன் இருந்தவர்களுக்கும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது ஊகிக்கக்கூடியதே

கம்யூனிசம் என்பது இந்தியாவில் நடக்கும் கூத்துக்களான
  • வேலை நிறுத்தம் 
  • மிரட்டல் 
  • அடுத்தவரை சுரண்டுவது (அதாவது முதலாளித்துவம் என்பது முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுவது என்றால் கம்யூனிஸம் என்பது தொழிற்சங்க தலைவர்களும் செயலாளர்களும் பிற சாதாரண ஊழியர்களை சுரண்டுவது
  • அடுத்தவரை திட்டுவது (அடுத்தவர் என்பதில் முதலிடம் அடுத்த (சகோதர) கம்யூனிஸ்ட் கட்சியை  சேர்ந்த சங்கத்தினர்தான். முதலாளிகளை திட்டுவதை விட அடுத்த சங்கத்தினரை தான் தோழர்கள் அதிகம் திட்டுவதை பார்த்திருக்கிறேன்)
  • கட்டாய வசூல் 
  • ஊழியர்களிடம் பணம் பெற்று பணியிட மாறுதல்
போன்றவற்றை எல்லாம் தாண்டியது என்பதை எனக்கு முதலில் உணர்த்தியது அந்த படம் தான். 

அதன் பிறகு பொதுவுடமை தொடர்பான புத்தகங்களை தேடி தேடி படித்தாலும், அவை அனைத்திலும் இருக்கும் மையக்கருத்தை அன்பே சிவம் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறது. தோழர் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (ஆசிரியர் கண்ணதாசன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) மற்றும் நக்கீரன் மற்றும் இதர பதிப்பகத்தினரின் சில புத்தகங்கள் என்று பொதுவுடமை பற்றிய புரிதலுக்கு முதல்படி அந்த படம் தான்.

சிறிய கதை, மற்றும் தெளிவான சிறுகதை


தொழிலாளர்களுக்காக போராடுபவர் நல்லசிவம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் அன்பரசு. (ஒருவரில் பெயரின் அன்பும் அடுத்தவரின் பெயரில் சிவமும் இருப்பதை கவனிக்க வேண்டும்) . இயற்கை சீற்றத்தால் அவர்கள் செல்ல வேண்டிய விமான பயணம் தடைபடுவதால் அவர்கள் இருவரும் காடு மேடு எல்லாம் தாண்டி கடைசியில் சென்னை வருகிறார்கள்
புவனேஷ்வரில் முதலாளித்துவம் பேசும் அன்பரசு மனதில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் திரைக்கதை அமைத்து பாராட்டுக்குரியது.
அதிலும் வசனங்கள் ஒவ்வொன்றும் சிரிக்க, சிந்திக்க, ரசிக்க வைப்பவை. தொடர்வண்டி எப்பொழுது வரும் என்ற கேள்விக்கு ”டூ டு டூ டு டூ டூ” என்ற பதிலை (two to two to two two - 1:58 to 2:02) மறக்க முடியுமா
கமல் விளையாட்டு பொருட்கள் வாங்குவது யாருக்கு என்று தெரிந்த போது மாதவன் முகத்தில் தோன்றும் எண்ணங்கள் அட்டகாசம். இவ்வளவு சிறந்த நடிகர் ஏன் 2003க்கு பிறகு சோபிக்க வில்லை என்பது புரியாத புதிர் தான்
குருதிகொடை அளிக்க தயங்கும் மாதவன் பேசும் வசனங்களும், நடக்கும் விதமும் தினமும் அரசு மருத்துவமனைகளின் குருதி வங்கியின் முன்னால் நடக்கும் கூத்துக்கள் தான்.
நல்லசிவம் முன்னர் ஒரு பெண்ணை காதலித்ததும், அந்த பெண்ணின் தந்தை தொழிலாளர்களுக்கு எதிராக இருந்ததும், விபத்தில் அவர் பாதிக்கப்பட்டதும், அதன் பிறகு மாதவன் அதே பெண்ணை மணமுடிப்பதும் துனைக்கதை.
அடுத்தவரின் துயரில் பங்கு கொள்வது, அனைவரையும் நேசிப்பதும், தன்னால் முயன்ற வரை யில் அடுத்தவருக்கும் உதவுது தான் கம்யூணிஸத்தின் அடிநாதம் என்ற புரிதல் அந்த படத்தில் ஏற்பட்டது. படத்தின் தலைப்பே “அன்புதான் கடவுள்” என்று கூறுகிறது
எந்த போராட்டம் என்றாலும் “யாராவது போராடட்டும், நாம் நோகாமல் நொங்கு தின்னலாம்” என்ற எண்ணத்தில் இருப்பவர்களை சாடும் வகையில் வரும் ஒரு பாடல் என்னைக்கவர்ந்தது
இப்படத்தில் கமலின் உழைப்பை அளவிட முடியாது.
ஒரு காட்சியில் கமல் தரையில் படுத்திருப்பார். இரண்டு கால்களும் வேறு நீளத்தில் இருக்கும். என்னைக்கவர்ந்த காட்சி அது. உடல் ஊனமான பாத்திரங்களில் பலர் நடித்திருக்கலாம். ஆனால் படுக்கும் ஒரு காட்சியில் கூட இரு கால்களையும் வேறு நீளத்தில் இருக்கும் படி காட்டியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அதே போல் 2003ல் சுனாமி பற்றிய வசனங்கள் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பதும் கேள்விக்குறிதான். 
என்னைப்பொருத்த்வரையில் சிறந்த தமிழ் திரைப்படம் எதுவென்றால் “அன்பே சிவம்” என்று தயங்காமல் கூறிவிடுவேன். சில படங்கள் ஒரு Time Wrapல் இருக்கும். உதாரணமாக மௌன ராகம் படத்தை இப்பொழுது பார்த்தால் அது 80களில் வந்த படம் என்று தெரியும். தேவர் மகன் போன்ற படங்களை இப்பொழுது பார்த்தால் அவை classic ஆகி விடுகிறது. ஆனால் அன்பே சிவம் இன்று கூட contemporary ஆகத்தான் இருக்கிறது. இன்று வரை contemporary ஆக இருக்கும் மற்றொரு படம் பேசும்படம். (இது contemporary மற்றும் classic ஆகியவற்றிற்கு நான் வைத்திருக்கும் நிர்ணயவிதிகள்)
வித்யாசாகரின் சிறந்த படம் என்று இதை கூறலாம். இந்த படத்தில் அவரின் பாடல்களும் பிண்ணனி இசையும் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. இளையராஜா செய்திருந்தால் கூட இவ்வளவு தான் செய்திருக்க முடியும் என்ற வகையில் காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பிண்ணனி இசையும், அனைத்து வகையான பாடல்களும் என்று ராஜாவும் ரஹ்மானும் தங்களின் படைப்புத்திறனின் உச்சத்தில் இருந்த போது தந்த படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் அன்பே சிவத்தின் இசை இருந்தது. தான் ஒரு “ஒரு திரைப்பட மாயை” அல்ல என்பதை இயற்கை மூலம் மறுபடியும் அதே வருடம் நிருபித்தார். அதன் பின்னர் இந்த அளவு முழுமையான இசையை அவர் வேறு எந்த ப்டத்திலும் அளித்ததாக தெரியவில்லை (ரா ரா ஒரே படல் மட்டும் விதிவிலக்கு)
அதே போல் மாதவனின் சிறந்த படம் என்றாலும் இந்த படத்தை கூறலாம். (சுந்தர் சிக்கும் அஃதே)
சிறிது யோசித்ததில் “தன்னைப்போல் பிறரையும் நேசி” என்று கூறி ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தவர் தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று எனக்கு புரிந்தது இந்த படத்தின் வெற்றியா தோல்வியா என்று உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்
படம் வணிக ரீதியாக தசாவதாரம் போல் வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். படத்தை பற்றி அறிவு ஜீவிகள் எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளலாம். ஆனால் பொதுவுடமை, தொழிற்சங்கம் போன்றவற்றை பற்றிய தவறான எண்ணம் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து தவறான பிம்பத்தை வைத்திருக்கும் ஒரு தலைமுறைக்கும் “கம்யூனிஸ்சம் என்பது அடுத்தவரை நேசிப்பதே” என்று புரிய வைத்ததில் கமல் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்
முதலாளித்துவம் பேசுபவர்கள் மட்டுமல்ல, கம்யூணிஸ்ட் என்ற பெயரில் அலப்பரை செய்து வரும் சிலரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

* 11 கல்லூரி கதைகள் - விழாக்களும் நிகழ்ச்சிகளும் - அன்றும் இன்றும்

நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்த போது ஆங்கில பதிவு எழுதி வந்தேன். அப்பொழுது எழுதிய ஆங்கில இடுகையை (The Joy of Working for a function) தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக குறிப்பேடுகளை (lab registers) ஆய்வு செய்த போது, குறிப்புகளை ஓப்படுவதற்காக பழைய குறிப்பேடுகளை பார்க்க வேண்டி வந்தது. என் ஆய்வக உதவியாளரோ அனைத்து தாள்களையும் (வரும் கடிதங்கள், அனுப்பப்படும் கடிதங்களின் அலுவலக நகல்கள், MF-2 குறிப்புகள் உட்பட) ஒரே கோப்பில் போட்டு வைத்திருந்தார்.


தனித்தனியான கோப்புகளில் தபால்களை மற்றும் குறிப்பேடுகளை பிரித்து ஆவணப்படுத்த கூறியபோது வழக்கமான “ஒரு ’பைல் தான் தந்தாங்க சார்” என்ற பதில் தான் வந்தது. “ஏன் வாங்க வேண்டியது தானே” என்று கூறினால் “கண்டிஜன்சில (contigency) கம்மியாதான் காசு இருக்கு. ஒவ்வொரு ‘பைலும் 20 ரூபாய் ஆகும்” என்று கூறினார்.


அதன் பிறகு அவரிடமே 35 ரூபாய் கொடுத்து 30 ரூபாய்க்கு 10 தடிமான தாள்களையும் (chart paper) 5 ரூபாய்க்கு கோப்புகளை கட்டும் நூலையும் (file tag) வாங்கி வரச்சொன்னேன். (அப்பொழுது தான் அவை எவ்வளவு விலை குறைவு என்று அவருக்கு தெரியும். நான் வாங்கி சென்று 30 ரூபாய் என்றால் மனம் நம்பாது !!)


அதன் பிறகு அதை வைத்து 20 கோப்புகளை தயார் செய்தேன். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் கிடையாது. தடிமான தாளை இரண்டாக வெட்ட வேண்டும். அதன் பிறகு அதை சரியாக மடிக்க வேண்டும். மடிப்பது மட்டும் தான் லாவகமான பணி. மடித்த பின் துளைபோடும் பொறியை (punching machine) வைத்து துளை போட வேண்டியது தான்.


35 ரூபாய்க்கு 20 கோப்புகள் தயார். ஒரு கோப்பு 2 ரூபாய் கூட இல்லை....

-oOo-
இப்படி 2 ரூபாய்க்கு ஒரு கோப்பை உருவாக்கும் வித்தையை நான் கற்றது கல்லூரி காலத்தில் தான். அப்பொழுது கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு தேவைப்படும் கோப்புகளை நாங்கள் தான் செய்வோம்.

மருத்துவக்கல்லூரிகளில் (ஏன் அனைத்து கல்லூரிகளிலும்) ஒரு (மூத்த) வகுப்பிலிருந்து அடுத்த (இளைய) வகுப்பினருக்கு வாழையடி வாழையாக கூறப்படும் தகவல்கள் பல.
  • எந்த கடையில் சிக்கன் 65 சுவையாக இருக்கும், 
  • எந்த திரையரங்கில் மூட்டைப்பூச்சி தொல்லை இருக்காது, 
  • எந்த கடையில் வாகனத்தை பழுது நீக்க அளித்தால் விரைவில் சரியாகி வரும்,
  • எந்த ஆசிரியர் வருகைப்பதிவேட்டை கண்டுகொள்ள மாட்டார்
  • எந்த ஆசிரியர் வருகைப்பதிவேட்டை பார்த்து தான் மதிப்பெண் அளிப்பார்
    • அப்படியென்றால் எந்த அலுவலக உதவியாளர் வருகைப்பதிவேட்டை கவனக்குறைவாக வைத்திருப்பார் :)
  • எந்த பேராசிரியர் எப்படிபட்ட கேள்விகளை கேட்பார்

என்பதுடன் கோப்புகளை செய்வது போல் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பல திறமைகளையும் கற்பது புத்தகங்களில் இருந்து மட்டும் அல்ல

இப்படி பட்ட திறமைகள் வளர்வதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது கல்லூரிகளில் நடக்கும் விழாக்களே

-oOo-

நாங்கள் கல்லூரியில் கற்ற காலத்தில் விழாக்களுக்கு தேவைப்படும் கோப்புகள், அலங்கார பொருட்கள் போன்றவைகளில் பெரும்பாலாணவைகளை நாங்களே செய்து விடுவோம்

அப்பொது ஒரு விழா நடத்த 10,000 ரூபாய் தான் ஒதுக்கப்படும். அதில் மெல்லிசை நிகழ்ச்சிக்கே பெரும் பங்கு போய் விடும். அல்லது உணவு அளிக்கப்பட்டால் உணவிற்கே பெரும்பங்கு போய்விடும்.

யாராவது விளம்பரதாரர்கள் கிடைத்தால் மட்டுமே ஒரு விழாவில் மெல்லிசையும் உணவும் இருக்கும். இல்லையென்றால் ஒன்று மெல்லிசை இருக்கும் , அல்லது உணவு இருக்கும்

இப்படி பணத்தில் பெரும்பகுதி மெல்லிசைக்கோ (அல்லது உணவிற்கோ) சென்று விடுவதால் அதை தவிர இதர செலவுகளை மிகவும் சிக்கனமாகவே செய்வோம். அனைத்து வேலைகளையும் மாணவர்களே செய்ய வேண்டியிருந்தது. வெளியில் இருந்து பணம் அளித்து அந்த சேவையை பெற பொருளாதாரம் இடம் அளித்ததில்லை

நான் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் விழாக்களில் உணவு என்றால் கூட மளிகைப்பொருட்களையும், காய்கறிகளையும், கறியையும் வாங்கி, ஒரு / இரண்டு சமையல்காரர்களை அமர்த்தி சமைத்தோம்.  மளிகை பொருள் வாங்குவது இருவர். விழா அன்று காலையில் நைனார்குளம் சந்தை சென்று காய்கறி வாங்குவது வேறொருவர், சமையல் மேற்பார்வை மற்றொருவர் என்று பிரித்து விடுவோம். உணவை பரிமாறுவது கூட மாணவர்கள் தான்

தரைத்தளத்தில் இருக்கும் மூடுந்திலிருந்து (lorry) நாற்காலிகள் 3ஆவது மாடியில் இருக்கும் விழா அரங்கத்திற்கு (auditorium) கொண்டு செல்லப்படுவது கூட மாணவர்களால் தான்

முதலாமாண்டு மாணவர்கள் வரிசையாக நிற்க, மடிக்கப்பட்ட நாற்காலிகள் சர சர வென்று கைமாறி நிமிடத்திற்கும் மேலே சென்று விடும். கட்டிடம் கட்டும் பணியில் செங்கல், சாந்து சட்டி ஆகியவை எப்படி மேலே போகும் என்று கவனித்திருக்கிறீர்களா, அது போலத்தான் !! இந்த “அசெம்பிளி லைனை” (Assembly Line) பார்த்தால் ஹென்றி போர்டு கூட வியந்து போவார் என்று நினைக்கிறேன்

மாணவர்கள் (மாணவிகள் கூட) மேடையை அலங்கரித்தார்கள். மாணவிகள் (மாணவர்கள் கூட) ரங்கோலி வரைந்தார்கள். மேடையில் என்ன படம் வரைவது என்ற விவாதமே பல மணி நேரம் நடக்கும். அதன் பிறகு அதை (நன்றாக படம் வரையத்தெரிந்த) ஒருவர் வரைய சுமாராக வரையத்தெரிந்தவர்கள் உதவுவார்கள்.

படம் வரைபவர் திடீரென அதிகாலை 3 மணிக்கு “கொஞ்சம் கோட் டஸ்ட் (gold dust) இருந்தால் நல்லாருக்கும்” என்று அசடு வழிய, இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று (வழியில் மறிக்கும் காவல் துரையினரிடம் அடையாள அட்டையை காட்டி அவசர அறுவைசிகிச்சைக்கு செல்வதாக பொய் சொல்லி) தூங்கி கொண்டிருக்கும் கடைக்காரரை தட்டி எழுப்பி வாங்கிவருவது சுவையான அனுபவம்.

அதிகாலை 3 மணிக்கு கோலப்பொடி வாங்க போவதாக உண்மை சொன்னால் அதன் பிறகு காலை 8 மணிக்கு கல்லூரி முதல்வரோ துனை முதல்வரோ வந்து மீட்கும் வரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உட்கார வைத்து விடுவார்கள் என்பது சீனியர்களின் அனுபவத்தில் கற்ற பாடம். வள்ளுவர் சும்மாவா சொன்னார் “பொய்மையும் வாய்மையிடத்து.......”

சுவரொட்டிகள் ஒட்டுவதே உற்சாகமான விஷயம். ஒரு A3 தாளில், பட்டையாக கருப்பு மையில் எழுதிக்கொண்டு, அதை வைத்து "ப்ளுரசண்ட்” தாளில் நகலெடுத்தால் சுவரொட்டிகள் தயார்.

விடுதியில் உள்ள உணவகத்தில் (hostel mess) மைதா மாவை வைத்து பசை கிண்ட வேண்டியது தான். அதன் பிறகு சுவரொட்டிகளுடனும், பசை வாளியுடனும் சில இரு சக்கர வாகனங்களில் கிளம்பி, கல்லூரி, மருத்துவமனை, விடுதி, பெண்கள் விடுதி(யின் வெளிச்சுவர்), பிற கல்லூரிகள் என்று பயங்கர உற்சாக வேலை அது

தனது தொழிலல்லாத மற்றொரு வேலையை தானாக செய்வது, செய்ய கற்பது, தவறுகளை கண்டுபிடித்து திருத்துவது ஆகியவற்றில் உள்ள சந்தோஷமே தனி.

சேர்ந்திருந்து வேலை செய்வது, பிறர் பாராட்டக்கூடிய திறன் தனக்கு இருப்பதை புரிந்து கொள்வது, குழுப்பணி, கூட்டு முயற்சியின் பலனை அனுபவப்பூர்வமாக உணர்வது என்று கல்லூரி விழாக்களை நடத்துவதன் மூலம் மாணவர்கள் பெறுவது ஏராளம். எதுவும் தெரியவில்லை என்றாலும் கூட 2 ரூபாயில் அலுவலக கோப்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்

சொல்லப்போனால் விழாக்களுக்கு வேலை செய்வது மூலம் பெறக்கூடிய அனுபவ அறிவிற்கு விலை வைக்கவே முடியாது

சரியான நேரத்தில் (விழா ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் !!) வேலையை முடிப்பதில் இருக்கும் திருப்தி அளப்பரியாதது. இது போன்ற விழாக்களில் எவ்வளவு தாமதமாக ஆரம்பித்தாலும் வேலை சரியான நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் வகுப்பில் அளிக்கப்படும் வீட்டுப்பாடங்கள் மட்டும் முடிவதற்கு தாமதமாவது ஏன்...... அது தான் தனியாக செய்வதற்கும் குழுவாக செய்வதற்கும் உள்ள வித்தியாசமோ ??

அது ஒரு கனாக்காலம்..... ஆனால் இன்று

அனைத்து இடங்களிலும், அனைத்து வேலைகளிலும் “அவுட் சோர்சிங்” தான். வேலைகள் அனைத்தும் அடுத்தவரால் செய்யப்படுகிறது. 3 நாட்கள் 5 பேர் வரைந்த மேடைக்கு பதில் ப்ளெக்ஸ் போர்ட் வந்து விட்டது. லெமன் டீ குடித்துக்கொண்டு (பசையால் பாழ்படக்கூடாது என்று) பழைய சட்டையுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு 200க்கு 500 என்று பேரம் பேசி சுவரொட்டி ஒட்டுபவர்களால் ஒட்டப்படுகிறது.

உணவு ஏதாவது உணவகத்திலிருந்து தருவிக்கப்பட்டு அனைவருக்கும் கூப்பன் தான். ரங்கோலிக்கு கூட ஸ்டிக்கர்கள் இருக்கிறதாம்

என்ன ரங்கோலி (கருப்பொருள்) வரைவது என்று விவாததித்து, அதற்கு என்ன நிறம் உபயோகிக்கலாம் என்று சிந்தித்து, யார் எந்த பகுதி என்று பிரித்து, பொடி வாங்க இருவர், படம் வரைய நான்கு பேர், என்பதில் கிடைத்த உணர்வுகள் ரங்கோலி ஸ்டிக்கர் வாங்கி ஒட்டினால் கிடைக்குமா

இன்னும் சில காலங்களில் கல்லூரி விழாக்களை கூட “events management" நிறுவனங்கள் தான் நடத்தும் என்று நினைக்கிறேன் (ஏற்கனவே சில இடங்களில் அப்படி நடக்கிறது என்றால் சரிதான்)

சிறிது சிந்தித்து பார்த்தால் கல்லூரி விழாக்கள் மட்டும் மாறவில்லை. திருமணங்கள் கூட மாறி விட்டன. முழுவதும் குடும்ப நிகழ்ச்சியாக இருந்த திருமணங்கள் (உறவினர்கள் பந்தி பரிமாறியது 20 வருடங்கள் முன்னர் கூட நடந்ததே) இன்று “காண்டிராக்ட்” எடுத்து நடத்தும் நிகழ்ச்சியாகி விட்டது.

முதலில் சமையல் மட்டும் தான் இப்படி “காண்டிராக்ட்” விடப்பட்டது. இன்றோ நீங்கள் அளிக்கும் பணத்தின் அளவைப்பொருத்து கோலம் போடுவதிலிருந்து பன்னீர் தெளிப்பது வரை அவர்களே செய்கிறார்களாம்.

எல்லாம் வாடகைதானா

மணப்பெண்ணையோ மணமகனையோ வாடகை எடுக்கும் காலம் எப்பொழுது ??

கல்லூரி வாழ்க்கை குறித்த தொடர்புடைய இடுகைகள்

பள்ளி வாழ்க்கை
அறிவியல்

* 10 - கல்லூரி வாழ்க்கையை மறக்க முடியவில்லை !!

கடந்த இடுகையில் * 09. மாணவ வாழ்க்கை - பள்ளி நாட்களை மறக்க முடியவில்லை !! பள்ளி வாழ்க்கையை நினைவு கூர்ந்த இடுகை உண்மையில் நான் முதலில் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தமிழில் மொழிபெயர்த்தது.

அந்த இடுகையில் ஆங்கில மூலம் என் ஆங்கில் பதிவில் உள்ளது.
அதே போல் மருத்துவ கல்லூரி வாழ்க்கை பற்றி நான் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியதை அப்படியே இங்கு ஆங்கிலத்தில் தருகிறேன்


Gone are the Medico Days.... but not the memories

Gone are the days
When we came to this college
With hopes and a little bit of hesistation in our eyes


Gone are the days
When we rushed up to D-Hall at 8:25
And returned to rooms smelling of formalin


Gone are the days
When we counted RBCs and Lymphocytes
But wrote our own numbers


Gone are the days
When the lectures about Carbohydrates and proteins
Used to be so relaxing that every one slept


Gone are the days
When being as I Clinical in OP/Wards meant
We could do anything but study


Gone are the days
When we saw cells under microscope and
Rememberd the slide’s morphology and number.


Gone are the days
When, on going to SPM survey
We went to Coutallam and Manimuthar and Papanasam.


Gone are the days
Gone are the days of ENT and Opthalmology and FM
And SPM and ECSTASY and TAMPONADE


Gone are the days
When one month of Psychiatry posting
Meant no postings at all


Gone are the days
When Colles and Mitral Stenosis and Fibroid
Occupied the whole mind


Gone are the days
When IMCU and Accident ward and labour ward
Used to be so stressful


Gone are the days
Paediatrics and SPM
Used to be so educative


Gone are the days
We learnt, we enjoyed, we played, we won, we lost
We laughed, we cried, we fought, we thought

Gone are the days
With so much fun in them, so many friends
So much experience, all this and more

Gone are the days
But not the memories, which will be lingering
In our hearts for ever and ever and ever and ever…………………

கல்லூரி வாழ்க்கை குறித்த தொடர்புடைய இடுகைகள்

பள்ளி வாழ்க்கை
அறிவியல்

* 09. மாணவ வாழ்க்கை - பள்ளி நாட்களை மறக்க முடியவில்லை

ஜூன் மாதம் பள்ளி திறந்ததும்,
வகுப்பறையில் புது இடத்தில் உட்கார்ந்ததும்
மறக்க முடியவில்லை

புத்தகம் அளிக்குமிடத்தில் வரிசையில் நின்றதும்
புது புத்தகங்கள் / நோட்டுகளின் வாசமும்
மறக்க முடியவில்லை

இரு ஞாயிறு (கிழமை) வேண்டும்
திங்கள் (கிழமை) வேண்டாம் என்று ஏங்கிய நாட்களை
மறக்க முடியவில்லை

ஸ்லேட்டில் ஆரம்பித்து, பென்சிலுக்கு சென்று,
பேனாவிற்கு முன்னேறி, பந்து முனைபேனாவால் எழுத ஆரம்பித்ததை
மறக்க முடியவில்லை

குச்சிகளில் ஆரம்பித்து, பென்சிலுக்கு சென்று
ஸ்கெட்ச் பேனாவால் வரைய கற்றதை
மறக்க முடியவில்லை

ஈரேழு பதினான்கு என்று ஆரம்பித்து, க்ளார்க் டேபிள்களுக்கு சென்று
கால்குலேட்டருக்கு முன்னேறியதை
மறக்க முடியவில்லை

இடைவேளையில் மற்றவர்களை காரிடர்களில் துரத்தி விளையாடி
வியர்வையுடன் வகுப்பில் வந்தமர்ந்ததை
மறக்க முடியவில்லை

வகுப்பறை, மரத்தடி, விளையாட்டு திடல், சைக்கிள் செட்
வராண்டா என்று எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து சாப்பிட்டதை
மறக்க முடியவில்லை

உலகிலுள்ள அனைத்து நிறங்களும்
இரண்டாம் சனிக்கிழமை பள்ளியில் நிறைந்ததை
மறக்க முடியவில்லை

வாரத்தில் உள்ள ஒரே பி.டி. பீரியடை
பருவ மழையை விட அதிக எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்ததை
மறக்க முடியவில்லை

எழுது பலகையே மட்டையாகவும், சுருட்டப்பட்ட necktieயே பந்தாகவும்
விளையாடிய கிரிக்கெட்டை
மறக்க முடியவில்லை

கபடி , கோ-கோ என்று வெயிலிலும்
புக் கிரிக்கெட் என்று நிழலிலும் விளையாடியதை
மறக்க முடியவில்லை

சதித்திட்டம் இல்லாத சண்டைக்ளும்
பொறாமையில்லாத போட்டிகளும்
மறக்க முடியவில்லை

மதிய இடைவெளிகளில்
எதிர்த்த வீட்டில் கிரிக்கெட் பார்த்ததை
மறக்க முடியவில்லை
 
3:45 அவசரமாக ஓடி, பள்ளிப்பேரூந்தின்
ஜன்னல் இருக்கையை :கைப்பற்றியதை
மறக்க முடியவில்லை

பிக் பன், புளிப்பு மிட்டாய், குல்பி ஐஸ்,
சீவல் ஐஸ், பெப்சி, சவ்வு மிட்டாய் போன்றவற்றை
மறக்க முடியவில்லை

விளையாட்டு தினம், பள்ளி தினம், மற்றும்
அதற்கான ஒரு மாத தயாரிப்புகளை
மறக்க முடியவில்லை

காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வுகளையும்
அதன் பின் வந்த விடுமுறைகளையும்
மறக்க முடியவில்லை

பத்தாம் பன்னிரென்டாம் வகுப்புகளில்
வருடம் முழுவதும் ரீவிசன் தேர்வு எழுதியதை
மறக்க முடியவில்லை

படித்த, கற்ற, அனுபவித்த
விளையாடிய, வென்ற, தோற்ற நாட்களை
மறக்க முடியவில்லை

சிரித்த, அழுத,
சண்டையிட்ட, சிந்தித்த நாட்களை
மறக்க முடியவில்லை

ஆசிரியர்களையும், நண்பர்களையும்,
மகிழ்ச்சியையும், அனுபவத்தையும், அனைத்தையும்
மறக்க முடியவில்லை

நாட்கள் கடந்தாலும்
ஞாபகங்கள் கடக்கவில்லை
நெஞ்சிலேயே அவை நின்றுகொண்டிருப்பதை
மறக்க முடியவில்லை

கல்லூரி வாழ்க்கை குறித்த தொடர்புடைய இடுகைகள்

அறிவியல்

Thursday, October 23, 2008

* 08 - அறிவியல் - நரிக்குறவர் விற்கும் விசிலில் பல சுருதிகள் கேட்பது எதனால்

கல்லூரி விழாக்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் நடைபெறும் போட்டிகளில் நாங்கள் பங்கு பெறும் போட்டி முடிந்த பின், அரங்கில் அமர்ந்து விசில் அடித்து மற்ற போட்டியாளர்களை ஊக்குவிப்பது என் வாடிக்கை.

விசில் அடிப்பதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று விரலை மடக்கி வாயில் வைத்து வீல் என்று சத்தம் எழுப்புவது. மற்றொன்று பேரூந்து ஓட்டுனர் வைத்திருக்கும் கருவியை கொண்டு சத்தம் எழுப்புவது.

அல்லது குழந்தைகள் விளையாடும் விசிலை பயன்படுத்தலாம்
காவல் துறையினர் கூட வித்தியாசமான ஒரு வகை விசில் வைத்திருப்பார்கள்

அதே போல் நெகிழியில் (Plastic) தட்டையாக ஒரு கருவியை எங்கள் ஊர் பக்கம் திருவிழாக்களில் விற்பார்கள். பயங்கர சத்தம் வரும்.



ஆனால் இந்த கருவிகளில் எல்லாம் சத்தம் ஒரே சுருதியில் தான் இருக்கும். காரணம் இந்த கருவிகளில் எல்லாம் ஒரே அதிர்வெண்ணில் தான் காற்றின் அளைவு இருக்கும்

இதை தவிர நரிக்குறவர்கள் விற்கும் விசில் ஒன்று பிரபலம். அதை வைத்து ஊதினால் அனைவரும் திரும்பி பார்ப்பார்கள். காரணம் சத்தம் பல சுருதிகளில் கேட்கும். 2 இஞ்சு நீளம், 1 செ.மீ அகலம், 3 அல்லது 4 செமி உயரம் உள்ள இரு மரக்கட்டைகளுக்கு நடுவில் ஒரு மிதிவண்டி குழாய் (cycle tube) துண்டு கட்டப்பட்டிருக்கும்.


அதை வாயில் வைத்து ஊதினால் வெளிப்படும் சத்தத்தின் அதிர்வெண் அதிகமாகி, பிறகு மெதுவாக குறைந்து வித்தியாசமான சத்தம் கேட்கும். முதலில் சுருதி குறைவாக ஆரம்பித்து, அதன் பிறகு அதிக சுருதிக்கு சென்று பிறகு மீண்டும் பழைய படி கீழிறங்கும்.

எந்த ஒரு பொருளின் அதிர்வெணும் கீழ்க்கண்ட காரணிகளினால் தீர்மாணிக்கப்படுகிறது

  1. நீளம் - நீளம் அதிகமானல் குறைந்த அதிர்வெண். நீளம் குறைந்தால் அதிக அதிர்வெண். Frequency is inversely proportional to the length of the vibrating object. வீனையில் / கிடாரில்/ வயலினில் / பியானோவில் எல்லாம் இந்த சித்தாந்தம் தான்
  2. அகலம் - தடிமனான கம்பியை மீட்டினால் குறைந்த அதிர்வெண்ணும், மெல்லிய கம்பியை மீட்டினால் அதிக அதிர்வெண்ணும் கேட்பதை அறிந்திருப்பீர்கள். Frequency is inversely proportional to the Width of the vibrating object. கிடாரின் தடிமான கம்பியில் அதிர்வெண் குறைவாகவும், மெல்லிய கம்பியில் அதிர்வெண் அதிகமாகவும் கேட்கும் அதே பௌதீக சித்தாந்தம் தான் இது. 
  3. விரைப்பு : கம்பி அல்லது அளையும் பொருளானது அதிக விரைப்பில் இருந்தால் அதிக அதிர்வெண் கேட்கும். Frequency is directly proportional to the Tension of the Vibrating Object.

இப்பொழுது இந்த விசிலை ஊதும் போது

  • நீளம் அதிகரிக்கிறது
  • அகலம் குறைகிறது. (ரப்பரின் நீளம் அதிகரித்தால் அகலம் குறையும் - ரப்பர் பேண்டை நீட்டி பாருங்கள்)
  • விரைப்பு அதிகரிக்கிறது


ஊதும் போது ரப்பர் துண்டு நீளமாகி (அகலம் குறைந்து) அதனால் அதன் அதிர்வெண் அதிகரிக்கிறது.

அதன் பிறகு இழுத்த மூச்சு காற்றின் வேகம் குறையும் போது அதிர்வெண் குறைகிறது. கிட்டத்தட்ட கிளாரினெட்டில் சரிகமபமகரிச என்று வாசிப்பது போலிருக்கும்


இந்த பௌதிகம் எப்படி நரிக்குறவர்களுக்கு தெரிந்தது என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். (அவர்களின் ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் ஒரு பௌதீக விதி இருக்கும்)


இதே போல் ரயில் நிலையத்தில் அல்லது மிதிவண்டி கதவு பூட்டியிருக்கும் உங்களை கடந்து சொல்லும் ரயிலின் சத்தத்தை கேட்டிருக்கிறீர்களா. அதன் அதிர்வெண் அதிகரித்து பின் குறையும். அதற்கு காரணம் வேறு. அது டாப்லர் விதியினால் !! --> ச்ந்தேகம் என்றால் அது குறித்தும் விளக்குகிறேன்

கல்லூரி வாழ்க்கை குறித்த தொடர்புடைய இடுகைகள்

பள்ளி வாழ்க்கை

* 07. கல்லூரி வாழ்க்கை - கலை விழாக்களும், நகைச்சுவைகளும்

கல்லூரி விழாக்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் நடைபெறும் போட்டிகளில் Variety Entertainment என்ற நிகழ்ச்சியும் உண்டு. இதில் பல சுவாரசியங்கள் இருக்கும். மேலும் பல சிறந்த நகைச்சுவை துனுக்குகள் இந்த நிகழ்ச்சியில் வரும்

உதாரணத்திற்கு என் நினைவில் நிற்கும் நகைச்சுவை ஒன்று

ஒரு ஊர். அதற்கு பக்கத்தில் ஒரு காடு. அந்த காட்டிலிருக்கும் சிங்கம் ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து ஆடு மாடுகளை அடித்து சென்று விடுகிறது. தொல்லை தாங்காமல் ஊர் மக்கள் புகார் அளிக்கவே முதலில் அந்த சிங்கத்தை பிடிக்க சி.ஐ.ஏ ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் சென்று இரு நாட்கள் தேடி அதன் பிறகு சிங்கத்தை கண்டுபிடிக்க முடியாமல் வந்து விடுகிறார்கள்

அதன் பிறகு கே.ஜி.பி ஆட்கள் வருகிறார்க்ள். அவர்களும் இரு நாட்களுக்கு பின் காட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார்கள்

அதன் பிறகு ஸ்காட்லாண்ட் யார்டிற்கு இணையாக கூறப்படும் ஒரு குழுவினர் சிங்கத்தை தேடி காட்டிற்குள் செல்கிறார்க்ள். ஒரு வாரமாக யாரையும் காணவில்லை.

ஊர் மக்கள் எல்லாம் பயந்து போய் காட்டிற்குள் சென்றால் - அங்கு ஸ்காட்லாண்ட் யார்டிற்கு இணையாக கூறப்பட்ட குழுவினர் “உண்மையை ஓத்துக்கோ, நீதான்னு ஒத்துக்கோ” என்று கூறியபடி ஒரு கரடியை போட்டு அடி அடி என்று அடித்துக்கொண்டிருக்கிறார்கள்

கரடி கதறுகிறது

“ஐயா அடிக்காதீங்க. நான் சிங்கம்ன்னு நானே சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்கயா”

இந்த கதையை ஞாபகப்படுத்திய இந்து நாளிதழ் கேலிசித்திர ஓவியர் கேசவிற்கு நன்றி


மேல் உள்ள நகைச்சுவை புரியவில்லை என்றால் சிறு குறிப்பு
பங்கு சந்தையில் கரடி, எருது என்று இரு பதங்கள் உபயோகிக்கப்படுகின்றன.

  • (சென்செக்ஸ் அதிகமாக இருக்கும் போது) அனைவரும் பங்குகளை வாங்கும்போது அதிக பணம் முதலீடு செய்யப்படும். அப்பொழுது அதை காளை / எருது நிலை என்று அழைக்கிறார்கள். - Bull Phase
  • அதே நேரம் அனைவரும் பங்குகளை விற்கும் நிலைக்கு கரடி என்று கூறுகிறார்கள். சென்செக்ஸ் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள் - Bear Phase

தற்பொழுது சென்செக்ஸ் குறைந்து கொண்டிருந்தாலும், பங்கு சந்தை வீழ்ந்து கொண்டிருந்தாலும் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சிகளை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை

கல்லூரி வாழ்க்கை குறித்த தொடர்புடைய இடுகைகள்

பள்ளி வாழ்க்கை
அறிவியல்

Wednesday, October 22, 2008

* 06. கல்லூரி வாழ்க்கை - பெயரில் என்ன இருக்கு

முன்கதை வாசிக்க * 05. கல்லூரி வாழ்க்கை - நாடகங்களும் வசனங்களும் செல்லவும்

“இனி வ்ரும் காலங்களில் போடப்படும் நாடகங்களின் கதை வசனத்தை நுண்கலைகளுக்கு பொறுப்பான பேராசிரியரிடம் காட்டி விட்டு அதன் பிறகே நாடகங்கள் போடப்பட வேண்டும் என்று முடிவான பின் நாடகங்கள் மிகவும் “சைவமா”கியது
அப்படி சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் மாணவர் விடுதியில் தீவிர கலந்துரையாடல் நடக்கிறது
“மக்களே, சென்ஸார் பண்ணி ஸ்கிட் போட ஆரம்பிச்சதுல இருந்து வர வர நம்ம ஸ்கிட்டுக்கு கூட்டமே வரமாட்டேங்குது. நம்ம பசங்க மட்டும் தான் வராங்க. மத்த பேட்ச் (batch) பசங்க வரதில்லை. இந்த தடவை எல்லாரையும் வர வைக்கனும்”

கேட்டுக்கொண்டிருந்த எனக்கோ வியப்பு. சுந்தர காண்டம், 36-28-36 என்று நாடகம் போட்டால் மாணவர்கள் வருவார்கள். “நீரினால் பரவும் நோய்கள்”, “தேசிய ஒருமைப்பாடு”,  “இந்தியாவின் சுதந்திர போராட்டம்” “சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளில் பாரதத்தின் முன்னேற்றம்” என்று நாடகம் போட்டு அதற்கு கல்லூரி மாணவர்களை கூப்பிட்டால் யார் வருவார். எங்காவது ”தென்னாப்பிரிக்காவில் காந்தியும் உருசியாவில் டோஸ்ட்டாயும்” என்று நாடகம் போட்டால் நான் போயிருப்பேனா ?? அதற்கு பதில் எதாவது திரைப்படத்திற்கு செல்லலாமே :)

“சரி, இப்ப என்ன ஸ்கிட் போடுறீங்க”

“மத நல்லிணக்கம் பத்தி நம்ம ______ சூப்பரா எழுதியிருக்கான். மூன்று நண்பர்கள்”

“அமர், அக்பர் , அந்தோனியா”

“டேய் நீ எப்படா ஸ்கிரிப்ட பார்த்தா”

“பாக்கல, சும்மா கெஸ் தான்”

“பொய் சொல்லாத”

“எத்தனை வருசமா இதே பேரில நாடகம் போடுவீங்க. சரி, பேரவாது மாத்துங்க.”

“புல் ஸ்கிரிப்டும் எழுதியாச்சு, இப்ப எல்லாத்தையும் மாத்தனுமா”

ஒருவர் அதை சத்தம் போட்டு வாசித்ததில் பம்பாய் பட கருப்பொருள் இசையை பிண்ணனியில் ஓடவிடக்கூடிய ஒரு அழுகாச்சி காவியம் தயார்.

“ஸ்கிரிப்ட கமிட்டிகிட்ட காட்டியாச்சா”

“இன்னும் இல்லை”

“சரி, கொடுங்க, பேர மாத்தி நான் பேர் காப்பி (fair copy) எழுதுறன்”

“என்ன பேர் வைக்க போற”

“ கிருஷ்ணமூர்த்தி, லாரண்ஸ், ஷாஜகான் ”

அதை நல்ல பிள்ளையாக கமிட்டியிடம் காட்டி ஒப்புதல் வாங்கிவிட்டார்கள். அதன் பிறகு சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டது. (அதற்கு தணிக்கை கிடையாது) அதில் மாணவர்கள் வேலையை காட்டி விட்டனர்

கல்லூரி விழா அன்று காலை சுவரொட்டிகள் ஒட்டியதில் மாலை நாடகம் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

சுவரொட்டியில் இருந்தது இது தான்

TvMC பெருமையுடன் வழங்கும்
  • ர்ஜகான்
  • கிச்சா
  • லாரண்ஸ்
காணத்தவறாதீர்கள்
TvMC Auditorium. 6 PM . xx-xx-xxxx (மறந்து விட்டது)
கல்லூரி வாழ்க்கை குறித்த தொடர்புடைய இடுகைகள்

பள்ளி வாழ்க்கை
அறிவியல்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...