இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, March 14, 2009

வெண்ணிலா கபடி குழு - சில கருத்துக்கள்

பல படங்கள் திரையரங்குகளில் ஓடுவது போல் சில படங்கள் நம்மை ஓட வைக்கும். நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பதால் திரையரங்கை விட்டு ஓடியதும் சில நேரங்களில் தான். முதன் முதலாக 1997ல் ஒரு தமிழ் படம் பார்க்கும் போது தாங்கவே முடியாமல் பாதியில் கிளம்பினோம். அதன் பின்னர் போல் பாதியில் ஓடியது 2005ல் (The Aviator). சென்ற வாரம் ஒரு படத்திற்கு சென்று பாதியிலேயே திரையரங்கை விட்டு கிளம்பி, அந்த கடுப்பில் டிவிட்டரில்
வானமே எல்லை, வேதம் புதிது போன்ற படங்கள் இனி தமிழில் வரும் சாத்தியக்கூறு உள்ளதா. உங்கள் கருத்து.
என்று கேட்டிருந்தேன்
பிரபல பதிவரும், திரைத்துறையோடு தொடர்பில் இருப்பவருமான திரு நாராயணன் அவர்கள் கீழ்கண்டவாறு பதிலளித்திருந்தார்
கண்டிப்பாக வரும். வெண்ணிலா கபடிக்குழு ஒரு சான்று
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று இன்று படத்தை பார்த்த போது தான் தெரிந்தது

இரண்டு ஒரு வரி கதைகள். (முதல் கதை - படிப்பறிவில்லாத கிராமத்து வாலிபனும் கல்லூரியில் படிக்கும் நகரத்து பெண்ணும் ஒரு திருவிழாவில் காதலிக்கிறார்கள். அவன் மரணமடைந்து விட அவள் அடுத்த முறையும் திருவிழாவிற்கு வந்து அவனை தேடுகிறாள். இரண்டாவது கதை - கிராமத்தில் இருக்கும் ஒரு கபடி குழு ஒரு போட்டியில் வெல்கிறது) தெளிவான நீரோடை போல் திரைக்கதை, இயல்பான வசனங்கள், யதார்த்த காட்சிகள் (அதில் பல கவிதைகளும் உண்டு), அசத்தல் படத்தொகுப்பு, கோட்டிற்கு அருகில் நின்று கபடி பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்தும் ஒளிப்பதிவு, திருவிழா கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் உற்சாகத்தை திரையரங்கில் கொண்டு வரும் ஒலிப்பதிவு என்று நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை ரசித்து படத்துடன் ஒன்றிப்போக முடிந்தது.

படத்தில் நான் பல ரசித்த காட்சிகளில் சில
  • மாரியை அவன் மாமா பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் போது வீட்டினுள் நுழைந்ததும் அந்த புத்தக பையை கீழே போடுவான். அதன் பின் அந்த புத்தகப்பை திரையின் ஒரு ஓரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போது அவன் பண்ணை வேலைக்கு அழைத்து செல்லப்படுவான். புத்தகப்பையில் சரஸ்வதி படம்
  • பையன்கள் காலையில் புதருக்குள் அமர்ந்து கொண்டே அரட்டை அடிப்பது. வாலிப வயசு வரை அதே தலைப்பில் தலைப்பில் அரட்டை தொடர்வது !!
  • நாயகனும் நாயகியும் ராட்டினத்தில் சுத்தும் (சுற்றும்) போதை கொலுசையும், “டாலரை”யும் பரிமாறுவது 
  • திருவிழா சமயம் ஊரில் வெள்ளையடித்து ஊர் முழுவதும் பளிச் என்று இருப்பது. (பிற காட்சிகளில் சுவர்கள் யதார்த்த நிறமே)
  • உடல் பருமனான கபடி வீரர் விளையாட வரும் போது வரிசை விளக்கில் (சீரியல் லைட்) யானையைக்காட்டியது
  • அடுத்த அணி வீரர்களின் “ஜெர்சி”யை (சட்டை) பார்த்து ஏங்கும் வீரர்களுக்கு கோச் ஜெர்சி வாங்கி தருவது
  • மிதிவண்டியை வைத்து பேரூந்தை முந்த முயலும் கிராமத்து இளைஞனுன், அவனது சந்தோஷத்திற்காக தானாக தோற்கும் பேரூந்து ஓட்டுனரும்.
  • தாய் சாப்பிட வேண்டுமென்பதற்காக பாதி சாப்பாட்டுடன் வெளியில் செல்லும் மகன்
  • தன் தந்தை மிதிவண்டியை தள்ளி சிரமப்படுவதை பார்த்து (விளையாட போகும் ஆர்வத்திலும்) உதவும் மகன்
  • கதாநாயகி (படத்தில் பெயர் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன்) அடுத்த வருடம் அந்த தெரு வழியாக செல்லும் போது மாரி கடைசியில் போட்டிருந்த சட்டை அந்த வீட்டில் தொங்குவது
  • 10 மீட்டர் இடைவெளி விட்டு தொடருவும் என்று பேரூந்தின் பின்புற வசனங்கள் மாறி 10 நிமிடம் இடைவெளி விட்டு என்று intermissionஐ அறிவிப்பது
  • விளையாட்டின் மீது அந்த இளைஞர்களுக்கும் அந்த கோச்சிற்கும் உள்ள ஈடுபாட்டை அப்படியே காட்டியது
  • இறுதி ஆட்டத்திற்கு செல்வது உறுதி என்றவுடன் அரையிறுதியில் முக்கிய வீரர்களை ஓய்வு எடுக்க வைக்கும் நடைமுறை
  • அந்த பரோட்டா சாப்பிடும் போட்டியில் 42 என்று கடைக்காரர் கூறியவுடன், முதலிருந்து ஆரம்பிக்கலாம் என்று கூறும் காட்சி (இந்த ஒரு காட்சிக்காவது நீங்கள் படத்தை பார்க்கலாம்)
  • வைகை பாலம், கிழக்கு வெளி வீதி என்று காட்சிகள் சில வினாடிகளே வந்தாலும் மதுரையை சுற்றிபார்த்தது போலிருக்கிறது
  • மாமியாரின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடுவது 
  • நமக்கு கூட கைதட்டுகிறார்கள் என்ற அவர்களின் பெருமிதம்
இது தவிர பல விஷயங்களுக்காக இயக்குனரை பாராட்ட வேண்டியுள்ளது
  • கபடியை வைத்து ஒரு முழுநீள படம், ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் எடுத்த்து.
  • சாக்குடன் ஓடுவது, கையில் நீர் பிடித்து பாட்டிலில் நிறைப்பது போன்ற கிராமத்து விளையாட்டுக்களை பதிந்தது.
  • ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பாழாக்கும் நடைமுறையை வெளிக்கொண்டுவந்தது
  • அந்த நாயை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ !!! 
  • நம்மை குத்தும் வசனங்கள் (பஞ்ச் டயலாக்), பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கூட ரசிக்கும் படி படம் எடுக்க முடியும் என்று காண்பித்தது
  • படம் முழுவதும் கதாநாயகி தாவணியில் வருவது. - அதில் கவர்ச்சியை தவிர்த்து அழகுணர்ச்சியை மட்டும் காண்பித்தது
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அந்த கிளைமாக்ஸ். கண்டிப்பாக தேவையில்லாதது. அடுத்த முறை கதாநாயகி பேரூந்தில் வருவதுடன் படத்தை முடித்திருந்தால் கண்டிப்பாக படம் வணிக ரீதியாக இதை விட அதிகம் வெற்றி பெற்றிருக்கும்.

இந்த படம் பற்றிய சில விமர்சனங்கள்
(ஏதாவது விடுபட்டிருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும்)

தமிழ் திரைப்படங்களின் (நிகழ் கால) தரம் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கட்டாயம் இந்த படத்தை பார்த்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்

இது போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் மக்கள் திரையரங்கில் பார்த்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை வருங்கால இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அளிக்க ஒரு முறையாவது திரையரங்கு சென்று இந்த படத்தை பார்க்கவும்

58 மறுமொழிகள்:

சந்தோஷ் said...

arumaiyaana vimarsanam...
pirichi meyaradhungaradhu idhudhanooo...

ஆ.ஞானசேகரன் said...

படம் பார்க்கவில்லை, உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகின்றது.

புருனோ Bruno said...

சந்தோஷ் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

ஆ.ஞானசேகரன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க முடிந்த படம் :)

சரவணகுமரன் said...

ரொம்ப நல்லா படத்தை கவனிச்சிருக்கீங்க, சார்!

மாதேவி said...

நானும் பார்த்தேன் அண்மையில் பார்த்த மிக நல்ல படம். விரிவான உங்கள் பதிவு அழுத்தமாக உள்ளது.

narsim said...

மருத்துவரே.. நுட்பம்..கலக்கல்..புத்தகப்பை மேட்டரும் இன்னும் சில நீங்கள் எழுதியவற்றையும் நானும் கவனித்தேன்..ஆனால் மிக நுட்பமாக நீங்கள் பார்த்த விதம் அருமை.. நல்ல படத்தை நல்ல பார்வையில் நல்ல பதிவாக இட்டதற்காக நன்றி..

ரசிப்புத்தன்மையின் அளவுகள் இதுபோன்ற படைப்பை பார்க்கும் பார்வைகள் தீர்மானிக்கின்றன.. வாழ்த்துக்கள்..

புருனோ Bruno said...

http://jeyamohan.in/?p=2091

ரவிசங்கர் said...

வேதம் புதிது, வானமே எல்லையில் கூட நாடகத்தன்மை மிகுதி. அவற்றை விடச் சிறப்பான படங்கள் நிறைய வருகின்றன. தொடர்ந்து வரும். சுப்பிரமணியபுரம் பார்த்தீங்களா?

புருனோ Bruno said...

சரவணகுமரன் சார்
மாதேவி மேடம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

எழுத்தாளர் நர்சிம் அவர்களே

வருக

புருனோ Bruno said...

//வேதம் புதிது, வானமே எல்லையில் கூட நாடகத்தன்மை மிகுதி.//

வேதம் புதிது வந்த கால கட்டத்தையும் சேர்த்து யோசித்து பாருங்கள்.

வானமே எல்லை - பாலச்சந்தரின் நாடகம். (நீங்க நாடகம் நிறைய எடுத்துட்டீங்க. எப்ப படம் எடுப்பீங்கன்னு பாமரன் கேட்டது ஞாபகம் இருக்கா


// அவற்றை விடச் சிறப்பான படங்கள் நிறைய வருகின்றன. தொடர்ந்து வரும். சுப்பிரமணியபுரம் பார்த்தீங்களா?//

இல்லை. சுப்பிரமணியபுரம், காதல் இரண்டுமே இது வரை பார்க்கவில்லை.

ரவிசங்கர் said...

பொதுவாக, தமிழ்நாட்டில் கருத்து சொல்லி படம் எடுத்தால் நல்ல படம் என்று விடுகிறார்கள். நல்ல கருத்து வேறு. திரை மொழி வேறு.பாரதிராசா நல்ல கருத்துள்ள படங்களை எடுத்துள்ளார். ஆனால், அவரது காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு நாடகத்தனத்தை ஒதுக்கிப் பார்க்க முடியவில்லை. அவருடைய சம காலத் தமிழ் இயக்குநர்கள், அவரது காலத்துக்கு முந்தைய இந்திய, உலக இயக்குநர்கள் திரை மொழியில் எவ்வளவோ முன்னேறி இருந்தார்கள். முதல் மரியாதை போன்ற அவருடைய பிற படங்களிலே கூட வேதம் புதிதைக் காட்டிலும் நாடகத் தன்மை குறைவு தான்.

சுப்பிரமணியபுரம், காதல் கண்டிப்பாகப் பாருங்கள். பாலாவின் அனைத்துப் படங்கள், அழகி (விவேக் காட்சிகள் நீங்கலாக) ஆகியவையும் பார்க்கலாம்.

புருனோ Bruno said...

//பொதுவாக, தமிழ்நாட்டில் கருத்து சொல்லி படம் எடுத்தால் நல்ல படம் என்று விடுகிறார்கள். நல்ல கருத்து வேறு. திரை மொழி வேறு.//

இதை நான் வெகு தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன் :) :) :)

கருத்து + திரைமொழி இரண்டிலும் நன்றாக இருந்தது அன்பே சிவம் என்று நினைக்கிறேன்

//சுப்பிரமணியபுரம், காதல் கண்டிப்பாகப் பாருங்கள்.//
தட்டு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்

//பாலாவின் அனைத்துப் படங்கள், அழகி (விவேக் காட்சிகள் நீங்கலாக) ஆகியவையும் பார்க்கலாம்.//

நியூ, குஷி, வாலி குறித்த உங்களின் கருத்தென்ன ???

பழூர் கார்த்தி said...

நீங்கள் கூறிய அனைத்து காட்சிகளையும், நானும் ரசித்தேன்.. இம்மாதிரியான நல்ல படங்கள், வணிக ரீதியாகவும் வெற்றி பெற வேண்டியது அவசியம்..

இது பற்றிய என் விமர்சனம் இங்கே

வெட்டிப்பயல் said...

டாக்டர்,
இப்படி கதையை புட்டு புட்டு வைக்க்றதுக்கு முன்னாடி ”May contain Spoilers”னு ஒரு வரியை சேர்த்திருக்கலாமே.

நீங்க எந்த அளவுக்கு நுணுக்கமா கவனிப்பீங்கனு உங்க தசாவதாரம் விமர்சனத்துலயே புரிஞ்சிக்கிட்டோம். இதுலயும் அதே அளவுக்கு நுணுக்கமா கவனிச்சிருக்கீங்க.

இந்த வருடத்தின் சிறந்த பட வரிசைல நிச்சயம் வெண்ணிலா கபடி குழு இருக்கும்.

ரவிசங்கர் said...

//கருத்து + திரைமொழி இரண்டிலும் நன்றாக இருந்தது அன்பே சிவம் என்று நினைக்கிறேன்//

கருத்து நன்றாக இருந்தது சரி. திரையாக்கம் எனக்கு அவ்வளவு நிறைவு இல்லை. கமல் தன்னை முன்னிறுத்தி சொதப்பிய படங்களில் இதுவும் ஒன்று.

//நியூ, குஷி, வாலி குறித்த உங்களின் கருத்தென்ன ???//

மூன்றுமே எனக்கு விருப்பமான படங்கள் தாம். பொழுதுபோக்குக்குப் பார்க்கலாம். கலைப்படமும் பிடிக்கும். மசாலா படமும் பிடிக்கும். எடுப்பதை ஒழுங்காக எடுத்தால் சரி :)

வெண்ணிலா கபடிக்குழு பிடிச்சிருந்தா, விரும்புகிறேன், Five Star படங்களும் உங்களுக்குப் பிடிக்கலாம்.

ILA said...

இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியலங்க. எங்கூர்ல இருந்தா மாதிரியே இருக்கு. மனசெல்லாம் ஒரே கல்லாட்டம் இருக்கு.

கிளைமாக்ஸ்-- சே.. கடுப்பு

தேவகோட்டை ஹக்கீம் said...

அருமையான விமர்சனம்... எனக்கும் படம் பிடித்திருந்தது. கபடியில் உள்ள நுணுக்கம் பலவற்றை இன்னும் சிறப்பாக காட்டி இருக்கலாம்.படத்தின் முடிவு சொதப்பல்...

புருனோ Bruno said...

//நீங்கள் கூறிய அனைத்து காட்சிகளையும், நானும் ரசித்தேன்.. இம்மாதிரியான நல்ல படங்கள், வணிக ரீதியாகவும் வெற்றி பெற வேண்டியது அவசியம்..

இது பற்றிய என் விமர்சனம் இங்கே //
உங்கள் விமர்சனம் அருமை. பதிவில் இணைத்து விட்டேன்

புருனோ Bruno said...

//இப்படி கதையை புட்டு புட்டு வைக்க்றதுக்கு முன்னாடி ”May contain Spoilers”னு ஒரு வரியை சேர்த்திருக்கலாமே.//

ஆமாம்ல. இனி வரும் திரைப்பட விமர்சனங்களுக்கு செய்து விட வேண்டியது தான்

//இந்த வருடத்தின் சிறந்த பட வரிசைல நிச்சயம் வெண்ணிலா கபடி குழு இருக்கும்.//
வழி மொழிகிறேன்

புருனோ Bruno said...

//வெண்ணிலா கபடிக்குழு பிடிச்சிருந்தா, விரும்புகிறேன், Five Star படங்களும் உங்களுக்குப் பிடிக்கலாம். //
விரும்புகிறேன் இன்னமும் பார்க்கவில்லை

பைவ் ஸ்டார் எனது “ஆல் டைம் பேவரைட்ஸ்”ல் ஒன்று

அதிலும் நண்பர்களால் “ஏற்றி விடப்பட்ட” பையன் (டேய் நல்லா வேலை பாருடா, அப்பத்தான் அவ உன்னை கவனிப்பா) சீனியரிடம் வந்து பேசும் காட்சிகளை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது

புருனோ Bruno said...

//இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியலங்க. எங்கூர்ல இருந்தா மாதிரியே இருக்கு. மனசெல்லாம் ஒரே கல்லாட்டம் இருக்கு.//

உண்மைதான் சார். அப்படியே கிராமத்து தெருக்களில் நடக்கும் உணர்வை முதல் பாதியிலும், கபடி போட்டி நடக்கும் பள்ளியில் தங்கி போட்டி பார்க்கும் உணர்வை இரண்டாம் பாதியிலும் அளித்துவிட்டார்கள்

//கிளைமாக்ஸ்-- சே.. கடுப்பு//
எனக்கென்னவோ பல திரையரங்குகளில் கபடியில் வென்று கதாநாயகி பேரூந்தில் வரும் காட்சியோடு ஆபரேட்டர் படத்தை நிறுத்தியிருப்பார் என்றே நினைக்கிறேன் !!

புருனோ Bruno said...

//அருமையான விமர்சனம்... எனக்கும் படம் பிடித்திருந்தது. கபடியில் உள்ள நுணுக்கம் பலவற்றை இன்னும் சிறப்பாக காட்டி இருக்கலாம்.//

இன்னமும் நுணுக்கமாக காட்டியிருந்தால் கபடி தெரியாதவர்களுக்கு புரிந்திருக்குமோ

ஆனால் கபடியிலுள்ள அரசியல் (ஊர் சண்டை, பொருளாதாரம், கிராமத்து அணி vs தொழிற்சாலை அணி, உள்குத்து, கையை உடைப்பது, சொந்த காரணங்களுக்காக அணி வீரரை விளையாட விடாமல் செய்வது, ஜாதி அரசியல்) என்று அனைத்தையும் புட்டு புட்டு வைத்து விட்டார்கள்

இதை பார்த்து ஒருவர் திருந்தினால் கூட போதும்

//படத்தின் முடிவு சொதப்பல்...//
இயக்குனரை தவிர மீதி அனைவரும் இதைத்தான் கூறுகிறோம்

புருனோ Bruno said...

நம்மை குத்தும் வசனங்கள் (பஞ்ச் டயலாக்), பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கூட ரசிக்கும் படி படம் எடுக்க முடியும் என்று காண்பித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்

புருனோ Bruno said...

படம் முழுவதும் கதாநாயகி தாவணியில் வருவது நச்

Navin said...

Good post on a good movie!

"POO" movie is also a nice one.

புருனோ Bruno said...

//Good post on a good movie!

"POO" movie is also a nice one.//

இதுவரை அந்த படம் பார்க்கவில்லை. பார்த்து விட்டு கூறுகிறேன் :) :)

தமிழ் ஓவியா said...

வெண்ணிலா கபடிக்குழு விமர்சனம் படித்தேன். மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

மார்ச் 1-15 2009 உண்மை இதழில் வந்துள்ள இப்படத்தின் விமர்சனத்தை அப்படியே தருகிறேன்.

" ஜாதியை முட்டித்தள்ளும் வெண்ணிலா கபடிக்குழு


கிராமம் என்றால் ஆலமரம், பஞ்சாயத்து, பழைய சொம்பு, உள்ளுர் உயர்ஜாதித் தலைவரின் தீர்ப்பு, கட்டுப்பாடு என்று உயர்ஜாதி மனப்பாங்கை எதிர்க்கத் துணியா-விட்டாலும், அதைச் சிலாகிக்கும் போக்கிலிருந்து தமிழ்த் திரையுலகினர் இப்போதுதான் வெளியே வந்துள்ளனர். வெண்ணிலா கபடிக்குழு அப்படி வேறொரு கிராமத்தையும் மனிதர்களையும் காட்டுகிறது.

தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாய்த் திகழும் சடுகுடு போட்டிகளை மய்யமாகக் கொண்டு படம் எடுத்திருப்பதற்கு இயக்குநருக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் என்ற நமது எண்ணம் படத்தைப் பார்த்த பிறகு இன்னும் அதிகமாகிறது. காரணம் சடுகுடுக்காக மட்டுமில்லை; சடுகுடுவில் நுழையும் ஜாதிக்கும், ஜாதியைத் திணிப்போருக்கும் சவுக்கடி கொடுப்பதற்கும்தான்.

வெண்ணிலா கபடிக்குழு - ஜாதியை மறந்து அந்தஸ்தை மறந்து விளையாட்டின்மேல் கொண்ட ஈடுபாட்டினால் மட்டும் இணைந்த இளைஞர்களின் குழு. சிறுவர்களாக இருந்த பருவம் தொடங்கி, வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ ஒன்றாய் விளையாடி ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பிய, முறையான பயிற்சியில்லாத குழு, கண்ட ஜாதிப் பயல்களோடு விளையாடுவதாக பெற்றோர் சொன்னாலும் கேட்காத இளைஞர்கள்.

திருவிழாவின்போது சொந்த ஊரில் பெருமையடித்துக் கொள்வதற்காகவே, பக்கத்து எருமை நாயக்கன்பட்டி(எரமநாயக்கன் பட்டி என்பதுதான் சரி --- தமிழ் ஓவியா) சொத்தை டீமை வரவைத்து ஆட நினைக்கும் இவர்களைச் சுற்றி நிகழும் கதை.

ஊர்த்திருவிழா, அங்கு வரும் காதல், அடுத்த திருவிழாவில் சந்திக்க உறுதி பூண்டு நிகழும் பிரிவு, திருவிழாப் போட்டியில் சண்டை, வன்மம் எனச் சுற்றி வரும் திரைக்கதை கபடிப் போட்டி ஒன்றில் வேகமெடுக்கிறது.

பேருந்தில் போகும்போது, அரைகுறையாகப் பார்த்த கபடிப் போட்டி விளம்பரத்தை வைத்து, போட்டியில் கலந்து கொள்ளக் கிளம்புகிறார்கள் குழுவினர். முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும் என்ற சூழலில், திடீரென்று வாய்ப்புக் கிடைக்கிறது வெண்ணிலா கபடிக் குழுவுக்கு. சரியான பயிற்றுநரும் அமைந்துவிட முதல் வெற்றியைப் பெற்று, தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்கள்.

வெற்றி பெற்ற குழுவினருக்கு வாழ்த்துச் சொல்ல தூரத்து சொந்தக்காரர் ஒருவர் விருந்து வைக்கிறார். விருந்தின்போது, வந்திருக்கும் குழுவினரைப் பார்த்து ஏம்பா நீ எந்த சாமியைக் கும்புடறவன்? கீழத்தெருவா? என்று கேட்கிறாள் கிழவி. ஊர்ப்பெயரைச் சொன்னால், சொந்தக்காரர் பெயரைக் கேட்டு, குலதெய்வத்தைக் கேட்டு, வசிக்கும் தெருவைக் கேட்டு எப்படியாவது ஜாதியைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்தத் துடிக்கும் பழக்கத்தை நம்மால் இன்றுங் காணமுடிகிறது. இவர்களுக்கெல்லாம் சேர்த்து ஒரு இழுப்பு இழுத்ததைப் போல பதில் வருகிறது.

இப்ப என்ன ஜாதின்னு தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப்போற. இந்த சாமியையும், ஜாதியையும் என்னைக்கு தூக்கிப் போடுறீங்களோ, அன்னைக்குத்தான் உருப்படமுடியும் என்ற பதில் நம்மை நிமிரச் செய்கிறது. நிமிர்ந்து அமர்ந்தபடி கூர்ந்து நோக்கினால், போகிற போக்கில் கிழவி பேசும் கண்டகண்ட கட்சியில சேர்ந்து வீணாப் போறான் என்ற வசனத்தையும், பெரியவரின் தலைக்குப்பின்னால் தொங்கும் பெரியார் படத்தையும் கவனிக்க முடியும்.

இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் நேரத்தில் ஜாதி உணர்வாலும், சுயநல உணர்வாலும் தூண்டப்பட்ட அணித்தலைவன், கதாநாயகன் மாரியை விளையாட-விடாமல் செய்ய எண்ணுகிறான். தகுதிவாய்ந்த மாரியைப் புறக்கணிக்கும் அளவுக்கு ஜாதி உணர்வு ஊட்டிய ஜாதிக்காரனை முட்டித்தள்ளி, ஒண்ணா இருக்கறவங்ககிட்ட ஜாதியைத் திணிக்க நினைச்ச.... தொலைச்சுடுவேன் என்று திரையில் முழுதாய் வியாபித்து எச்சரிக்கைத் தருகிறார் கபடி பயிற்றுநர். இறுதியில் அணித்தலைவனை விட்டுவிட்டு, பயிற்றுநர் பின்னால் அணிவகுத்து வெற்றி காண்கிறது வெண்ணிலா கபடிக்குழு. ஜாதியால் உந்தப்பட்டவனே, அதற்காக வெட்கப்பட்டு வெறுப்பால் பேசுவதாக வைக்கப்பட்ட வசனம் - சரியான பாடம்.

சொல்ல வந்த கதையால், அழுத்தமாகப் பதியும் இடத்தில் ஜாதியை வைத்து, அதைக் கேவலமாகப் பார்க்கும்படியான காட்சியமைப்புக்களையும், வசனத்தையும் படைத்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நமது உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் படைக்கவேண்டும். வசனத்தில் அல்லாமல் அழுத்தமான காட்சி வடிவில் கருத்தைப் பதியவைக்கும் இத்தகைய முயற்சிகள் தொடரவேண்டும்.

ராஜ நடராஜன் said...

படத்தை பத்தி பிரிச்சி மேஞ்சிருக்கீங்க.என் கண்ணுல படாத நிறைய விசயங்களை கூர்ந்து கவனித்துள்ளீர்கள்.இன்னுமொரு முறை வட்டத்தகடை ஓட விட வச்சீட்டீங்க.

vanathy said...

நானும் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
மிகவும் பிடித்திருந்தது.
பலரும் சொன்ன மாதிரி நாயகனைத் தேவை இல்லாமல் சாகடித்துவிட்டார்கள்.
காட்சிகள் மிகவும் யதார்த்தமாக இருந்தன .
இப்போதெல்லாம் குறைந்த செலவில் புதிய அல்லது சிறிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த படங்கள் ,பெரிய ஸ்டார்களை வைத்து கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கும் படங்களை விட நன்றாக உள்ளன
எனக்கு பொழுதுபோக்கு படங்களும் பிடிக்கும்,அதே சமயம் கலை நயம் மிக்க யதார்த்த பூர்வமான படங்களும் பிடிக்கும்.
மசாலா பொழுதுபோக்குப் படங்களைக் கூட இப்போது நன்றாக எடுப்பதில்லை.,பல கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள் ,வெளிநாடுகள் என்று திரிகிறார்கள் ,நாயகனுக்கும் ,நாயகிக்கும் கோடி கோடியாக சம்பளம் கொடுக்கிறார்கள்.ஆனால் உருப்படியாக ஒரு பொழுதுபோக்குப் படத்தை சரியாக ரசிக்கக் கூடிய முறையில் எடுத்து வெளியிடும் திறைமையைக் கூட இழந்து வருகிறார்கள்.
அன்று வந்த ரஜினிகாந்த் படங்கள் மசாலா படங்கள் என்றாலும் பார்க்கக் கூடிய விதத்தில் இருந்தன.
வாலி,குஷி,கில்லி,சந்திரமுகி,சாமி போன்றவை சிறந்த பொழுதுபோக்குப் படங்கள்.
ஆனால் சமீபத்தில் வந்த குருவி,குசேலன்,ஏகன் ,சத்யம் எல்லாம் தலைவலி உண்டாக்கும் மோசமான திரைக்கதை கொண்ட படங்கள்.
இன்று திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாயகனின் ஸ்டார் அந்தஸ்துக்கும் ,நாயகியின் உடல் கவர்ச்சிக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பதால் மட்டுமே இந்த நிலை வந்துள்ளது.
---வானதி

புருனோ Bruno said...

//வெற்றி பெற்ற குழுவினருக்கு வாழ்த்துச் சொல்ல தூரத்து சொந்தக்காரர் ஒருவர் விருந்து வைக்கிறார். விருந்தின்போது, வந்திருக்கும் குழுவினரைப் பார்த்து ஏம்பா நீ எந்த சாமியைக் கும்புடறவன்? கீழத்தெருவா? என்று கேட்கிறாள் கிழவி. ஊர்ப்பெயரைச் சொன்னால், சொந்தக்காரர் பெயரைக் கேட்டு, குலதெய்வத்தைக் கேட்டு, வசிக்கும் தெருவைக் கேட்டு எப்படியாவது ஜாதியைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்தத் துடிக்கும் பழக்கத்தை நம்மால் இன்றுங் காணமுடிகிறது. இவர்களுக்கெல்லாம் சேர்த்து ஒரு இழுப்பு இழுத்ததைப் போல பதில் வருகிறது.//

நச் காட்சி அது !!

புருனோ Bruno said...

//.இன்னுமொரு முறை வட்டத்தகடை ஓட விட வச்சீட்டீங்க.//

தலைவரே

திரையரங்கில் சென்று பாருங்கள் தலைவரே :) :)

புருனோ Bruno said...

//எனக்கு பொழுதுபோக்கு படங்களும் பிடிக்கும்,அதே சமயம் கலை நயம் மிக்க யதார்த்த பூர்வமான படங்களும் பிடிக்கும்.//

பெரும்பாலனவர்கள் இதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதை திரைத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்

//மசாலா பொழுதுபோக்குப் படங்களைக் கூட இப்போது நன்றாக எடுப்பதில்லை.,பல கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள் ,வெளிநாடுகள் என்று திரிகிறார்கள் ,நாயகனுக்கும் ,நாயகிக்கும் கோடி கோடியாக சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் உருப்படியாக ஒரு பொழுதுபோக்குப் படத்தை சரியாக ரசிக்கக் கூடிய முறையில் எடுத்து வெளியிடும் திறைமையைக் கூட இழந்து வருகிறார்கள்.//

ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டீர்கள் !!

புருனோ Bruno said...

//அன்று வந்த ரஜினிகாந்த் படங்கள் மசாலா படங்கள் என்றாலும் பார்க்கக் கூடிய விதத்தில் இருந்தன.
வாலி,குஷி,கில்லி,சந்திரமுகி,சாமி போன்றவை சிறந்த பொழுதுபோக்குப் படங்கள்.//

:) :)


//ஆனால் சமீபத்தில் வந்த குருவி,குசேலன்,ஏகன் ,சத்யம் எல்லாம் தலைவலி உண்டாக்கும் மோசமான திரைக்கதை கொண்ட படங்கள்.//

சாட்டையடி

Lambda said...

நல்ல படம் டொக்ரர் !!!
ஏன் ? ஏப்படி மாரி செத்தான் ????

புருனோ Bruno said...

//நல்ல படம் டொக்ரர் !!!
ஏன் ? ஏப்படி மாரி செத்தான் ????//

இயக்குனரிடம் கேட்க வேண்டிய கேள்வி :) :)

புருனோ Bruno said...

//நல்ல படம் டொக்ரர் !!!
ஏன் ? ஏப்படி மாரி செத்தான் ????//

http://lazyguy2005.blogspot.com/2009/02/blog-post.html என்ன சொல்கிறார் பாருங்கள்

கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வழிமொழிகிறேன்

முரளிகண்ணன் said...

டாக்டர் போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டீங்ங்க

:-)))))

எத்தனை நாளைக்குத்தான் அசத்தல், கலக்கல்னே சொல்லுறது.

பிரிச்சு மேஞ்சுட்டீங்க

vanathy said...

டாக்டர் அவர்களே,
எனது ஒரு கருத்துக்கு நீங்கள் சிரித்து பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழப்பமாக உள்ளது .
அது நக்கல் சிரிப்பா அல்லது நமுட்டுச்சிரிப்பா என்று தெரியவில்லை.
சரி விஷயத்துக்கு வருகிறேன்,
வாலி,குஷி ,சந்திரமுகி ,சாமி ...என்பன சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் என்று நான் சொன்னதில் 'சிறந்த' என்ற அடைமொழி தரம் மிக்க என்ற கருத்தில் அல்ல.
எத்தனையோ வர்த்தக ரீதியிலான படங்கள் கூட இரண்டரை மணி நேரமும் பொறுமையின் இருந்து பார்க்க முடியாத மாதிரி அறுவையாக உள்ளன.
இந்தப் படங்கள் அப்படி இல்லாமல் பொழுதை போக்க கூடியமட்டில் இருக்கின்றன என்பதுதான் அதன் பொருள்.
அதாவது ஏதோ அந்த இரண்டரை மணி நேரமும் பார்த்து ரசித்து விட்டு அதன் பின்பு எமது மனத்தில் எந்த தாக்கங்களையும் உண்டாக்காத படங்கள்.
பொழுதுபோக்கை இவை சிறப்பாகத் தருகின்றன. உலகத் தரத்தை அல்ல.
தரமான படங்கள் என்பவை மண்ணின் வாசனையோடு அந்தப் பகுதி மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் கலைநயத்துடன் உணர்வு பூர்வமாகவும் கூறி உண்மை நிலையைப் பிரதிபலிப்பவை ஆகவும் இருப்பவை.
இரானிய ,ஐரோப்பிய படங்கள் பெரும்பாலும் இப்படி உள்ளன.
அந்தக் கால மலையாளப் படங்களும் இப்படித்தான் இருந்தன
இப்படியான படங்கள் அந்த இரண்டரை மணி நேரத்துக்கு அப்பாலும் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்குபவை. எங்கள் சிந்தனையைத் தூண்டி உணர்வுகளை ஊடுருபவை.தமிழில் அப்படி என்னைக் கவர்ந்து மனதை பாதித்த படங்கள்.
காதல்,வெயில் ,ஒன்பது ரூபாய் நோட்டு , மொழி ,பூ ,சுப்ரமணியபுரம் ,பருத்தி வீரன்
தமிழ் திரையுலகில் இரண்டு வகைப் படங்களுக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். எதனைத் தந்தாலும் ,அதனை சரியான முறையில் தர வேண்டும்.
--vanathy

புருனோ Bruno said...

//எனது ஒரு கருத்துக்கு நீங்கள் சிரித்து பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழப்பமாக உள்ளது .//

அந்த கருத்துடன் நானும் இசைந்து போகிறேன் என்ற மகிழ்ச்சி, அதாவது நம் கருத்துடன் இன்னொருவர் இருக்கிறார் என்ற சந்தோஷம்

//அது நக்கல் சிரிப்பா அல்லது நமுட்டுச்சிரிப்பா என்று தெரியவில்லை.//
இரண்டும் இல்லை

புருனோ Bruno said...

//பொழுதுபோக்கை இவை சிறப்பாகத் தருகின்றன.//

ஏற்றுக்கொள்கிறேன்.

//தமிழ் திரையுலகில் இரண்டு வகைப் படங்களுக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். எதனைத் தந்தாலும் ,அதனை சரியான முறையில் தர வேண்டும்.//

வழிமொழிகிறேன்

முகில் said...

அனகாவின் குரல் : எல்லா வடிவங்களிலும்
http://www.writermugil.com/?p=155

வடகரை வேலன் said...

டாக்டர்,

இந்தப் படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் ஷோபா சக்தி. வசனமும், வாய்ஸ் ஓவர் வர்னனைகளும் பிரமாதமாக இருக்கும்.

venkatramanan said...

வேலன்! அது பாஸ்கர் சக்தி! ஸ்லைட்டா மிஸ்ஸாயிடுச்சு போல!
பாஸ்கர் சக்தி பற்றி ஜெயமோகன்

பாஸ்கர் சக்திக்கு கலைமாமணி விருது கிடைத்தது நல்லதொரு விஷயம். இது தொடர்பான செல்வேந்திரனின் இடுகையில் இட்ட மறுமொழி:

கீற்று தளத்தில் பாஸ்கர் சக்தியின் சில் படைப்புகளை கண்டிருக்கிறேன். இவரது எழுத்துக்களை பள்ளிப் பருவத்தில் விகடனில் வாசித்து, பின் இவரது சிநேகத்துடனான எழுத்தைத் தேடி இரண்டு புத்தகங்களை ரசித்துப் படித்திருக்கிறேன்! இவரையும் க.சீ.சிவகுமாரையும் இரட்டை எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம்!(இருவரும் இந்தியா டுடேயின் சிறுகதைத் தொகுப்பின் தொட்டடுத்தப் பக்கங்களில் அறிமுகமானதாக க.சீ.சிவகுமார், ‘பழுப்பு நிறப் புகைப்பட’த்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்!)
இவரது சில படைப்புகளை (கீற்று, தீம்தரிகிட, விகடன்) pdf கோப்பாக சேமித்துள்ளேன்! நிச்சயம் இவரைப் புதிதாக வாசிப்பவர்களுக்கு உவப்பாயிருக்கும் என நம்பலாம்!
போனஸ் - சிவக்குமாரின் படைப்புகளும் மற்றும் ஆதிமங்கலமும்!

உமாஷக்தி said...

நல்ல விமர்சனம். மிகையில்லாத இயல்பான நடிப்பிலும் இத்திரைப்படம் சிறந்து விளங்குகிறது. cinematography மிகவும் அருமை. பட்டியலில் என்னுடைய விமர்சனைத்தையும் சேர்த்துக் கொண்டால் மகிழ்வேன். நன்றி
http://umashakthi.blogspot.com/2009/03/blog-post_08.html

புருனோ Bruno said...

//அனகாவின் குரல் : எல்லா வடிவங்களிலும்
http://www.writermugil.com/?p=155//

முகில் சார்

நன்றி

புருனோ Bruno said...

வடகரை வேலன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

வெங்கட்ரமணன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//பட்டியலில் என்னுடைய விமர்சனைத்தையும் சேர்த்துக் கொண்டால் மகிழ்வேன். நன்றி//

சேர்த்து விட்டேன்

உமாஷக்தி said...

நன்றி டாக்டர். உங்கள் இலக்கிய ஆர்வம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. உங்கள் வலைத்தள அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.:)

உமாஷக்தி said...

அன்புள்ள வெங்கட்ரமணன், நண்பர் பாஸ்கர் சக்தியைப் பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

அசோசியேட் said...

இயற்கையான பேச்சுநடை வசனங்களும் காட்சி அமைப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். நீங்கள் சொல்வதுபோல் பல மாத கால இடைவெளியில் ஒரு நல்ல படம் பார்த்தோம். இயக்குனருக்கு நன்றி,

புருனோ Bruno said...

பதிவர் உமாஷக்தி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

அசோசியேட் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Rajaram said...

ப்ருனோ, நான் முதல் முறையாக தங்கள் வலைப்பதிவிற்கு வந்துள்ளேன். அருமையான தமிழில் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சில ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கத்தை கண்ட பொழுது நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை. என்னால் இயன்ற அளவிற்கு நல்ல தமிழில் எழுத முயன்று இருக்கிறேன். ;)

வெண்ணிலா கபடி குழு பற்றி, முக்கியமாக அதன் முடிவை பற்றி, பலர் சாடிஇருந்தனர். என் சிறிய கருத்தை கூற விரும்புகிறேன். இந்த முடிவுதான் இந்த படத்தை இது போல் சாயலில் உள்ள வேறு சில படங்களில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) இருந்து வேறுபடுத்தியது என்று எண்ணுகிறேன்.
அந்த முடிவின் தாக்கம் என்னை விட்டு நீங்க சில மணிநேரம் ஆனது. பல மனதை நெருடும் விஷயங்கள் தோன்றின.

1) வைரவனின் முடிவுப்படி மாரியை விளையாட விடாமல் இருந்தால் அவன் இறந்திருக்க மாட்டான் அல்லவா?

2) ஆக, முதலில் கெட்டவனாக தெரிந்த வைரவன் இப்பொழுது நல்லவனா தெரிகிறான். ஏனென்றால், அந்த சூழ்நிலையில் வைரவன் விளையாடி இருந்தால் மாரி இறந்திருக்க மாட்டான். ஆனால் அந்த நிலையில் நமக்கு—இயக்குனரை தவிர அனைவர்க்கும்—மாரியின் வருங்காலம் பற்றி தெரிந்து இருக்கவில்லை. ஆக, நாம் சவடமுத்து சாரின் தைரியத்தையும் நமது வெண்ணிலா அணியின் வெற்றியையும் எண்ணி சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இந்த முடிவு சம்பட்டியால் தலையில் அடித்து போல் இருந்தது.
மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ விதியின் விளையாட்டை நாசூக்காக தெரிவிக்க இயக்குனர் இந்த முறையை கையாண்டிருக்கிறார் என்றே தோன்றியது.

3) மேலும், கடைசி வரை கதாநாயகியின் பெயரை வெளிப்படுத்தாதது அழகு. யோசிக்கவைத்தது.
நன்றி.
ராஜாராம்

புருனோ Bruno said...

//1) வைரவனின் முடிவுப்படி மாரியை விளையாட விடாமல் இருந்தால் அவன் இறந்திருக்க மாட்டான் அல்லவா?

2) ஆக, முதலில் கெட்டவனாக தெரிந்த வைரவன் இப்பொழுது நல்லவனா தெரிகிறான். ஏனென்றால், அந்த சூழ்நிலையில் வைரவன் விளையாடி இருந்தால் மாரி இறந்திருக்க மாட்டான். ஆனால் அந்த நிலையில் நமக்கு—இயக்குனரை தவிர அனைவர்க்கும்—மாரியின் வருங்காலம் பற்றி தெரிந்து இருக்கவில்லை. ஆக, நாம் சவடமுத்து சாரின் தைரியத்தையும் நமது வெண்ணிலா அணியின் வெற்றியையும் எண்ணி சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இந்த முடிவு சம்பட்டியால் தலையில் அடித்து போல் இருந்தது. //

தங்கள் கோணம் அருமை சார்

//மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ விதியின் விளையாட்டை நாசூக்காக தெரிவிக்க இயக்குனர் இந்த முறையை கையாண்டிருக்கிறார் என்றே தோன்றியது. //

இருக்கலாம்

புருனோ Bruno said...

// என்னால் இயன்ற அளவிற்கு நல்ல தமிழில் எழுத முயன்று இருக்கிறேன். ;)//

எந்த வலைப்பதிவு என்று சுட்டி தாருங்கள் சார்

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...