இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, May 31, 2009

புத்தகங்களும் நாட்டுடைமையும் - மேலும் சில கருத்துக்கள்

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அரசின் நிதிநிலை அறிக்கையில் சில தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் சிறு சர்ச்சை ஒன்று எழுந்தது.

இந்த விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாதவர்களும் (அல்லது புரிதல் இருந்தாலும் அரசை திட்ட வேண்டும் / அரசாங்கத்தை குறை கூற வேண்டும் / அரசு நடைமுறைகளின் மேல் சேறிறைக்க வேண்டும் என்ற “அரிப்பு” இருப்பவர்களும்) ஊடகங்களில் இது குறித்து வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி (கைக்கு வந்ததை எல்லாம் தட்டச்சு செய்து) பல கட்டுரைகள் எழுதியதை பார்த்தோம்.

பதிவுலகில் நடந்தது தான் உச்சக்கட்ட நகைச்சுவை : புத்தகங்களின் நாட்டுடைமையை அரசு சாலை விரிவாக்கத்திற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்வதைபோல் நினைத்துக்கொண்டு பதிவு / மறுமொழி எழுதிய கொடுமை கூட நடந்தது.

அப்பொழுது நான் எழுதியது புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ?? இங்கு உள்ளது. தற்போதைய செய்தியும், அது குறித்த விவாதமும் இறுதியில் உள்ளன

எனது நாட்டுடைமை குறித்த இடுகையை ஏறகனவே வாசித்திருந்தால் நேரடியாக இறுதிபகுதிக்கு செல்லலாம்

புத்தகம், காப்புரிமை பற்றி சில தகவல்களை பார்ப்போம். உதாரணத்திற்கு பதிவர் லக்கியின்(எழுத்தாளர் யுவகிருஷ்ணா)வின் “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ” புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்


இந்த புத்தகத்தை எழுதியது யார் : யுவகிருஷ்ணா


வெளியிடுவது யார் : கிழக்கு பதிப்பகம்


இதில் லாபம் எப்படி வரும் :
புத்தகம் எழுதும், தட்டச்சு செய்யும், வடிவமைக்கும், அச்சிடும், விளம்பரப்படுத்தும், விநியோகிக்கும் செலவு (தள்ளுபடி தரும் பணம்) போக மீதி இருக்கும் பணம் தான் லாபம்


லாபத்தில் யாருக்கு பங்கு :
இதில் பதிப்பகத்திற்கும் நூலாசிரியருக்கும் பங்கு
இப்பொழுது இந்த புத்தகத்தை கிழக்கு மட்டும் தான் வெளியிடமுடியும். யாருக்காவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றால் கிழக்கில் மட்டும் தான் வாங்கி படிக்க முடியும்.

வேறு பதிப்பகங்கள் வெளியிட முடியாது (அனுமதி இல்லாமல் அச்சிடக்கூட முடியாது)

சரி, நாட்டுடைமை என்றால் என்ன :
நாட்டுடைமை என்றால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை யுவகிருஷ்ணாவிற்கு அளித்து அவரது புத்தகங்களை யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்கலாம் என்று ஆணை பிறப்பிப்பது

அப்படி ஆணை பிறப்பித்தபின் என்னவாகும் :
நான் அதே புத்தகத்தை மேப் லித்தோ காகிதத்தில் அச்சிட்டு ஒரு புத்தகம் 300 ரூபாய் என்று விற்கலாம். நீங்கள் அதை தங்க நிற மையில் அச்சிட்டு ஒரு புத்தகம் 1000 ரூபாய் என்று விற்கலாம். அசோகன் சார் அதை ”பாக்கெட் நாவலா”க தரலாம். அப்படி புத்தகத்தை அச்சிடும் யாரும் யுவகிருஷ்ணாவிற்கு பணம் அளிக்க வேண்டாம் !!

இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) எழுத்தாளருக்கு (இந்த உதாரணத்தில் யுவகிருஷ்ணாவிற்கு) லாபமா நஷ்டமா : அது அரசு தரும் பணம் மற்றும் இது வரை அவரது புத்தகம் விற்கும் அளவை பொருத்தது.

உதாரணமாக

அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 லட்சம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு லாபமே

ஆனால்


அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 கோடி வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு நஷ்டமே
இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) அரசிற்கு வரவா, செலவா : கண்டிப்பாக செலவு தான்
பிறகு ஏன் அரசாங்கம் இப்படி புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் : இரு காரணங்கள்
1. அந்த புத்தகம் நல்ல புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்
2. எழுத்தாளருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம்


புத்தகம் நாட்டுடைமையாக்க பொதுவாக கடைபிடிக்கப்படும் நடைமுறை என்ன.
புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதால் அரசிற்கு எந்த வருவாயும் கிடையாது. செலவு மட்டும் தான். எனவே இந்த செலவை செய்வதற்கு அரசு சட்டசபையில் ஒப்புதல் வாங்க வேண்டும்

சட்டசபையில் ஓப்புதல் வாங்காமல் செலவு செய்ய முடியாதா
ஒரு அரசானது நினைத்து போல் செலவு செய்து விட முடியாது. அடுத்த நிதியாண்டில் தமிழக அரசு என்னென்ன செலவு செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக வருவாய் எப்படி வரும் என்பது குறித்து தமிழக அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை ஒன்றை சட்டசபையில் சமர்பிப்பார். அதை உறுப்பினர் ஏற்றுக்கொண்டபின்னர் 01.04.2009 முதல் 31.03.2010 வரை உள்ள செலவுகள் இதன் அடிப்படையில் தான் நடைபெறும்.

புத்தகம் நாட்டுடைமையாக்க மட்டும் ஏன் இப்படி
புத்தகங்களை நாட்டுடைமையாக்க மட்டும் அல்ல. அரசின் அனைத்து செலவுகளும் அந்த அறிக்கையில் இருக்கும்.
இந்த வருட அறிக்கையில் இருக்கும் சில உதாரணங்கள்
  1. தமிழகத்தில் வரும் நிதியாண்டு முதல் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும், இனிமேல் வட்டி கிடையவே கிடையாது. அந்த வட்டித் தொகையை அரசே செலுத்திவிடும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  2. கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பதற்காக, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோத்தயம் கிராமத்தில், சுமார் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நல்லதங்காள் ஓடைக்குக் குறுக்கே அணை ஒன்று அமைக்கப்படும்
  3. வரும் நிதியாண்டில் மேலும் 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்க ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  4. நமது மாநிலத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான புதிய திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்
நிதி அமைச்சர் அறிவித்து விட்டாரே, அப்படியானால் மாணவர்களுக்கு நாளையே கண்ணாடி வழங்கி விடுவார்களா
நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பின் அது குறித்து விவாதம் நடைபெறும். சபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த அறிக்கை இறுதி வடிவம் பெறும்.
உதாரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிதி ஒதுக்கப்படும் (அதனால் வேறு ஏதாவது திட்டத்திற்கு அளிக்கப்பட்ட நிதி குறையலாம்)


மாணவர்களுக்கு இவ்வளவு கோடி ஒதுக்கப்படுகிறது என்று மட்டும் அனுமதி வாங்கி பின்னர் அந்த பணத்திற்கு கண்ணாடியோ காது கேட்கும் கருவியோ வாங்கினால் என்ன
மக்களாட்சி எனபதன் கோட்பாடே மக்களின் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வது தானே தவிர அதிகாரிகள் முடிவு செய்வது அல்ல என்பதால் தான் இந்த விபரங்கள் நிதி நிலை அறிக்கையில் வருகிறது


நாட்டுடமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது” என்று ஒரு கருத்து உள்ளதே
அப்படி செய்யலாம். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைவு. மேலும் அப்படி செய்வது மக்களாட்சியின் அடிப்படைக்கு விரோதமான செயல்

புத்தகங்களை நாட்டுடைமையாக்க 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறிவிட்டு எந்த புத்தகங்கள் என்று பின்னர் தீர்மாணிக்க முடியாதா
முடியும். ஆனால் அது தார்மிக ரீதியாக சரியான செயல் அல்ல.
பின்னர் ஏன் அப்படி செய்யாமல் ஆசிரியர்களின் பெயரை நிதிநிலை அறிக்கையில் கூறுகிறார்கள்
யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றன (யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை !!) என்ற முடிவை அந்த துறையில் உள்ள ஒரு அதிகாரி எடுப்பதற்கு பதிலாக மக்களாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் எடுப்பது தான் மக்களாட்சி என்பதால் அந்த பெயர்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுகின்றன
உதாரணமாக 25 லட்சம் செலவழித்து யுவகிருஷ்ணாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதற்கு பதிலாக டேவிட் மெக்கின்சி ஒகில்வியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று உறுப்பினர்களில் பலரும் கருத்து தெரிவித்தால் யுவகிருஷ்ணாவின் எழுத்துக்களுக்கு பதில் ஒகில்வியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்படலாம்

சரி, எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பெயரை நேற்று நிதிஅமைசச்ர் அறிவித்தாரே. நான் இன்று இரவு அவரது புத்தகங்கள் இரண்டை அச்சிட்டு நாளை சாந்தி திரையரங்கு முன்னால் விற்கலாமா
நன்றாக் கவனியுங்கள். எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. இப்பொழுது நிதிஅமைச்சர் என்ன கூறியுள்ளார் என்று மறுபடியும் பாருங்கள்
நலன் பல குவிக்கும் நிதிநிலை அறிக்கையை அவையின் ஒப்புதலுக்காக இந்த அரசு முன்வைக்கிறது.
அப்படி என்றால் சட்ட சபை அனுமதி அளித்த பின்னர் தான் என்னால் அந்த புத்தகங்களை அச்சிட முடியுமா
சட்ட சபை அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் சட்ட சபை அனுமதி அளித்தால் மட்டும் போதாது
பிறகு என்ன வேண்டும்
முதலில் சட்டசபையில் இதற்கான அனுமதியை பெற வேண்டும்
அதன் பிறகு இதற்கான துறையிலிருந்து அந்த ஆசிரியரை தொடர்பு கொள்வார்கள். அல்லது ஆசிரியரின் குடும்பத்தினரை அல்லது வாரிசுகளை
எதற்கு
அவர்களிடமிருந்து அந்த உரிமங்களை முறைப்படி பெற
சட்ட சபையில் அறிவித்த பின்னர் அந்த ஆசிரியரின் வாரிசுகள் மறுக்க முடியுமா
கண்டிப்பாக மறுக்கலாம். சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை
இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது

சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர்தான் நீங்களோ நானோ அந்த புத்தகங்களை அச்சிடலாம்

இது குறித்த அரசின் நிலை
இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.
நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.
உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.
ஒரு வேளை சட்டசபையில் ஒரு ஆசிரியரின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க கடும் எதிர்ப்பு வருகிறது. அப்படியானால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள மாட்டார்களா
ஒரு வேளை அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கும் பட்சத்தில் அந்த ஆசிரியரின் நூல்களை நாட்டுடைமையாக்க சபை அனுமதி வழங்கவில்லை என்றால் ”அவையின் ஒப்புதலுக்காக அரசு முன்வைத்த போது” ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு அந்த ஆசிரியரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்க நிதி அனுமதி இல்லை என்பதால் அவரது குடும்பத்தின்ரை தொடர்பு கொள்ள மாட்டார்கள்


குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அதன் பிறகு சட்டசபையின் ஒப்புதலுக்கு வைத்தால் என்ன
தமிழ் எழுத்தாளர்களில் வெகு சிலரே கோடிஸ்வரர்கள் !!! ஏனைய எழுத்தாளர்களின் நிதி நிலைமை மெச்சும் படி இல்லை.
இப்படி இருக்கும் போது ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் வந்து பணம் தருகிறேன் (அதற்கு அனுமதி தாருங்கள்) என்று கூறிவிட்டு ஏதாவது காரணத்தால் அந்த வருடமோ அல்லது அதன் பின்னரோ நிதி ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பத்தினரின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசித்தீர்களா
அதனால் தான் நிதி ஓதுக்கீடு முடிந்த பின்னர் அனுமதி கேட்கிறார்கள். குடும்பத்தினர் அனுமதி அளித்தால் 100 சதம் அவர்களுக்கு பணம் தரலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதல்லவா

உங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்வீர்கள்
  • 1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா
  • அல்லது
  • 2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா
அரசு (ஏழ்மையில் இருக்கும் ஒரு எழுத்தாளரின் குடும்பத்திற்கு) என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்

இது குறித்து பதிவர் பத்ரியின் அவர்கள் ஒரு பதிவு (நாட்டுடமை குழப்பம் ) எழுதியுள்ளார். அதில் உள்ள சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறித்த என் கருத்துக்கள்
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம்.//
மன்னிக்க வேண்டும்
இதில் அபத்தம் எதுவும் இல்லை என்பது என் கருத்து

நேற்று வெளியிடப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது. இதை அபத்தம் என்று கூறுவது என்னைப்பொருத்த வரையில் ஏற்புடையது அல்ல

சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும்.

இப்படி நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தான் அந்த துறையிலிருந்து அந்த ஆசிரியரின் குடும்பத்தினரை / வாரிசுகளை தொடர்பு கொண்டு சம்மதம் கேட்பார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த எழுத்தாளரை தேடிபோய்விடுவார்கள் (இந்த வருடம் அல்லது அடுத்த வருடம்)

உண்மையில் அபத்தம் என்னவென்றால் இப்படி அரசிடமிருந்து தனிப்பட்ட கடிதம் வரும் வரை காத்திருக்காமல் இருவர் நேற்று விளம்பரம் தேடியது தான்.
//இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.//
இது எப்படி opt-out ஆகியது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் தனிப்பட்ட அனுமதி வாங்கப்பட்ட பின்னரே ஆணை வெளியிடப்படும். ஆக அரசுடைமை என்பது opt in முறையிலேயே நடக்கிறது.
//3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.//
இந்த நடைமுறை தான் இப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்குவதற்கு அனுமதி கோரப்பட்டதை வைத்து ஏதோ புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது போல் ஊடகங்களும் பதிவர்களும் ஏன் எழுதுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்படாமல் எப்படி அந்த துறை அதிகாரி அந்த வாரிசு தாரருடன் பேச முடியும். நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு 10 கணினி வாங்க வேண்டுமென்றால் அதற்கான பணம் ஒதுக்கப்படுமுன்னரே கணினி நிறுவனத்துடன் பேச உங்கள் ஊழியருக்கு அனுமதி உண்டா
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம்.//
உண்மை. ஆனால் குழப்பம் விளைவித்தது அரசல்ல. இருவரின் வாரிசுகளே என்பது தான் நிஜம்.

இப்பொழுது நேற்றைய மாலை மலர் செய்தியை பாருங்கள்
மரபுரிமையாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை: 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை; கருணாநிதி உத்தரவு Chennai சனிக்கிழமை, மே 30, 3:18 PM IST மதிப்பீடு இல்லை
சென்னை, மே. 30-
22 தமிழர் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு மரபுரிமை யாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணா நிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடை மையாக்கி, அவற்றைப் படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயற்படுத் தப்பட்டு வருகிறது.
2006-இல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதி மாற்கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவ நாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்களுக்கு 4 கோடியே 86 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2009-2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வண்ணம்
  1. குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா,
  2. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்,
  3. இராய சொக்கலிங்கனார்,
  4. முனைவர் ச.அகத்திய லிங்கம்,
  5. பாவலர் நாரா.நாச்சியப்பன்,
  6. புலியூர்க்கேசிகன்,
  7. சின்ன அண்ணாமலை,
  8. வடுவூர் துரைசாமி அய்யங்கார்,
  9. பேராசிரியர் மு.இராகவையங்கார்
ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசு டைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும்,
  1. பேராசிரியர் வையா புரிப்பிள்ளை,
  2. பம்மல் சம்பந்தனார்,
  3. டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார்,
  4. மு.சு.பூரணலிங்கம்பிள்ளை,
  5. தொ.மு.பாஸ்கரத் தொண் டைமான்,
  6. பாலூர் கண்ணப்ப முதலியார்,
  7. வை.மு.கோதை நாயகி,
  8. பூவை எஸ்.ஆறுமுகம்,
  9. என்.வி.கலைமணி,
  10. கவிஞர் முருகுசுந்தரம்,
  11. புலவர் த.கோவேந்தன்,
  12. திருக்குறள்மணி அ.க.நவநீத கிருட்டிணன்
    ஆகிய 12 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும், முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
    இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட 28 தமிழ் அறிஞர்களில் எஞ்சிய 7 தமிழ் அறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை.
    ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    மேலும் சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவைகளைப் பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம்கிருஷ்ணன், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று தனி நேர்வாகக் கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கிடவும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
    இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நிதி ஒதுக்கிவிட்டு அனுமதி பெறாமல் அனுமதி பெற்றபின்னர் நிதி ஒதுக்கீடு செய்தால் ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கு 2011ல் தான் இந்த பணம் கிடைக்கும் என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறதா

    அடுத்த முக்கிய விஷயம் : ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறவில்லை. அதனால் அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆவதற்கு ஆணை பிறப்பிக்கப்படவில்லை

    இப்பொழுது உங்களுக்கான கேள்விகள்

    1. தற்பொதைய அரசின் நடைமுறை - நிதி ஒதுக்கீடு செய்து விட்டு அனுமதி கேட்பதில் - என்ன தவறு இருக்கிறது. இது சரியான நடைமுறை தானே
    2. டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகியவர்களின் வாரிசுகள் அனுமதி மறுத்தவிதத்திற்கும், கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வாரிசுகள் அனுமதி மறுத்த விதத்திற்கு வேறுபாடு தெரிகிறதா
    3. தார்மீக ரீதியாக எது (எந்த வாரிசு தாரர் கடைபிடித்த நடைமுறை) சரி என்று நினைக்கிறீர்கள்??
    4. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவுடனேயே (நாட்டுடைமை அறிவிப்பு வருவதற்கு முன்னரே - கடந்த மூன்று மாதங்களில்) யாராவது சாண்டில்யனில் நாவல்களை அச்சிட்டு விற்றனரா
    5. டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் லட்சுமி ஆகியவர்களின் வாரிசுகள் அனுமதி மறுத்தது போல் செயல்படுவதன் மூலம் (முறையான வழிமுறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததன் மூலம்) கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வாரிசுகளளுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுமா.
    6. தங்களின் சுயநலத்திற்காக நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசு நடைமுறையை மாற்றினால் அதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றபோதும் இது போல் மலிவு விலை விளம்பரம் தேவைதானா
    7. அடிப்படை விபரங்கள் எதுவும் தெரியாமல் / தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் தவறான கருத்துக்களை பரப்பும் ஊடகங்கள் இனியாவது திருந்துவார்களா
    8. ஊடகங்களில் வரும் செய்தியை ஆராய்ந்து பார்க்காமல் பதிவில் / மறுமொழியில் எழுதும் பதிவர்கள் மாறுவார்களா

    39 மறுமொழிகள்:

    முரளிகண்ணன் said...

    தலைவரே வழக்கம் போல சரியான
    புள்ளி விபரங்களோட அசத்தீட்டிங்க

    ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    டாக்டர் சார்,

    போன பதிவில் நான் தான் முதல் பின்னூட்டம் போட்டேனாக்கும்.. நினைவு இருக்கும்னு நெனைக்கிறேன்.

    இந்த பதிவும் அதே போல.. விளக்கமா இருந்துச்சு.. ஆனா.. பாருங்க.. கடைசிய கேட்டு இருக்குற கேள்விகளுக்கு மட்டும் பதில் கிடைக்காதுன்னு நெனைக்கிறேன். எப்பவும் போல 5 ஸ்டார் குத்தி இருக்கேனாக்கும். :)

    ரவிசங்கர் said...

    எனக்கு ஒரு ஐயம்:

    யார் யார் புத்தகங்களை நாட்டுடமையாக்கப் போகிறோம் என்று குறிப்பிடாமல் பொதுவாக ஒரு நிதி ஒதுக்க சட்டத்தில் இடம் இல்லையா?

    நிதியைப் பெற்ற பிறகு எழுத்தாளர்களின் மரபுரிமையர்கள் சம்மதத்துடன் பெயர் வெளியிட்டால் குழப்பம் வராதே?

    ரவிசங்கர் said...

    என் கேள்விக்கான விடை உங்கள் பதிவிலேயே "ஒளிந்திருந்தது" :) நன்றி.

    புருனோ Bruno said...

    //யார் யார் புத்தகங்களை நாட்டுடமையாக்கப் போகிறோம் என்று குறிப்பிடாமல் பொதுவாக ஒரு நிதி ஒதுக்க சட்டத்தில் இடம் இல்லையா?//

    புத்தகங்களை நாட்டுடைமையாக்க 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறிவிட்டு எந்த புத்தகங்கள் என்று பின்னர் தீர்மாணிக்க முடியாதா
    முடியும். ஆனால் அது தார்மிக ரீதியாக சரியான செயல் அல்ல.

    பின்னர் ஏன் அப்படி செய்யாமல் ஆசிரியர்களின் பெயரை நிதிநிலை அறிக்கையில் கூறுகிறார்கள்

    யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றன (யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை !!) என்ற முடிவை அந்த துறையில் உள்ள ஒரு அதிகாரி எடுப்பதற்கு பதிலாக மக்களாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் எடுப்பது தான் மக்களாட்சி என்பதால் அந்த பெயர்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுகின்றன

    உதாரணமாக 25 லட்சம் செலவழித்து யுவகிருஷ்ணாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதற்கு பதிலாக டேவிட் மெக்கின்சி ஒகில்வியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று உறுப்பினர்களில் பலரும் கருத்து தெரிவித்தால் யுவகிருஷ்ணாவின் எழுத்துக்களுக்கு பதில் ஒகில்வியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்படலாம் !!

    புருனோ Bruno said...

    //போன பதிவில் நான் தான் முதல் பின்னூட்டம் போட்டேனாக்கும்.. நினைவு இருக்கும்னு நெனைக்கிறேன்.
    //

    அதனால் தான் தலைவரே தற்சமயம் உங்களது கருத்துக்களை கேட்டேன்

    முக்கியமாக கேள்விகள் 1 முதல் 5 உங்கள் கருத்து என்ன :) :) :) என்று தெரிந்து கொள்ளத்தான் கேள்வி :)

    புருனோ Bruno said...

    //என் கேள்விக்கான விடை உங்கள் பதிவிலேயே "ஒளிந்திருந்தது" :) நன்றி.//

    அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்

    அரசு நிர்வாகத்தின் மேல் அடிக்கடி கூறப்படும் குற்றச்சாட்டு -> வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே

    இங்கோ நடைமுறை transparentஆக இருக்கிறது

    ஆனால் சிலரின் மலிவு விளம்பரத்திற்காக ஒரு நல்ல நடைமுறையை மோசமான நடைமுறையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததே எனது எரிச்சல் :) :)

    T.V.Radhakrishnan said...

    அசத்தலான பதிவு

    rapp said...

    மிக மிக அருமையான விளக்கம். பதிவிற்கு சம்பந்தமில்லாதக் கேள்வி, ஆனால் நேரமிருந்தால் விளக்கவும். பரிவுத் தொகை, எழுத்தாளரின் தரத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றதா, இல்லை, படைத்த நூல்களின் எண்ணிக்கையினைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றதா?

    புருனோ Bruno said...

    //இந்த மேலேயுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களுக்குள்தான் நீங்களும் சிக்கியிருக்கிறீர்கள் என்பது இவ்வளவு பெரிய கோனார் நோட்ஸ் விளக்கமாக எழுதியிருக்கும்போதே தெரிகிறது..//

    எப்படி என்று விளக்க முடியுமா

    //இதற்கு முன்பாக தமிழக அரசின் வருடந்தோறும் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரசுடமையாக்கப்பட இருக்கும் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டனவா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்..//

    இதற்கு முன்னர் எப்பொழுது எழுத்தாளர்களின் படைப்புகள் அரசுடைமையாக்கப்பட்டன

    --

    சரி அப்படியே வைத்துக்கொண்டாலும்

    பெய்ரை அறிவிக்கும் நடைமுறை வேண்டுமா

    அல்லது

    பெயரை அறிவிக்காமல் ஊழலுக்கு வழி வகுக்கும் நடைமுறை வேண்டுமா என்று நீங்கள் பதிலளிக்க வேண்டுகிறேன்

    --

    கடந்தி சில வருடங்களாகத்தான் அரசு இயந்திரம் சிறிது வெளிப்படையாக இயங்க ஆரம்பித்து உள்ளது

    --

    அதை மீண்டும் பழைய படி கொண்டு செல்ல வேண்டுமா என்று கூறுங்கள்

    புருனோ Bruno said...

    //முதலில் நிதி ஒதுக்கிட்டீற்கு சட்டமன்றத்தில் ஒப்புதலை வைத்துவிட்டு அதற்குப் பின்தான் எழுத்தாளர்களைத் தேடுவார்கள்.

    இது புதிய மாதிரி என்று நீங்கள் சொன்னால் சரிதான்.. சந்தோஷம்தான்..
    //

    இப்படி செய்வது தான் சிறந்த வழிமுறை என்று நான் நினைக்கிறேன்

    நீங்கள் கூறும் வழிமுறையில் ஊழலுக்கு வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்

    புருனோ Bruno said...

    //நிற்க..

    இந்த ஆண்டு தேர்வு செய்த பட்டியலில் சுந்தரராமசாமி மற்றும் கண்ணதாசன் பெயருடன் கருணாநிதி மற்றும் பெரியாரின் பெயரும் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக இந்த அரசு அறிஞர்களின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு போகத்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறது என்று நினைத்துக் கொள்ளலாம்.//

    இல்லை. அப்படி என்றால் அவர்கள் அரசு பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் கூறியிருப்பீர்கள்

    மேலும் இந்த வருட பட்டியலில் 28 ஆசிரியர்களின் பெயர் இருந்ததை நினைவு படுத்துகிறேன்

    புருனோ Bruno said...

    //ஏனெனில் சுந்தரராமசாமியின் குடும்பமும், கண்ணதாசனின் குடும்பமும் கருணாநிதி மற்றும் பெரியாரின் குடும்பத்தைப் போலத்தான்..

    அவர்களுக்கும் தொழில் உண்டு.. குடும்பம் உண்டு.. அமைப்புகள் உண்டு.. பிள்ளை குட்டிகள் உண்டு.. சமுதாயத்தில் நல்ல பெயரும் உண்டு..
    //

    அதே போல் நாகரிகமாக, முறைப்படி, சட்டப்படி, மறுத்த சாண்டில்யனின் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் தொழில் உண்டு.. குடும்பம் உண்டு.. அமைப்புகள் உண்டு.. பிள்ளை குட்டிகள் உண்டு.. சமுதாயத்தில் நல்ல பெயரும் உண்டு..

    அவர்களின் நாகரிகத்தை ஏன் இந்த இருவரும் கடைபிடிக்க வில்லை என்பதே என் கேள்வி

    உங்களின் மறுமொழியின் பிற பகுதிகளில் தரம் தாழ்ந்த வார்த்தைகள் இருந்ததால், அதுவும் ஒரு 80 வயது பெரியவரை பற்றி எழுதப்பட்டிருப்பதால் அதை நீக்க வேண்டியுள்ளது

    (என்னை திட்டினால் அனுமதிப்பேன். என் பதிவில் மற்றவர்களை திட்ட அனுமதி இல்லை)

    புருனோ Bruno said...

    உண்மைத்தமிழன் சார்

    உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நான் கடைசியாக கேட்ட 7 கேள்விகளுக்கு விடை அளிக்கவும்

    அதன் பிறகு இங்கு பிரச்சனை எங்கு உள்ளது என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்

    புருனோ Bruno said...

    //இதற்கு முன்பாக தமிழக அரசின் வருடந்தோறும் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரசுடமையாக்கப்பட இருக்கும் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டனவா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்..//

    இதற்கு முன்னர் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கைகள் இணையத்தில் வெளியிடப்ப்டவில்லை

    அதனால் இணையத்தில் வெளியிடுவது கூட தவறா

    --

    நீங்கள் பிறந்த போது எதை வைத்து எழுதினீர்கள். பேனாவா, பென்சிலா, அல்லது நேரடியாக கணினியில் தான் தட்டச்சு செய்தீர்களா

    --

    முதலில் கணனியில் செய்யாததால் கடைசி வரை செய்யக்கூடாதா

    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[புருனோ Bruno said...

    //நிற்க..

    இந்த ஆண்டு தேர்வு செய்த பட்டியலில் சுந்தரராமசாமி மற்றும் கண்ணதாசன் பெயருடன் கருணாநிதி மற்றும் பெரியாரின் பெயரும் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக இந்த அரசு அறிஞர்களின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு போகத்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறது என்று நினைத்துக் கொள்ளலாம்.//

    இல்லை. அப்படி என்றால் அவர்கள் அரசு பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் கூறியிருப்பீர்கள். மேலும் இந்த வருட பட்டியலில் 28 ஆசிரியர்களின் பெயர் இருந்ததை நினைவுபடுத்துகிறேன்.]]

    நிச்சயமா சொல்ல மாட்டேன்.

    என்னுடைய வாதமெல்லாம் இந்த பட்டியலில் இடம் பெறாமல் இருப்பதற்கு கருணாநிதிக்கும், பெரியாருக்கும் என்னென்ன தகுதி உள்ளதோ அனைத்தும் இவர்களுக்கும் உண்டு என்பதுதான்..

    புருனோ Bruno said...

    //என்னுடைய வாதமெல்லாம் இந்த பட்டியலில் இடம் பெறாமல் இருப்பதற்கு கருணாநிதிக்கும், பெரியாருக்கும் என்னென்ன தகுதி உள்ளதோ அனைத்தும் இவர்களுக்கும் உண்டு என்பதுதான்.. //

    பிரச்சனை பட்டியலில் இடம்பெற உள்ள தகுதி பற்றி அல்ல

    நான் எழுதியதை நன்றாக பார்க்கவும்

    நாட்டுடைமையை மறுக்க அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது

    அது குறித்து மாற்று கருத்து கிடையாது

    ஆனால்

    நாட்டுடைமையை சாண்டில்யனின் வாரிசுகள் மறுத்த விதத்தையும் கண்ணதாசனின் வாரிசுகள் மறுத்த விதத்தையும் கவனித்தால் உங்களுக்கு புரியும் - யார் மேல் தவறு என்று

    அப்படியும் புரியவில்லை என்றால் நான் கேட்ட 7 கேள்விகளுக்கு விடை அளியுங்கள்

    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[புருனோ Bruno said...

    //ஏனெனில் சுந்தரராமசாமியின் குடும்பமும், கண்ணதாசனின் குடும்பமும் கருணாநிதி மற்றும் பெரியாரின் குடும்பத்தைப் போலத்தான்.. அவர்களுக்கும் தொழில் உண்டு.. குடும்பம் உண்டு.. அமைப்புகள் உண்டு.. பிள்ளை குட்டிகள் உண்டு.. சமுதாயத்தில் நல்ல பெயரும் உண்டு..//

    அதே போல் நாகரிகமாக, முறைப்படி, சட்டப்படி, மறுத்த சாண்டில்யனின் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் தொழில் உண்டு.. குடும்பம் உண்டு.. அமைப்புகள் உண்டு.. பிள்ளை குட்டிகள் உண்டு.. சமுதாயத்தில் நல்ல பெயரும் உண்டு.. அவர்களின் நாகரிகத்தை ஏன் இந்த இருவரும் கடைபிடிக்கவில்லை என்பதே என் கேள்வி.]]

    அவர்களும் நாகரிகமாக அறிக்கையின் மூலம்தானே அதனை அறிவித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.

    அவர்கள் அறிக்கை விடாமல் கடிதம் மூலமாகவோ தனிமைச் சந்திப்பு மூலமாகவோ இதனைச் செய்திருந்தால் அவமானம் அந்த இரண்டு எழுத்தாளர்களுக்குத்தான்.. அவர்களுடைய பிள்ளைகளாக நான் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்..

    [[உங்களின் மறுமொழியின் பிற பகுதிகளில் தரம் தாழ்ந்த வார்த்தைகள் இருந்ததால், அதுவும் ஒரு 80 வயது பெரியவரை பற்றி எழுதப்பட்டிருப்பதால் அதை நீக்க வேண்டியுள்ளது. (என்னை திட்டினால் அனுமதிப்பேன். என் பதிவில் மற்றவர்களை திட்ட அனுமதி இல்லை)]]

    உங்களுடைய கொள்கையை மதிக்கிறேன். அதற்காக எனது கொள்கையை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை..

    இப்படித் திட்டினால்கூட அவர்களுக்கு எதுவும் உரைக்காது என்று வேறு விஷயம் டாக்டர் ஸார்..!

    புருனோ Bruno said...

    // T.V.Radhakrishnan said...
    அசத்தலான பதிவு//

    நன்றி சார்

    Dr.SUREஷ் said...

    தமிழ்மணத்தில் ஓட்டுப் போடமுடியவில்லை தலைவரே..,

    புருனோ Bruno said...

    //மிக மிக அருமையான விளக்கம். பதிவிற்கு சம்பந்தமில்லாதக் கேள்வி, ஆனால் நேரமிருந்தால் விளக்கவும். பரிவுத் தொகை, எழுத்தாளரின் தரத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றதா, இல்லை, படைத்த நூல்களின் எண்ணிக்கையினைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றதா?//

    இரண்டுமே என்று தான் நினைக்கிறேன். மேலும் இது ஒரு குத்து மதிப்பு தொகைதானே தவிர accurate ஆக முடியாதல்லவா

    Dr.SUREஷ் said...

    இதுவரை நான் எழுதிய எழுத்துக்களை நாட்டுடமை ஆக்க என் வாரிசுகளுக்கு முன்பு நானே அனுமதி தந்துவிடுகிறேன்

    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[புருனோ Bruno said...

    உண்மைத்தமிழன் சார்

    உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நான் கடைசியாக கேட்ட 7 கேள்விகளுக்கு விடை அளிக்கவும்

    அதன் பிறகு இங்கு பிரச்சனை எங்கு உள்ளது என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்]]]

    புருனோ ஸார்..

    கருணாநிதி செய்தது பச்சை அரசியல் என்பது எனது தீர்மானமான முடிவு.

    ஆனால் உங்களது பார்வை அது ஒரு அரசின் வருடாத்திய நடவடிக்கை என்பது.

    எனவே இரண்டுமே வேறு வேறு துருவங்கள்..

    ஒத்தே வராது..

    அந்தக் கடைசி 7 கேள்விகளுமே இங்கு தேவையில்லாதது என்னைப் பொறுத்தவரையில்..

    ஆகவே பதில் எதிர்பார்க்காதீர்கள்..!

    புருனோ Bruno said...

    உண்மைத்தமிழன் சார்

    அரசு 28 எழுத்தாளர்களின் பெயரை அறிவிக்கிறது

    அதில் 7 பேர் சம்மதம் தெரிவிக்க வில்லை

    நன்றாக கவனியுங்கள்

    75 சதம் பேருக்கு விருப்பம்
    25 சதம் பேருக்கு விருப்பம் இல்லை

    அதை மறுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது

    அதைத்தான் 7 பேரும் செய்துள்ளார்கள்

    ஆனால் அதில்
    5 பேர் நாகரிகமாக மறுத்துள்ளார்கள்
    2 பேர் நாகரிக குறைவாக, மலிவு விளம்ப்ரம் தேடிக்கொண்டார்கள் என்பது என் குற்றச்சாட்டு

    இதற்கு நீங்கள் இது வரை பதிலளிக்கவில்லை

    அதை விடுத்து உங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டி உங்களுக்கு பிடிக்காதவர திட்டத்தான் செய்துள்ளீர்கள் என்பது எனக்கு வருத்தமே

    புருனோ Bruno said...

    //இதுவரை நான் எழுதிய எழுத்துக்களை நாட்டுடமை ஆக்க என் வாரிசுகளுக்கு முன்பு நானே அனுமதி தந்துவிடுகிறேன் //

    ஹி ஹி ஹி

    புருனோ Bruno said...

    //அவர்களும் நாகரிகமாக அறிக்கையின் மூலம்தானே அதனை அறிவித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.//

    இல்லை

    அது குறித்து அரசு உங்களிடம் தொடர்பு கொள்ளும் போது “விருப்பம் இல்லை” என்று கூறுவது நாகரிகம் (சாண்டில்யனின் வாரிசுகள் செய்ததை போல்)

    அதை விடுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடன் பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியது தான் அநாகரிகம் என்பது என கருத்து

    பிற 5 எழுத்தாளர்களின் வாரிசுக்களின் நடவடிக்கையுடன் இதை ஒப்பீட்டு பாருங்கள் புரியும்

    //அவர்கள் அறிக்கை விடாமல் கடிதம் மூலமாகவோ தனிமைச் சந்திப்பு மூலமாகவோ இதனைச் செய்திருந்தால் அவமானம் அந்த இரண்டு எழுத்தாளர்களுக்குத்தான்..//

    அப்படியா
    அப்படியென்றால் சாண்டில்யனுக்கும் லட்சுமிக்கும் (பிற 3 எழுத்தாளர்களுக்கும்) அவமானமா. உங்களது கொள்கை புல்லரிக்க வைக்கிறது உண்மைத்தமிழன் சார்.

    ஏன் சார் ஒழுங்காக இருப்பவர்கள் மேல் புழுதி வாரி தூற்றுகிறீர்கள்

    //அவர்களுடைய பிள்ளைகளாக நான் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்..//

    :( :( :(

    நான் கேட்ட 7 கேள்விகளுக்கு நீங்கள் இது வரை பதிலளிக்கவில்லை என்பதை நினைவு படுத்துகிறேன்

    புருனோ Bruno said...

    //உங்களுடைய கொள்கையை மதிக்கிறேன். அதற்காக எனது கொள்கையை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை..//
    உங்கள் கொள்கையை மாற்ற கூறவில்லை சார். :) :)

    புருனோ Bruno said...

    //கருணாநிதி செய்தது பச்சை அரசியல் என்பது எனது தீர்மானமான முடிவு.

    ஆனால் உங்களது பார்வை அது ஒரு அரசின் வருடாத்திய நடவடிக்கை என்பது.

    எனவே இரண்டுமே வேறு வேறு துருவங்கள்..

    ஒத்தே வராது..//

    ஆனால் அந்த ஏழு கேள்விகளுக்கும் விடையளித்தால் எந்த துருவம் உண்மை என்றும் எது பொய் என்றும் எளிதாக விளங்கிக்கொள்ளலாம்

    //அந்தக் கடைசி 7 கேள்விகளுமே இங்கு தேவையில்லாதது என்னைப் பொறுத்தவரையில்..//

    உண்மை எது என்று தெரிய கண்டிப்பாக அந்த முதல் 5 கேள்விகளும் தேவை

    //ஆகவே பதில் எதிர்பார்க்காதீர்கள்..!//

    நியாயத்தின், நீதியின், நாகரிகத்தின் பக்கம் நின்று இந்த பிரச்சனையை அணுகும் யாராலுல் அந்த கேள்விகளுக்கு விடையளிக்கலாம்

    தனிமனித வெறுப்பு காரணமாக, நாகரிகத்தை தள்ளிவைத்து மலிவு விளம்பரம் தேடுபவர்களின் முகத்திரை அந்த முதல் 5 கேள்விகளில் பதிலால் கிழியும் வாய்ப்பு உள்ளதால் அவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியாது

    நீங்கள் நேர்மையானவரா அல்லது காழ்ப்புணர்ச்சியுடன் மலிவுவிளம்பரம் தேடுபவரா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

    புருனோ Bruno said...

    //தமிழ்மணத்தில் ஓட்டுப் போடமுடியவில்லை தலைவரே..,
    //

    இந்த இடுகைக்கு மற்றுமா அல்லது எந்த இடுகைக்கும் ஓட்டு போட முடியவில்லையா

    SUREஷ் said...

    இதுவரை இரண்டு இடுகைக்கு மட்டுமே போட முடிந்தது. ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட இடுகைகளுக்கு பொட முடியவில்லை.

    மு.மயூரன் said...

    விரிவான விளக்கத்துக்கும் நாட்டுடைமையாக்கம் குறித்த தங்கள் நிலைப்பாட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    புருனோ Bruno said...

    //இதுவரை இரண்டு இடுகைக்கு மட்டுமே போட முடிந்தது. ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட இடுகைகளுக்கு பொட முடியவில்லை.//

    தமிழ்மணம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டியது தான் என்று நினைக்கிறேன்

    புருனோ Bruno said...

    // மு.மயூரன் said...
    விரிவான விளக்கத்துக்கும் நாட்டுடைமையாக்கம் குறித்த தங்கள் நிலைப்பாட்டுக்கும் மிக்க நன்றிகள்.
    //

    நாட்டுடைமையாக்கம் குறித்த தங்கள் நிலைப்பாட்டுக்கும் --> இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன

    1. எழுத்தாளரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை

    2. அந்த எழுத்தாளருக்கு பணம் அளிக்கும் நடைமுறை

    அதாவது
    நிதிநிலை அறிக்கையில் அவர் பெயரை தெரிவித்தல் --> விவாதம் --> நிதிநிலை அறிக்கை ஒப்புதல் --> வாரிசுகளுடன் தொடர்பு கொள்ளுதல் --> வாரிசுகளின் சம்மதம் --> வாரிசுகளுக்கு பணம் --> அரசுடைமை ஆணை வெளியிடல் --> யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக்கொள்ளலாம்

    என் இடுகை இந்த இரண்டாவது விஷயம - நடைமுறையை குறித்து தான்

    --

    சாண்டில்யனின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க தேர்ந்தெடுத்தது தவறு என்றால் --> அது குறித்து விவாதம் இல்லை. இது அவரவர் கருத்து

    சாண்டில்யனின் வாரிசுகளிடம் அனுமதி பெற்ற பிறகே ஆணை வெளியிடப்ப்ட வேண்டும் --> இது சரியான கருத்து. தற்சமயம் இப்படி தான் நடக்கிறது

    சாண்டில்யனின் வாரிசுகளிடம் அனுமதி பெற்ற பிறகே நிதி ஒதுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பது தான் இந்த இடுகையின் நோக்கம்

    நரேஷ் said...

    புரூனோ சார்,

    ஒரு சின்ன சந்தேகம்...

    நீங்கள் சொன்னதில், கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோருடைய வாரிசுகள் அறிக்கை மூலம் மறுத்தது மிகப் பெரும் தவறா?

    அரசு அறிக்கை மூலம் செய்தி ஒரு வெளியிடுகிறது, இவர்கள் அறிக்கை மூலம் மறுக்கிறார்கள், அவ்வளவுதானே, இது ஒரு வேளை விளம்பரம் தேடும் முயற்சியாகக் கூட இருக்கலாம், ஆனால் மொத்த பதிப்பகமுமே விளம்பரத்தை நம்பித்தானே இருகிறது!!!

    அதேபோல், நிதிநிலை அறிக்கை விடும் முன்பே, இதைப் பற்றி அந்த வாரிசுகளிடம் வாய்ப்பினைப் பற்றியும் விசாரித்து விட்டு வெளியிடுவது கூட இன்னொரு வகை அப்ரோச்தானே, அதுவும் தவறென்று எதுவும் கிடையாதே?

    அதே போல், உதாரணத்திற்கு 7 பேருடைய நூல்களை அரசுடமையாக்க சுமார் 75 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதில் 5 பேர் மறுக்கிறார்கள் என்றால், மீதி இருவருடைய நூல்களை அரசுடமையாக்க இந்த 75 லட்சம் தேவையில்லாத போது, மீதமுள்ள பணம் எப்படி செலவு செய்யப்படும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லமுடியுமா?

    புருனோ Bruno said...

    //நீங்கள் சொன்னதில், கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோருடைய வாரிசுகள் அறிக்கை மூலம் மறுத்தது மிகப் பெரும் தவறா?//

    நரேஷ் சார்

    பதிப்பக தொழிலில் இருந்து கொண்டு இது குறித்த முழு விபரங்கள் தெரிந்த அவர்கள் அறிக்கை மூலம் மறுத்தது தவறு தான்

    அவர்கள் அறிக்கை விட்டதால் தான் பலரும் ஒரு நல்ல அரசு நடைமுறையை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்//அரசு அறிக்கை மூலம் செய்தி ஒரு வெளியிடுகிறது, இவர்கள் அறிக்கை மூலம் மறுக்கிறார்கள், அவ்வளவுதானே, இது ஒரு வேளை விளம்பரம் தேடும் முயற்சியாகக் கூட இருக்கலாம், ஆனால் மொத்த பதிப்பகமுமே விளம்பரத்தை நம்பித்தானே இருகிறது!!!//

    அதைத்தானே நானும் சொன்னேன். எனது ஆறாவது கேள்வியை படிக்க வில்லையா

    தங்களின் சுயநலத்திற்காக நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசு நடைமுறையை மாற்றினால் அதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றபோதும் இது போல் மலிவு விலை விளம்பரம் தேவைதானாஇவர்கள் அறிக்கைக்கு ஒரு knee jerk reaction ஏற்பட்டிருந்தால், அதாவது அரசு நடைமுறை மாற்றப்பட்டிருந்தால் --> நிதி ஒதுக்கிவிட்டு அனுமதி பெறாமல் அனுமதி பெற்றபின்னர் நிதி ஒதுக்கீடு செய்தால் ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கு 2011ல் தான் இந்த பணம் கிடைக்கும் என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறதா

    //அதேபோல், நிதிநிலை அறிக்கை விடும் முன்பே, இதைப் பற்றி அந்த வாரிசுகளிடம் வாய்ப்பினைப் பற்றியும் விசாரித்து விட்டு வெளியிடுவது கூட இன்னொரு வகை அப்ரோச்தானே, அதுவும் தவறென்று எதுவும் கிடையாதே?//

    அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று இந்த இடுகையிலேயே விளக்கியுள்ளேனே.

    தமிழ் எழுத்தாளர்களில் வெகு சிலரே கோடிஸ்வரர்கள் !!! ஏனைய எழுத்தாளர்களின் நிதி நிலைமை மெச்சும் படி இல்லை.

    இப்படி இருக்கும் போது ஒரு நலிந்த நிலையில் இருக்கும் எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் வந்து பணம் தருகிறேன் (அதற்கு அனுமதி தாருங்கள்) என்று கூறிவிட்டு ஏதாவது காரணத்தால் அந்த வருடமோ அல்லது அதன் பின்னரோ நிதி ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பத்தினரின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசித்தீர்களாஅதனால் தான் நிதி ஓதுக்கீடு முடிந்த பின்னர் அனுமதி கேட்கிறார்கள்.

    குடும்பத்தினர் அனுமதி அளித்தால் 100 சதம் அவர்களுக்கு பணம் தரலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதல்லவாஉங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள்.

    நீங்கள் என்ன செய்வீர்கள்
    1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா
    அல்லது
    2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா

    புருனோ Bruno said...

    //அதே போல், உதாரணத்திற்கு 7 பேருடைய நூல்களை அரசுடமையாக்க சுமார் 75 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதில் 5 பேர் மறுக்கிறார்கள் என்றால், மீதி இருவருடைய நூல்களை அரசுடமையாக்க இந்த 75 லட்சம் தேவையில்லாத போது, மீதமுள்ள பணம் எப்படி செலவு செய்யப்படும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லமுடியுமா? //

    மேலும் சில எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்

    இந்த வருட உதாரணம் ராஜம் கிருஷ்ணன்

    புருனோ Bruno said...

    //மீதமுள்ள பணம் எப்படி செலவு செய்யப்படும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லமுடியுமா? //

    இது குறித்து நான் ஏற்கனவே எழுதியது தான்

    ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த குறுகிய காலத்தில் இந்த தொகை கிடைக்க காரணமான இருவரின் வாரிசுகளுக்கு மனமார்ந்த நன்றி :)
    (இந்த வாசகம் புரிந்தவர்கள் சிரித்து கொள்ளுங்கள். புரியாதவர்கள் http://www.payanangal.in/2009/02/blog-post_18.html மற்றும் http://www.payanangal.in/2009/05/blog-post_31.html மறுமுறை படியுங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் கண்களை மட்டும் திறக்காமல், மனதையும் திறந்து இந்த விஷயத்தை படியுங்கள்


    இது போல் மற்றொரு எழுத்தாளர் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறப்பட்டு அவரது எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதாக ஆணை பிறப்பிக்கப்படும்

    நரேஷ் said...

    தகவல்களுக்கு நன்றி!!!

    புருனோ Bruno said...

    //தகவல்களுக்கு நன்றி!!!//

    சந்தேகங்கள் தீர்ந்ததா என்று கூறுங்கள் சார் :) :) :)

    குறைந்தபட்சம் கேள்விகளுக்கு விடையளித்தால் போதும் :) :) :)

    இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

    தொடர்புடைய தளங்களின் தேட

    Loading...