இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
நான் அந்த நட்சத்திர ஹோட்டலில் தயிர்சாதத்துடன் ஊறுகாயை கடித்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த போது எனது பள்ளித்தோழன் ஆனந்தன் சில நண்பர்களுடன் அறைக்குள் நுழைந்து ஏதாவது இருக்கை காலியாக உள்ளதா என்று தேடுவதை கண்டு கையசைத்து அழைத்தேன்.
பல ஆண்டுகள் கழித்து சந்தித்தாலும் இருவருமே தத்தமது நண்பர்களுடன் இருந்ததால் அலைபேசி எண்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு அவன் கடலூரிலேயே ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்திவருகிறான் என்று தெரிந்து கொண்டதை தவிர அதிகம் பேச முடியவில்லை.
ஆனால் எனது பெருமூச்சிற்கு காரணம் ஊறுகாயின் காரம் மட்டுமல்ல என்பதும் அதற்கு முக்கிய காரணம் என்னுடன் எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் சுந்திரத்தின் லீலைகள் தான் என்பதும் வேறுயாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்
நான் – ராமமூர்த்தி. பி.ஈ. எம்.பி.ஏ
சென்னையில் தலைமை அலுவலகத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த எனக்கு பொது மேலாளராக பதவி உயர்வு கிடைத்தவுடன் மனம் மற்றும் உடல் முழுவதும் பரவிய சந்தோஷம் அதனுடன் சேர்ந்த இடமாற்றலை கேட்டவுடன் வடிந்து விட்டது. கடலூர் போய் சேர்ந்து சில நாட்கள் ஒப்பேற்றி விட்டு எப்படியாவது அடுத்து பதவி உயர்வின் போது மறுபடி சென்னைகே வந்து விட வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். அதனால் தான் குடும்பத்தினரை சென்னையிலேயே விட்டு விட்டு நான் மட்டும் நிறுவன விருந்தினர் மாளிகையிலேயே தங்கி பணிபுரிய ஆரம்பித்தேன்
வழக்கமாக பொது மேலாளர்கள் தலைமை அலுவலகத்திலிருந்து வந்து சில நாட்களிலிலேயே மறுபடியும் மாற்றலில் சென்னைக்கே போய் விடுவதால் கடலூரில் உற்பத்தி மேலாளர் சுந்தரம் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. எனவே என்னை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நானும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. நானுண்டு எனது வேலையுண்டு என்று யாரிடமும் அதிகம் பேசாமல் பழகாமல் வேலையை பார்த்து கொண்டிருந்தேன் – அந்த அலுவலகத்தின் வாகன ஓட்டுனர் மாடசாமி ஜி.பி.எஃப் கடன் விண்ணப்பத்தை நீட்டும் வரை.
அந்த அலுவலகத்தில் அது வரை கடன் விண்ணப்பங்கள் கடலூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து ஒப்புதல் வந்து அதன் பிறகு சம்மந்தப்பட்ட நபர் கடன் பெறுவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகி கொண்டிருந்தது. நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த பழக்கத்தில், அங்கு இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டதில் ஒரே வாரத்தில் கடன் ஒப்புதலாகி வந்து விட்டது. அதன் பிறகு இங்குள்ள பலரும் அவர்களுடைய பிரச்சனைகளுடன் என்னை மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.
அக்கவுண்டன்ட் சுப்பிரமணியம் வீடு கட்ட அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு முன்னர் நிலம் வாங்க அலுவலகத்தில் அனுமதி கேட்கவில்லை. அவருக்கு அனுமதி வருவதற்கு பதில் ஏன் நிலம் வாங்க அனுமதி வாங்க வில்லை என்று மெமோ தான் வந்தது. ”நிலம் சொந்த காசில் வாங்கினேன்.அதனால் அனுமதி வாங்கவேண்டும் என்று தோன்றவில்லை. வீடு கட்ட கடன் தேவைப்படுகிறது. கடன் வாங்க அனுமதி தேவைப்படுகிறது” என்ற உண்மை காரணத்தை எழுத்துப்பூர்வமாக கூற முடியாததால் விதியை நொந்து கொண்டு கையை பிசைந்து கொண்டிருந்தார். எனது அறிவுரையின் படி ”நிலம் வாங்க அனுமதி கேட்டு தபால் அனுப்பியிருந்தேன். ஆனால் விதிமுறைகள் தெரியாததால் சாதா தபாலில் அனுப்பியிருந்தேன் மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மன்னிப்பு கடிதம் எழுத அவரது பிரச்சனை தீர்ந்தது.
அதன் பிறகு பதவிஉயர்வு பெற எழுதவேண்டிய தேர்வுகள், அதற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் போன்ற பல உதவிகளை நான் பிற ஊழியர்களுக்கு செய்து கொடுக்க எனது கடலூர் நட்பு வட்டாரம் பெருகியது. ஊழியர்களின் வீட்டு விசேஷங்கள், அவர்களின் பார்ட்டிகள் எல்லாவற்றிற்கும் அழைப்பு வந்தது. நானும் கலந்து கொள்ள அலுவலகத்தில் மெதுவாக ஒரு ஹீரோவாக மாறிக்கொண்டிருந்தேன்.
அப்படி ஒரு நாள் ஸ்டோர்கீப்பர் தம்பி கல்யாணத்திற்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது “இங்கே எல்லாரும் நல்லா பழகுறீங்க. பேசாம பேமிலியை இங்க மாற்றி இங்கேயே செட்டிலாகிவிடலாமுன்னு நினைக்கிறேன்” என்று கூறவும் அங்கு இருந்தவர்கள் பலரும் சந்தோஷப்பட்டார்கள். நான் அப்படி கூறிய நேரம் சனி பெயர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதுவரை எந்த பிரச்சனையுமே இல்லாமல் சீராக சென்றுகொண்டிருந்த எனது வாழ்க்கையில் அன்றிலிருந்து சுந்தரம் ரூபத்தில் ஏழரைச்சசனி துவங்கியது.
வாரம் தோறும் தலைமைஅலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டிய அறிக்கைகள் வந்து சேரவில்லை என்று மின்னஞ்சல் வந்த பின்னர் விசாரித்தால், சுந்தரம் சார் தான் மாதம் ஒரு முறை அனுப்பினால் போதும் என்று கூறினார் என்று பதில் வந்தது.
இரண்டு வாரம் கழித்து எங்கள் ஆபிஸ் பியூன் மிகவும் தயங்கியபடி “சார் எல்லா வருசமும் தீபாவளிக்கு கம்பெனில இருந்து பட்டாசு பாக்கெட் தருவாங்க. நீங்க ஏன் நிப்பாட்டினீங்க” என்று கேட்கவும் முதலில் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. அதன் பிறகு தான் என் உத்தரவு படி நிறுத்துவதாக சுந்தரம் அனைவரிடமும் கூறியது தெரியவந்தது. அதன் பிறகு அவசர அவசரமாக அனைவருக்கும் பட்டாசு பெட்டி வாங்கி அளிக்க அலையவேண்டியதாகிவிட்டது
முதலில் ஏதோ கவனக்குறைவு என்று தான் நினைத்தேன். அதன் பிறகு தான் சுந்தரம் மிகவும் ”கவனத்”துடன் எனது பணியில் ”குறைவு” ஏற்படும் படி செயல்படுகிறார் என்பதை கண்டு கொள்ள முடிந்தது
ஒரு நாள் திடீரென்று அனைவரும் அமர்ந்திருக்கும் நேரம் முகம் கழுவ வைத்திருக்கும் பேஸ் வாஷை எடுத்துக்கொண்டு வந்து அனைவரும் முன்னாலும் திறந்து காட்டி, அதை கவிழ்த்தால் தண்ணீர் போல் கொட்டுகிறது. ”என்ன சார் ஆபிசில இவ்வளவு மோசமான ப்ராட்டக்டை வாங்கி ஸ்டாப்ஸுக்கு தர்றீங்க. இது கொஞ்சம் கூட நல்லால்ல” என்ற புகாரை கேட்டதும் எனக்கு தலை சுற்றியது. எங்கள் ரிசப்செனிஸ்ட் தான், ”நான் இப்ப கூட அத யூஸ் பண்ணினேனே. நல்லாத்தானேஇருந்துச்சு. யாராவது விளையாட்டுக்கு அல்லது விபரம் தெரியாமல் தண்ணீர் ஊத்தியிருப்பாங்க” என்று கூற தப்பித்தேன்
அக்கொண்ட்டண்ட் சீனியர் அக்கொண்ட்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றதை அடுத்து அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி அளித்தார். சுந்த்ரம் வந்து பார்ட்டி 3 மணி என்று அன்று காலை என்னிடம் கூறினார். நானும் வெளியே வேறு வேலையாக சென்று விட்டு 3 மணிக்கு ஹோட்டலினுள் நுழைந்தாள் பலரும் சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீமில் இருக்கிறார்கள். ஒரு சிலர் தயிர் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், நானும் நேரடியாக தயிர்சாதத்தை எடுத்து ஊறுகாயுடன் சாப்பிட்ட ஆரம்பித்தேன். என்னை அனைவர் முன்னாலும் அவமதிக்க சுந்தரம் வேண்டுமென்றே நேரத்தை மாற்றி கூறியுள்ளார் என்பது புரிந்தது. மனதிற்குள் இருக்கும் இவ்வளவும் சேர்ந்து தான் என்னை பெருமூச்சு விட வைத்துக்கொண்டிருந்த்து.
தாமதமாக வந்ததற்கு அனைவரிடம் மீண்டும் ஒரு முறை வழிந்து சமாளித்து விட்டு வண்டியில் திரும்பி செல்லும் போது பேச்சு வாக்கில் மாடசாமியிடம் ”சுந்தரம் ஏன் திடீரென்று இப்படி நடக்கிறார்” என்று கூறவும் மாடசாமி பவ்யமாக ”நம்ம ஸ்டோர் கீப்பர் வீட்டு கல்யாணத்திற்கு பிறகு தான் உங்களுக்கு பிரச்சனையா” என்று கேட்கவும், நான் நடந்த சம்பவங்களை ரீவைண்டு செய்து பார்த்தேன். சரியாக சரியாக பொருந்தி வந்தது. ஆனால் சுந்தரத்தின் நடவடிக்கைக்கும் ஸ்டோர்கீப்பரின் தம்பி திருமணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று எனக்கு பிடிபடவில்லை. சரி அதையும் கேட்டுவிட்டேன். “அதெல்லாம் ஒன்னுமில்ல சார். அன்னைக்கு தான் நீங்க இங்கேயே இருக்க நினைப்பதாக சொன்னீங்க. அதான் கேட்டேன்” என்று மாடசாமி கூறியவுடன் தான் ஒரு நிரந்தர பொது மேலாளர் இருந்து விட்டால் உற்பத்தில் மேலாளர் சுந்தரத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா பதவிக்கு மற்றும் (மற்றும் பொறுப்பு பொது மேலாளர்!! பதவிக்கு) ஆப்பு என்பதால் அவர் தன்னை அவமானப்படுத்தி கிளப்ப பார்க்கிறார் என்ற எளிய உண்மை புரிந்தது.
இரண்டு நாட்கள் கழித்து நேரில் சந்தித்து நான் ஏன் ஹோட்டலில் அளவிற்கு அதிகமாக பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தேன் அக்கறையாக விசாரித்த ஆனந்தனிடம் இவ்வளவு கதையையும் கூறிவிட்டு ”சரி சொல்லுடா நான் என்ன செய்ய” என்று கேட்டேன்
”இவ்வளவு நடந்தபின்னால சுந்தரம் கூட வேலை பாத்தா அது உனக்கும் நல்லதில்லை, சுந்தரத்திற்கும் நல்லதில்ல, உங்க கம்பெனிக்கும் நல்லதல்ல”
”அப்ப”
”ஒன்னு முதல்ல ப்ளான் பண்ணபடி நீயே டிரண்ஸ்பர் வாங்கிட்டு சென்னை போய்டு. இது ஈசியான வழி. அப்படி இல்லைன்னா கஷ்டமான வழி ஒன்னு இருக்கு. சுந்திரத்தை இங்கிருந்து கிளப்பிட்டு நீ இங்கயே இரு”
”எப்படி கிளப்புறது”
”முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும். நீ அவன பத்தி கொஞ்சம் விசாரி. பிறகு பாக்கலாம்”
நானும் மூளையை கசக்கி கொண்டு யோசித்தேன். ஏதாவது சந்தர்ப்பம் வருமா என்று காத்துக்கொண்டிருந்தேன். சுந்தரத்தை, அவரது நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக கவனித்தபோது சுந்தரம் தனது குடும்பத்திற்கும் அலுவலகத்திற்கு இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்ற விபரம் பிடிபட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை. மெதுவாக மாடசாமியின் வாயை கிண்டியதில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண் விற்பனை பிரதிநிதியுடன் சுந்தரம் சற்றே அதிக நேரம் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து அவரது மனைவி அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று பெரிய சண்டை போட்டதாகவும் ஒரு முறை ஆண்டு விழாவிற்கு அவர் மனைவியை அழைத்து வந்த சமயம் அவர் விழாவில் எந்த பெண்ணுடன் பேசினாலும் அவரது மனைவி எரித்து விடுவது போல் பார்த்த விபரங்களும் வெளிவந்தது
இந்த நிலையில் அந்த சனி ஞாயிறு ப்ளாக்தண்டர், ஊட்டி என்று இரண்டு நாட்கள் எங்களது அலுவலகத்திலிருந்து அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவது என்று முடிவானது. பேச்சுவாக்கில் அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் ஆனந்தனின் முகம் மெல்போர்ன் ஸ்டேடியம் பிலாஷ் லைட் போல் பிரகாசமானது
“டேய் எப்படி போறீங்க, வேனா, பஸ்ஸா”
“பஸ்தான்”
“எந்த டிராவல்ஸ்”
“மதி டிராவல்ஸ்தான்”
“எப்ப கிளம்புறீங்க”
“வெள்ளிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு”
“அந்த டிராவல்ஸ் நம்பர், உங்க ஆபிஸ் நம்பர், சுந்தரம் வீட்டு நம்பர் மூனும் எனக்கு தா”
வெள்ளி மாலை சுமார் 4 மணிக்கு ஆனந்தன் என்னை தேடி வந்து விட்டான்.
“உங்க பிளானில் ஏதாவது சேஞ்ச் இருக்கா, இல்ல அப்படியேத்தானா”
“டேய் என்னடா பண்ன போற. எதாவது ஏடாகூடாம ஆச்சுன்னா சிக்கலாயிடும்”
“ஒண்ணுமில்ல, மூனே மூனு போன்தான்” என்று கூறியபடியே முதலில் செல்போனில் ஒரு எண்ணை அழைத்தான். தூரத்தில் எங்கோ தொலைபேசி மணி அடிக்கும் சத்தம் கேட்டபின் தான் அந்த அழைப்பு எங்கள் அலுவலகத்திற்கு என்பது புரிந்தது “கடலூர் கெமிக்கல்சா,.... நாங்க மதி டிராவல்சிலிருந்து பேசுறோம்,.. உங்க ஊட்டி டூருக்கு பஸ் ரெடி. 5 மணிக்கு வந்துரும்... எங்க வர... ஒகே...... கோயில் பக்கத்தில வரனுமா...... அங்க எல்லாரும் லக்கேஜோடா இருப்பீங்கலா......சரி.... அங்கேயே அனுப்பிறோம்... பை”
அடுத்து ஒரு எண்ணை அழுத்தி “மதி டிராவல்ஸ்சா, ..... நாங்க கடலூர் கெமிக்கல்சிலிருந்து பேசுறோம். இன்னைக்கு சாயங்காலம் ஊட்டி டூ டேஸ் டூருக்கு பஸ் புக்பண்ணியிருந்தோம். பஸ் ரெடியா .... ரைட்.... சாயங்காலம் 5 மணிக்கு பதிலா ஒரு 6 மணிக்கு அனுப்புங்க..... கோயில் பக்கம் எல்லாரும் இருப்பாங்க..... அங்கேயே அனுப்பிடுங்க.... வேற ஒரு பிராப்ளம் இல்லை. ... பை”
அதற்குள் எனக்கு தொழிற்சாலையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வர நான் உள்ளே சென்று விட்டேன். ஆனந்தன் என்ன பேசினான் என்று தெரியவில்லை
திரும்பி வந்த போது வெற்றிப்புன்னகையுடன் “நீயும் 5 மணிக்கே கோயிலுக்கு போய் வேடிக்கையை பார்” என்று கைகட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு சென்று விட்டான்.
மாலை 5 மணிக்கே நாங்கள் அனைவரும் பெட்டி படுக்கையுடன் கோயிலுக்கு அருகில் பேரூந்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம். ஏறத்தாழ அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். சுந்தரம் மட்டும் நான் எதிர்பார்த்ததை போலவே தனியாக நின்று கொண்டிருந்தார்.
சுமார் பத்து நிமிடம் கழித்து நாங்கள் நின்ற இடத்திற்கு புயல் வேகத்தில் ஒரு ஸ்கூட்டி வந்தது. அடர்த்தெழு குருதியடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, வெற்றிவேற்றடக்கைக் கொற்றவை, கானகம் உகந்த காளி, என்ற வர்ணனைக்கு பொருத்தமாக அதிலிருந்து இறங்கிய பெண்ணிற்கு சுமார் 35 வயதிருக்கும். சண்டைக்கு வந்தவள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை.
நேராக சுந்தரதிடம் சென்று “ஓகோ இது தான் நீங்க எக்சாம் எழுதுர லட்சணமோ”. என்று கத்தி மூச்சுவாங்கும் போது சுந்தரம் ஏதோ தேர்வு எழுதப்போவதாக வீட்டில் கூறி விட்டு சுற்றுலா வந்துவிட்டார் என்பது மட்டும் புரிந்தது.
சுந்தரம் சன்னமான குரலில் “எல்லாரும் பாக்குறாங்க. நா வீட்டுக்கே வந்துடறேன். பிரச்சனை பண்ணாத.” என்று கூறவும் ”நீயெல்லாம் ஒரு மனுசனா. வேலைக்கு வந்தோமா, சம்பாதிச்சோமா, பிள்ள குட்டியை காப்பாத்துனோமான்னும் இல்லாமா ஊரச்சுத்திக்கிட்டு இருக்க” என்று கத்த சுந்திரம் திரு திரு என்று முழிக்கிறார்.
கடைசி முயற்சியாக “ப்ளீஸ். இது ஆபிஸ்” என்று கூறியதுதான் அவர் செய்த தவறு. ”ஆபிசாம் ஆபிஸ். குடியும் _____யுமா கூத்தடிச்சிட்டிருக்கீங்க. இதுக்கு பேர் ஆபீசா... தூ.... நீங்களாம் வேலைக்கு வந்தீங்களா இல்லை.________ வந்தீங்களா” என்று ஏகவசனத்தில் குரலை ஏற்றவும், அனைவரும் அதிர்ந்து போய் நிற்கவும், சுந்தரம் தலையை குனிந்து கொண்டே மனைவியை அழைத்து சென்று விட்டார்
அதன் பின்னர் பேரூந்து வந்து அனைவரும் ஏறினாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து அங்கு இருப்பவர்கள் முழுவ்தும் மீள சில மணிநேரம் ஆனது
அதன் பிறகும் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இல்லாத சுந்தரம் மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.
பல வாரங்கள் கழித்து ஆனந்தனை தற்செயலாக சந்திக்கும் போது “என்ன சுந்தரம் ஓடிட்டாரா” என்று சிரித்துக்கொண்டே கேட்டான். “என்னடா செய்த” என்ற என் ஆர்வத்திற்கு அவன் அளித்த பதில் “அவங்க வீட்டிற்கு போன் செய்து “நான் சாரோட பியூன் பேசுறேன். சார் எங்களுக்கெல்லாம் பாண்டிச்சேரில ட்ரீட் கொடுக்கிறார். பிரிட்ஜுக்கு பின்னாடி சிக்னெட்சரும் மேன்ஷன் ஹவுசும் இருக்காம். யார் கிட்டயாவது கொடுத்து விட முடியுமா. என்ன வந்து எடுத்துக்க சொன்னார். இங்க வேல டைட்டாயிட்டதால வர முடியலா. எல்லாரும் இங்க ஆபிசில வெயிட் பண்ணுறாங்க. அஞ்சரைக்கு கிளம்பனும். லேடிஸ் வேற வெயிட் பண்ணுறாங்க சீக்கிரம் கொடுத்து விட்டீங்கனா நல்லது,”ன்னு தாண்டா சொன்னேன்
16 மறுமொழிகள்:
//அடர்த்தெழு குருதியடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, //
அற்புதமான வர்ணனை தல..,
//நல்லது,”ன்னு தாண்டா சொன்னேன் //
ரொம்ப நல்லதா இருக்க்கே தல..,
//அற்புதமான வர்ணனை தல..,//
ஹி ஹி ஹி :) அது சொந்த சரக்கு இல்லை தல. கடன் வாங்கியது
நைஸ் அட்டெம்ப்ட்..
//
ஹி ஹி ஹி :) அது சொந்த சரக்கு இல்லை தல. கடன் வாங்கியது
//
வர்ணனை நல்லா இருக்கு.
கடன் வாங்கிய சரக்கா இருந்தாலும் ரசனைக்குரியது அல்லவா?
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்
//m.payanangal.in
செல்லிடப்பேசியில் வாசிக்க தனித்தளம் அமைத்த முதல் தனிநபர் தமிழ் வலைப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ன கொடுமை -சார்- லக்கி இது //
ஹிஹிஹி.. நல்லா இருக்கு!
////m.payanangal.in
செல்லிடப்பேசியில் வாசிக்க தனித்தளம் அமைத்த முதல் தனிநபர் தமிழ் வலைப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ன கொடுமை -சார்- லக்கி இது //
ஹிஹிஹி.. நல்லா இருக்கு!//
கதை நல்லா இல்லை என்ற நேர்மையான விமர்சணத்திற்கு நன்றி
//நைஸ் அட்டெம்ப்ட்..//
நன்றி தலைவரே. அட்டெம்ப்ட் மட்டும் நைஸ் என்ற உங்களின் உண்மையான விமர்சனத்திற்கு
அடுத்த முறை ரிசல்டும் நைசாக முயற்சிக்கிறேன் :)
//அக்னி பார்வை said...
வாழ்த்துக்கள்//
நன்றி தல
//கடன் வாங்கிய சரக்கா இருந்தாலும் ரசனைக்குரியது அல்லவா?
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!//
நன்றி மேடம்
நல்ல எழுத்தாளர் என்பதை நிரூபித்து கொண்டிருக்கீறீர்கள்...
//நல்ல எழுத்தாளர் என்பதை நிரூபித்து கொண்டிருக்கீறீர்கள்...//
நன்றி சார்
குடும்பத்தில் குண்டுவைப்போர் சங்கத்தில் இருக்கிறார் போல ஆனந்தன்!
கதை ஓக்கே தல!
//குடும்பத்தில் குண்டுவைப்போர் சங்கத்தில் இருக்கிறார் போல ஆனந்தன்!
கதை ஓக்கே தல!//
நன்றி பாஸ்
அக்கவுண்டன்ட் சுப்பிரமணியம் விட்டு கட்ட//
கவனக்குறைவு ! கதை சுமார். எளிதாக யூக்கிகும் படி இருக்கிறது. வாழ்த்துகள்
Post a Comment