இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, November 19, 2009

வழித்தடங்கள் : 19 நவம்பர் 2009 : தென்றல் காற்றும் வாடை காற்றும் !!

இந்த பாடல் அனைவரும் படித்திருப்பீர்கள்
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தென்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்திசை
குமரியாடி வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர் சக்திமுற்ற வாவியில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் என் மனைவியைக்
கண்டு எங்கோன் மாறன் வழுதிகூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனை கண்டனும் எனமே
இதிலிருந்து தெரிவது என்னவென்று பட்டியல் போடுவோமா
  1. அந்த காலத்தில் புலவர்கள் ஏழையாக இருந்துள்ளார்கள்
  2. புலவரின் வீட்டு சுவர் ஒழுகுகிறது 
  3. புலவர் வறுமையினால் போதிய உடை இல்லாமல் இருக்கிறார்
  4. உணவு கூட குறைவுதான்
  5. நாரைகள் அந்த காலமே குளிர்காலத்தில் வடக்கிலிருந்து தெற்கு வந்துள்ளன (வேடந்தாங்கல், கூந்தன் குளம் போன்ற சரணாலயங்களுக்கு)
  6. பல்லி சத்தம் இடுவதை வைத்து நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்துள்ளது
  7. பனங்கிழங்கு உணவாக இருந்துள்ளது
இதில் இன்று என்ன மாறியுள்ளது என்று சிந்தித்தால், அன்று முதல் இன்று வரை

  • கலைஞர்களின், கவிஞர்களின், எழுத்தாளர்களின் நிலையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்
  • நாரைகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கின்றன
  • பல்லிகள் சத்தமிட்டு கொண்டுதானிருக்கின்றன
  • கூரைகள் ஒழுகிக்கொண்டுதானிருக்கின்றன

வேண்டுமென்றால் வழுதிகூடலில் ஆடையின்றி வாடையில் மெலிந்து என்பதற்கு பதில் திருவல்லிக்கேணி மேன்சனின் குளிப்பதற்கு தண்ணீர் இன்றி தத்தளிப்பதை எழுதலாம். பல்லி சத்தம் போடுவதற்கு பதில் செல்லிடப்பேசி...... வறுமை மாறியுள்ளதா என்ற கேள்விக்கு வரும் பதில்........... :( :(

இந்நிலை இனியாவது மாற என்ன செய்யவேண்டும் ?

-oOo-

  • தென்றல் என்றால் மிதமான ரசிக்கும் விதத்தில் வீசும் காற்று என்று பொருள் உள்ளது
  • வாடை என்றால் குளிர் என்று பொருள் உள்ளது
இந்த சொற்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று சிந்தித்து பார்த்தால், இவை பருவகாற்றின் அடிப்படையிலேயே வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

தமிழகத்தை பொருத்த வரை தெற்கிலிருந்து வீசும் காற்று என்னவென்றால் அது தென்மேற்கு பருவக்காற்று தான். பெரும்பாலும் (ஆடி மாதம் அம்மி பறப்பதை தவிர) மிதமான வேகத்தில் தான் வீசும் என்பதால் தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் ஆகியிருக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாண்மையான இடங்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று பொதிகை மலையில் இருந்து வீசுவது போல் தான் தோன்றியிருக்க வேண்டும்

அதே போல் வட கிழக்கு பருவக்காற்று வீசுவது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் - குளிர் காலங்களில்

எனவே வாடைக்காற்று என்ற வடக்கிலிருந்து வீசும் காற்றை குறிக்கும் சொல்லிலிருந்து வாடை என்ற குளிரை குறிக்கும் சொல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

இது எனது hypothesis மட்டுமே. மாற்று கருத்து இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன். திருத்திக்கொள்கிறேன் ஏதாவது ஏடாகூட சந்தேகம் என்றால் சங்க கால பாடல் நிபுணர் பிரபல எழுத்தாளர் நர்சிம் தீர்த்து வைப்பார்

-oOo-

காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் டிரினிடி கல்லூரியில் அவர் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் அந்த கல்லூரியின் நான்கு வாசல்களிலும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு நான்கு சீருந்துகள் நிற்குமாம். அந்த நாட்டு இளவரசனுக்கே ஒரு சீருந்து தானாம்.

இந்த செய்தி உண்மையா கற்பனையா என்று தெரியவில்லை, ஆனால் அந்த அளவு வசதியுள்ளவர் அவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு வசதியிருந்தும், அவர் 9 வருடங்கள் சிறையில் கழித்தார் - தனக்காக இல்லை, தனது நாட்டின் விடுதலைக்காக... சிறையில் இருந்த சமயம் அவர் எழுதிய புத்தகங்கள் அமரத்துவம் பெற்றவை 1934ல் “Glimpses of World History”, 1936 “Autobiography(சுயசரிதை)” மற்றும் 1946ல் “The Discovery of India”

அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு சின்ன உதவிக்குறிப்பு : இன்று அவரது புதல்வியின் பிறந்த நாள்

-oOo-

பதிவர் பைத்தியக்காரன் அவர்கள் 12 வருடங்களுக்கு முன்னர் குங்குமம் இதழில் எழுதிய சிறுகதை ஒன்றை அவரது பதிவில் வெளியிட்டுள்ளார். பரம்பரை வலி என்ற சிறுகதை சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடியது. படித்து பாருங்கள்

-oOo-

சமீபத்தில் மருத்துவர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் “எனக்கு வேலை தான் முக்கியம். குடும்பம் இரண்டாம் பட்சமே” என்று கூறினார். இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று நான் யோசிப்பதற்குள் அருகிலிருந்த மற்றொரு மருத்துவர் உடனடியாக, “சோர்ந்திருக்கும் சமயம் வேலை வந்து தலையை கோதி விட்டு தட்டி கொடுக்குமா” என்று போட்டாரே ஒரு போடு... பல நொடிகள் அந்த இடத்தில் பயங்கர நிசப்தம். வேலை முக்கியம் என்று கூறியவர் முகத்தில் ஈயாடவில்லை :) :) :)

15 மறுமொழிகள்:

Sammy said...

நேரு மாமா .....தமிழ்நாட்டில் தான் அவர் உடையில் பூ வைக்கும் பழக்கம் வந்தாதமே ? எங்கயோ படித்த நியாபகம்.

ஹ்ம்ம் இந்த நான்கு வாசல்களிலும் கார் நிக்கிற மேட்டர் எங்க வீட்டிலும் அப்பா சொல்லுவார்.

ரவிசங்கர் said...

இது என்ன வழித்தடம்? உப்புமா. கொத்து புரோட்டா மாதிரியா ? நல்லா இருக்கு :)

**

தென்றல் தெற்கில் இருந்து வரும், வாடை வடக்கில் இருந்து வரும் என பள்ளியிலேயே தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்தார் :) ஆனால், நீங்கள் அதனை உய்த்துணர்ந்த விதம் சுவை :)

சென்னைப் பல்கலை அகரமுதலியிலும் இந்தப் பொருள்களைக் காணலாம்.

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

**

எல்லா இடத்திலயும் பதிலடி கொடுக்கவே யோசிச்சிக்கிட்டு இருக்கோம் ;)

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நீங்க மருத்துவரா? முனைவரா?

:))

புருனோ Bruno said...

//நேரு மாமா .....தமிழ்நாட்டில் தான் அவர் உடையில் பூ வைக்கும் பழக்கம் வந்தாதமே ? எங்கயோ படித்த நியாபகம்.//

தகவலுக்கு நன்றி

வழக்கமாக தமிழர்கள் காதில் தான் வட இந்தியர்கள் பூ வைப்பது வழக்கம் :) :) இங்கு நாம் செர்வானியில் பூ வைத்துள்ளோமா :)

புருனோ Bruno said...

//இது என்ன வழித்தடம்? உப்புமா. கொத்து புரோட்டா மாதிரியா ?//
ஹி ஹி ஹி அப்படித்தான்

// நல்லா இருக்கு :)//
நன்றி

புருனோ Bruno said...

//சென்னைப் பல்கலை அகரமுதலியிலும் இந்தப் பொருள்களைக் காணலாம். //
அப்பாடா. நான் நினைத்தது சரிதான் :)

//எல்லா இடத்திலயும் பதிலடி கொடுக்கவே யோசிச்சிக்கிட்டு இருக்கோம் ;)//
:)

புருனோ Bruno said...

//அண்ணே நீங்க மருத்துவரா? முனைவரா?

:))//

திட்டுறீங்களா, பாராட்டுறீங்களான்னு தெரியலயே ???

நான் மருத்துவர் தான்

திகழ் said...

ஏற்கனவே படித்த செய்தி என்றாலும் தமிழின் சுவையை மீண்டும் மீண்டும் படிக்க படிக்க இன்பம் தான்.

அன்புடன்
திகழ்

Sammy said...

//வழக்கமாக தமிழர்கள் காதில் தான் வட இந்தியர்கள் பூ வைப்பது வழக்கம் :) :) இங்கு நாம் செர்வானியில் பூ வைத்துள்ளோமா :)///

மருத்துவருக்கு தெரிந்துருக்கும், மகாத்மா காந்தி கதர் வேட்டி போட வைத்ததும் நம்ம ஆளுங்க தான், மதுரைக்கு பக்கம்....

நர்சிம் said...

தலைவரே..ஏன் இந்தக் கொலைவெறி..நிபுணரா?? ஏன் ஏன் ஏன்??
*****

கலக்கல் பட்டியல் தலைவரே.வேடந்தாங்கல் மேட்டர் ரொம்ப சார்ப்.

நல்ல பதிவு.

ஊர்சுற்றி said...

அருமை...

//அதே போல் வட கிழக்கு பருவக்காற்று வீசுவது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் - குளிர் காலங்களில்

எனவே வாடைக்காற்று என்ற வடக்கிலிருந்து வீசும் காற்றை குறிக்கும் சொல்லிலிருந்து வாடை என்ற குளிரை குறிக்கும் சொல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்//

நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். 'மேற்கு' - 'கிழக்கு' : 'மேலே' - 'கீழே' இந்த நான்கு வார்த்தைகளுக்கும் - தமிழகத்தின் மேற்கு மலைகளுக்கும் (மேலேயிருக்கிற) கிழக்கேயிருக்கிற தாழ்ந்த கடலுக்கும் (கீழேயிருக்கிற) பெரும் தொடர்பு உண்டென்று.

பலதகவல்கள் கிடைத்தன இந்த இடுகையில்.

புருனோ Bruno said...

//ஏற்கனவே படித்த செய்தி என்றாலும் தமிழின் சுவையை மீண்டும் மீண்டும் படிக்க படிக்க இன்பம் தான்.
//

நன்றி சார்

புருனோ Bruno said...

//மருத்துவருக்கு தெரிந்துருக்கும், மகாத்மா காந்தி கதர் வேட்டி போட வைத்ததும் நம்ம ஆளுங்க தான், மதுரைக்கு பக்கம்....
//

:)

புருனோ Bruno said...

//கலக்கல் பட்டியல் தலைவரே.வேடந்தாங்கல் மேட்டர் ரொம்ப சார்ப்.

நல்ல பதிவு.
//

நன்றி சார்

புருனோ Bruno said...

//நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். 'மேற்கு' - 'கிழக்கு' : 'மேலே' - 'கீழே' இந்த நான்கு வார்த்தைகளுக்கும் - தமிழகத்தின் மேற்கு மலைகளுக்கும் (மேலேயிருக்கிற) கிழக்கேயிருக்கிற தாழ்ந்த கடலுக்கும் (கீழேயிருக்கிற) பெரும் தொடர்பு உண்டென்று.
//

அருமையான விளக்கம். நன்றி தல

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...