இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Friday, February 27, 2009

தமிழ்மணம் விருதுகள் 2008 - வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல

இன்று வெளியிடப்பட்ட தமிழ் மணம் விருதுகள் 2008 முடிவுகளின் படி பயணங்கள் வலைப்பதிவில் இருக்கும் மூன்று கட்டுரைகள் மூன்று பிரிவுகளில் முதலிடத்தை பெற்றுள்ளன

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
  1. பயணங்கள் Payanangal - புருனோ Bruno : * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க 
  2. ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல் : என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும் 


பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
  1. பயணங்கள் - புருனோ Bruno : மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்
  2. உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன் : என் இனிய சுஜாதா


பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
  1. பயணங்கள் - புருனோ Bruno : தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
  2. பல்சுவை! - SP.VR. SUBBIAH : Star Posting செட்டிநாட்டு வீடுகள்


வாக்களித்தவர்கள் அனைவருக்கும், தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகள் பல

Wednesday, February 18, 2009

புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ???

புத்தகம், காப்புரிமை பற்றி சில தகவல்களை பார்ப்போம். உதாரணத்திற்கு பதிவர் லக்கியின்(எழுத்தாளர் யுவகிருஷ்ணா)வின் “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ” புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்


இந்த புத்தகத்தை எழுதியது யார் : யுவகிருஷ்ணா


வெளியிடுவது யார் : கிழக்கு பதிப்பகம் 


இதில் லாபம் எப்படி வரும் :
புத்தகம் எழுதும், தட்டச்சு செய்யும், வடிவமைக்கும், அச்சிடும், விளம்பரப்படுத்தும், விநியோகிக்கும் செலவு (தள்ளுபடி தரும் பணம்) போக மீதி இருக்கும் பணம் தான் லாபம்


லாபத்தில் யாருக்கு பங்கு :
இதில் பதிப்பகத்திற்கும் நூலாசிரியருக்கும் பங்கு
இப்பொழுது இந்த புத்தகத்தை கிழக்கு மட்டும் தான் வெளியிடமுடியும். யாருக்காவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றால் கிழக்கில் மட்டும் தான் வாங்கி படிக்க முடியும்.

வேறு பதிப்பகங்கள் வெளியிட முடியாது (அனுமதி இல்லாமல் அச்சிடக்கூட முடியாது)

சரி, நாட்டுடைமை என்றால் என்ன :
நாட்டுடைமை என்றால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை யுவகிருஷ்ணாவிற்கு அளித்து அவரது புத்தகங்களை யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்கலாம் என்று ஆணை பிறப்பிப்பது

அப்படி ஆணை பிறப்பித்தபின் என்னவாகும் : 
நான் அதே புத்தகத்தை மேப் லித்தோ காகிதத்தில் அச்சிட்டு ஒரு புத்தகம் 300 ரூபாய் என்று விற்கலாம். நீங்கள் அதை தங்க நிற மையில் அச்சிட்டு ஒரு புத்தகம் 1000 ரூபாய் என்று விற்கலாம். அசோகன் சார் அதை ”பாக்கெட் நாவலா”க தரலாம். அப்படி புத்தகத்தை அச்சிடும் யாரும் யுவகிருஷ்ணாவிற்கு பணம் அளிக்க வேண்டாம் !!

இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) எழுத்தாளருக்கு (இந்த உதாரணத்தில் யுவகிருஷ்ணாவிற்கு) லாபமா நஷ்டமா : அது அரசு தரும் பணம் மற்றும் இது வரை அவரது புத்தகம் விற்கும் அளவை பொருத்தது.

உதாரணமாக

அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 லட்சம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு லாபமே

ஆனால்


அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 கோடி வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு நஷ்டமே
இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) அரசிற்கு வரவா, செலவா :  கண்டிப்பாக செலவு தான்
பிறகு ஏன் அரசாங்கம் இப்படி புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் :  இரு காரணங்கள்
1. அந்த புத்தகம் நல்ல புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்
2. எழுத்தாளருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம்


புத்தகம் நாட்டுடைமையாக்க பொதுவாக கடைபிடிக்கப்படும் நடைமுறை என்ன.
புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதால் அரசிற்கு எந்த வருவாயும் கிடையாது. செலவு மட்டும் தான். எனவே இந்த செலவை செய்வதற்கு அரசு சட்டசபையில் ஒப்புதல் வாங்க வேண்டும்

சட்டசபையில் ஓப்புதல் வாங்காமல் செலவு செய்ய முடியாதா
ஒரு அரசானது நினைத்து போல் செலவு செய்து விட முடியாது. அடுத்த நிதியாண்டில் தமிழக அரசு என்னென்ன செலவு செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக வருவாய் எப்படி வரும் என்பது குறித்து தமிழக அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை ஒன்றை சட்டசபையில் சமர்பிப்பார். அதை உறுப்பினர் ஏற்றுக்கொண்டபின்னர் 01.04.2009 முதல் 31.03.2010 வரை உள்ள செலவுகள் இதன் அடிப்படையில் தான் நடைபெறும்.

புத்தகம் நாட்டுடைமையாக்க மட்டும் ஏன் இப்படி
புத்தகங்களை நாட்டுடைமையாக்க மட்டும் அல்ல. அரசின் அனைத்து செலவுகளும் அந்த அறிக்கையில் இருக்கும்.
இந்த வருட அறிக்கையில் இருக்கும் சில உதாரணங்கள்
  1. தமிழகத்தில் வரும் நிதியாண்டு முதல் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும், இனிமேல் வட்டி கிடையவே கிடையாது. அந்த வட்டித் தொகையை அரசே செலுத்திவிடும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  2. கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பதற்காக, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோத்தயம் கிராமத்தில், சுமார் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நல்லதங்காள் ஓடைக்குக் குறுக்கே அணை ஒன்று அமைக்கப்படும் 
  3. வரும் நிதியாண்டில் மேலும் 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்க ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  4. நமது மாநிலத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான புதிய திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்
நிதி அமைச்சர் அறிவித்து விட்டாரே, அப்படியானால் மாணவர்களுக்கு நாளையே கண்ணாடி வழங்கி விடுவார்களா
நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பின் அது குறித்து விவாதம் நடைபெறும். சபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த அறிக்கை இறுதி வடிவம் பெறும்.
உதாரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிதி ஒதுக்கப்படும் (அதனால் வேறு ஏதாவது திட்டத்திற்கு அளிக்கப்பட்ட நிதி குறையலாம்)


மாணவர்களுக்கு இவ்வளவு கோடி ஒதுக்கப்படுகிறது என்று மட்டும் அனுமதி வாங்கி பின்னர் அந்த பணத்திற்கு கண்ணாடியோ காது கேட்கும் கருவியோ வாங்கினால் என்ன
மக்களாட்சி எனபதன் கோட்பாடே மக்களின் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வது தானே தவிர அதிகாரிகள் முடிவு செய்வது அல்ல என்பதால் தான் இந்த விபரங்கள் நிதி நிலை அறிக்கையில் வருகிறது


நாட்டுடமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது” என்று ஒரு கருத்து உள்ளதே
அப்படி செய்யலாம். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைவு. மேலும் அப்படி செய்வது மக்களாட்சியின் அடிப்படைக்கு விரோதமான செயல்

புத்தகங்களை நாட்டுடைமையாக்க 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறிவிட்டு எந்த புத்தகங்கள் என்று பின்னர் தீர்மாணிக்க முடியாதா
முடியும். ஆனால் அது தார்மிக ரீதியாக சரியான செயல் அல்ல.
பின்னர் ஏன் அப்படி செய்யாமல் ஆசிரியர்களின் பெயரை நிதிநிலை அறிக்கையில் கூறுகிறார்கள்
யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றன (யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை !!) என்ற முடிவை அந்த துறையில் உள்ள ஒரு அதிகாரி எடுப்பதற்கு பதிலாக மக்களாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் எடுப்பது தான் மக்களாட்சி என்பதால் அந்த பெயர்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுகின்றன
உதாரணமாக 25 லட்சம் செலவழித்து யுவகிருஷ்ணாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதற்கு பதிலாக டேவிட் மெக்கின்சி ஒகில்வியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று உறுப்பினர்களில் பலரும் கருத்து தெரிவித்தால் யுவகிருஷ்ணாவின் எழுத்துக்களுக்கு பதில் ஒகில்வியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்படலாம்

சரி, கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பெயரை நேற்று நிதிஅமைசச்ர் அறிவித்தாரே. நான் இன்று இரவு அவரது புத்தகங்கள் இரண்டை அச்சிட்டு நாளை சாந்தி திரையரங்கு முன்னால் விற்கலாமா
நன்றாக் கவனியுங்கள். கவிஞர் அழ.வள்ளியப்பாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. இப்பொழுது நிதிஅமைச்சர் என்ன கூறியுள்ளார் என்று மறுபடியும் பாருங்கள்
நலன் பல குவிக்கும் நிதிநிலை அறிக்கையை அவையின் ஒப்புதலுக்காக இந்த அரசு முன்வைக்கிறது.
அப்படி என்றால் சட்ட சபை அனுமதி அளித்த பின்னர் தான் என்னால் அந்த புத்தகங்களை அச்சிட முடியுமா
சட்ட சபை அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் சட்ட சபை அனுமதி அளித்தால் மட்டும் போதாது
பிறகு என்ன வேண்டும்
முதலில் சட்டசபையில் இதற்கான அனுமதியை பெற வேண்டும்
அதன் பிறகு இதற்கான துறையிலிருந்து அந்த ஆசிரியரை தொடர்பு கொள்வார்கள். அல்லது ஆசிரியரின் குடும்பத்தினரை அல்லது வாரிசுகளை
எதற்கு
அவர்களிடமிருந்து அந்த உரிமங்களை முறைப்படி பெற
சட்ட சபையில் அறிவித்த பின்னர் அந்த ஆசிரியரின் வாரிசுகள் மறுக்க முடியுமா
கண்டிப்பாக மறுக்கலாம். சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது  “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை
இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது

சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர்தான் நீங்களோ நானோ அந்த புத்தகங்களை அச்சிடலாம்

இது குறித்த அரசின் நிலை
இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.
நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.
உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. 
எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.
ஒரு வேளை சட்டசபையில் ஒரு ஆசிரியரின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க கடும் எதிர்ப்பு வருகிறது. அப்படியானால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள மாட்டார்களா
ஒரு வேளை அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கும் பட்சத்தில் அந்த ஆசிரியரின் நூல்களை நாட்டுடைமையாக்க சபை அனுமதி வழங்கவில்லை என்றால் ”அவையின் ஒப்புதலுக்காக அரசு முன்வைத்த போது” ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு அந்த ஆசிரியரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்க நிதி அனுமதி இல்லை என்பதால் அவரது குடும்பத்தின்ரை தொடர்பு கொள்ள மாட்டார்கள்


குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அதன் பிறகு சட்டசபையின் ஒப்புதலுக்கு வைத்தால் என்ன
தமிழ் எழுத்தாளர்களில் வெகு சிலரே கோடிஸ்வரர்கள் !!! ஏனைய எழுத்தாளர்களின் நிதி நிலைமை மெச்சும் படி இல்லை.
இப்படி இருக்கும் போது ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் வந்து பணம் தருகிறேன் (அதற்கு அனுமதி தாருங்கள்) என்று கூறிவிட்டு ஏதாவது காரணத்தால் அந்த வருடமோ அல்லது அதன் பின்னரோ நிதி ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பத்தினரின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசித்தீர்களா
அதனால் தான் நிதி ஓதுக்கீடு முடிந்த பின்னர் அனுமதி கேட்கிறார்கள். குடும்பத்தினர் அனுமதி அளித்தால் 100 சதம் அவர்களுக்கு பணம் தரலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதல்லவா
உங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள். 
நீங்கள் என்ன செய்வீர்கள்

  • 1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா
  • அல்லது
  • 2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா
அரசு (ஏழ்மையில் இருக்கும் ஒரு எழுத்தாளரின் குடும்பத்திற்கு) என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்

இது குறித்து பதிவர் பத்ரியின் அவர்கள் ஒரு பதிவு (நாட்டுடமை குழப்பம் ) எழுதியுள்ளார். அதில் உள்ள சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறித்த என் கருத்துக்கள்
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம்.//
மன்னிக்க வேண்டும்
இதில் அபத்தம் எதுவும் இல்லை என்பது என் கருத்து

நேற்று வெளியிடப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது. இதை அபத்தம் என்று கூறுவது என்னைப்பொருத்த வரையில் ஏற்புடையது அல்ல

சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும்.

இப்படி நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தான் அந்த துறையிலிருந்து அந்த ஆசிரியரின் குடும்பத்தினரை / வாரிசுகளை தொடர்பு கொண்டு சம்மதம் கேட்பார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த எழுத்தாளரை தேடிபோய்விடுவார்கள் (இந்த வருடம் அல்லது அடுத்த வருடம்)

உண்மையில் அபத்தம் என்னவென்றால் இப்படி அரசிடமிருந்து தனிப்பட்ட கடிதம் வரும் வரை காத்திருக்காமல் இருவர் நேற்று விளம்பரம் தேடியது தான்.
//இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.//
இது எப்படி opt-out ஆகியது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் தனிப்பட்ட அனுமதி வாங்கப்பட்ட பின்னரே ஆணை வெளியிடப்படும். ஆக அரசுடைமை என்பது opt in முறையிலேயே நடக்கிறது.
//3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.//
இந்த நடைமுறை தான் இப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்குவதற்கு அனுமதி கோரப்பட்டதை வைத்து ஏதோ புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது போல் ஊடகங்களும் பதிவர்களும் ஏன் எழுதுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்படாமல் எப்படி அந்த துறை அதிகாரி அந்த வாரிசு தாரருடன் பேச முடியும். நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு 10 கணினி வாங்க வேண்டுமென்றால் அதற்கான பணம் ஒதுக்கப்படுமுன்னரே கணினி நிறுவனத்துடன் பேச உங்கள் ஊழியருக்கு அனுமதி உண்டா
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம்.//
உண்மை. ஆனால் குழப்பம் விளைவித்தது அரசல்ல. இருவரின் வாரிசுகளே என்பது தான் நிஜம்.

தொடர்ந்து வாசிக்க : புத்தகங்களும் நாட்டுடைமையும் - மேலும் சில கருத்துக்கள்

Sunday, February 15, 2009

செந்தமிழில் பயணச்சீட்டு - இன்பத்தேன் பாயுதே !!

தமிழக அரசு போக்குவரத்து கழக பேரூந்துகளில் தற்சமயம் சிறு கையடக்க மின்பொறி மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த பயணச்சீட்டுக்கள் ஆங்கிலத்தில் இருந்தன.

தற்பொழுது நடத்துனர்களுக்கு புதிதாக வழங்கப்படும் இயந்திரங்கள் தமிழில் பயணச்சீட்டு வழங்கும்படி இருக்கிறது. விரைவில் அனைத்து பேரூந்துகளிலும் தமிழில் பயணச்சீட்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்



அரசு கழக பயணச்சீட்டு நடைமுறையை மாற்றுவது என்பது ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பார்வையாளர் அனுமதி சீட்டை மாற்றுவது போல் எளிதான ஒரே நாளில் முடியக்கூடிய காரியம் அல்ல என்பதை பலர் அறிவதில்லை. அதனால் தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் பயணச்சீட்டு ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து சில விமர்சணங்கள் வந்தன.

எந்த ஒரு அரசு திட்டமும் முதலில் ஒரு சிறு பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பிறகு தான் விரிவு படுத்தப்படும். அப்படி நடைமுறைப்படுத்தப்படும் போது (Pilot - முன்னோட்டம்) பொதுவாக ஒரிரு கருவிகளையே வாங்குவார்கள். அப்படி வாங்கும் போது, அந்த கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் அந்த கருவியின் அமைப்பை (இந்த உதாரணத்தில் அச்சிடப்படும் மொழியை) மாற்றி வழங்கிவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அப்படியே அவர்கள் அமைப்பை மாற்றி வழங்கினாலும் அதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன
  1. அமைப்பில் மாற்றம் செய்ய அதிக பணம் தேவைப்படும். உதாரணமாக 1000 ரூபாய்க்கு விற்கப்படும் ஆங்கில பொறியை நாம் வாங்கும் போது வெறும் 5 (அல்லது 10) கருவிகளை மட்டும் வாங்கி அதில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழ் வேண்டுமென்றால் அந்த நிறுவனம் சம்மதிக்காது. விலை அதிகம் கேட்பார்கள்
    1. கடையில் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் கருவியை 1200 ரூபாய்க்கு ஒரு அரசு அதிகாரி (அதிக விலை அளித்து) வாங்கினால் உடனே ஊழல் என்று கூப்பாடு எழும். எனவே யாரும் இந்த முயல தயங்குவார்கள்
    2. அதே நேரம், முன்னோட்டம் முடிந்து திட்டம் விரிவுபடுத்தப்படும் போது பல ஆயிரம் கருவிகள் வாங்கப்படுவதால் (கருவி விற்கும்) நிறுவனத்துடன் பேசி) அதே விலையில் பெறலாம்
  2. அமைப்பை மாற்ற அதிக நேரம் தேவைப்படலாம். இதனால் முன்னோட்டம் ஆரம்பிப்பது தாமதமாகும் --> முன்னோட்டம் முடிவது தாமதமாகும் --> திட்ட நடைமுறையும் தாமதமாகும்
  3. இதை விட முக்கியமான விஷயம் --> அந்த நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் வாடிக்கையாளருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு (மென்பொருள் ஆதரவு குழு - support team வேறு பதம் தெரிவிக்கவும்) தமிழ் தெரிய வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை கருவியிலா, அல்லது பயன்படுத்துபவரிடமா என்பதும் யாருக்கும் தெரியாது. இங்கும் முன்னர் சொன்னது போல் 5 கருவி வாங்கும் போது தமிழ் தெரிந்த ஆதரவு குழு வேண்டுமென்று நாம் கேட்க முடியாது. அதே நேரம் 1000 கருவி வாங்கும் போது கேட்கலாம்
இது போன்ற நடைமுறை பிரச்சனைகளால் / சிக்கல்களால் தான் பல அரசு திட்டங்கள் - முக்கியமாக கணினி சார் / தொழிற்நுட்பம் சார் திட்டங்கள் - அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் இருந்து பின்னர் விரிவுபடுத்தப்படும் போது தமிழில் மாறுகின்றன

தற்சமயம் நியாய விலைக்கடைகளில் இது போல் கையடக்க கருவி மூலம் பொருட்களின் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுகாதார துறையில் தாம்பரம், சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய மருத்துவமனைகளில் மருந்து சீட்டுக்கள் கணினியில் அச்சிட்டப்பட்டு வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தும் முன்னோட்ட திட்டங்களே. எனவே இங்கு வழங்கப்படும் சீட்டுகளில் ஆங்கிலம் இருக்கலாம்.

முன்னோட்ட திட்டங்களில் ஏற்படும் சிக்கல்களை களைந்து இத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் போது ஆங்கிலத்திற்கு பதில் தமிழ் இடம்பெறும்.

அதற்கு முன்னர் தமிழ் யூனிகோட் - டியூன் சிக்கல் முடிவிற்கு வருவது நலம் :) :)

பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்?

http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_9180.html  பதிவில் எழுப்பட்ட வினாவிற்கு ஒரு சிறு விளக்கம்

வினா 1 : பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்?
விடை 1 : ஒவ்வொரு குடிமகனுக்காகவும் அரசு தகவல் தொழிற்நுட்ப துறைக்காக செலவழிக்கும் தொகை.
  • per capita - பெர் கேப்பிட்டா - ஒவ்வொருவருக்கும்
  • IT - ஐடி - தகவல் தொழிற்நுட்பம்
  • Spending - ஸ்பெண்டிங் - செலவு
வினா 2 : அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு?
விடை 2 : இதற்கு விளக்கமளிக்கும் முன்னர் முக்கிய விஷயத்தை ஞாபகத்தில் வைக்க வேண்டும் - தகவல் தொழிற்நுட்ப துறையில் தமிழ் நாடு நம்பர் 1 இடத்தில் தான் இருக்கிறது

ஒரு சிறு கதை

மூன்று குழுக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்

குழு 1, குழு 2 , குழு 3

--

ஒவ்வொரு குழுவிலும் 5 பேர்

--

ஆக 15 பேரும் காலை சாப்பாடு வாங்க ஒவ்வொரு குழுவிலும் ஒருவரை அனுப்புகிறார்கள்

--

இப்பொழுது குழு 1ல் சாப்பாடு வாங்கப்போனவர் 150 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 5 இட்லி வாங்கி வருகிறார்

--

குழு 2ல் சாப்பாடு வாங்கப்போனவர் 200 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 10 இட்லி வாங்கி வருகிறார்

--

குழு 3ல் சாப்பாடு வாங்கப்போனவர் 100 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 10 இட்லி வாங்கி வருகிறார்

--

இதில் பெர் கேப்பிட்டா இட்லி ஸ்பென்டிங் (ஒவ்வொருவருக்கும் இட்லி வாங்க எவ்வளவு செலவு) என்றால்

குழு 1 - 30
குழு 2 - 40
குழு 3 - 20

குழு 1 மற்றும் குழு 2 ஆகியவற்றை ஒப்பிடுகையில் குழு 3 அதல பாதாளத்தில் இருக்கிறது : ஏனென்றால் குழு 3ல் சாப்பாடு வாங்க போனவர் (அவர் பணத்தை ”சாப்பிடாமல்” - அல்லது ”குறைவான பணத்தை மட்டும் சாப்பிட்டு” !!!) அதிக அளவு இட்லி வாங்குகிறார்

இதில் மேலும் பெர் இட்லி ஸ்பெண்டிங் (ஒரு இட்லிக்கு செலவு) என்று பார்த்தால்

குழு 1 - 6
குழு 2 - 4
குழு 3 - 2
புரிய வில்லை என்றால் சந்தேகங்களை கேட்கலாம்.

மறுமொழியில் வந்த ஒரு சந்தேகம்
புருனோ,

எந்த ஒரு புள்ளி விவரத்தையும் நமக்கு சாதகமாக சொல்லிக்கொள்ள முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம். பெர் கேப்பிடா ஐடி ஸ்பென்டிங் அதிகமாக இருந்தால் நாங்கள் அதிகம் செலவழிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம், குறைவாக இருந்தால் நாங்கள் குறைவாக சாப்பிடுகிறோம் / எஃபக்டிவ்வாக பணத்தை உபயோகிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம். கண்டிப்பாக அரசை குறை கூறும் எண்ணத்தில் இதை சொல்லவில்லை. இன்றைய நிலையில் நமக்குத் தேவை தொலைநோக்குடன் திட்டங்களைத் தீட்டி அதிகமோ குறைவோ சரியான வழியில் பணத்தை செலவு செய்யும் அரசுதான். நம் ஊர் அரசியலில் இதெற்கெல்லாம் வழியே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஆள்பவர்களுக்கும் தெரியும். :(

//எந்த ஒரு புள்ளி விவரத்தையும் நமக்கு சாதகமாக சொல்லிக்கொள்ள முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.//

அப்படி இல்லை சார். டேட்டா குவஸ்டின் ஆய்வை நீங்கள் முழுவதும் பார்த்து இதில் எங்கு சாதகமில்லாத தகவல் சாதகமாக்கப்பட்டுள்ளது என்று கூறுங்கள். தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்


//பெர் கேப்பிடா ஐடி ஸ்பென்டிங் அதிகமாக இருந்தால் நாங்கள் அதிகம் செலவழிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம்,//
அதிகமாக செலவழிப்பது முக்கியமல்ல. அதிக பலன் பெறுவதே முக்கியம்.
அதிக அளவு பெட்ரோல் செலவழிப்பது முக்கியமா அதிக அளவு தூரம் செல்வது முக்கியமா என்று பார்த்தல் எது முக்கியம்


அதிக அளவு பந்துக்களை சந்திப்பது முக்கியமா, அதிக அளவு ஓட்டங்களை எடுப்ப்து முக்கியமா

குறைவாக செலவழித்து ஒரு மாநிலம் தரவரிசையில் கடைசியில் இருந்தால் அதனால் எந்த பெருமையும் இல்லை. (நான் 3 பந்து சந்தித்தேன் 1 ஓட்டம் எடுத்தேன் என்பதற்கும் 100 பந்துக்களை சந்தித்து 10 ஓட்டம் எடுத்தேன் என்பதற்கும் 50 பந்தில் 100 ஓட்டம் எடுத்தேன் என்பதற்கும் வித்தியாசம் உண்டு)

ஆனால் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு மாநிலம் குறைவாக செலவழித்தும் முதல் இடத்திற்கு வருகிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்


//குறைவாக இருந்தால் நாங்கள் குறைவாக சாப்பிடுகிறோம் / எஃபக்டிவ்வாக பணத்தை உபயோகிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.//
சொல்லிக்கொள்ளலாம் என்று மட்டும் இல்லை. அது தானே உண்மை.

//கண்டிப்பாக அரசை குறை கூறும் எண்ணத்தில் இதை சொல்லவில்லை. இன்றைய நிலையில் நமக்குத் தேவை தொலைநோக்குடன் திட்டங்களைத் தீட்டி அதிகமோ குறைவோ சரியான வழியில் பணத்தை செலவு செய்யும் அரசுதான். நம் ஊர் அரசியலில் இதெற்கெல்லாம் வழியே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஆள்பவர்களுக்கும் தெரியும். :(//

மன்னிக்க வேண்டும் வெண்பூ சார். இதை நான் வன்மையாக மறுக்கிறேன். தொலைநோக்குடன் திட்டங்களை தீட்டி சரியான வழியில் பணத்தை செலவு செய்யும் அரசாங்கம் கடந்த 50 வருடங்களாக தமிழகத்தில் இருப்பதால் தான் (அனைத்து கட்சிகளையும் சேர்த்து தான் நான் கூறுகிறேன்) நம் மாநிலம் இந்த அளவு வந்துள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...