இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, April 20, 2009

தமிழ்ப்பதிவுகளில் பாஸ்டன் பாலாவை கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்கள்

Top Tamil Blogger Templates/ தளத்தில் பாஸ்டன் பாலா தமிழ்ப்பதிவுகளில் அவரை கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்களின் பட்டியலை அளித்திருக்கிறார்

அதில் பயணங்கள் பதிவும் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

பிறபதிவுகளை பார்க்க Top Tamil Blogger Templates செல்லவும்

Monday, April 13, 2009

புகாரை திரும்ப பெறுவதும் பக்கவாட்டு சிந்தனையும் கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 3

முன்கதை வாசிக்க :

என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல

நேராக கிளம்பி பெண்கள் விடுதி வாசல் சென்றார். சென்ற வேகத்தில் வந்து விட்டார். “வாசல் யாருமே இல்லடா. எல்லாரும் உள்ளே போயிட்டாங்க, நாளைக்கு கிளாசில் பேசிக்கலாம்” என்று கூறவும், வாயிற்காப்போனிடம் கூறி விடுதியில் இருப்பவர்களை அழைக்க வேண்டும் என்ற நடைமுறை மாதவனுக்கு தெரியாததுதான் பிரச்சனை என்பது புரிந்தது

கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணிய நான், “வா, அவங்களை கூப்பிடலாம்” என்று கூறி மாதவனை கையோடு கூட்டிக்கொண்டு விடுதி சென்று வாயிற்காப்போனிடம் கலைவாணியை அழைத்து வர சொன்னேன்.

சிறிது நேரத்தில் கலைவாணி, செந்தாமரை மற்றும் அவர்களின் தோழிகள் பலர் வந்து விட்டனர். மாதவன் பெண்கள் விடுதிக்கு வருவது முதல் முறை என்பதாலும் அவரது சமாதான பேச்சு திறன் !! பற்றி அனைவரும் அறிந்திருந்ததாலும் ஆர்வம் மேலிட்டால் அனைவரும் வந்திருக்க வேண்டும்

நூலக வாசலில் அனைவரும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்

மாதவன் : அவன் பாவம். தெரியாமல் பண்ணி விட்டான். கம்ப்ளெயிண்டை வித்ரா பண்ணிடுங்க


(வழக்கம் போல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டார்)


செந்தாமரை வேகமாக தலையை ஆட்டியபடி : இவனுக்கு இதே வேலைதான். ஒரு தடவை பட்டால் தான் புத்தி வரும்

(கலைவாணி ஒன்றும் சொல்லவில்லை)


மாதவன் : இவ்வளவு பட்டதே போதும். இனி செய்ய மாட்டான்னு நினைக்கிறேன். ப்ளீஸ். எனக்காக வாபஸ் வாங்கிடுங்க


செந்தாமரை கையை நீட்டிக்கொண்டே : சரி. வித்ரா பண்ணிட்ட பிறகு அவன் மறுபடி இப்படி கிரீட்டீங் கார்டு அனுப்பினா என்ன செய்ய. அவன் அனுப்ப மாட்டானு நீ கேரண்டி தர்ரீயா (என்னைப்பார்த்து) இல்ல நீ தர்றீயா


மாதவன் : ம்ஹூம். தர முடியாது. ஆனா


செந்தாமரை : ஆனா நோனா. பிறகு ஏன் நீ பேசுற . நேரத்தை வீணாக்கிட்டு. ஆளாளுக்கு வந்து பேசுறீங்க. ஆனா யாருக்குமே கேரண்டி தர தைரியம் இல்லை


மாதவன் : அடுத்த முறை அவன் கிரீடிங் கார்ட் அனுப்பினா நீங்க தாராளமா கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க. நான் உங்களிடம் வந்து இப்படி கேட்க மாட்டேன் அப்படிங்கிற கேரண்டியை நான் தர்ரேன். என்னால் அவ்வளவு தான் தர முடியும்.

என்ன கூறுகிறார் என்பது எனக்கு புரிவதற்கு சில வினாடிகள் ஆனது

கலைவாணி மற்றும் பலரும் மாதவனை நோக்கி புரியாமல் பார்க்கிறார்கள் : என்னது

மாதவன் : இந்த பாருங்க. இப்ப கார்டு அனுப்பினான்னு அவன் மேல நீங்க கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த கம்ப்ளெயிண்ட் வித்ரா பண்ணிக்கிட்டா திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாதுன்னு அப்படி எதுவும் கிடையாது. அவன் திரும்ப ஏதாவது செய்தா நீங்க திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க. நான் கண்டிப்பா வரமாட்டேன். அது மாதிரி வேற யாரும் திரும்ப கெஞ்ச மாட்டாங்கன்னு நினைக்கிறேன். சரிதானே.

(இந்த வித்தியாசமான அணுகுமுறை இப்பொழுது எனக்கு நன்றாக புரிகிறது)

நான் : இது சரிதானே. உங்கள இந்த கம்ப்ளெயிண்டைத்தானே வாபஸ் வாங்க சொல்றோம். இனி கம்ப்ளெயிண்ட் பண்ண மாட்டேன்னு எழுதி தர சொல்லலேயே. இப்ப வித்ரா பண்ணிடுங்க. எதாவது பிரச்சனை என்றால் திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கலாம்

தோழிகள் சிலர் (முகம் தெளிவடைகிறது): இது கூட சரியாத்தான் இருக்கு.


மாதவன் : சரிதானே


கலைவாணி (சிறிது குழப்பம் மற்றும் சிறிது தெளிவுடன்): இப்ப நான் என்ன செய்ய வேண்டும்


மாதவன் : வி.பி.கிட்ட போய். “அஸ் த கன்சர்ண்டு பெர்சன் ஹஸ் அபாலஜைஸ்ட், ஐ வுட் லைக் டு வித்ரா தி கம்ப்ளெயிண்ட்” (சம்மந்தப்பட்டவர் மன்னிக்க வேண்டியதால் புகாரை திரும்ப பெறுகிறேன்) அப்படின்னு எழுதி குடு

செந்தாமரை (குழப்பத்துடன்): இவ கிட்ட பிரச்சனை பண்ண மாட்டான். வேற யாருகிட்டயாவது பிரச்சனை பண்ணினா

நான் : அவங்களை கம்ப்ளெயிண்டு கொடுக்க சொல்லு (நான் மனதிற்குள் என்ன நினைத்திருப்பேன் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் :) )

செந்தாமரை : ??

மாதவன் : சரிதானே

கலைவாணி : நீ சொல்றேனு வித்ரா பண்ணுறேன். அடுத்து என்ன பிரச்சனைனாலும் உன்னைத்தான் புடிப்போம்

மாதவன் : சரி

நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே திரும்பி வரவும் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து என்ன நடந்தது என்று கேட்கவும் “வித்ரா பண்ண அக்ரி பண்ணிட்டாங்க” (திரும்ப பெற சம்மதித்து விட்டார்கள்) என்று கூறவும் அனைவருக்கும் அதிர்ச்சி + மகிழ்ச்சி.

மாதவன் சமாதானம் பேசுகிறான் என்ற செய்தி பரவ அங்கு கண்ணன் அலறி அடித்துக்கொண்டு (மாதவன் பேசினால் உள்ளதும் போய்விடும் என்ற பயத்தில்) ஓடி வந்தது, பெண்கள் விடுதியிலிருந்து ஒரு குழு துனை முதல்வர் அலுவலகத்திற்கு சென்றது, செல்லும் சமயம் கண்ணனை முறைத்துக்கொண்டே சென்றது எல்லாம் சுமார் பத்து நிமிடம் கழித்து சமநேரத்தில் நடந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் புகார் திரும்பப்பெறப்பட்ட செய்தி கல்லூரி முழுவதும் பரவியது. அத்துடன் மாதவன் உறுதி அளித்ததால் புகார் திரும்பப்பெறப்பட்டது என்ற செய்தியும் சேர்ந்தே பரவியது. கண்ணனை பற்றி அரைகுறையாக தெரிந்தவர்களே உறுதி அளிக்க தயங்கிய நேரத்தில், கண்ணனை பற்றி முழுவதும் தெரிந்த மாதவன் எப்படி அவன் சார்பாக “இனி அவன் இப்படி செய்ய மாட்டான்” என்று உறுதி அளித்தான் என்ற வியப்பும் மாதவன் மேல் சிறிது பரிதாபமும் அங்கு அனைவருக்கும் தோன்றியிருக்க வேண்டும். மாதவன் என்ன உறுதி அளித்தார் என்பது எங்களை தவிர பிறருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே

அதன் பிறகு கண்ணன் அமைதியாகி விட்டார். கல்லூரி படிப்பு முடிக்கும் வரை வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ராக்கிகள் குறைவாக விற்றதாக கேள்வி. அதே போல் தேர்வு நேரங்களில் கண்ணன் அறையிலிருந்து “வெற்றி நிச்சயம்” “சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஆகிய பாடல்கள்” கேட்டன. மாதவன் அறை சுவற்றில் இருந்து ஐஸ்வர்யா ராயும், சிம்ரனும் மறந்து மறைந்து ஜோதிகாவும், விந்தியாவும் தோன்றினார்கள்.

சமீபத்தில் அந்த நூலகரை ஒரு தொடர்வண்டி பயணத்தில் சந்திக்க நேர்ந்தது. எங்கள் வகுப்பு மாணவர்களை பற்றி அவர் விசாரிக்கும் போது ஒவ்வொருவரையும் பற்றி கூறிக்கொண்டு வந்தேன். கண்ணன், மாதவன் ஆகியோர் எங்கிருக்கிறார் என்று கூறவும், அவருக்கு புகார் ஞாபகம் வந்திருக்க வேண்டும். புகார் தொடர்பாக நடந்த கூத்துக்களை நினைவு கூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம்

“எந்த தைரியத்தின் மாதவன் உத்திரவாதம் அளித்தான்” என்ற கேள்வி அவரை குடைந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அடக்க முடியாமல் கேட்டே விட்டார் “அந்த கம்ப்ளெயிண்டை வித்ரா பண்ண எப்படி தைரியமா கேரண்டி தந்தான் ?”

நான் நடந்தது என்னவென்று விளக்கவும் அவர் ஒரே வரியில் கூறினார் “சரியான லேட்டரல் திங்கிங் அப்ரோச்”. இன்று சிந்தித்து பார்க்கும் போது தெளிவாக புரிவது. பலராலும் தீர்க்க முடியாத அந்த பிரச்சனையை மாதவன் அணுகி வெற்றி பெற்றதற்கு காரணம் என்னவென்றால் அவரது அணுகுமுறை  (இந்த பிரச்சனையை தீர்த்த உரையாடல்) கூட பக்கவாட்டு சிந்தனையின் அடிப்படையில் அமைந்ததுதான். பக்கவாட்டு சிந்தனை குறித்த எனது முந்தைய பதிவுகள்
அந்த இரு இடுகைகளையும் படித்தீர்கள் என்றால் சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம் இந்த (கதையில் வரும்) பிரச்சனையை முதலில் அனுகிய அனைவரும் ஒரே அணுகுமுறையிலேயே அணுகினார்கள். மாணவர்கள் பக்கம் இருந்து பார்த்தவர்களின் பார்வையில் இந்த பிரச்சனை
  • உத்திரவாதம் - புகார் திரும்பப்பெறலாம்
  • உத்திரவாதம் இல்லை - புகார் திரும்ப்பெறமுடியாது
இது மாணவர்களின் இடத்தில் இருந்து பார்ப்பது. இதே கூறுகளை மாணவியர் இடத்தில் இருந்து பார்த்தால் அவர்களின் பிரச்சனை
  • மறுபடி தொந்திரவு இல்லை - புகார் திரும்பப்பெறப்படும்
  • மறுபடி தொந்திரவு - புகார் திரும்ப்பெறப்படாது
ஆக மாணவிகளுக்கு முக்கியம் வருங்காலத்தில் தொந்திரவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தானே தவிர உத்திரவாதம் அல்ல. ஆனால் இங்கு உத்திரவாதம் என்பது ஒரு குழப்ப காரணியாக (confounding factor) நுழைந்து பிரச்சனை தீர அதுவே முக்கிய தடையாக மாறி விட்டது.


இரு கோடி நிலைகளுக்கு (extreme situations) இடையில் ஒரு நிலையை அந்த குழப்ப காரணியை அகற்றி விட்டு சிந்தித்ததாலேயே இந்த பிரச்சனை தீர்ந்தது என்று கூறலாம்.

இந்த பிரச்சனையில் உத்திரவாதம் (என்ற குழப்ப காரணியை) என்பதை பின் தள்ளி
  • உத்திரவாதம் இல்லை என்றாலும் கூட(மீண்டும் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதால்) மறுபடி தொந்திரவு இல்லை  - புகாரை திரும்ப பெறலாம்
என்ற விஷயத்தை கூறியவுடன் பிரச்சனை முடிந்தது.

உங்கள் கருத்து என்ன ??

Saturday, April 11, 2009

கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 2

முன்கதை வாசிக்க : கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 1

என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல

அந்த நேரத்தில் மாணவியர் விடுதிக்கு முன்னால் இருக்கும் கல்லூரி நூலகத்தில் நூலகர் “இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது, அவளே சும்மா இருக்கா, இவத்தான் அவளை ஏற்றி விடுகிறாள். விட்டு தொலைய வேண்டியது தானே” என்று ஒரு பெண்ணை யாரிடமோ திட்டிக்கொண்டிருந்தார். ஆர்வம் மேலிடவே பலரும் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப்பார்த்தவர்களின் கும்பலில் மாதவனும் இருந்தார் நானும் இருந்தேன்

அதன் பிறகு தான் எங்கள் அனைவருக்கும் கண்ணனின் நெருங்கிய நண்பர்கள் மாணவியர் விடுதியை சுற்றி வந்த விஷயம் என்னவென்று தெரியவந்தது.

கடந்த சில வாரங்களாகவே கண்ணன் அவர் வகுப்பில் படிக்கும் கலைவாணி என்ற மாணவிக்கு தினம் ஒரு வாழ்த்து அட்டை அனுப்புவது என்று அஞ்சல் துறைக்கு வேலை வைத்து இருக்கிறார். இவரை பற்றி தெரிந்த அந்த பெண்ணும் அந்த அட்டைகளை கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் அட்டை வரவில்லை. தபால்காரர் விடுப்பில் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன் !!.  விடுதி மாணவிகள் சிலர் “என்னக்கா இன்னைக்கு கிரீடீங்கஸ் வரல. இனி போன் தானா” என்று கேலி செய்யவும் கடுப்பான கலைவாணி நேராக துனை முதல்வரிடம் சென்று அட்டைகளை காண்பித்து புகார் அளித்து விட்டார்

“வாழ்த்து அட்டை அனுப்பி” பெரிய குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வெறும் அறிவுரை மட்டும் போதாதா என்று துனை முதல்வர் நினைத்திருக்க வேண்டும். கண்ணனை அழைத்து ஒரு 15 நிமிடங்கள் திட்டி, மிரட்டி அதன் பிறகு அவன் தோழர்களை அழைத்து “ஒரு வாரத்திற்குள் அவளை புகாரை திரும்ப பெற வைத்தால் நான் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகிறேன். இல்லை என்றால் கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும்” என்று மிரட்டவும் ஒவ்வொருவராக வந்து பெண்கள் விடுதியில் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

அங்குதான் பிரச்சனையே. கலைவாணியை விடவும் அவளது தோழிகள் சிலர் புகாரை திரும்ப பெற முடியாது என்பதில் வெகு உறுதியாக நின்றதால் சமாதானம் பேச சென்ற அனைவரும் முல்தானில் சேவாகிற்கு பந்து வீசிய பாக் வீரர்களை போல் தொங்கிய முகத்துடன் திரும்பி வந்துக்கொண்டிருந்தனர். அப்படி வீராவேசமாக புகாரை திரும்ப பெறமுடியாது என்று பேசிய தோழிகளில் அதிகம் சத்தம் போட்ட மாணவி செந்தாமரை பற்றி தான் நூலகர் புலம்பி இருக்கிறார்.

அந்த நேரம் நூலகத்தில் இருந்த மாதவன் அப்பொழுது பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்து வந்த கண்ணனின் தோழர்களில் ஒருவரிடம் சென்று “நீங்க என்ன சொன்னீங்க, அவங்க என்ன சொல்றாங்க” என்று கேட்கவும். கதை கேட்க பெரும் கூட்டம் கூடிவிட்டது

“புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி விட்டோம். ஆனால் மீண்டும் இவன் வாழ்த்து அட்டை அனுப்ப மாட்டான் எனப்தற்கு உத்திரவாதம் தர முடியுமா என்று கேட்கிறார்கள். (கண்ணன் வாழ்த்து அட்டை அனுப்ப மாட்டான் என்று) யாராவது உத்திரவாதம் தந்தால் புகாரை திரும்ப பெற்றுக்கொள்வார்களாம். நாங்க வந்துட்டோம்” என்று நொந்து போய் கூறினார். கண்ணனை பற்றி தெரிந்தவர்கள் யாருமே அப்படி ஒரு உத்திரவாதம் தர மாட்டார்கள் !!! என்பதை இது வரை கதை வாசித்து வந்து நீங்கள்கூட அறிவீர்கள் தானே

“இவ்வளவு தானா” என்று கேட்ட மாதவன் “நான் வேண்டுமானால் பேசிப்பார்க்கவா” என்று கேட்கவும் பலரும் அசந்து விட்டார்கள்.

மாதவன் பேசி சமாதானம் வருவது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி சரியான அளவில் காவிரியில் தண்ணீர் வருவது போன்றது. ஆண்களிடம் கூட சரியாக பேசாத மாதவனா பெண்களிடம் பேசுவான் என்று அங்கு இருந்த பலரும் அதிசயித்து நின்ற போதும், தலைக்கு மேல் வெள்ளம் போனபின்னர் சாண் போனாலென்ன முழம் போனாலென்ன என்ற நிலையில் “சரி நீ பேசி பாருடா” என்று கூறினார்கள்.

நேராக கிளம்பி பெண்கள் விடுதி வாசல் சென்றார்.

சென்ற வேகத்தில் வந்து விட்டார்.

தொடர்ந்து வாசிக்க : கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 3

Sunday, April 05, 2009

கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா

என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல

மருத்துவக்கல்லூரி முதலாண்டில் கண்ணனும் மாதவனும் அறைத்தோழர்கள். இருவருக்கும் இடையில் பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒரே விஷயத்தில் மட்டும் வித்தியாசம் உண்டு !!

முதலாண்டில் காலையில் 8:30 மணிக்கு உடற்கூறியல் கூடத்திற்கு செல்ல வேண்டும். தலை வரை படுக்கை விரிப்பை போத்திக்கொண்டு படுத்திருக்கும் இருவரும் எழும்புவதே 8 மணிக்கு தான். இவர்கள் எழும்வதற்குள் இவர்களின் அறைத்தோழர் டேனியல் எழுந்து குளித்து சாப்பிட்டு அன்று நடத்தக்கூடிய பாடங்களை மேய்ந்து கொண்டிருப்பார்

நம் கதாநாயகர்களோ வேகவேகமாக பல்தேய்த்து காலைக்கடனை முடித்து குளிக்காமல் குளியலறைக்கு அருகில் தொங்கும் உடைகளை போட்டு, இட்லியையோ பொங்கலையோ அவசர அவசரமாக விழுங்கி ஒரு 8:20 க்கு கிளம்பி ஓட்டமும் நடையுமாக ஓடி 8:30க்கு வருகைப்பதிவேட்டில் Aல் ஆரம்பிக்கும் பெயரை வாசிக்க துவங்கும் போதகர் 8:32க்கு கண்ணன் என்று வாசிக்கும் முன்னர் உள்ளே சென்று விடுவதில் கெட்டிக்காரர்கள்.

வகுப்பு முடிந்து உடற்கூறியல் செய்முறை வகுப்பில் இருக்கும் பார்மலின் மற்றும் பிற வாசத்துடன் மாலை 3 அல்லது நான்கு மணிக்கு அறைக்கு திரும்பி உடன் குளித்து புத்துணர்ச்சியுடன் நூலகம் செல்வது அன்றைய தினத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை.

நூலகம் சென்று உடற்கூறியலோ (அனாடமி), உடலியக்கவியலோ (பிசியாலஜி) அல்லது உயிர்வேதியலோ (பயோகெமிஸ்டிரி) (இவை மூன்றும் தான் முதல் வருட பாடங்கள்) படிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறு. கண்ணன் சட்டம் சார் மருத்துவ புத்தகத்தையும் மாதவன் மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்சன் எழுதிய பெரிய புத்தகங்களையும் படிப்பார்கள்.

அதன் பிறகு நூலகம் மூடிய பின்னர் இரவு உணவருந்தி விட்டு, அந்தவாரம் / அடுத்தவாரம் இருக்கும் தேர்விற்கு படிக்க ஆரம்பிப்பார்கள். 9 முதல் 10 வரை ஒரு மணி நேரம் படித்து விட்டு, மெதுவாக கிளம்பி சென்று தேநீர் அருந்தி விட்டு (10 முதல் 11 வரை) அப்படியே பொது தொலைபேசியில் வீட்டிற்கு தொலைபேசிவிட்டு (அந்த காலத்தில் செல்லிடப்பேசி எல்லாம் கிடையாதே) மீண்டும் ஒரு மணி நேரம் படித்து விட்டு (11 முதல் 12 வரை) மீண்டும் ஒரு மணி நேரம் தேநீர் குடித்து விட்டு (தேநீர்க்கடை செல்ல 20 நிமிடம், தேநீர் குடிக்க 20 நிமிடம், திரும்பி வர 20 நிமிடம்) அதன் பிறகு தூக்க கலக்கத்தில் படம் வரைவது, “ரிகார்ட்” எழுதுவது போன்ற வேலைகளை பார்த்து விட்டு இரண்டு அல்லது மூன்று மணிக்கு தூங்கினால் அடுத்து காலை 8 மணிக்கு எழும்ப வேண்டியது தான்

அந்த வாரம் எதுவும் தேர்வு இல்லை என்றாலோ அல்லது இருக்கும் தேர்விற்கான பாடங்கள் குறைவு என்றாலோ இரவு படிப்பது / தேநீர்க்கடை செலவதற்கு பதிலாக ஏதாவது திரையரங்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இது போல் பல விஷயங்களிலும் இருவருக்கும் ஒற்றுமை தான். சரத்குமார், பிரபுதேவா படங்களை கூட இருமுறை பார்த்திருக்கிறார்கள். இப்படி பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் இரு துருவங்கள்

அந்த விஷயம் : பெண்களிடம் பழகுவது

பெண்களிடம் பேசும் போது மென்மையாக, நளினமாக பேசுவது கண்ணன் வழக்கம். மாதவனோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவன். இதனால் மாதவனிடம் பேசும் பெண்களின் எண்ணிக்கை பம்பரக்காரர்கள் போட்டியிடப்போகும் மக்களவை இடங்களை போலவும், கண்ணனிடம் நன்றாக பேசும் பெண்களின் எண்ணிக்கை கைகாரர்களில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை போலவும் இருப்பது இயல்பு தான்.

கண்ணனோ யாரையாவது ஒரு பெண்ணை நினைத்து “அவள் வருவாளா, அவள் வருவாளா” பாடலை ஓலிநாடா தேயும் வரை திரும்ப திரும்ப ஓட விட்டு கடைசியில் அந்த பெண்ணிடம் எப்படி கூறலாம் என்று நினைக்கும் நேரம் பாழாய்ப்போன ரக்‌ஷா பந்தன் வந்து விட இது தான் சமயம் என்று அந்த பெண் ராக்கி கட்டி விடுவார்

கண்ணன் தாடி வளர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எல்லாம் கிடையாது. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனை போல் அடுத்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்து விடுவார். இந்த முறை “என்ன அழகு எத்தனை அழகு” பாடல் ஓலிநாடா தேயும்வரை ஓடும். (வாயிருந்தால் அந்த ஒலிப்பேழை அழும் என்று நாங்கள் எங்களுக்குள் நக்கலடிப்போம்)

ராக்கி கட்டியவிவளிடமே அடுத்த பெண்ணின் பிறந்த நாள் போன்ற விஷயங்களை விசாரிப்பதால் உஷாராகும் அடுத்த பெண்ணும், அடுத்து தீபாவளியோ, பொங்கலோ, மருத்துவர் தினமோ வரும் சமயத்தில் கண்ணன் இல்லாமல் நிறைய வகுப்பு மாணவர்கள் கூட்டமாக இருக்கும் நேரத்தில் ஒட்டப்படாத ஒரு உறையை “இதை கண்ணனிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறி தந்துவிடுவார்.

உறை ஓட்டப்படாமல் இருப்பதாலும், கூட்டத்தில் யாராவது ஒருவர் சட்டென்று உள்ளே என்ன உள்ளது என்ற ஆர்வத்தில் திறந்து விடுவார். திறந்து பார்த்தால் “பார் மை லவ்விங் பிரதர்” (அன்பு சகோதரனுக்காக) என்று ஒரு வாழ்த்து அட்டை இருக்கும். அனைவரும் முன்னால் அளிக்கப்படும் வாழ்த்து அட்டை என்பதால் ஒரே நாளில் விஷயம் வகுப்பு முழுவதும் பரவி விடும். அப்படி பரவ வேண்டும் என்பதற்காகத்தானே அது அனைவர் முன்னாலும் அளிக்கப்படுகிறது !!

கண்ணன் அதன் பிறகு வேறு காதலி தேடுவார். கண்ணன் தற்பொழுது எந்த பெண்ணை சுற்றி வருகிறார் என்பது வகுப்பில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாயிற்று. இந்த விஷயங்கள் பரவலாக அனைவருக்கும் தெரிய வந்ததால், கண்ணனின் நட்பு வட்டாரம் பெரிதாகியது. முக்கியமாக ராக்கி கட்டியவர்கள் மற்றும் “சகோதரிகளின்” எண்ணிக்கை பெருக அவர்களின் தோழிகளும் கண்ணனிடம் நட்பானார்கள்.

மாதவனோ இவ்வளவு கஷ்டப்பட்ட இல்லை. அறையில் ஸ்டெபி கிராப், மணிஷா கொய்ராலா படங்களை ஒட்டி வைத்திருப்பார்.(அது பம்பாய் படம் வந்த சமயம்) அவர்களை போல் பெண்ணை தேடிக்கொண்டிருந்ததால் (அது போல் யாரும் அந்த கல்லூரியில் படிக்காததால்) மேட்டுத்திடல் (ஹைகிரவுண்ட்) கடையில் ஒரு ராக்கி குறைவாக விற்றதை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.

மூன்றாம் ஆண்டு கண்ணனும் மாதவனும் வேறு அறைகளுக்கு சென்று விட்டதால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் பழக்கம் குறைந்தது. அதேப்போல் காலையில் வெவ்வேறு பிரிவுகள் என்பதாலும் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அவ்வப்போது விடுதியிலோ உணவகத்திலோ, தேநீர்கடையிலோ சந்திக்கும் போது நலம் விசாரிப்பது மட்டும் தொடர்ந்தது.

வாழ்க்கை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. கண்ணின் அறையிலிருந்து “உனை பார்த்த பின் நான்” பாடல் ஒலிக்கத்தொடங்கியது (அடுத்த ராக்கியோ வாழ்த்து அட்டையோ வந்திருக்க வேண்டும்). மாதவனின் அறை சுவற்றில் ஸ்டெப்பி கிராப்பும், மணிஷா கொய்ராலாவும் மறைந்து ஐஸ்வர்யா ராயும், சிம்ரனும், ஷாலினியும் தோன்றினார்கள்.

கண்ணனின் திறமை பெண்மையாக் பேசுவது என்றால் மாதவனின் தனித்திறன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவது. கல்வி உதவி தொகை வாங்குவது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் (ஓட்டுனர் உரிமம் வாங்குவது, வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றம்) உதவுவது என்று மாதவனின் நேரம் செலவழிந்து கொண்டிருந்ததால் மாதவனின் நட்பு வட்டமும் விரியத்தொடங்கியது. முக்கியமாக விடுதியிலிருப்பவர்களுக்கு ஏதாவது தேவையென்றால் மாதவனை உதவிக்கு அழைக்கத்துவங்கினார்கள்.

அழைத்தவர்கள் யாருமே ஐஸ்வர்யா ராய் போலவோ அல்லது ஜோதிகா போலவோ இல்லை என்ற வருத்தம் மாதவனுக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.

சில நாட்களாக கண்ணன் முகத்தில் பதற்றம் தெரிவதையும் கண்ணின் தோழர்கள் அடிக்கடி பெண்கள் விடுதி முன்னர் நிற்பதையும் பார்த்தவர்கள் எதுவும் வித்தியாசமாக (கண்ணனை தொடர்புபடுத்தி) நினைக்கவில்லை. மாணவர் பேரவை / விழா நடத்துவது தொடர்பாக ஏதோ ஒரு பிரச்சனை இருக்கலாம் என்றும் அதற்காக மாணவிகளிடம் அனுமதி / ஆதரவு கேட்கிறார்கள் என்றே நினைத்தார்கள்

அந்த நேரத்தில் மாணவியர் விடுதிக்கு முன்னால் இருக்கும் கல்லூரி நூலகத்தில் நூலகர் “இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது, அவளே சும்மா இருக்கா, இவத்தான் அவளை ஏற்றி விடுகிறாள். விட்டு தொலைய வேண்டியது தானே” என்று ஒரு பெண்ணை யாரிடமோ திட்டிக்கொண்டிருந்தார். ஆர்வம் மேலிடவே பலரும் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப்பார்த்தவர்களின் கும்பலில் மாதவனும் இருந்தார் நானும் இருந்தேன்

தொடர்ந்து வாசிக்க : 
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...