இந்த விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாதவர்களும் (அல்லது புரிதல் இருந்தாலும் அரசை திட்ட வேண்டும் / அரசாங்கத்தை குறை கூற வேண்டும் / அரசு நடைமுறைகளின் மேல் சேறிறைக்க வேண்டும் என்ற “அரிப்பு” இருப்பவர்களும்) ஊடகங்களில் இது குறித்து வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி (கைக்கு வந்ததை எல்லாம் தட்டச்சு செய்து) பல கட்டுரைகள் எழுதியதை பார்த்தோம்.
பதிவுலகில் நடந்தது தான் உச்சக்கட்ட நகைச்சுவை : புத்தகங்களின் நாட்டுடைமையை அரசு சாலை விரிவாக்கத்திற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்வதைபோல் நினைத்துக்கொண்டு பதிவு / மறுமொழி எழுதிய கொடுமை கூட நடந்தது.
அப்பொழுது நான் எழுதியது புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ?? இங்கு உள்ளது. தற்போதைய செய்தியும், அது குறித்த விவாதமும் இறுதியில் உள்ளன
எனது நாட்டுடைமை குறித்த இடுகையை ஏறகனவே வாசித்திருந்தால் நேரடியாக இறுதிபகுதிக்கு செல்லலாம்
புத்தகம், காப்புரிமை பற்றி சில தகவல்களை பார்ப்போம். உதாரணத்திற்கு பதிவர் லக்கியின்(எழுத்தாளர் யுவகிருஷ்ணா)வின் “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ” புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்
இந்த புத்தகத்தை எழுதியது யார் : யுவகிருஷ்ணா
வெளியிடுவது யார் : கிழக்கு பதிப்பகம்
இதில் லாபம் எப்படி வரும் :
புத்தகம் எழுதும், தட்டச்சு செய்யும், வடிவமைக்கும், அச்சிடும், விளம்பரப்படுத்தும், விநியோகிக்கும் செலவு (தள்ளுபடி தரும் பணம்) போக மீதி இருக்கும் பணம் தான் லாபம்
லாபத்தில் யாருக்கு பங்கு :
இதில் பதிப்பகத்திற்கும் நூலாசிரியருக்கும் பங்கு
இப்பொழுது இந்த புத்தகத்தை கிழக்கு மட்டும் தான் வெளியிடமுடியும். யாருக்காவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றால் கிழக்கில் மட்டும் தான் வாங்கி படிக்க முடியும்.
வேறு பதிப்பகங்கள் வெளியிட முடியாது (அனுமதி இல்லாமல் அச்சிடக்கூட முடியாது)
சரி, நாட்டுடைமை என்றால் என்ன :
நாட்டுடைமை என்றால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை யுவகிருஷ்ணாவிற்கு அளித்து அவரது புத்தகங்களை யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்கலாம் என்று ஆணை பிறப்பிப்பது
அப்படி ஆணை பிறப்பித்தபின் என்னவாகும் :
நான் அதே புத்தகத்தை மேப் லித்தோ காகிதத்தில் அச்சிட்டு ஒரு புத்தகம் 300 ரூபாய் என்று விற்கலாம். நீங்கள் அதை தங்க நிற மையில் அச்சிட்டு ஒரு புத்தகம் 1000 ரூபாய் என்று விற்கலாம். அசோகன் சார் அதை ”பாக்கெட் நாவலா”க தரலாம். அப்படி புத்தகத்தை அச்சிடும் யாரும் யுவகிருஷ்ணாவிற்கு பணம் அளிக்க வேண்டாம் !!
இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) எழுத்தாளருக்கு (இந்த உதாரணத்தில் யுவகிருஷ்ணாவிற்கு) லாபமா நஷ்டமா : அது அரசு தரும் பணம் மற்றும் இது வரை அவரது புத்தகம் விற்கும் அளவை பொருத்தது.
உதாரணமாக
அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 லட்சம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு லாபமே
ஆனால்
சட்டசபையில் ஓப்புதல் வாங்காமல் செலவு செய்ய முடியாதா
ஒரு அரசானது நினைத்து போல் செலவு செய்து விட முடியாது. அடுத்த நிதியாண்டில் தமிழக அரசு என்னென்ன செலவு செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக வருவாய் எப்படி வரும் என்பது குறித்து தமிழக அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை ஒன்றை சட்டசபையில் சமர்பிப்பார். அதை உறுப்பினர் ஏற்றுக்கொண்டபின்னர் 01.04.2009 முதல் 31.03.2010 வரை உள்ள செலவுகள் இதன் அடிப்படையில் தான் நடைபெறும்.
புத்தகம் நாட்டுடைமையாக்க மட்டும் ஏன் இப்படி
- தமிழகத்தில் வரும் நிதியாண்டு முதல் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும், இனிமேல் வட்டி கிடையவே கிடையாது. அந்த வட்டித் தொகையை அரசே செலுத்திவிடும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பதற்காக, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோத்தயம் கிராமத்தில், சுமார் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நல்லதங்காள் ஓடைக்குக் குறுக்கே அணை ஒன்று அமைக்கப்படும்
- வரும் நிதியாண்டில் மேலும் 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்க ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நமது மாநிலத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான புதிய திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்
மாணவர்களுக்கு இவ்வளவு கோடி ஒதுக்கப்படுகிறது என்று மட்டும் அனுமதி வாங்கி பின்னர் அந்த பணத்திற்கு கண்ணாடியோ காது கேட்கும் கருவியோ வாங்கினால் என்ன
நாட்டுடமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது” என்று ஒரு கருத்து உள்ளதே
நலன் பல குவிக்கும் நிதிநிலை அறிக்கையை அவையின் ஒப்புதலுக்காக இந்த அரசு முன்வைக்கிறது.
இது குறித்த அரசின் நிலை
இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.
நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.
உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.
குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அதன் பிறகு சட்டசபையின் ஒப்புதலுக்கு வைத்தால் என்ன
உங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள்.
- 1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா
- அல்லது
- 2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா
இது குறித்து பதிவர் பத்ரியின் அவர்கள் ஒரு பதிவு (நாட்டுடமை குழப்பம் ) எழுதியுள்ளார். அதில் உள்ள சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறித்த என் கருத்துக்கள்
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம்.//மன்னிக்க வேண்டும்
இதில் அபத்தம் எதுவும் இல்லை என்பது என் கருத்து
நேற்று வெளியிடப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது. இதை அபத்தம் என்று கூறுவது என்னைப்பொருத்த வரையில் ஏற்புடையது அல்ல
சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும்.
இப்படி நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தான் அந்த துறையிலிருந்து அந்த ஆசிரியரின் குடும்பத்தினரை / வாரிசுகளை தொடர்பு கொண்டு சம்மதம் கேட்பார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த எழுத்தாளரை தேடிபோய்விடுவார்கள் (இந்த வருடம் அல்லது அடுத்த வருடம்)
உண்மையில் அபத்தம் என்னவென்றால் இப்படி அரசிடமிருந்து தனிப்பட்ட கடிதம் வரும் வரை காத்திருக்காமல் இருவர் நேற்று விளம்பரம் தேடியது தான்.
//இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.//இது எப்படி opt-out ஆகியது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் தனிப்பட்ட அனுமதி வாங்கப்பட்ட பின்னரே ஆணை வெளியிடப்படும். ஆக அரசுடைமை என்பது opt in முறையிலேயே நடக்கிறது.
//3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.//இந்த நடைமுறை தான் இப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்குவதற்கு அனுமதி கோரப்பட்டதை வைத்து ஏதோ புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது போல் ஊடகங்களும் பதிவர்களும் ஏன் எழுதுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.
நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்படாமல் எப்படி அந்த துறை அதிகாரி அந்த வாரிசு தாரருடன் பேச முடியும். நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு 10 கணினி வாங்க வேண்டுமென்றால் அதற்கான பணம் ஒதுக்கப்படுமுன்னரே கணினி நிறுவனத்துடன் பேச உங்கள் ஊழியருக்கு அனுமதி உண்டா
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம்.//உண்மை. ஆனால் குழப்பம் விளைவித்தது அரசல்ல. இருவரின் வாரிசுகளே என்பது தான் நிஜம்.
இப்பொழுது நேற்றைய மாலை மலர் செய்தியை பாருங்கள்
மரபுரிமையாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை: 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை; கருணாநிதி உத்தரவு Chennai சனிக்கிழமை, மே 30, 3:18 PM IST மதிப்பீடு இல்லை
சென்னை, மே. 30-
22 தமிழர் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு மரபுரிமை யாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணா நிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடை மையாக்கி, அவற்றைப் படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயற்படுத் தப்பட்டு வருகிறது.
2006-இல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதி மாற்கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவ நாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்களுக்கு 4 கோடியே 86 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2009-2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வண்ணம்
- குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா,
- பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்,
- இராய சொக்கலிங்கனார்,
- முனைவர் ச.அகத்திய லிங்கம்,
- பாவலர் நாரா.நாச்சியப்பன்,
- புலியூர்க்கேசிகன்,
- சின்ன அண்ணாமலை,
- வடுவூர் துரைசாமி அய்யங்கார்,
- பேராசிரியர் மு.இராகவையங்கார்
ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசு டைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும்,
- பேராசிரியர் வையா புரிப்பிள்ளை,
- பம்மல் சம்பந்தனார்,
- டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார்,
- மு.சு.பூரணலிங்கம்பிள்ளை,
- தொ.மு.பாஸ்கரத் தொண் டைமான்,
- பாலூர் கண்ணப்ப முதலியார்,
- வை.மு.கோதை நாயகி,
- பூவை எஸ்.ஆறுமுகம்,
- என்.வி.கலைமணி,
- கவிஞர் முருகுசுந்தரம்,
- புலவர் த.கோவேந்தன்,
- திருக்குறள்மணி அ.க.நவநீத கிருட்டிணன்
ஆகிய 12 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும், முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட 28 தமிழ் அறிஞர்களில் எஞ்சிய 7 தமிழ் அறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை.
ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவைகளைப் பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம்கிருஷ்ணன், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று தனி நேர்வாகக் கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கிடவும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கிவிட்டு அனுமதி பெறாமல் அனுமதி பெற்றபின்னர் நிதி ஒதுக்கீடு செய்தால் ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கு 2011ல் தான் இந்த பணம் கிடைக்கும் என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறதா
அடுத்த முக்கிய விஷயம் : ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறவில்லை. அதனால் அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆவதற்கு ஆணை பிறப்பிக்கப்படவில்லை
இப்பொழுது உங்களுக்கான கேள்விகள்
- தற்பொதைய அரசின் நடைமுறை - நிதி ஒதுக்கீடு செய்து விட்டு அனுமதி கேட்பதில் - என்ன தவறு இருக்கிறது. இது சரியான நடைமுறை தானே
- டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகியவர்களின் வாரிசுகள் அனுமதி மறுத்தவிதத்திற்கும், கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வாரிசுகள் அனுமதி மறுத்த விதத்திற்கு வேறுபாடு தெரிகிறதா
- தார்மீக ரீதியாக எது (எந்த வாரிசு தாரர் கடைபிடித்த நடைமுறை) சரி என்று நினைக்கிறீர்கள்??
- நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவுடனேயே (நாட்டுடைமை அறிவிப்பு வருவதற்கு முன்னரே - கடந்த மூன்று மாதங்களில்) யாராவது சாண்டில்யனில் நாவல்களை அச்சிட்டு விற்றனரா
- டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் லட்சுமி ஆகியவர்களின் வாரிசுகள் அனுமதி மறுத்தது போல் செயல்படுவதன் மூலம் (முறையான வழிமுறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததன் மூலம்) கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வாரிசுகளளுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுமா.
- தங்களின் சுயநலத்திற்காக நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசு நடைமுறையை மாற்றினால் அதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றபோதும் இது போல் மலிவு விலை விளம்பரம் தேவைதானா
- அடிப்படை விபரங்கள் எதுவும் தெரியாமல் / தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் தவறான கருத்துக்களை பரப்பும் ஊடகங்கள் இனியாவது திருந்துவார்களா
- ஊடகங்களில் வரும் செய்தியை ஆராய்ந்து பார்க்காமல் பதிவில் / மறுமொழியில் எழுதும் பதிவர்கள் மாறுவார்களா










