வானமண்டலத்தில் இருக்கும் விண்மீண்களை (நட்சத்திரங்களை) 12 தொகுப்புகளாக பிரித்திருக்கிறார்கள். வானமண்டலம் மொத்தம் 360 டிகிரி என்றால் ஒவ்வொரு தொகுப்பும் 30 டிகிரி. இப்படி பட்ட ஒவ்வொரு 30 டிகிரியையும் ஒரு வீடு என்று ஜோதிடத்தில் அழைக்கிறார்கள்
பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது
சந்திரன் :
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.
இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்
சூரியன் :
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 1 ஆண்டு. ஆக இன்று சூரியனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அந்த வீட்டில் சூரியன் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதம் கழித்து சூரியன் அடுத்த வீட்டிற்கு போய் விட்டதாக கூறுவார்கள்
சூரியன் இடம் மாறுவதில்லை. ஆனால் பூமி இடம் மாறுகிறது. நாம் பூமியில் இருப்பதால் பூமி இடம் மாறும் போது சூரியனுக்கு பின்னால் தெரியும் நட்சத்திரங்கள் மாறுகிறது. அவ்வளவு தான்
உதாரணமாக டெண்டுல்கர் சேப்பாக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் பந்தை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார். இப்பொழுது நடுவர் இடத்திலிருந்து பார்த்தால் அவர் வாலாஜா முனையில் இருக்கிறார். அதே நேரம் காப்பாளரின் இடத்திலிருந்து பார்த்தால் அவர் சேப்பாக்கம் முனையில் இருக்கிறார். சச்சின் என்னவோ அவரிடத்தில் இருந்தாலும், பார்ப்பவர்கள் எங்கிருந்து பார்க்கிறார்களோ அதை பொருத்து அவர் எங்கிருக்கிறார் என்பது மாறுகிறதல்லவா
அதே போல் சூரியன் ஒரே இடத்தில் இருந்தாலும், பூமி சூரியனை சுற்றி வருவதால், பூமி கடக நட்சத்திர கூட்டம் பக்கம் இருக்கும் போது சூரியன் மகர ராசியில் இருப்பதாக நமக்கு தெரியும். பூமி மகர நட்சத்திர கூட்டங்களின் பக்கம் திசையில் வரும் போது சூரியன் கடகராசியில் இருப்பதாக தோன்றும்
வியாழன் / குரு :
குரு என்றழைக்கப்படும் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் 12 ஆண்டுகள். ஆக ஒவ்வொரு வீட்டில் குரு பகவான் இருப்பது ஏறத்தாழ ஒரு ஆண்டு
சனி :
அதே போல் சனி எனப்படும் சனிகிரகம் ஒரு முறை சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் 30 ஆண்டுகள். ஆக ஒவ்வொரு வீட்டிலும் சனி பகவான் இருப்பது ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள்.
சந்திர சுழற்சியின் விளைவுகள்
சந்திரன் பூமி சுற்றி வருவதால் ஏதாவது விளைவுகள் ஏற்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில் - ஆமாம்
இது குறித்து பக்கம் பக்கமாக ஆதாரங்கள் அடுக்கினாலும், இதை நம்பாதவர்கள் நம்பப்போவதில்லை. என்றாலும் சில கேள்விகள் மட்டுமே
- கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா
- நண்டு என்று பிடிக்கப்பட்டாலும் அதில் சதை ஒரே அளவில் தான் இருக்குமா அல்லது அமாவாசை / பௌர்ணமி என்று சதை அளவு மாறுபடுமா
சூரியன் :
பூமி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவநிலைகள் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். மேமாதம் வெயிலடிப்பதும் டிசம்பர் மாதம் குளிரடிப்பதற்கும் இதுவே காரணம்.
குருவின் சுழற்சி
சூரிய மண்டலத்தின் மிக பெரிய கிரகங்களான குருவும், சனியும், சூரியனை சுற்றி வருவது பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தகிறதா என்று சிறிது ஆராய்ந்து பார்த்தில் பல விஷயங்களை கண்டு பிடித்துள்ளார்கள்
மரங்களை வெட்டிய பின்னர் பார்த்திருக்கிறீர்களா. அதில் வளையம் வளையமாக இருக்கும் .இதை வருடாந்திர வளையங்கள் (annular rings) என்று அழைப்பார்கள். அடர்த்திகுறைவாக உள்ள பெரிய பகுதியானது நீர் அதிகம் உள்ள நேரங்களில் அந்த மரம் வளர்ந்திருப்பதையும், அடர்த்தி அதிகமாக உள்ள பகுதியானது நீர் குறைவாக உள்ள நேரத்தில் மரம் வளர்ந்திருப்பதையும் காட்டும். ஆக ஒரு வருடத்திற்கு ஒரு அடர்த்தி குறைவான ஒரு வளையமும், அடர்த்தி மிகுதியான ஒரு வளையமும் ஏற்படுகிறது. இந்த இரு வளையங்களையும் சேர்த்தே வருடாந்திர வளையங்கள் என்று அழைக்கிறார்கள்
இப்படி பட்ட வருடாந்திர வளையங்கள் எல்லா வருடமும் ஒரே போல் இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் மாறுபடுகின்றன. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் அதில் ஒரு ஒழுங்கு தெரிகிறதாம்
எத்தனை வருடங்கள் தெரியுமா ??
எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் ஒழுங்காக மலர்கிறதோ அத்தனை வருடங்கள்
சனியின் சுழற்சி
இது போல் சனி யின் சுழற்சி 30 வருடங்களுக்கு ஒருமுறை. இதுவும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது
இப்பொழுது வேறு ஒரு சிறு கணக்கிற்கு வருவோம்
நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல 12 வழிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வழியில் செல்கிறீர்கள். ஆக ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அதே வழியில் செல்வீர்கள்.
அதே போல் நீங்கள் 12 வித வாகனங்களில் செல்லலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு வாகனத்தில் 12 நாட்கள் செல்ல வேண்டும். அதற்கு அடுத்த 12 நாட்கள் அடுத்த வாகனம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு வாகனத்தில் ஒருவழியில் சென்றால் மீண்டும் அதே வாகனத்தில் அதே வழியில் செல்ல 144 நாட்கள் ஆகிவிடும் அல்லவா
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் 6 நாட்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், நீங்கள் முதல் 6 நாட்கள் வாகனம் 1 - பாதை 1 முதல் 6 வரை, அடுத்த 6 நாட்கள் வாகனம் 2 - பாதை 6 முதல் 12 வரை - அடுத்த 6 நாட்கள் வாகனம் 3 பாதை 1 முதல் 6 வரை, என்று மாறி மாறி சென்று கொண்டிருந்தால், 72 நாட்கள் கழித்து நீங்கள் அதே வாகனம், அதே வழியில் செல்லலாம்
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் மூன்று நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 36 நாட்கள் கழித்து அதே வழியில் அதே வாகனத்தில் செல்லலாம்
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் இரண்டரை நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 60
ஆண்டுகள் நாட்கள் கழித்து தான் அதே வாகனம் அதே வழியில் செல்ல முடியும்
-oOo-
குரு ஒரு வீட்டில் இருக்கும் காலம் ஒரு ஆண்டு. குரு ஒரு வீட்டில் இருப்பதால் சில விளைவுகள் ஏற்படலாம்.
சனி ஒரு வீட்டில் இருக்கும் காலம் இரண்டரை ஆண்டுகள். சனி ஒரு வீட்டில் இருப்பதால் சில விளைவுகள் ஏற்படலாம்
ஒரு வருடம் சனியின் விளைவுகளும் குருவின் விளைவுகளும் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவுகள், மீண்டும் அதே போல் ஏற்படுவது 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
இன்று சனி ஒரு வீட்டிலும் குரு ஒரு வீட்டிலும் இருக்கிறார்களோ, அவர்களிருவது அந்தந்த வீடுகளில் இருப்பது அறுபது ஆண்டுகள் கழித்துதான் என்பதால் இவ்வாறு நிகழ்கிறது
-oOo-
இப்படியான அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை கால மாற்றங்கள் மற்றும் பருவ மாற்றங்கள் ஏற்படுவதை கணித்த முன்னோர்கள் 60 ஆண்டுகளை ஒரு தொகுப்பாக வைத்து அவற்றிற்கு பெயர் சூட்டி உள்ளார்கள்.அது மட்டுமல்லாது அந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பாடல்களாகவும் குறித்து வைத்து சென்றுள்ளார்கள்
-oOo-
உதாரணமாக பார்த்திப ஆண்டிற்கான (2005 ஏப்ரல் 15 முதல் 2006 ஏப்ரல் 14) சித்தர் இடைக்காடர் இயற்றிய வெண்பாவில் “ராஜர் அநியாந் செய்வார் ரதமேறு மாரி இனிதாம் விளைவுமுளவாம்” என்று உள்ளது. !! 2005ல் மழை எப்படி இருந்தது என்று தெரியவில்லை என்றால் 2005 ஜூலையில் மும்பையில் இருந்தவரிடமோ 2005 நவம்பரின் சென்னையில் இருந்தவரிடமோ கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பார்த்திபன் என்பது அர்ஜுனனின் பெயர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அர்ஜூனன் மழைக்கடவுள் இந்திரனின் மகன் என்றும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் !!! சமீப காலங்களிலேயே 2005ல் தான் ஒரே நாளில் அதிகம் மழை பெய்தது என்று நினைக்கிறேன்
அதே போல் 2009 ஏப்ரல் 15 முதல் 2010 ஏப்ரல் 14 வரை நடைபெற்றுக்கொண்டிருப்பது விரோதி வருடம். . இந்த வருடத்திற்கும் பாடல் இருக்கிறது
நீடு விரோதி நிலத்தில் மழைமிகுதி!
மேடு காடெல்லாம் விளைவுண்டாம்! - நீடும்
அரசர் போராலே யழிவு முலகம்!
திரமிகு நோய் சேருமெனச் செப்பு!
சனி சிம்மத்திலிருந்து கன்னிராசிக்கு செல்லும், குரு மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்லும் ஆண்டுகள் விரோதி ஆண்டுகள். அப்படிப்பட்ட “விரோதி ஆண்டில் மழை நன்றாக பெய்யும். இதனால், காடு கழனியெல்லாம் நல்ல அமோக விளைச்சல் கிடைக்கும். பல தேசங்களுக்கிடையில் மற்றும் அத்தேசங்களில் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி, அதனால் நாடுகளிடையே போர் ஏற்படலாம்.போரினால் அழிவு எற்படும். ஒரு வகை நோய் வந்து சேரும்” என்று இடைகாடர் கூறியுள்ளார் !!