இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, January 11, 2010

புத்தகம் வருமானம், ஆதாய உரிமை, ராயல்டி பாகம் 5 - சந்தேகங்களுக்கு விடைகள்

இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகை
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் நான்காவது இடுகை
முதல் நான்கு இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்

இந்த இடுகைக்கு செல்லும் முன் ஒரு சிறிய மன்னிப்பு மற்றும் விளக்கம்

சென்ற இடுகையின் தலைப்பில் காப்புரிமை என்ற பதத்தை பயன் படுத்தியிருந்தேன். பதிவர் வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்கள் அது தவறு என்று தெரியபடுத்தியுள்ளார்
அது காப்புரிமை இல்லை டாக்டர்!
எழுத்துக்களுக்கானது "பதிப்புரிமை".
காப்புரிமை என்பது பொருள்களுக்கானது. நாம் பயன்படுத்தும் மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்ற "பொருள்"களுக்குத்தான் காப்புரிமை பதிவு செய்ய முடியும். 
எனவே காப்புரிமை - பேட்டண்ட், பதிப்புரிமை - காப்பிரைட், ஆதாய உரிமை - ராயல்டி

தவறுக்கு வருந்துகிறேன். மன்னித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்

நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ? 

சிலர் தங்களின் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நூல் விற்குமா விற்காதோ என்று சந்தேகம் காரணமாக பதிப்பகங்கள் அதை அச்சிட தயங்குவார்கள் எனவே ஆசிரியரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பதிப்பகங்கள் அந்த நூலை அச்சிடுகின்றன. ஆசிரியருக்கு பணம் அளிப்பதற்கு பதில் குறிப்பிட்ட பிரதிகளை அளித்து விடுவார்கள். அதை விற்று பணம் பெற வேண்டியது ஆசிரியரின் திறமை.

இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக உண்மைத்தமிழனின் பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறாரே இல்லை இது காலம் காலமாக நடைபெறுவது தான் !! எனக்கு தெரிந்து கடந்த பல வருடங்களாகவே இந்த நடைமுறை உள்ளது மனைவி தாலியை விற்று புத்தகம் போட்டேன். தா_____ விசிட்டிங் கார்டு போல் ஓசி வாங்கிட்டு போறான் என்ற புலம்பல் பலரும் கேட்டது தானே எனவே இது போன்ற சில நிகழ்வுகள் நடப்பது உண்மைதானென்றாலும் முக்கால்வாசி என்பது கண்டிப்பாக கிடையாது. பதிப்பிற்கும் அளவு எழுத தரமோ, முயற்சியோ இல்லாத வயிற்றெரிச்சல் நபர்களின் புலம்பல்கள் அவை என்று நினைக்கிறேன்

சில நேரங்களில் எந்த பதிப்பகமும் ஒரு நூலை பதிப்பிக்க தயங்கினால் நூலாசிரியர் ஆதாய உரிமை கூட வேண்டாம் என்று கூட இறங்கி வர வேண்டியிருக்கும்

பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்றால் என்ன 
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய
  • http://en.wikipedia.org/wiki/Print_on_demand
  • http://www.printondemand.com/
  • http://www.lulu.com/
பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்கும் கடைகள் (ரிடேய்லர்), விற்காமல் போகும் புத்தகத்திற்கு அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்றுகொள்கிறார்களா? இல்லை, பதிப்பகத்திற்கு விற்காமல் போகும் புத்தகத்தை மறுபடியும் திருப்பிகொடுக்கப்படுகிறதா?

பொதுவாக பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்பவர்கள் (கடைக்காரர்கள்) முதலிலேயே காசு தருவதில்லை. புத்தகம் விற்றபின்னர் தான் தருகிறார்கள்

எனவே அவர்களுக்கு நஷ்டம் என்று எதுவும் கிடையாது

பொதுவாக இவர்கள் பணம் செலுத்தாமல் வாங்கி இருப்பதால் திருப்பி அனுப்புவதில்லை

சில நேரங்களில் ஒரு கடையில் விற்று தீர்ந்து விட்டது. மற்றொரு ஊரில் விற்க வில்லை என்றால் பதிப்பகம் அதை மாற்றி விடுவதுண்டு

ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதை பதிப்பாளர், எழுத்தாளர் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்?
  • கடைக்காரர் சொல்வதை வைத்து பதிப்பாளர் கணக்கிடுகிறார்
  • பதிப்பாளர் சொல்வதை ஆசிரியர் நம்புகிறார்
பதிப்பாளர் அந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேதானே எழுத்தாளருக்கான பங்கைப் பிரித்துக்கொடுக்க முடியும்!
  • பல நேரம் அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தான்
  • ஆனால் சில பதிப்பாளர்கள் “சொந்த புள்ளி விபரங்களின்” அடிப்படையில் எழுத்தாளருக்கான பங்கை பிரிப்பது தான் பிரச்சனை !!
அதோடு, பதிப்பாளரிடமிருந்து வாங்கிய விற்பனையாளர்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒரு நூலை 'போணியாகிவிடும்' என்று நம்பி வைத்துக்கொண்டிருப்பார்? அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா? அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?

பெரும்பாலான புத்தகங்களுக்கு நாள் கணக்கு கிடையாது

// அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா?//

சில புத்தகங்கள் மட்டுமே திரும்பி அனுப்பப்படும்
உதாரணம் பாடப்புத்தகங்கள்

// அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?//

இது புத்தகத்திற்கு புத்தகம் மாறும். உதாரணமாக
  • குருபெயர்ச்சி புத்தகங்கள் அடுத்த குருபெயர்ச்சிக்கு பிறகு விற்காது (1 வருடம்) அடுத்த பெயர்ச்சிக்கான பலன் புத்தகம் வந்து விடுமே
  • சனி பெயர்ச்சி என்றால் இரண்டரை வருடம்
ஆசிரியர், விபரமில்லாமல் எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் அல்லது படு அறிவுப்பூர்வமாக சிந்தனையுடன் கடின உழைப்பில் நற்கருத்துச்செரிவுடன் எழுதினாலும் இதே பத்து சதம்தானாஜி?

ஆமாம் ஜி
  • ஆனால் மொக்கை ஆசிரியர் 1000 பிரதிகள் விற்கும்
  • நற்கருத்து செரிவுடன் எழுதினால் 10000 பிரதிகள் விற்கும்
அதைப்பொருத்து ஆசிரியருக்கு வரும் தொகை மாறும் அல்லவா

அடுத்து வரும் இடுகைகளில் நாம் கீழ்க்கண்ட கருத்துக்களை விவாதிப்போம்
  • இணையம் எந்த வகையில் பதிப்பகங்களை பாதித்துள்ளது
  • இணையத்தினால் பதிப்பகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை
  • இணையத்தினால் பதிப்பகங்கள் பெற்ற பலன்கள் யாவை
  • ஒருவர் எந்த நோக்கத்திற்காக புத்தகம் எழுதுகிறார் 
அடுத்து வரும் இடுகைகளில் பதில் அளிக்கப்பட உள்ள வாசகர் கேள்விகள்
  • பதிவர் சந்திரமுகி : இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 100 ரூபா புத்தகத்தில் 70%, 80% வீதம் செலவுகள் என்பதைக் காட்டுக்கிறது. அதே செலவான புத்தகத்தை(மக்களின் தேவை அல்லது வரவேற்பு காரணம் அறிந்து) 200 ரூபாய்க்கு விற்றால் 120% இலாபம் கிடைக்குமே! அப்படி கிடைத்தால் அதன் இலாப அறுவடைக்காரர் பதிப்பகத்தாரா? அல்லது இருவருமா?
  • கிளியனூர் இஸ்மத் : நான் 3 புத்தகங்கள் எழுதி உள்ளேன்....அதை எந்த பதிப்பகத்தில் கொடுக்கலாம்.? அப்படி கொடுத்தால் 3 புத்தகங்களுக்கான சிலவும் நான் கொடுக்க வேண்டுமா?
    நான் சிலவு செய்து அடித்த புத்தகத்தை அந்த பதிப்பகத்தார்களே விற்பனை செய்து தருவார்களா?
    இதைப்பற்றிய விபரங்கள் சொல்லுங்களேன். 

இதுவரை கூறப்பட்டதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
  • அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
  • அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
--தொடரும்

தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

Thursday, January 07, 2010

முதல் பட்டதாரிகளின் தொழிற்கல்வி செலவை அரசே ஏற்கும் - சரித்திரம் படைக்கும் அறிவிப்பு

காட்சி 1 :

அப்பா, அம்மா இல்லாத திவ்யா தாத்தாவின் பொறுப்பில் வளர்ந்தார். செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமம். தாத்தாவுக்கு பென்ஷன் மட்டுமே வருமானம். உணவுக்கு கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவவேண்டிய நிலை. வாடகை வீடு. வீட்டு உரிமையாளர் மிக நல்லவர். இவர்களது நிலையறிந்து, குறைந்த வாடகை வாங்கினார்.

சூழல்தான் இப்படியே தவிர, திவ்யா படுப்பில் படுசுட்டி. அவர் படித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகம், திவ்யாவுக்கு ஒரு சலுகை தர முன்வந்தது. மெட்ரிக்குலேஷனில் ஏதாவது ஒரு பாடத்தில் ’செண்டம்’ எடுத்தாலும் போதும். +1, +2 படிப்பை இலவசமாகவே வழங்குகிறோம் என்றது. திவ்யா மூன்று பாடத்தில் ‘செண்டம்’ எடுத்தார்.

+2வில் 1200க்கு 1142 மதிப்பெண். என்ஜினியரிங் படிக்க ஆசை. இவரது மதிப்பெண்ணுக்கு முன்னணிக் கல்லூரிகள் கூப்பிட்டு சீட்டு தர தயாராகவே இருந்தார்கள். ஆனால் திவ்யாவுக்கோ வயதான தாத்தாவை விட்டு, விட்டு தூரமாகச் சென்று படிக்க முடியாது. அவர் வசித்த பகுதிக்கு அருகிலேயே ஒரு தனியார் கல்லூரி இருந்தது. ஆனால் செலவு அதிகம். கையைப் பிசைந்துகொண்டு கலங்கினார் திவ்யா.

காட்சி 2 :

போடிநாயக்கனூர் கார்த்திக் கடுமையான ஏழ்மையிலும் செம்மையாக படித்தார். அவரது அப்பா சமோசா வியாபாரி. தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று சமோசா விற்பார். அப்பாவுக்கு உதவியாக கார்த்திக்கும் விடுமுறை நாட்களில் சமோசா விற்கச் செல்வதுண்டு.

+2வில் கார்த்திக்கின் மார்க் 1200க்கு 1080. இவருக்கும் என்ஜினியரிங் படிக்கவே ஆசை. சமோசா விற்று கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாகப் போகிறது. எங்கிருந்து மகனை என்ஜினியரிங் படிக்கவைப்பது என்று யோசித்தார் அவரது அப்பா. பேசாமல் ஒரு வண்டி வாங்கி, நாமும் சமோசா வியாபாரத்தில் இறங்கி விடலாமா என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தார் கார்த்திக்.

மேற்கண்ட இரு காட்சிகளிலும் சொல்லப்பட்டதைப் போல நம் நாடெங்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திவ்யாக்களும், கார்த்திக்குகளும் இருக்கிறார்கள். காசில்லை என்பதற்காக கல்வியை கைவிடுவது எவ்வளவு கொடுமையானது?

காட்சி 1 மற்றும் காட்சி 2 இரண்டும் கற்பனையில்லை. இது நடந்து கொண்டிருப்பது தான். மேலும் விபரங்களுக்கு பதிவர் யுவகிருஷ்ணாவின் http://www.luckylookonline.com/2010/01/blog-post_02.html இடுகையை பார்க்கலாம்

ஆனால் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் இந்த நிலை இருக்காது. இந்த வருட ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளில் சமூக வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டியது இது தான்

27. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில் – அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால்; அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியும் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

பாராட்டப்படவேண்டிய விஷயம்.

--


தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

பதிப்புரிமை கிலோ என்ன விலை - சொந்த / நொந்த அனுபவம் - ஆசிரியர், புத்தகம், வருமானம் : பாகம் 4

இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகை
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
முதல் மூன்று இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்

விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, தெரிந்தவர் ஒருவர் கூறினார். “புருனோ, சிசேரியன் குறித்த மூட நம்பிக்கைகள் பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்தது. நான் கூட செராக்ஸ் எடுத்து தங்கச்சிக்கு அனுப்பியிருக்கேன்”

வலைத்தளத்தில் இருக்கும் கட்டுரைகளை மின்னஞ்சல் அனுப்புவது தானே வழக்கம் என்பதால் செராக்ஸ் என்றவுடன் முதலில் புரியவில்லை. அதன் பிறகு விசாரித்ததில் ஒரு வெகுசன இதழில் எனது கட்டுரை வந்துள்ளது என்ற விபரம் தெரிய வந்தது

சரிதான் என்று அந்த இதழை வாங்கி படித்தால் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. வலைப்பதிவில் எழுதிய தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும் கட்டுரை வந்திருக்கிறது கட்டுரை மட்டுமல்ல, எனது பெயர் மற்றும் புகைப்படம் கூட உள்ளது. அது தவிர வாசகர் கடிதத்தில் ஒருவர் எனது மருத்துவத்தில் ரகசியங்கள் மற்றும் ரகசியங்களுக்கு விலக்குகள் குறித்த கட்டுரை நன்றாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.

ஆக அந்த ஒரு குறிப்பிட்ட வெளியீட்டில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் வந்த அந்த இதழின் வெளியீடுகளில் கூட என் கட்டுரைகள் பல வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. எத்தனை என்று இது வரை நான் கணக்கெடுக்கவில்லை !!

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் (தமிழை பொருத்த வரை நான் எழுத்தாளனா, அல்லது வெறும் எழுதுபவன் மட்டும் தானா என்பது வேறு விஷயம்) தனது எழுத்தை அச்சில் பார்ப்பது மகிழ்ச்சிதான்

அதிலும் படைப்புகளை பல பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரமாகுமா, ஆகாதா என்று எதிர்ப்பார்ப்புடன் தபால்காரரை எதிர்நோக்கும் சிரமம் இல்லாமல், நிராகரிப்பில்லாமல் படைப்புகள் பிரசுரமாவது கூடுதல் மகிழ்ச்சி தான்

நம் படைப்புகள் மணிகண்டன் என்றோ மணிவண்ணன் என்றோ இல்லாமல் நம் பெயரிலலேயே வெளிவருவது கண்டிப்பாக மனநிறைவு தான்

அதிலும் கூடுதலாக புகைப்படம் வேறு இடம்பெற்றிருப்பது சந்தோஷம் தான்

ஆனாலும்................
  • அனுமதி பெற்று அதன் பின்னர் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. 
ஏனென்றால்

நான் ஒரு கட்டுரையை ஒரு பதிப்பகத்திற்கு அல்லது வெகுசன இதழுக்கு அளிக்கும் போது அந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரமாகவில்லை என்ற பண்புசார் ஒப்பந்தத்தின் (ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்) அடிப்படையிலேயெ அவர்கள் அந்த படைப்பை பிரசுரிக்கிறார்கள். நானும் (வலைப்பதிவு தவிர) வேறு எங்கும் அந்த படைப்பை அனுப்பாததால் துணிந்து அனுப்புகிறேன்.

அப்படி இருக்கும் நிலையில் இது போல் அனுமதியோ குறைந்த பட்சம் தகவலோ கூட இல்லாமல் இப்படி வலைப்பதிவுகளில் இருந்து படைப்புகளை பிரசுரிப்பதால்
  • அந்த இதழின் ஆசிரியருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்
  • ஆனால் பதிவு எழுதுபவருக்கு பல பிரச்சனைகள் உள்ளன 
என்பதை வெகுசன இதழ்களின் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனப்து எனது வேண்டுகோள் / விண்ணப்பம் !!

இதனால் தான் நான் ஏற்கனவே எனது வலைப்பதிவின் ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவாக
இந்த தளத்திலுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில், அல்லது இணைய இதழ்களில் மீள்பிரசுரம் செய்ய முன் அனுமதி பெறவேண்டும். அப்படி மீள்பிரசுரம் செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ தளத்தின் பெயரையும் (www.payanangal.in) ஆசிரியரின் பெயரையும் மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் (Dr.J.Mariano Anto Bruno Mascarenhas) தெளிவாக குறிப்பிடவும். மறுபதிப்பு செய்தபின் அந்த விபரத்தை அந்த குறிப்பிட்ட இடுகையின் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.
என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட வெகுசன இதழின் ஆசிரியரிடம் தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்பு வந்தது !! அப்பொழுது அவரிடம் படைப்புகள் வெளிவந்தால் எழுதுபவருக்கு அந்த குறிப்பிட்ட இதழ் அனுப்பப்படும் இதழியல் நடைமுறை இங்கு பரவலாக கடைபிடிக்கப்படுவது குறித்து நினைவுபடுத்தினேன். அவரும் அனுப்புவதாக கூறுனார். நான் பேசி பல வாரங்கள் ஆகிறது

இது வரை, இந்த இடுகை வெளியிடப்படுவது வரை, எனது வீட்டிற்கு இதழ்(கள்) வந்து சேரவில்லை. அடுத்த இதழ்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று நினைக்கிறேன் :) :)

அது சரி, அந்த கட்டுரைக்கான ஆதாய உரிமை ??
மூச் !!

ஸ்பேசிமன் காப்பியே வரல, இதுல ராயல்டி, ராயல் காபி, ராயல் ஹார்லிக்ஸ் வேறயா ... போங்க பாஸ்

-- தொடரும்

இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை

தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

Wednesday, January 06, 2010

ஆஸ்கர் விருதும் ஆங்கில அகராதியும் - சாதித்த தமிழனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும்- ஆங்கிலத்தில் புழங்கும் தமிழ் சொற்களின் பட்டியலும்

தமிழிலிருந்து கட்டமரம், ரசம், போன்ற சொற்களும், இந்தியிலிருந்து காக்கி, குரு போன்ற சொற்களும் ஆங்கில சொற்களாக ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை அறிவோம்.
தமிழர்களில் சிறந்த திரையிசையமைப்பாளராக இந்தியாமுழுவதும் மட்டுமின்றி உலக அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது அனைவரும் அறிந்த பழைய செய்தி

2009 அக்டோபர் 6 அன்று அவரது பாடலான “ஜெய் ஹோ” மிக பிரபலமடைந்ததால் அந்த சொல்லை ஆங்கில சொல்லாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்

திறமை இருந்தால் ஆஸ்கர் பட்டியலிலும் இடம் பிடிக்கலாம், பாடல் பிரபலமடைந்தால் ஆங்கில அகராதியிலும் இடம் பிடிக்கலாம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி மற்றும் மரியம் வெப்ஸ்டர் போன்ற ஆங்கில மொழி அகராதிகளில் கீழ்க்கண்ட சொற்களின் மூலம் தமிழ் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்
  • Anicut அனைக்கட்டு
  • Appam - ஆப்பம் / அப்பம்
  • Cash - காசு
  • Catamaran கட்டுமரம்
  • Cheroot சுருட்டு 
  • Corundum 'ruby', குருந்தம் kuruntam or குருவிந்தம் kuruvintam (Source: OED)
  • Coir கயிறு
  • Curry கறி
  • Godown கிடங்கு 
  • Idli  இட்லி idli (Source: OED)
  • Illupi இலுப்பை
  • Kabadi/kabaddi கபடி கபடி
  • Maldivian மலை தீவு - மாலத்தீவு
  • Moringa முருங்கை 
  • Mulligatawny மிளகுத்தண்ணீர் 
  • Nadaswaram/nagaswaram நாகஸ்வரம் / நாதஸ்வரம்
  • Pariah பறையர்
  • Pandal பந்தல்
  • Pongal பொங்கல்
  • Poonga oil புங்கை எண்ணை
  • Poppadom - பப்படம் அப்பளம் 
  • Portia tree பூவரசு
  • Sambar சாம்பார்
  • Sangam சங்கம்
  • Tamil தமிழ்
  • Tutenag துத்தநாகம்
  • Vetiver வெட்டிவேர்
கீழ்க்கண்ட ஆங்கில சொற்களும் தமிழிலிருந்தே வந்ததாக கருதப்படுகிறது. ஆனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி மற்றும் மரியம் வெப்ஸ்டர் போன்ற ஆங்கில மொழி அகராதிகளில் மூலம் தமிழ் என்பது குறிப்பிடப்படவில்லை
  • Anaconda - ஆனை கொண்டான் - பல அகராதிகளில் இது சிங்கள சொல்லான henakaňdayā, "whipsnake" என்பதிலிருந்து வந்ததாக கூறுகிறார்கள்
  • Coolie - கூலி : தமிழா / இந்தியா ??
  • Rice - இதன் மூலம் கிரெக்க "oruza" (μαγειρ.) என்றாலும் கிரேக்கர்களுக்கு அந்த சொல்லை சொல்லி கொடுத்ததே அவர்களுடன் வாணிக தொடர்பிலிருந்த அரிசி விளையும் மண்ணின் சொந்தக்காரர்களான் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு சாரரின் கருத்து (John Thorley's 1969 "The development of trade between the Roman Empire and the East under Augustus", printed in Greece & Rome, 16:2 at pp. 222).
கீழ்க்கண்ட சொற்களின் மூலம் தமிழா மலையாளமா ?? மலையாளத்தில் மூலமே (சமஸ்கிரத்துடன்) தமிழ்தானே 
  • Betel - வெற்றிலை
  • Copra - கொப்பர
  • Eight எட்டு
  • Malayalam - மலையாளம்
  • One ஒன்னு
  • Mango - மாங்கா
  • Teak - தேக்கு
  • Tope தோப்பு

Tuesday, January 05, 2010

புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3

இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகை
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
முதலிரண்டு இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்

ஆசிரியர் தானே புத்தகத்தை பதிபிக்க முடியுமா ?
கண்டிப்பாக பதிப்பிக்கலாம்

அப்படி தானே பதிப்பித்தால் அதிகம் லாபம் வருமா ?
நூலை அச்சிடுவதற்காக ஆகும் செலவானது யார் பதிப்பித்தாலும் ஏறத்தாழ ஒன்று என்றாலும் (அதில் கூட பதிப்பகம் செய்வதை விட ஆசிரியர் செய்தால் அதிக செலவு தான் ஆகும்) அதை தமிழகத்தின் கடைகோடி கிராமத்தின் பெட்டி கடை வரை கொண்டு செல்வது, இணையம் மூலம் விற்பது, வெளிநாடுகளுக்கு அனுப்புவது, தபால் மூலம் அனுப்புவது, பிற கடைகளுக்கு அனுப்புவது, பிற ஊர்களுக்கு அனுப்பவது போன்ற செயல்களை தனிநபர் செய்வது நடைமுறையில் எளிதன்று

ஆசிரியர் இதை செய்தால் இதற்கு ஆகும் நேரம் மற்றும் பொருள் செலவு பதிப்பகம் செய்வதை விட மிக அதிகம் பதிப்பகங்கள் பல நூறு புத்தகங்களை வெளியிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு இந்த செலவுகள் அனைத்து புத்தகங்களில் பகிர்ந்து சென்று விடும்.

ஆனால் ஒன்று அல்லது இரண்டு புத்தகம் மட்டும் வைத்துள்ளவர்களுக்கு இதில் பண விரயம் மற்றும் நேர விரயம் அதிகம் சுருங்க சொல்வதானால், இப்படி புத்தகத்தை மூட்டை கட்டி அனுப்பி, அங்கிருந்து பணத்தை வாங்கி கனக்கு பார்க்கும் நேரத்தில் அடுத்த புத்தகம் எழுதினால் அதனால் வரும் பணம் அதிகமாகவே இருக்கும் அண்ணாமலை படத்தில் வருவது போல் “கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியாத்தான் வரும்”

தானே பதிப்பிக்காமல், ஒரு பதிப்பகம் மூலம் வெளியிட்டபின்னர் நூலாசிரியர் எப்படி அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் ?
அதிக எண்ணிக்கையில் புத்தகம் விற்பதன் மூலம்

எப்படி அதிக எண்ணிக்கையில் விற்க முடியும்
  • தனது புத்தகத்தை தானே சந்தைப்படுத்துவதன் மூலம்
  • தகுந்த, திறமையான, நேர்மையான பதிப்பகத்தை தேர்வு செய்வதன் மூலம்
ஆசிரியர் எப்படி தனது புத்தகத்தை சந்தைப்படுத்தலாம்
  • புத்தகம் துறை சார்ந்தது என்றால், ஆசிரியரும் அந்த துறையில் உள்ளவர் என்றால் துறைக்குள் விளம்பரம் செய்யலாம்
  • மடற்குழுக்களில் அறிமுகப்படுத்தலாம்
  • தனது தளத்தில் விளம்பரம் போடலாம் (தமிழ் பதிவுகள் வாசிப்பவர்கள் இது குறித்து அறிந்திருப்பார்கள்
திறமையான பதிப்பகம் என்று எப்படி கண்டுபிடிப்பது
கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தால் திறைமையான பதிப்பகங்களின் பட்டியல் கிடைத்து விடும்
  • பதிப்பகத்தின் வீச்சு (ஆங்கிலத்தில் Reach) எவ்வளவு
  • பதிப்பகத்தின் சந்தைப்படுத்தல் (ஆங்கிலத்தில் marketing) எப்படியுள்ளது
  • பிற பதிப்பகங்களுடன் புரிந்துணர்வு (ஆங்கிலத்தில் networking) எப்படியுள்ளது
பதிப்பகத்தின் வீச்சு (ஆங்கிலத்தில் Reach) எவ்வளவு என்று எப்படி கண்டுபிடிப்பது
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடியுங்கள்
  • எத்தனை ஊர்களில் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன,
  • ஒரு ஊரில் எத்தனை கடைகளில்  கிடைக்கின்றன
  • இணையம் மூலம் கிடைக்குமா
  • தபால் மூலம் கிடைக்குமா
  • வெளிநாட்டில் கிடைக்குமா
பதிப்பகத்தின் சந்தைப்படுத்தல் எப்படியுள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடியுங்கள்
  • விளம்பரம் செய்வார்களா
  • மக்கள் மத்தியில் தெரிந்த பதிப்பகமா
  • புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க வேறு ஏதாவது உத்திகள் முயற்சிக்கிறார்களா, (உதாரணம் புக் கிளப், பாட்காஸ்ட்)
  • தொடர்ந்து விளம்பரம் செய்யஅவர்களிடம் வேறு ஊடகங்கள் உள்ளனவா
பிற பதிப்பகங்களுடன் புரிந்துணர்வு குறித்து எப்படி தெரிந்து கொள்ளலாம்
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடியுங்கள்
  • பதிப்பகதுடன் பிற மொழி பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளார்களா
  • பதிப்பகத்துடன் பிற நாட்டு பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளனரா
  • வேறு மொழி புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
  • வேறு நாட்டு புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
  • தமிழ் புத்தகங்களை வேறு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
  • தமிழ் புத்தகங்களை வேறு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
பதிப்பகத்தின் நேர்மை ஏன் முக்கியம்
500 புத்தகம் விற்று 500 புத்தகத்திற்கும் 10 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா, அல்லது 500 புத்தகம் விற்று 50 புத்தகத்திற்கு 40 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா

பதிப்பகங்கள் எழுத்தாளர்களை ஏமாற்றவில்லையா ?
சில பதிப்பகங்கள் சில எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றன

பதிப்பகங்கள் எழுத்தாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றன ?
  1. பிரதிக்கான ஆதாய உரிமை தராமல் - மொத்தமாக 5000 அல்லது 10,000 என்று தந்து விட்டு, அதன் பிறகு அந்த நூலை பல ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு விற்பதன் மூலம்
  2. 1000 பிரதிகள் விற்று விட்டு, 100 பிரதிகளுக்கு பணம் தருவதன் மூலம்
ஆசிரியரை ஏமாற்றாமல் நேர்மையாக ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகங்களை எப்படி கண்டு கொள்ளலாம்
எளிதான வழி - ஏற்கனவே நூல் எழுதிய உங்களின் நண்பர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் :) :) :)

 நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ? 

- இதற்கான பதில் இந்த இடுகைத்தொடரில் தொடர்ந்து வரும் இடுகைகளில்

இந்த இடுகைத்தொடரின் நான்காவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை

அதிகம் ஆதாய உரிமை பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் - பாகம் 2

எனது முதல் இடுகைக்கு (10 சதம் ஆதாய உரிமை (ராயல்டி) என்பது சரியா ?? பதிப்பகங்கள் ஆசிரியர்களை ஏமாற்றுகின்றனவா - பாகம் 1) வந்த மறுமொழிகளில் எழுப்பட்ட கேள்விகளில் சிலவற்றிற்கு தொடர்ந்து வரும் இடுகைகளில் பதிலிருக்கிறது

அப்படி பதில் வராத இடுகைகளுக்கு இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகையில் தனியா, விரிவாக பதிலளிக்கிறேன்

ஒரு ஆசிரியர் நூல் எழுதினால் அதற்கான தொகையை பதிப்பகத்திடம் இருந்து இரு விதங்களில் பெற்றுக்கொள்ளலாம்
  1. மொத்தமாக இவ்வளவு தொகை என்ற ரீதியில்
  2. விற்கப்படும் பிரதிகளை பொருத்து - அல்லது விற்கப்படுவதாக பதிப்பகம் கூறும் எண்ணிக்கையை பொருத்து
இதில் மொத்தமாக பணம் பெறுவது என்பதில் இருக்கும் சாதகம் என்னவென்றால் ஆசிரியர் நூல் விற்றதா,இல்லையா என்று கவலைபப்ட வேண்டியதில்லை. ஆனால் நூல் 100 பிரதிகள் விற்றாலும், 1,00,000 பிரதிகள் விற்றாலும் அதே அளவு காசுதான்

பிரதிகளை பொருத்து என்பதில் உள்ள சாதகங்கள் என்னவென்றால், நூல் அதிகம் விற்றால் அதற்கேற்ப பணமும் கிடைக்கும். இதில் உள்ள பாதகம் என்னவென்றால் நூல் குறைவாக விற்றால் பணம் குறைவாக கிடைக்கும்

இனி இந்த முறையை மேலும் ஆராய்வோம்

ஆதாய உரிமை = ஒரு நூலிற்கான பணம் x விற்கப்படுவதாக கூறப்படும் நூல்களின் எண்ணிக்கை
  • இதில் ஒரு நூலிற்கான பணம் = நூலில் அட்டை விலை x ஆதாய உரிமை சதம்
    • ஆக நூலின் அட்டை விலை அதிகம் இருந்தாலும் அதிகம் பணம் கிடைக்கும்.
    • ஆதாய உரிமை சதம் அதிகம் இருந்தாலும் அதிக பணம் கிடைக்கும்
  • அதே போல் விற்கப்படுவதாக கூறப்படும் நூல்களின் எண்ணிக்கை = உண்மையில் விற்கப்பட்ட நூல்கள் - ஆசிரியர் பணம் பெறாத நூல்கள்
    • ஆக அதிகம் நூல்கள் விற்றால் அதிக பணம்
      • அதாவது “திறமை”யான பதிப்பகத்தில் உங்களின் புத்தகத்தை பதிப்பித்தால் அதிக பணம்.
      • அதே போல் அதிகம் நபர்கள் வாசிக்கவல்ல நூலாக இருந்தால் அதிக பணம். உதாரணமாக நீரிழிவு நோய் அல்லது குழந்தை வளர்ப்பு குறித்த நூலை எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணமானது கணைய புற்று நோய் குறித்து நூலை எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை விட அதிகம். அதே போல் நிகோபாரி மொழியில் எழுதப்படும் நூலை விட தமிழ் நூல் அதிகம் விற்கும் . தமிழ் நூலை விட ஆங்கில நூல் அதிகம் விற்கும். இது எளிய உண்மை. தமிழகத்தின் ஆதாய உரிமை குறித்த விவாதங்களின் போது ஆங்கில ஆசிரியர்களின் ஆதாய உரிமையைக்காட்டுவது அல்லது ஆங்கில புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கையை காட்டுவது கண்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை !!!
      • ஏற்கனவே பிரபலமான ஆசிரியர் என்றால் விற்பனை அதிகம். உதாரணமாக உல்பா குறித்து நான் எழுதும் நூலை விட பா.ராகவனின் நூல் அதிகம் விற்கும்
    • ஆசிரியரால் அதிக நூல்களுக்கு பணம் பெற முடியாத சூழல் இருந்தால் குறைந்த அளவு பணம் - அதாவது நேர்மையான பதிப்பகத்தில் உங்கள் புத்தகத்தை பதிப்பித்தால் அதிக பணம்
ஆக ஒரு நூலின் ஆசிரியர் பெரும் ஆதாய உரிமையின் மொத்த அளவானது கீழ்க்கண்ட ஆறு காரணிகளினால் அதிகரிக்கிறது
  • நூலில் அட்டை விலை - அதிகம் பக்கம் உள்ள நூல்கள், அல்லது வண்ணத்தில் அச்சிடப்படும் நூலகள்
  • ஆதாய உரிமை சதம்
  • அந்த நூலின் தலைப்பு / கருப்பொருளுக்கான வாசகர் எண்ணிக்கை
  • அந்த ஆசிரியரின் வாசகர் எண்ணிக்கை
  • பதிப்பகத்தின் திறமை - இதில் அவர்களின் வீச்சு, அவர்களின் சந்தைப்படுத்துதல், அவர்களின் தொடர்பு என்று பல காரணிகள் உள்ளன. இவற்றை விரிவாக பின்னர் பார்ப்போம்
  • பதிப்பகத்தின் நேர்மை
இதில் எதுவெல்லாம் பதிப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்று பார்த்தால்
  • நூலில் அட்டை விலை -
    • அதிகம் பக்கம் உள்ள நூல்கள்,
    • வண்ணத்தில் அச்சிடப்படும் நூல்கள்
    • நல்ல தாளில் அச்சிடப்படும் நூல்கள்
  • ஆதாய உரிமை சதம்
    • இது இருவரும் கூட்டாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டியது
  • பதிப்பகத்தின் திறமை
    • பதிப்பகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆசிரியருக்கு உள்ளதால் இது மறைமுகமாக ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது
  • பதிப்பகத்தின் நேர்மை
    • பதிப்பகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆசிரியருக்கு உள்ளதால் இது மறைமுகமாக ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது
அதைப்போல் ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளவை
  • ஆதாய உரிமை சதம்
    • இது இருவரும் கூட்டாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டியது
  • பதிப்பகத்தை தேர்வு செய்யும் உரிமை
    • பதிப்பகத்தின் திறமை -
      • இதில் அவர்களின் வீச்சு
        • எவ்வளவு கடைகளின் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன,
        • எத்தனை ஊர்களில் கிடைக்கின்றன
        • இணையம் மூலம் கிடைக்குமா
        • தபால் மூலம் கிடைக்குமா
        • வெளிநாட்டில் கிடைக்குமா
      • அவர்களின் சந்தைப்படுத்துதல்
        • விளம்பரம் செய்வார்களா
        • மக்கள் மத்தியில் தெரிந்த பதிப்பகமா
        • புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க வேறு ஏதாவது உத்திகள் முயற்சிக்கிறார்களா,
      • அவர்களின் தொடர்பு
        • மொழிபெயர்க்க முடியுமா
        • பதிப்பகதுடன் பிற மொழி பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளார்களா
        • பதிப்பகத்துடன் பிற நாட்டு பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளனரா
    • பதிப்பகத்தின் நேர்மை
      • 500 புத்தகம் விற்று 500 புத்தகத்திற்கும் 10 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா, அல்லது 500 புத்தகம் விற்று 50 புத்தகத்திற்கு 40 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா
ஆசிரியர், பதிப்பகம் இருவரின் கட்டுப்பாட்டிலும் கூட்டாக உள்ளவை
  • ஆதாய உரிமை சதம்
    • இது இருவரும் கூட்டாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டியது
  • அந்த நூலின் தலைப்பு / கருப்பொருளுக்கான வாசகர் எண்ணிக்கை
    • எனவே எவ்வகை நூல்களை வெளியிட்டால் அதிகம் பேர் வாசிப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்
    • அதில் சேர்க்கப்பட வேண்டியவை எவை
    • அதில் தவிர்க்கப்பட வேண்டியவை எவை
    • இது ஆசிரியரின் உரிமை என்றாலும், ஆசிரியரை விட பதிப்பகங்கள் சந்தையின் போக்கை அதிகம் அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து முடிவெடுப்பது நல்லது
இருவரின் கட்டுப்பாட்டிலும் இல்லாதவை
  • அந்த ஆசிரியரின் வாசகர் எண்ணிக்கை
இதுவரை கூறப்பட்டதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
  • அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
  • அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் நான்காவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை

Saturday, January 02, 2010

10 சதம் ஆதாய உரிமை (ராயல்டி) என்பது சரியா ?? பதிப்பகங்கள் ஆசிரியர்களை ஏமாற்றுகின்றனவா - பாகம் 1

இது குறித்து ஏற்கனவே பல தளங்களில் பல ஜாம்பவான்கள் எழுதி உள்ளனர்
  • எழுத்தாளர் சாரு (http://www.charuonline.com/newarticls/velithirai.html)
கடந்த ஒரு ஆண்டில் விற்பனையான என் புத்தகங்களின் எண்ணிக்கை இது. இதற்கான ராயல்டி தொகையாகக் கிடைத்த 30,000 ரூபாயில்தான் நான் வெள்ளித் திரை சினிமாவைப் பார்த்தேன்.
  • எழுத்தாளர் ஜெயமோகன் (http://www.jeyamohan.in/?p=5683)
லட்சம் பிரதிகளா? நக்கலா? பத்துநூலும் வருடத்திற்கு ஆயிரம் பிரதிகள் விற்றாலே எனக்கெல்லாம் கொஞ்சம் மேட்டிமைத்தனம் பேச்சு நடத்தையில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். சென்ற வருடம் விற்பனையில் இருக்கும் என் நாற்பத்திரண்டு நூல்களுக்காக மொத்தமாக வாங்கிய ராயல்ட்டியே பதிநான்காயிரம் ரூபாய்தான். தமிழ் நூல்களை வாங்கிப்படிப்பவர்கள் மிக மிக மிக மிகக் குறைவு. விற்பனையில் சுஜாதா, சாரு,எஸ்.ராமகிருஷ்ணன், நான் என ஒரு வரிசை இருப்பது உயிர்மையின் விளம்பரங்களில் இருந்து தெரிகிறது. எனக்கு இந்த நிலைமை என்றால் எஸ்.ராமகிருஷ்ணன் இன்னும் ஐந்து பிரதி அதிகம் விற்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன். உழக்குக்குள் வழக்கு.
  • எழுத்தாளர் ஞாநி (http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_4548.html)
ஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.
  • எழுத்தாளர், ஆசிரியர் பாரா (http://www.writerpara.com/paper/?p=930)
  • எழுத்தாளர், பதிப்பாளர் பத்ரி (http://thoughtsintamil.blogspot.com/2009/12/etc-1.html மற்றும் http://thoughtsintamil.blogspot.com/2009/12/etc-2.html)
கடந்த ஐந்தாண்டுகளில் பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய, ஒரு புத்தகத்தை பதிப்பித்த, எனது மற்றும் பிறரது புத்தகங்களை இணையம் மூலம் விற்ற, பல புத்தகங்களுக்கு அச்சு கோர்த்து (pre press) கொடுத்த எனது அனுபவங்களை, எனக்கு தெரிந்த, நான் அறிந்த விபரங்களை இங்கு தருகிறேன்

ஒரு புத்தகம் எழுதப்படுவதில் இருந்து வாசிக்கப்படுவது வரை நடைபெறுவது, சிக்கலான, பல கூறுகளை உள்ளடக்கிய பயணம். அதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு கற்பனை புத்தகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம் - விக்டோரியா மகாராணி பற்றி நான் 250 (A5) பக்கங்களுக்கு ஒரு புத்தகம் எழுதி அதை ஒரு பதிப்பகம் 100 ரூபாய் புத்தகமாக பதிப்பித்து 1000 பிரதிகள் அச்சிட்டு விற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்

1000 பிரதிகள் x 100 ரூபாய் = 1,00,000 அதாவது 1 லட்சம்

இதில் 1 லட்சம் எப்படி பிரிகிறது என்றால்
  • எழுதுபவருக்கு ரூபாய் 10,000
  • A5 அளவில் 250 பக்கம் உள்ள புத்தகம் 1000 பிரதிகள் அச்சிட ஆகும் செலவு சுமார் 30,000 (அச்சு கோர்ப்பு, அட்டை, பைண்டிங் உட்பட)
    • அச்சு கோர்ப்பு என்றால், கணினி வேண்டும், பிரிண்டர் வேண்டும், தாள்கள் வேண்டும், மென்பொருள் வேண்டும். அடோப் இண்டிசைன், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் எல்லாம் என்ன விலை தெரியுமா :) :) :)
    • அச்சு மை
    • தாள்கள், 
    • வண்ண அட்டை அச்சிட ஆகும் செலவு அதிகம்
    • அட்டை லேமினேஷன்
  • இவற்றை கட்டி, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்ப ஆகும் செலவு 10,000
    • (கட்ட வேண்டுமென்றால் அதற்கு துணி வேண்டும், கயிறு வேண்டும், கட்ட ஆள் வேண்டும்,அவருக்கு சம்பளம் வேண்டும், அதை கொண்டு செல்லும் லாரிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்)
  • இவற்றை பதிப்பகங்கள் 30 சதம் தள்ளுபடி என்ற அளவிலேயே விற்கிறார்கள். எனவே அவர்களுக்கு கிடைக்கும் தொகை 70,000
  • ஆக 50,000 செலவு செய்து 70,000 பெறுகிறார்கள். இதில் 10,000 வட்டி என்று வைத்துக்கொண்டால் மீதி 10,000 பதிப்பகத்திற்கு லாபம்
  • அது போக 70,000 ரூபாய்க்கு பதிப்பகத்திடமிருந்து வாங்கப்படும் புத்தகம் ரீடெயிலர் அல்லது டிஸ்டிரிபியூட்டரால் 80,000க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது
    • வேர்ஹவுஸ் வாடகை, ஊழியர் சம்பளம், போக்குவரத்து செலவு
  • அது 90,000 க்கு நுகர்வோரிடம் விற்கப்படுகிறது
    • கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர் சம்பளம், விளம்பரம்
  • கடைசி 10,000 நுகர்வோருக்கு (கழிவு ரூபத்தில் !!)
அதாவது புத்தகத்தின் விலை அட்டையில் அச்சிட்டிருக்கும் விலை 100 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதை அட்டை விலை Cover Price அல்லது MRP என்று அழைக்கிறார்கள்

இந்த நூறு ரூபாய் எப்படி செல்கிறது என்றால்
  • 10 எழுதுபவர்
  • 30 அச்சு கோர்ப்பு, தாள்கள், அட்டை, அச்சு செலவு
  • 10 தபால், போக்குவரத்து
  • 20 பதிப்பக மார்ஜின்
  • 10 ரீடெயிலர் மார்ஜின்
  • 10 கடை மார்ஜின்
  • 10 டிஸ்கவுண்ட்



அனைத்து புத்தகங்களுக்கும் ஒவ்வொன்றும் சரியாக 10சதம் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளடக்கம், வண்னப்புகைப்டங்கள், அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை, விற்பனை எங்கு நடைபெறுகிறது என்பதை பொறுத்து 8 முதல் 12 வரை கூட் இருக்கலாம்.

மேலுள்ள படத்தை பார்த்து விட்டீர்கள் அல்லவா

அதே படத்தை மறுபடியும் பார்ப்போமா


ஏதாவது புரிகிறதா

நூறு ரூபாய் புத்தகம் ஒன்று எழுதப்பட்டு அச்சிடப்பட்டு விற்கப்பட்டால், அதில் ஆசிரியருக்கு 10 ரூபாயும் பதிப்பாளருக்கு இருபது ரூபாயும் கிடைக்கிறது

இது தான் நிதர்சணம் !!

ஆசிரியருக்கு வெறும் பத்து ரூபாய் தானா என்று கோபப்படுபவர்கள், ஆசிரியர், பதிப்பாளர் தவிர இங்கு ஈடுபடும் பிறரை பற்றி, ஆகும் பிறச்செலவுகளை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் (சில நேரங்களில் தெரிந்து கொள்ளாமல்) மீதி 90 ரூபாயும் பதிப்பாளர் எடுத்துக்கொள்வதாக தவறாக நினைக்கிறார்கள்

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்

70 ரூபாய் வெளியில் செல்கிறது. ஆனால் 30 ரூபாய் இருக்கிறதே. இதில் ஆசிரியருக்கு 10 கொடுத்து விட்டு பதிப்பகம் 20 எடுத்துக்கொள்வது நியாயமா ?? அதை 15 - 15 என்று வைப்பது தானே நியாயம். ஏன் அதை ஆசிரியருக்கு 20 - பதிப்பகத்திற்கு 10 என்று கூட வைத்துக்கொள்ளலாமே என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பதிப்பகம் அந்த புத்தகத்தை அச்சிட, வடிவமைக்க ஆகும் செலவை முழுவதும் ஏற்கிறது. அவர்கள் அதற்கு செலவிடும் பணத்தை 6 மாதம், அல்லது 1 வருடம் கழித்து தான் பெற முடியும். சில நேரங்களில் கிடைக்காது (புத்தகம் விற்க வில்லை என்றால்) என்பது வேறு விஷயம். இந்த பணத்தை அவர்கள் முதலீடு செய்துள்ளார்கள். வங்கியில் கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும்

எனவே கண்டிப்பாக 10 சதம் வட்டிக்கு சென்று விடும்

பதிப்பகத்திற்கு கிடைப்பது 10 சதம் மட்டுமே

எனவே பத்து சதம் ராயல்டி என்பதில் எந்த அநியாயமும் கிடையாது. இது சரியான கணக்கே. அதனால் தான் உலகம் முழுவதும், இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கவிதை முதல் கணினி வரை, சமையல் குறிப்பு முதல் இதய அறுவை சிகிச்சை வரை நீங்கள் எதை பற்றி எழுதினாலும், எந்த மொழியில் எழுதினாலும், 10 சதம் தான் ஆதாய உரிமை.  (சிட்னி ஷெல்டன், ஹெரால்ட் ராபின்ஸ் போன்ற சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அப்படி என்றால் கூட அது 12.5 சதம் வரை பெற்றிருக்கலாம். அல்லது அவர்கள் அட்வாண்ஸ் பெற்று விடுவார்கள் !! ).

இப்பொழுது உங்களுக்கு சில கேள்விகள் எழலாம்
  1. ஆசிரியர் தானே புத்தகத்தை பதிபிக்க முடியுமா ?
  2. அப்படி தானே பதிப்பித்தால் அதிகம் லாபம் வருமா ?
  3. தானே பதிப்பிக்காமல், ஒரு பதிப்பகம் மூலம் வெளியிட்டபின்னர் நூலாசிரியர் எப்படி அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் ?
  4. பதிப்பகங்கள் எழுத்தாளர்களை ஏமாற்றவில்லையா ?
  5. பதிப்பகங்கள் எழுத்தாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றன ?
  6. ஆசிரியரை ஏமாற்றாமல் நேர்மையாக ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகங்களை எப்படி கண்டு கொள்ளலாம்
  7. நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ? 
  8. பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்றால் என்ன    
இந்த கேள்விகளுக்கான பதில்களை வரும் இடுகைகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்

  • அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
  • அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்

இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் நான்காவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை

பின் குறிப்பு : நான் எழுதியதில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டினால், திருந்திக்கொண்டு, திருத்திக்கொள்ள தயார்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...